Monday, April 30, 2018

இலங்கையில் இன்று மே தினம் இல்லை!

சிறப்புப் பார்வை: இலங்கையில் இன்று மே தினம் இல்லை!

சிறப்புப் பார்வை: இலங்கையில் இன்று மே தினம் இல்லை!

டி.எஸ்.எஸ்.மணி

இலங்கையில், இந்த ஆண்டு மே தினத்தைத் தொழிலாளர்கள் கொண்டாட முடியாதாம். அதை மே ஏழாம் நாளுக்குத் தள்ளி வைத்துக்கொள்ளுங்கள் என்று மைத்ரிபால அரசு அறிவித்துள்ளது. இதுபோல ஏற்கனவே 1980ஆம் ஆண்டும் 1990ஆம் ஆண்டும் மே தினக் கொண்டாட்டத்தை இலங்கை அரசு தடுத்தது. அதை எதிர்த்து, அரசின் தடையை உடைத்து, தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் மே முதல் நாளே மே தினத்தை ஊர்வலங்களுடன் கொண்டாடினார்கள். அதேபோல இந்த ஆண்டு, மைத்ரிபால சிறிசேனா தலைமையிலான கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைமையில் இருந்த தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. அந்தத் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளரான தேவேந்திரா, மைத்ரிபால தலைமையிலான கட்சியிடமிருந்து தனது தொழிற்சங்கத்தை விலக்கிக்கொண்டார். தங்கள் தொழிற்சங்கத்தில் மொத்தம் தொண்ணூறாயிரம் தொழிலாளர்கள் உறுப்பினர்கள் என அறிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல், "எங்கள் தொழிற்சங்க உறுப்பினர்கள் 90,000 பேரின் குடும்பத்தில் மொத்தம் மூன்று லட்சம் வாக்குகள் இருக்கின்றன” என்றும் மிரட்டியுள்ளார். கண்டிப்பாக தடையை உடைத்து மே தினத்தைக் கொண்டாடுவோம் என்கிறார்.
இலங்கை அரசு எதற்காக மே தினத்தைத் தள்ளிப்போட வேண்டும்?
வெசாக் என்ற பவுத்த பண்டிகை மே முதல் நாள் வருகிறது. அதற்காகவே சர்வதேச தொழிலாளர் தினத்தை மே 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கும் முடிவு. கண்டியில் உள்ள பவுத்த மகா சங்கத்தினரின் கோரிக்கையின் பேரிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மார்ச் 27 அன்று ஜனாதிபதி மைத்ரிபால அறிவித்திருந்தார். வெசாக் தினத்தைக் கொண்டாடும் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, திபெத், மியான்மார், கம்போடியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பவுத்தர்கள் அனைவருமே இம்முறை வெசாக் தினத்தை மே 29இல்தான் கடைப்பிடிக்கின்றன. வெசாக் பண்டிகை பற்றி ஐக்கிய நாடுகள் சபை 50 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டுள்ள பட்டியலிலும்கூட இவ்வருடம் மே 29ஆம் தேதிதான் அப்பண்டிகை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் மகா சங்கத்தினருக்கு மாத்திரம் இப்படி விபரீத, விசித்திர எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன என்கிற கேள்வி எழுகின்றது. இதை இலங்கையிலிருந்து வரும் ‘நமது மலையகம்’ ஏடு படம்பிடித்துக் காட்டுகிறது.
அதே சமயம், மே முதல் நாள், முன்னாள் பிரதமர் பிரேமதாசா சுட்டுக் கொல்லப்பட்ட நாள். ஆகவே அந்த நாளில், மே தினம் கொண்டாடப்படுவதை இன்றைய தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கே விரும்பவில்லை என்றும் சொல்லப்படுகிறது. பிரேமதாசாவும் ரணில் விக்ரமசிங்கேயும் ஐக்கிய தேசியக் கட்சியைச் (யுஎன்பி) சேர்ந்தவர்கள். அதனால்தான் அந்தப் பாசம் இருக்குமோ தெரியவில்லை.
இந்த நேரத்தில் சிங்கள மதத்திற்குள் இருக்கும் சாதி வேறுபாடுகள் வெறுப்புகளாக மாறிச் செயல்படுவது, அந்த ஏட்டின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வடமாகாண சபையின் ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வடக்கிலிருந்து மாற்றப்பட்டு மத்திய மாகாணத்துக்கான ஆளுநராகத் தேர்வு செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்குள் மீண்டும் வடகிழக்கு மாகாணத்துக்கு ஆளுநராக குடியரசுத் தலைவர் மைத்ரிபால சிறிசேனாவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் முதல் தடவையாக 24 மணிநேரத்திற்குள் இரண்டு தடவை ஆளுநராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நபர் ரெஜினோல்ட் குரேவாகத்தான் இருப்பார். இப்படி அவசர அவசரமாக மாற்றப்பட்டதன் பின்புலத்தில் சாதியக் காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
சாதி, பாலினப் பாகுபாடுகள்
ரெஜினோல்ட் குரே இனத்தால் சிங்களவர்தான். ஆனால் மதத்தால் கத்தோலிக்கர், சாதியால் கராவ சாதியைச் சேர்ந்தவர். கராவ என்ற சாதி, சிங்கள மதத்திற்குள் உள்ள, கடற்கரையோரம் வசிக்கும் மீனவர்களைக் குறிக்கும். அதுபோலவே, கரையர் என்ற சாதியாக, வடக்கு மாகாணத்தில் வாழும் கரையோர மீனவர்கள் அழைக்கப்படுகிறார்கள் (அந்தப் பிரிவிலிருந்துதான் ஈழத்து தமிழ்ப் போராளிகள் பலர் வந்துள்ளார்கள்). தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில்கூட, மீனவர்களிடையே அத்தகைய பிரிவு உண்டு.
ரெஜினோல்ட் குரே பவுத்தராக இல்லாமல் கத்தோலிக்கராக இருப்பதுகூட பிரச்சினை இல்லை. அவர் உயர் சாதியான கொவிகம சாதியில்லை என்பதே பிரச்சினை.
இதேபோல, பாலினப் பாகுபாடும் அங்கே பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மத்திய மாகாண முதல்வராக 17.03.2016 அன்று நிலூகா ஏக்கநாயக நியமிக்கப்பட்டபோதும் கண்டி மகா சங்கத்தின் அஸ்கிரிய தரப்பு தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது. அதற்கான காரணம் அவர் ஒரு திருநங்கை என்பதுதான் (இலங்கையில் ஒரு திருநங்கை முதற்தடவையாக அரசியல் அதிகாரத்துக்குத் தேர்வான சந்தர்ப்பம் அதுதான்). நிலூகா ஏக்கநாயக கலந்துகொள்ளும் முக்கிய அரச நிகழ்வுகளில் தாமும் கலந்துகொள்ள முடியாது என்றும் வேறொருவரை அந்த இடத்துக்கு மாற்றும்படியும் அதிபர் மைத்ரியிடம் தெரிவிக்கும்படி அமைச்சர்களான எஸ்.பீ.திசநாயக, மகிந்த அமரவீர ஆகியோர் ஆசி வாங்க வந்த வேளையில் மகா சங்கத்தினர் கோரியிருந்தார்கள். ஆனாலும் அந்த சர்ச்சை நீடித்துக்கொண்டிருந்தது.
இந்த இரண்டு வருடங்களுக்குப் பின்னர் அவருக்கு பதிலாகத் தேர்வானவர்தான் ரெஜினோல்ட் குரே. ஆனால் அதே மகா சங்கத்தினர் இப்போது ரெஜினோல்ட் குரே சிங்களவராக இருக்கலாம்; ஆனால் அவர் பவுத்தரும் இல்லை, கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இல்லை என்கின்றனர் இந்த மகாநாயகவினர்.
வரலாற்றுப் பின்னணி
இலங்கையின் மத்திய மாகாணமானது கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. மத்திய மாகாணத்தின் தலைநகராகக் கொள்ளப்படுவது கண்டி மாவட்டம். கண்டி மாவட்டம் இலங்கையின் சிங்கள பவுத்த மரபின் முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது. சிங்களச் சாதியமைப்பின் வீரியமாக இன்னமும் எச்சம் கொண்டுள்ள மாவட்டம் அது. மூன்று நூற்றாண்டுகளாக காலனித்துவத்திடம் பிடிகொடுக்காமல் தாக்குப்பிடித்து இறுதியாக வீழ்ந்த பிரதேசம் அது. ஆகவே அந்த மூன்று நூற்றாண்டுகளும் இலங்கையின் பாரம்பரிய மரபை இழக்காமல் தற்காத்த பின்னணி அதற்குண்டு. இலங்கையின் சுதேசியக் கொடி கடைசியாக காலனித்துவத்தால் இறக்கப்பட்ட இடம் கண்டி. அந்தப் பெருமையை அவர்கள் பேசிப் பேசி, தங்களது மக்கள் மத்தியில் இன்னமும் சாதியத்தை உயர்த்திப் பிடித்துவருகிறார்கள்.
இலங்கையின் பாரம்பரிய மரபு எனும்போது அது சாதியத்தையும் உள்ளடக்கியதுதான். சிங்களச் சாதியமைப்பில் கண்டிய கொவிகம சாதியத்துக்கு இருக்கின்ற பலமும் பெருமிதமும் அதுதான். அது மட்டுமன்றி புத்தரின் புனிதப் பல்லைத் தற்காத்துவைத்திருக்கும் தலதா மாளிகையும், பவுத்த மத மகா சங்க தலைமைப் பீடங்களையும் கொண்டுள்ள மாவட்டமும் கண்டிதான். ஆக, கண்டியை புனித நகராக அங்கீகரிக்கும்படி 1988ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் முன்வைத்த கோரிக்கையை 1989ஆம் ஆண்டு அங்கீகரித்த யுனெஸ்கோ நிறுவனம் பாரீசில் நடந்த மாநாட்டில் கண்டியைப் புனித நகராக ஏற்றுக்கொண்டது. இந்தப் பின்னணி கண்டியின் மரபுரிமைக்கு மேலும் பலம் சேர்த்தது.
திரைமறைவு அதிகாரிகள்
இலங்கையின் மறைமுக சிங்கள பவுத்த ஆட்சியமைப்பு முறையைப் பேணிக் காப்பதை உறுதிபடுத்தும் பலமான அங்கமாக கண்டி திகழ்ந்துவருகிறது. சிங்கள ஆட்சியாளர்கள் பதவியேற்பதற்கு அங்கே செல்வதை மரபாகக் கொண்டுள்ளனர். கண்டிய அரசர்கள் மக்கள் முன் தோன்றிப் பேசும் தலதா மாளிகையின் பத்திருப்பு பகுதியில் இன்றைய நவீன ஆட்சியாளர்களும் பதவியேற்பு செய்வதை சிங்கள பவுத்தப் பெருமிதமாகக் கொண்டுள்ளனர். இங்கே இந்தியாவில், யார் குடியரசுத் தலைவராக வந்தாலும், யார் தலைமை அமைச்சராக வந்தாலும், கட்சி வேறுபாடு இல்லாமல் காஞ்சி மடத்திற்குச் சென்று ஆசி வாங்கி வந்தார்கள் அல்லவா, அதுபோல அங்கும் நடந்துவருகிறது.
பதவிகளை ஏற்கும்போதும், முக்கிய அரசியல் நிகழ்வுகளின்போதும் கண்டியிலுள்ள பவுத்த மகா பீடத்தினரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெறுவதையும், ஆலோசனைகளைப் பெறுவதையும் மரபாக இப்போது ஆக்கியுள்ளனர். அது மட்டுமன்றி முக்கிய அரசியல் சிக்கல்களின்போது ஆளுங்கட்சியும் எதிர்கட்சிகளும் ஆதரவு தேடுவதற்கு அங்கே செல்லுமளவுக்கு இலங்கையின் பலம் பொருந்திய திரைமறைவு அதிகாரிகளாக கண்டி மகா சங்கத்தவர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அரசியல் நிலைமைகள் குறித்து கருத்து கூறுவதையும் கட்டளையிடுவதையும் எச்சரிக்கையிடுவதையும் நாம் கண்டுவருகிறோம்.
1957ஆம் ஆண்டு பண்டா - செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து ஜே.ஆர். தலைமையில் திரண்ட கண்டி பாதயாத்திரை வரலாறு மறக்காது. அதேபாணியில் நல்லாட்சி அரசாங்கம் என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்ளும், மைத்ரிபால சிறிசேனா அரசாங்கத்தை எதிர்த்து 2016இல் மேற்கொண்ட பாதயாத்திரையும் கண்டி பாதயாத்திரைதான். பொதுபல சேனா, இராவணா பலய, சிங்களே அமைப்பு போன்றவையும் அவ்வப்போது நடத்தும் ஊர்வலம், பாதயாத்திரை என்பன கண்டிக்குச் செல்லும் அல்லது கண்டியிலிருந்து ஆரம்பிக்கும். மேற்கண்ட அமைப்புகள் இந்தியாவில் உள்ள பஜ்ரங் தள், ராமர் சேனா போன்ற வன்முறைகளைப் பயன்படுத்தும் அமைப்புகள்.
இனவாத சக்திகள் தமது கடும்போக்கு நடவடிக்கைகளையும் ஆர்ப்பாட்டங்களையும் வன்முறைகளையும் பிரயோகிப்பதற்கு பவுத்த சீருடை தரித்தவர்களை முன்னிறுத்தித்தான் காரியம் சாதித்துவருகின்றன. அப்படியான சந்தர்ப்பங்களில் நீதியை நிலைநாட்ட வேண்டிய போலீசாரும் அடிபணிந்து பின்வாங்குவதும், கெஞ்சி சமரசம் பேசுவதும் தினமும் நடந்துவரும் நிகழ்வுகள்.
இலங்கையின் நிழல் அரசு
அது மட்டுமன்றி இலங்கையில் சமாதான முயற்சியின்போது நார்வே தூதுவர்களும் ஏனைய இணை அனுசரணை நாட்டுப் பிரதிநிதிகளும் பல தடவை உத்தேச சமாதான யோசனைகளை எடுத்துக்கொண்டுபோய் கண்டி மகா சங்கத்தினரைச் சந்தித்து அவர்களிடம் அரசியல் விளக்கம் அளித்தனர். அவர்களின் ஆதரவைக் கோரி பகீரதப் பிரயத்தனம் கொண்டனர். ஏறத்தாழ இலங்கையின் நிழல் அரசாகவே இந்த மகா சங்கத்தினர் இருந்துவருவதை இப்படி தொகுத்துப் பார்த்தால்தான் விளங்கிக்கொள்ள முடியும்.
பவுத்த சங்கங்களின் ஆசீர்வாதமும் அனுமதியுமின்றி எதையும் நிறைவேற்ற முடியாத அளவுக்கு அரச அமைப்புமுறை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கண்டியிலுள்ள ராமக்ஞ நிக்காய, அமரபுர நிக்காய ஆகியவை சாதிய ரீதியில் பிளவுண்டிருந்தாலும் அங்கே வெளிப்படையான நடைமுறை கிடையாது. அனால் இன்னொரு பிரிவான சீயம் நிக்காய வெளிப்படையாக சாதியத்தைக் கைகொள்கிறது. பவுத்த பிக்குவாக மாற விரும்புபவர்கள் அல்லது மாற்றப்படும் சிறுவர்கள் உயர் சாதி கொவிகம குலத்தைச் சேராதவருக்கு பவுத்த தீட்சை வழங்குவதில்லை. அதாவது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு பவுத்த பிக்குவாக தமது நிக்காயவுக்குள் உள்வாங்குவதில்லை. ஆனால் சீயம் நிக்காய போன்றவை உயர்சாதியற்ற பெரும் பணக்காரர்கள் வழங்கும் உதவிகளையும் வசதிகளையும் அனுபவிக்கவே செய்கின்றன.
இன்னமும் இலங்கையின் அச்சு ஊடகங்களில் பவுத்த பிக்குவாக ஆவதற்கு கொவிகம சாதியைச் சேர்ந்தவர்கள் தேவை என்கிற விளம்பரங்கள் வெளிவரவே செய்கின்றன.
கண்டிக்கு ஒரு சிங்கள – பவுத்த – கொவிகம – ஆண்/ பெண் (மூன்றாம் பாலினம் அல்லாத) பின்னணியைக் கொண்ட ஒருவர்தான் ஆளுநராக ஆக வேண்டும் என்கிற கோரிக்கையை நிறைவேற்றுபவர்களால் ஏன் இன்னமும் வடக்குக்கு அல்லது கிழக்குக்கு ஆளுநராக ஒரு தமிழரைத் தேர்வு செய்ய முடியாது இருக்கிறது என்ற கேள்வியையும் அந்த ’நமது மலையகம்’ எனும் ஊடகம் கேட்கிறது.
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: டி.எஸ்.எஸ்.மணி தமிழின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர். இந்திய அளவில் கவனிக்கத்தக்க பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளை விவாதித்து வருபவர். தொடர்புக்கு: manitss.mani@gmail.com)

Friday, April 13, 2018

ஒரே கல்லில் ஐந்து மாங்காய்கள் அடித்தாரா எடப்பாடி?

ஒரே கல்லில் ஐந்து மாங்காய்கள் அடித்தாரா எடப்பாடி?
--------------------------------------------------------------------------------------------
       காவேரி ஆணையம் அமைக்க என்னதான் நடுவண் அரசு , மழுப்பி வந்தாலும், தள்ளிப் போட்டாலும், எடப்பாடி அரசுக்கு அது ஒரு பெரிய நெருக்கடிதான். நடுவண் அரசை  " பகைக்காமலே, எதிர்க்கும்" புதிய அரசியலை "திட்டமிட்டோ, திட்டமிடாமலோ" நடத்தி  வருகிறது  எடப்பாடி அரசு.  அவ்வப்போது, துணை சபா மட்டும், நடுவனை எதிர்த்து பேசுவார்.
 எல்லாவற்றிக்கும் மேலாக, தமிழக அரசு, நடுவண் அரசை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் போட்ட " நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்" சேர்க்கப்பட்ட வார்த்தைகளை, "பொருள் புரிந்து சேர்ந்தார்களா?" என்ற கேள்வி வேறு இருக்கிறது. { Willfully Disobeyed } "திட்டமிட்டு நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை", என்பதாக எழுதியிருந்தார்கள். அதை யாரும் பெரிதாக விவாதிக்க வில்லை. ஆனால், இப்போது, உச்சநீதிமன்ற "கெடுவை" ஏற்றுக் கொண்டார்கள். 

                தமிழ்நாட்டு அரசியலில், ரஜினி காந்தின் பிரபல அரசியல் எதிர்ப்பு, கமலின் விமர்சனம், தி.மு.க.வின் தோழமைக்கு கட்சிகளுடன் நடைப் பயணம் செய்யும்  எதிர்ப்பு அரசியல், தினகரனின் ஊர், ஊராக செல்லும் ஆர்ப்பாட்டம், இந்த நான்கு வகைகளையும் எடப்பாடி அரசு எதிர்த்து வெல்ல வேண்டும். என்ன செய்ய? ஐ.பி.எல். மட்டைப் பந்து ஆட்டம் இந்த நேரத்தில் எதற்காக, என்ற கேள்வி தமிழ்நாட்டு மக்களிடையே, பிரபலமானது. இந்த நேரத்தில், திமுக தலைமையிலான, "மீட்பு பயணம்" தினசரி ஊடகங்களில் வரும் அளவுக்கு, தோழமைக் கட்சித் தலைவர்களுடன், திமுக செயல் தலைவர் நடக்கிறார். இந்த நேரத்தில், " தென்னிந்திய நடிகர் சங்கம்" ஏற்பாடு செய்த " மௌன ஆர்ப்பாட்டம்"  ஊடகங்களில், "முதலிடத்தை" பிடித்தது. அதிலும், ரஜினியும், கமலும் அமர்ந்து கொண்டு "விளம்பரம்" கிடைக்கப் பெற்றார்கள். யார்,யார்  காவேரி ஆணையத்திற்காக, "உரத்து" கத்துகிறோம் என்ற "போட்டியில்" ஒவ்வொருவரும், ஒவ்வொரு வகையான வடிவத்தை எடுக்கிறார்கள். 

                   ரஜினியையோ, கமலையோ, தென்னிநிதிய  நடிகர் சங்கத்தையோ, " ஏற்றுக் கொள்ளாத"  இயக்குனர் திலகம் பாரதிராஜா,, வி.சேகர், தங்கர் பச்சன், அமீர், வெற்றி மாறன், கௌதமன், ஆகியோர், தங்கள் பங்குக்கு, " தமிழர் காலை, இலக்கிய, பண்பாட்டு பேரவை" எனது தொடக்கி  இறங்கி விட்டனர்.  அதே  கருத்துக்கள் கொண்ட சீமானும்  இணைந்து கொண்டார். மேற்கணட யாருமே, திமுக தலைமையையோ, தினகரன் தலைமையையோ, ஏற்றுக் கொள்ளாதவர்கள். இதே  "நிலைப்பாட்டில் " தான் எடப்பாடி அரசும் இருக்கிறது. இந்த நேரத்தில்தான், முதல்வர் எடப்பாடியை, "பாரதிராஜா, சேகர், தங்கர் பச்சன், அமீர்" ஆகியோர் சந்தித்து, பொன்னாடை போர்த்திய படம் வெளிவந்தது. ஐ.பி.எல்.மட்டைப் பந்து ஆட்டத்தை, நிறுத்துங்கள் என்பதே அவர்கள், முதல்வரிடம் வைத்த கோரிக்கை. 

                    அதன்படியே, பாரதிராஜா தலைமையிலான, ஊடகவியலாளர் கூட்டம், பிரபலமானதால், ஊடக முதன்மை பெற்று விட்டது. அதுவே, " திமுகவின் நடைப் பயணம், தினகரனின் ஆர்ப்பாட்டம், ரஜினி, கமல் ஆகியோரின் அறிவிப்புகள்" ஆகியவற்றை விட, "ஊடக முதன்மை" பெற்று விட்டது. அதேபோல, ஏப்ரல் 10  இன்  "சேப்பாக்கம் ஐ.பி.எல். ஆட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திலும், பாரதிராஜா தலைமையிலான செயல்பாடுகளே" ஊடக முதன்மை பெற்றது. ஏற்கனவே, நடுவண் அரசுக்கும், பி.சி.சி.ஐ. க்கும், எடப்பாடி அரசின் , அமைச்சர் ஜெயக்குமார் மூலம், ஊடக நேர்காணல்களில், " ஐ.பி.எல். போட்டியை சென்னையில் நடத்தாமல்  இருங்கள். நடத்தினால், நாங்கள் பாதுகாப்பு கொடுப்போம்" என்றே கூறிவந்தனர். அவ்வாறு கூறிக் கொண்டே,, பாரதிராஜா தலைமையிலான எதிர்ப்பிற்கு, "காவல் அனுமதியும்" கொடுத்தனர். அதை ஊடகங்களிடம், பாரதிராஜாவே கூறினார். " நாங்கள் அனுமதி பெற்றுத் தான் அறவழியில் போராடுகிறோம்" என்கிறார். அதேபோல, "ஐந்து மணிக்கு தொடக்கி,  ஆறரை மணிவரை ஆர்ப்பாட்டத்தை அனுமதித்து, ஊடக விளம்பரத்திற்கு " உதவுவதாகவே, அரசின் செயல்பாடும் இருந்தது. ஆறரை மணிக்கு ஆர்ப்பாட்டம் செய்தவர்களைக் கைது செய்து விட்டு, " ரசிகர்களை உள்ளே விட்டு ஆட்டத்தை நடத்திக் காட்டியது" காவல்துறை. அத்பவது. எடப்பாடி அரசு, " தொட்டிலையும் ஆட்டிவிட்டு, பிள்ளையையும் கிள்ளி விட்டதா" எனக் கேட்காதீர்கள். இப்போது, ஆர்ப்பாட்டத்தைக் கரணம் காட்டி, தமிழக அரசு, " இனி பாதுகாப்பு கொடுக்க முடியாது" என்று கூறிவிட்டதால், "ஐ.பி.எல். ஆட்டம்" மாற்றப்பட்டது என்ற செய்தி வருகிறது. இது, ஒருபுறம், "தமிழர்களின் எதிர்ப்புக்கு கிடைத்த வெற்றி" என்பது உண்மைதான். ஆனால், இதில், இதனை "அரசியல் விளையாட்டு" மறைந்து கிடக்கிறது எனபதும் உண்மைதானே.  

              எது எப்படியோ, " ஒரே கல்லில், ஐந்து மாங்காய்களை, எடப்பாடி பறித்து விட்டாரோ".