Monday, March 26, 2018

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டமும் படிப்பினைகளும்!

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டமும் படிப்பினைகளும்!

ஸ்டெர்லைட்  எதிர்ப்புப் போராட்டமும் படிப்பினைகளும்!

டி.எஸ்.எஸ்.மணி

24 -03 -2018 சனிக்கிழமை தூத்துக்குடி நகரமே இதுவரை கண்டிராத மக்கள் எழுச்சியைச் சந்தித்தது. தூத்துக்குடி நகரம், ஸ்ரீவைகுண்டம் நகரம், புதியமுத்தூர் நகரம், தருவைகுளம் என எல்லா இடத்திலேயும் கடைகள் அடைக்கப்பட்டன. கடையடைப்பு என்றே அறிவிக்கப்பட்டது. ‘ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடு’ என்ற முழக்கத்துடன் கடையடைப்பு செய்யப்பட்டது.
பந்த் என்று முதலில் பேசினார்கள். கேரள உயர் நீதிமன்றம் ஒரு முறையும், உச்ச நீதிமன்றம் ஒரு முறையும், "பந்த் என்றால் சட்டவிரோதம்" என அறிவித்துள்ளன. ஆகவே கடையடைப்பு என்ற சொல்லையே பயன்படுத்தலாம் என்று போராட்டக் கமிட்டி தீர்மானித்தது. போராட்டக் கமிட்டி கேட்ட நாளில் காவல் துறை பேரணிக்கு அனுமதி தர மறுத்துவிட்டது. நீதிமன்றம் சென்ற போராட்டக் கமிட்டி மார்ச் 24இல் பேரணி, பொதுக்கூட்டம் என்ற அனுமதியைத் தருமாறு, உத்தரவைப் பெற்றுவந்தது. ஆனாலும் மாவட்டக் காவல் துறை பேரணிக்கு அனுமதி தரவில்லை. "ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக் கூட்டமைப்பு" என்ற பெயரில், ஒருங்கிணைப்புப் பணிகளை எல்லாச் சமூக அமைப்பினரும் செய்தனர்.
இந்த முறை, வணிகர் சங்கம் முன்கை எடுத்து வேலைகளைச் செய்தது. முதலில், 1994இல் ஸ்டெர்லைட் எதிர்ப்பு நடந்தபோதும், 1996ஆம் ஆண்டிலும் வணிகர் சங்கம் இந்த அளவுக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பில் ஈடுபடவில்லையே, இப்போது எப்படி என்று வணிகர் சங்கத்தினரிடம் கேட்கப்பட்டது.
“ஆமாம், நாங்கள் அப்போது இறங்கவில்லை. அதன் ஆபத்தை உணர்ந்திருக்கவில்லை. இப்போது போதும் போதும் என்ற அளவுக்கு ஸ்டெர்லைட் புகையாலும் அதன் மாசுகளாலும், தண்ணீரைக் கெடுத்த நிலையைப் பார்த்துவிட்டு, இனியும் ஸ்டெர்லைட் வேண்டாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். அதனால்தான், ஒவ்வொரு கடையிலும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மனுக்களில் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கினோம். ஒவ்வொரு கடையிலும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு வாசகங்கள் கொண்ட அட்டைகளை வைத்திருந்தோம். கீழே இறங்கி மக்களை சந்தித்தோம். கடைசியாக, கடையடைப்பையும் வெற்றிகரமாகச் செய்து முடித்தோம்" என்கிறார் வணிகர் சங்க ராஜா.
குமாரரெட்டியாபுரத்தில் மக்கள் போராட்டம் தொடங்கியபோது, எதிரே எம்ஜிஆர் பூங்காவில் மக்கள் அமர்ந்து அற வழியில் போராடும்போது. எட்டுப் பேரைக் கைதுசெய்தார்கள். ஆனாலும் அந்தக் கிராம மக்கள், தங்கள் நிலத்தில் சிப்காட் நுழைந்து, நாசகார ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு நிலம் கொடுப்பதா எனப் பொங்கி எழுந்து போராட்டத்தை இன்றும் தொடர்கிறார்கள். பெண்கள் ஒவ்வொரு இடமாகச் சென்று, போராட்ட நாளான மார்ச் 24 அன்று வாருங்கள் என அணிதிரட்டியபடி இருந்தனர். காவல் துறை கைதுகள் நடத்தும் பாணியைப் பார்த்த சிலர், இனியும் நாம் அரசியல் கட்சிகள் இல்லாமல் போராட முடியாது என்று கருத்து தெரிவித்தனர். ஆனால் அரசியல் கட்சிகள் இல்லாமல்தான், 2017 தொடக்கத்தில், ஜல்லிக்கட்டு அறப் போருக்கு மாநிலம் தழுவிய அளவில் இளைஞர்களும் மாணவர்களும் பொதுமக்களும் தாய்மார்களும் திரண்டார்கள் என்ற செய்தி நினைவுபடுத்தப்பட்டது.
ஏற்கனவே 1996இல் அரசியல் கட்சிகள் இறங்கின. ஆனால் அதில் நிறைய சச்சரவுகள் பேசப்பட்டன. பிறகு கட்சிகள் தொடர்ந்து போராட முடியவில்லை. ஆகவே போராட்டம் வெற்றிகரமாக நடக்கவில்லை. அதை உணர்ந்தாவது, இனி கட்சிகளை இழுக்காமல், கட்சி சார்பற்ற மக்களை அணிதிரட்டிப் போராட்டத்தைத் தொடரலாம் என முடிவு செய்தார்கள். அதையொட்டியே வணிகர் சங்கத்தின் முன்முயற்சியையும் அங்கீகரித்து வணிகர் சங்கத் தலைவரையும் கட்சி சார்பற்ற அரசியல் என்ற பார்வையில் அழைத்தனர். அதுவே போராட்டத்தின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது.
போராட்டத்தின் மலைக்கவைக்கும் வலிமை
சாதாரணமாக, ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அணிதிரண்டதாக கட்சிகளின் வட்டாரங்களே கூறின. குடும்பம் குடும்பமாக மக்கள் பங்கெடுத்தனர். மாணவ, மாணவிகள் தாங்களாகவே பதாகைகளை எடுத்து வந்தனர். “குச்சி மிட்டாயும் கிலுகிலுப்பையும் இல்லாத திருவிழா போல” இருந்தது என்கிறார் ஒரு செயற்பாட்டாளர். பொதுமக்கள் ஆங்காங்கே தண்ணீர் கொடுத்தனர். அரசியல் கட்சித் தலைவர்கள் யாருமே மேடையில் ஏறவில்லை. பல கட்சிகளின் தொண்டர்கள் தாங்களாகவே, கொடியும் கட்சிப் பெயரும் இல்லாமலேயே கலந்துகொண்டனர். நாட்டுப் படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. சர்வ மதத் திருவிழா என அழைக்கலாம் போல இருந்தது என்றார் ஒரு செயற்பாட்டாளர். பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் பலரும் கருப்பு உடையில் காட்சியளித்தனர். சிறு குழந்தைகள்கூட முழக்கம் போட்டனர். போராட்டத்தைத் துவக்கிய கிராம மக்கள் மேடையில் அமர வைக்கப்பட்டனர்.
இந்த எழுச்சி, வரலாற்றுச் சாதனை. இதுவரை தூத்துக்குடி காணாத அணிதிரளல். ஒட்டுமொத்த தூத்துக்குடியும் சுற்றுப்புறமும் இயல்பாகவே ஒற்றைக் கோரிக்கைக்கு அணிதிரண்ட சாதனை. கட்சி சார்பற்ற மக்கள் எழுச்சி என்றால் இதுதான். அரசியல் கட்சிகள் பின்னால் மக்கள் இருப்பதைவிட, கட்சி சார்பற்ற அரசியலுக்குப் பின்னால்தான் மக்கள் நிற்கிறார்கள் என்பதற்கான அங்கீகாரம். இதுதான் வெற்றிக்கான அரசியல். இதுதான் மக்கள் விரும்பும் அரசியல். இதற்குப் பெயர்தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அரசியல். ஆள்வோர் முயற்சி எடுத்தது, சுற்றுச்சூழலை அழிக்கும் அரசியல். இரண்டு வித அரசியலுக்கு மத்தியில் உள்ள போராட்டமே மக்கள் போர். அதில் கட்சி அரசியலுக்கு இடமில்லை. அதன் தொடக்க அறுதியிடலே, 2017 ஜனவரியின் ஜல்லிக்கட்டு எழுச்சி. அதன் தொடர்ச்சியே நெடுவாசல், கதிராமங்கலம். அதன் தொடர்ச்சியே ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் எழுச்சி.
இது, தேர்தல் அரசியலில் உள்ள ஊழல், மதவாதம், மதச்சார்பு, சாதிவாதம் எல்லாவற்றையும் தாண்டி, தூத்துக்குடியைப் பாதுகாக்க ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றுசேர்த்த நிகழ்ச்சி. நிகழ்ச்சிக்குச் சம்பந்தமில்லாமல், தங்கள் சொந்தக் கொள்கைகளை மேடையில் திணிக்க முயற்சி எடுத்தால், மக்கள் மத்தியிலிருந்து எதிர்ப்பு வரும் என்பதற்கான முன்னுதாரண நிகழ்வும் நடந்தது. ஒருவர் தனது கருத்தியல் பார்வையை மதவெறி எதிர்ப்பு என்ற பெயரில் பேச, அதற்கு எதிர்ப்பு வர, பிறகு சம்பந்தப்பட்டவர் உட்பட அது தவறு என்று உணர்ந்து திருத்திக்கொள்ள என ஒரு பாடமாகவே நிகழ்வு நகர்ந்தது. இது கருத்தியல் பரப்புரைக்கான களம் அல்ல.வாழ்வாதாரப் பிரச்சினைக்காக அனைத்துக் கருதியல்காரர்களும் ஒன்றுசேர்ந்து வந்திருக்கும் இடம் எனபதை உணர முடிந்தது. நாம் என்ன கொள்கையை விரும்புகிறோம் என்பதைத் தாண்டி, வேறுபட்ட கொள்கை உள்ளவர்களும் அணிதிரளும் மானுட எழுச்சியின் அடையாளம் இந்தப் பொதுக்கூட்டம். கட்சி சார்பற்ற, மதம், சாதி, கருத்தியல் சார்பற்ற மக்கள் விரும்பும் உடனடி, ஒற்றைக் கோரிக்கைகளைக் கையில் எடுப்பதே வெற்றிக்கு வழி வகுக்கும் என்பது உண்மையாகியுள்ளது. மாற்று உலகம் சாத்தியமே என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

Tuesday, March 20, 2018

சேது கால்வாய் - எங்கே தோண்டினாலும் ஆபத்தா?

சிறப்புக் கட்டுரை: சேது கால்வாய் - எங்கே தோண்டினாலும் ஆபத்தா?

சிறப்புக் கட்டுரை: சேது கால்வாய் - எங்கே தோண்டினாலும் ஆபத்தா?

டி.எஸ்.எஸ்.மணி

சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் ராமர் பாலத்தை உடைக்காமல் கட்டப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் நடுவண் அரசு எழுத்துபூர்வமாகத் தெரிவித்த காரணத்தால், சுப்பிரமணிய சுவாமி, சேது கால்வாய் திட்டத்தை எதிர்க்கும் தனது வழக்கைத் திரும்பப் பெற்றுள்ளார். அதாவது, சேது கால்வாய் திட்டத்தை, நமது சுற்றுச்சூழல்வாதிகளும், மீனவ இயக்கங்களும் கூறுவதுபோல, மீனவர் வாழ்நிலையை அழித்துவிடும் என்பதற்காகவோ, சுற்றுச்சூழலைக் கெடுத்துவிடும் என்பதற்காகவோ, பாஜகவோ சு.சுவாமியோ எதிர்க்கவில்லை. மாறாக, ராமர் பாலம் என்று அவர்கள் அழைக்கின்ற ஆதம் பாலம் வழியாக அந்தத் திட்டம் தோண்டப்படும் என்பதற்காகவே எதிர்க்கிறார்கள். ராமர் பாலம் என்பது புராணச் சின்னம். ஆகவே, அதை உடைக்க அனுமதிக்க மாட்டோம். ஆகவே, வேறு பாதை மூலம் அதே சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்பதுதான் இன்றுள்ள நடுவண் அரசில் ஆட்சி நடத்தும் பாஜக சொல்கிறது.
இன்று மட்டுமல்ல; என்றுமே அது இப்படித்தான் வாதம் செய்துவருகிறது. ஆனால், சேது கால்வாய்த் திட்டம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் போடப்பட்டபோதிலிருந்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துச் சூழல்வாதிகளும் மனித உரிமையாளர்களும் மீனவர் சங்கங்களும் அந்தத் திட்டத்தை முழுமையாக எதிர்த்துவருகின்றனர். அந்தத் திட்டம் மன்னார் வளைகுடாவின் சுற்றுச்சூழலை உடைத்துவிடும் என்றும் ஐந்து லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கெடுத்துவிடும் என்றும் அவர்கள் பல்வேறு ஆவணங்களுடன் எதிர்த்துப் போராடிவருகின்றனர்.
சேது கால்வாய்த் திட்டம் தமிழ்நாட்டைப் பொன் விளையும் பூமியாக்கிவிடும் என்ற நம்பிக்கையில் அண்ணா காலத்திலிருந்து திமுகவும், எம்ஜிஆர் காலத்தில் அதிமுக, மதிமுக மற்றும் பல்வேறு தமிழர் அமைப்புகளும் கூறிவந்தன. ஆங்கிலேயன் அக்காலத்திலிருந்து பலமுறை சேது கால்வாய் திட்டம் பற்றிய ஆய்வுகளை, இந்திய ரயில்வேயும் மற்றும் சில நடுவண் அரசின் நிறுவனங்களும் கணித்துப் பார்த்தன. ஆனால், அவற்றில் எல்லாம் அது சாத்தியப்படும் என்ற விடை கிடைக்கவில்லை. ஆகவே, அது தொடங்கப்படவில்லை. ஆனால், திமுக நடுவண் அரசில் காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூவில் இருக்கும்போது, அமைச்சர் டி.ஆர்.பாலு கைகளில் கப்பல் துறை இருக்கும்போது, அவரால் வலியுறுத்தப்பட்டு அந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது ஆ.ராஜா நடுவண் அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தார். நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் திட்டம் தொடங்கப்பட முடியாது.
மன்னார் வளைகுடாவின் முக்கியத்துவம்
அன்றைய நிலையில், அனைத்து நாட்டு பசுமை அமைதி இயக்க அறிவியலாளர்களின் ஆவணங்களையும் சென்னைப் பல்கலைக்கழக மானுடவியல் துறைத் தலைவர் பேராசிரியர் சுதர்ஷன், பேராசிரியர் சுமதி ஆகியோரின் ஆய்வு ஆவணத்தையும் அடிப்படையாகக் கொண்டு, சுற்றுச்சூழல்வாதிகள் அந்தத் திட்டத்தை எதிர்த்தனர். அந்த ஆவணங்களில், மன்னார் வளைகுடா ஒரு பயோ ஸ்பியர் ரிசர்வ் பகுதி என்று ஐநாவின் யுனெஸ்கோ மூலம் அங்கீகரிக்கப்பட்டு, அதைப் பாதுகாக்க யுஎன்டிபி என்ற ஐநா வளர்ச்சித் திட்டம் பல கோடிகளைச் செலவழிக்கிறது. சேது கால்வாய் திட்டம் வந்தால் அந்த பயோ ஸ்பியர் ரிசர்வ் அழிந்துவிடும் என்றார்கள். அதுபோலவே, அரிதான விலங்குகளான கடல் குதிரைகள் ஆறு மாதங்கள் ஆதம் பாலத்திற்கு ஒருபுறமும் அடுத்த ஆறு மாதங்கள் வெப்பம் காரணமாக மறுபுறமும் சென்று உயிர் வாழும். அவை அழிந்துவிடும் என்றார்கள். அதுமட்டுமல்ல, தூத்துக்குடிக்கும் ராமேஸ்வரத்துக்கும் மத்தியில் உள்ள 21 தீவுகளில் பவளப் பாறைகள் உள்ளன என்றும் அவை சேது கால்வாயைத் தோண்டினால் அழிந்துவிடும் என்றும் கூறினார்கள்.
உள்ளபடியே, இந்த 21 பவளப் பாறைகளைக் கொண்ட, தீவுகள்தான் 2004ஆம் ஆண்டு கடைசியில், சுனாமி வந்தபோது, சுனாமியின் வேகத்தைத் தடுத்து நிறுத்தி, சிறு பாதிப்புகூட இல்லாமல் தூத்துக்குடி நகரையும் ராமேஸ்வரம் நகரையும் காப்பாற்றின என்ற உண்மையைச் சுற்றுச்சூழல்வாதிகள் முன்வைத்தார்கள். அது மட்டுமின்றி, சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியரின் ஆவணத்தின்படி, ஐந்து லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரம் கெட்டுவிடும் என்பதையும் மீனவர் சங்கங்கள் முன்வைத்தன.
இத்தகைய எதிர்ப்புகளைக் கேள்விப்பட்ட அன்றைய முதல்வர் ஜெயலலிதா, அதிகாரிகள் மூலம் செயற்பாட்டாளர்களின் ஆவணங்களைப் பெற்று தனது நிலைப்பாடான சேது சமுத்திரத் திட்ட ஆதரவு நிலையை மாற்றிக்கொண்டார். திமுக கொண்டுவந்ததால் மாற்றிக்கொண்டார் என்று கூறுவோரும் உண்டு. ஆனாலும், அதிகாரபூர்வமான நிலைப்பாட்டின்படி, சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் நிலைப்பாட்டில் நின்று அந்தத் திட்டத்தை எதிர்த்தார். அதன் பிறகு அதே நோக்கில் உச்ச நீதிமன்றம் சென்றார்.
இப்போது அவர் மறைந்துவிட்ட நிலையில், அவரது வழக்கை எடுத்துக்கொள்ளாமல், அவரது வாதங்களையும் எடுத்துக்கொள்ளாமல் நீதிமன்றம் நிற்கிறது. உள்ளபடியே, ஜெயலலிதாவின் நிலைப்பாடும் மீனவர் சங்கங்களின் நிலைப்பாடும் சுற்றுச்சூழல்வாதிகளின் நிலைப்பாடும் ஒன்றுதான். எந்த வழியில் சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் வந்தாலும் அது அழிவு. ஆகவே, அது தமிழர்களுக்குப் பெருமை அல்ல; மாறாக வெறுமையே என்ற நிலைப்பாட்டை எடுத்தார்கள். இன்னமும் அவர்கள் அதே நிலையில் உள்ளனர்.
இதற்கிடையே, மதுரையில் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோருடன் முதல்வர் கருணாநிதியும் சேர்ந்து விழா ஒன்றின் மூலம் திட்டத்தைத் தொடங்கினர். இடையில் ஆக்சிஸ் வங்கியிடம் நடுவண் அரசு, திட்டத்துக்கான கடனைப் பெறச் சொல்லியிருந்தது. ஆனால், உலக வங்கிகள் இத்திட்டம் லாபம் தராது என்பதால் கடன் தர முடியாது என்று கூறிவிட்டன.
எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லியில் பெங்களூரைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஜான் ஜேக்கப், இந்தத் திட்டம் எவ்வகையிலும் லாபம் தராது என்று கட்டுரை எழுதினார். அதில், ஆப்பிரிக்க கண்டம் தொடங்கி, இங்கே வரும் பெரிய கப்பல்கள் இந்தத் திட்டப் பகுதிக்குள் நுழைய முடியாது என்றும் அவை வந்தாலும் கடலில் செல்லும் வேகத்தைக் குறைக்க எரிபொருள் மாற்றுவதற்குப் பணம், பைலட் கப்பல் வாடகை, சேது கால்வாயில் நிற்க வாடகை ஆகியவற்றைக் கட்ட வேண்டும் என்றும் ஆகவே அவர்கள் திகைத்துவிட்டார்கள் என்றும் எழுதினார். அவர்களுக்கு லாபமில்லை என்பதால் வர இயலாது என முடிவு செய்ததையும் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் கருங்கடலில் கப்பல்களின் எண்ணெய்ச் சிதறல்களால் கடல் வாழ் உயிரினங்களை அழிந்துவிட்டனவோ... அதுபோல இங்கும் செழிப்பாக உள்ள கடல் வாழ் உயிரினங்கள் அழிந்துவிடும் என்பதையும் சுற்றுச்சூழல்வாதிகள் எடுத்துவைத்தனர். அப்போது நடுவண் அரசோ, இந்தத் திட்டம் இந்திய ராணுவப் பாதுகாப்புக்கு வேண்டும் என்றனர். அதாவது தமிழர் கடலை அழித்து, மீனவர் வாழ்வைக் கெடுத்து, இந்திய - அமெரிக்கக் கட்டுப்பாட்டில் இந்தியப் பெருங்கடலைக் கொண்டுவருவது என்ற அவர்களது திட்டத்தை அறிவித்தனர். ஆகவே திட்ட எதிர்ப்பாளர்களது வாதங்கள் மேலும் வலுப்பெற்றன.
இப்போது இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல நடுவண் அரசின் நிர்பந்தம் வருமானால் அதுவே மீண்டும் ஒரு போராட்டச் சூழலை உருவாக்கும்.

Friday, March 9, 2018

திரிபுரா தேர்தல் முடிவு இயற்கையானதா? செயற்கையானதா?

மின்னம்பலம் மின்னம்பலம் 

  சிறப்புக் கட்டுரை: திரிபுரா தேர்தல் முடிவு இயற்கையானதா? செயற்கையானதா?

சிறப்புக் கட்டுரை: திரிபுரா தேர்தல் முடிவு இயற்கையானதா? செயற்கையானதா?

டி.எஸ்.எஸ்.மணி

திரிபுரா மாநிலத்தில் 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சி நடந்துவந்தது. இப்போது 2018ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், நிலைமை முழுமையாகக் கவிழ்ந்து, பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. மொத்தம் இருக்கும் 60 இடங்களில், 59 இடங்களுக்குத் தேர்தல் நடந்தது. ஒரு தொகுதியில், ஒரு வேட்பாளர் மரணத்தை ஒட்டி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. 59 தொகுதிகளிலும், காங்கிரஸ் நின்று எந்தத் தொகுதியையும் வெல்லாமல் தோற்றுள்ளது. பாஜக 50 தொகுதிகளில் நின்று 35 தொகுதிகளை வென்றுள்ளது. பாஜக கூட்டணியாக, ஐபிபிதி 9 தொகுதிகளில் நின்று 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சிபிஎம் 56 தொகுதிகளில் நின்று 16 இல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணிகளான சிபிஐ, ஆர்பிஐ, பார்வாடு பிளாக் ஆகியவை ஆளுக்கு ஒரு தொகுதியில் நின்று தோல்வி அடைந்துள்ளனர். மம்தாவின் திருணமூல் காங்கிரஸ் 24 தொகுதிகளில் நின்று அனைத்திலும் தோல்வியடைந்துள்ளது. இந்தக் கணக்கு எதைக் காட்டுகிறது?
முழுமையான மாற்றத்திற்கான காரணங்களாகப் பல செய்திகளை வட இந்திய ஊடகங்கள் எடுத்துவைக்கின்றன. 35 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக பெற்ற வாக்கு விழுக்காடு 43 % . வெறும் 16 இடங்களில் வெற்றி பெற்ற சிபிஎம் பெற்ற வாக்கு விழுக்காடு அதே 43 % . ஏற்கனவே 2013 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திரிபுராவில் பாஜக பெற்ற வாக்குகள் 1 .54 %. சிபிஎம் பெற்ற வாக்குகள் 48 %. இப்போது அதுவே பாஜகவிற்கு 43 % ஆக மாறியுள்ளது. ஆட்சியை இழந்த சிபிஎம் தனது வாக்குகளில் ஐந்தே விழுக்காட்டை இழந்துள்ளது. அப்படியானால், கீழே இருந்த பாஜக மேலே வர, யாருடைய வாக்குகளை வாங்கியுள்ளது? காங்கிரஸ் கட்சி 2013 ஆம் ஆண்டில் பத்து இடங்களில் வெற்றி பெற்றது. அப்போது காங்கிரஸ் 35 % வாக்குகளைப் பெற்றிருந்தது. இப்போது காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. அது மட்டுமின்றி, இப்போது காங்கிரஸ் கட்சி இரண்டு விழுக்காடு வாக்குகளைக்கூட வாங்கவில்லை. அதாவது, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் பாஜக இருந்த இடத்திற்கு இப்போது காங்கிரஸ் சென்றுள்ளது. சிபிஎம் தனது வாக்கு வங்கியில் பெரிய அளவு சரிவை சந்திக்காதபோது, பாஜக ஆட்சியைப் பிடிக்க, காங்கிரசின் முழுமையான வாக்கு வங்கியைக் கையில் எடுத்துள்ளது.
இது தவிர திரிபுராவில் மொத்தம் உள்ள அறுபது தொகுதிகளில், 20 தொகுதிகள், "பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகள்". அவற்றில் 2013 ஆம் ஆண்டு, சிபிஎம் பெரும் அளவு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. அதாவது சிபிஎம் 18 பழங்குடி தனித் தொகுதிகளிலும், சிபிஐ ஒன்றிலும், காங்கிரஸ் ஒன்றிலும் மொத்தம் 20 தொகுதிகளில் ஐந்தாண்டுகளுக்கு முன்பு கட்சிகள் வெற்றி பெற்றிருந்தன. இப்போது அந்த 20 தொகுதிகளில் எட்டு தொகுதிகளில் "சுதேசி திரிபுரா மக்கள் முன்னணி" என்ற பழங்குடி மக்களுக்குத் தனி மாநிலம் கோரும் பழங்குடிகளின் கட்சியும், அதைக் கூட்டணியில் சேர்த்துள்ள பாஜக 7 தொகுதிகளிலும், சிபிஎம் மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்தத் தேர்தலில், பாஜக பழங்குடிகளின் கட்சியான "சுதேசி திரிபுரா மக்கள் முன்னணி"யுடன் கூட்டணியில் நின்றதால், அந்த வாய்ப்பு உருவாகியுள்ளது. அதற்கான காரணங்களாக, பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில், 25 ஆண்டுகளாக ஆண்ட சிபிஎம் ஆட்சியில், "அடிப்படை வசதிகள் இல்லை. இன்னமும் பழங்குடி மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். பழங்குடி மக்களின் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வாய்ப்புகள் முழுமையாக வழங்கப்படவில்லை. குடி நீர் தட்டுப்பாடு தீர்க்கப்படவில்லை. அரசாங்கத் திட்டங்களை வட்டார சிபிஎம் ஊழியர்கள் தங்களின் நெருக்கமானவர்களுக்கே வாங்கித் தருகின்றனர்" போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
எளிமை மட்டுமே போதுமா?
இது தவிர, சிபிஎம் கட்சி, திரிபுராவில் பெரும்பான்மையாக வசிக்கும், வங்காள இனத்தவரில் உள்ள பின்தங்கிய மக்களது வாக்குகளை முக்கியமாக இதுவரை பெற்றுவந்தது. அவர்களும், பஞ்சாயத்து அளவில் பெருகிவிட்ட ஊழலைச் சுட்டிக்காட்டிக்கொண்டிருந்தனர். மாநில அளவில், முதலமைச்சர் மாணிக் சர்க்கார் எளிய வாழ்க்கை வாழ்வதையே அந்தக் கட்சியும் பரப்புதலில் பெரும்பாலும் பயன்படுத்தியது. மாணிக் சர்க்காருக்கு முன்னால் இருந்த முதலமைச்சர் நிருபன் சக்கரவர்த்தியின் எளிய வாழ்க்கையையும், சிபிஎம் கட்சி பெரிதும் பரப்புதலுக்குப் பயன்படுத்திவந்தது. காந்திய முறையிலான தலைவர்களது எளிமையான வாழக்கை என்பது, மக்களது ஏழ்மையான வாழ்க்கையை விரட்டப் போதுமானதல்ல என்று வாக்காளர்கள் உணர்ந்துவிட்ட காலம் இது. ஆகவே அவர்களது மாற்றத்தை விரும்பும் மனப்போக்கு தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மீது பொதுவாக இருக்கும் நம்பிக்கையின்மையும், சிபிஎம் காங்கிரசுடன் ரகசிய உடன்பாடு கொண்டுள்ளதாக ஒரு புரிதலும் மக்களை மாற்றம் கொண்டுவருகிறோம் எனக் கூறும் பாஜக பக்கம் ஈர்த்துள்ளது. அது தவிர, வேலையில்லாத் திண்டாட்டம் தனது பங்கைச் செலுத்தியுள்ளது. ஏழு லட்சம் இளைஞர்கள் அங்கே வேலையில்லாமல் தவிக்கின்றனர். இந்தத் தேர்தலில் பல இளைஞர்கள் வேட்பாளர்களாக வெற்றி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திரிபுராவில், மேற்கு வங்கம் போலவே, "இடதுசாரி ஆதரவு வாக்காளர்கள் என்றும், இடதுசாரி எதிர்ப்பு வாக்காளர்கள் என்றும்" பிரிந்து நிற்கிறார்கள். இதுவரை இடதுசாரி எதிர்ப்பு வாக்காளர்களுக்கு ஒரே வாய்ப்பு காங்கிரஸ் கட்சியாக இருந்தது. இந்த முறை காங்கிரஸ்+ சிபிஎம் என்று அவர்கள் எண்ணியதால், பாஜகவைத் தேர்வு செய்துவிட்டார்கள்.
காங்கிரஸ் கட்சியின் பல முக்கியஸ்தர்கள், குறிப்பாக எம்எல்ஏக்கள் திருணமூல் காங்கிரசுக்குத் தாவி, பிறகு பாஜகவிற்குத் தாவியிருக்கிறார்கள். அப்படித் தாவியவர்கள் எல்லோருமே, பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். உதாரணமாக, அகர்தலாவிலிருந்து இப்போது ஐந்தாம் முறையாக வெற்றி பெற்றுள்ள, சுதீப் ராய் பர்மன், 2016ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து பலரைத் தலைமை தாங்கி பாஜகவிற்கு அழைத்துவந்தார். அவர் இப்போது 7382 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவில் வெற்றி பெற்றுள்ளார். பதற்காட் தொகுதியில் திபிப் சர்க்கார் 2013 தேர்தலில், காங்கிரஸ் சார்பாக நின்று, 643 வாக்கு வித்தியாசத்தில் வென்றவர், இப்போது பாஜகவில் 5448 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். மோகன்பூர் தொகுதியில், ரத்தன்லால் நாத், 2013 இல் காங்கிரஸ் சார்பாக 775 வாக்கு வித்தியாசத்தில் வென்றவர், இப்போது பாஜக சார்பாக நின்று, 5186 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். போர்டோவாலி நகரத்தில் அஷிஸ் சாகா 4000 வாக்குகள் வித்தியாசத்தில், தர்ம நகர் தொகுதியில் பிஸ்வபந்து சென் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவிற்குத் தாவிய பிறகு வென்றுள்ளனர். ராம் நகர் தொகுதியில் முன்பு காங்கிரசில் நின்று 65 வாக்குகளில் தோற்ற சுராஜ் தத்தா, இப்போது பாஜக சார்பில் 4855 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஹிரங்காவி 6000 வித்தியாசத்திலும், சிங்காராய் 4000 வித்தியாசத்திலும் பாஜகவுக்கு வந்த பிறகு வெற்றி பெற்றுள்ளனர். தோற்ற காங்கிரஸ் தலைவர்கள் மூன்றாவது இடத்திற்குச் சென்றுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியைப் பிடிப்பதில் பெரிய அக்கறை இல்லை என காங்கிரசுக்காரர்களே கூறுகின்றனர்.
பாஜகவின் வெற்றிக்கு, சுதேசி திரிபுரா மக்கள் முன்னணியுடன் கூட்டணி சேர்ந்தது முக்கியக் காரணம் என்கிறார்கள். வட கிழக்கு மாநிலங்களின் பாஜக முக்கியஸ்தர்களான அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிமந்த பிஸ்வ சர்மாவும், ராம் மாதவும், பாஜக தலைவர் அமித் ஷாவிடம், சுதேசி திரிபுரா மக்கள் முன்னணியைச் சேர்ப்பது சிக்கலானதுதான் என்றாலும், அவர்களைச் சேர்த்தால் மட்டும்தான் சிபிஎம் கட்சியை வெல்ல முடியும் என்று கூறினார்கள். அதை அமித் ஷாவும் ஏற்றுக்கொண்டதன் விளைவாகவே வெற்றி சாத்தியமானது என்கிறார்கள். ஏனென்றால், அது வங்காளிகள் வாக்குகளில் எதிர்த்து அடிக்கலாம் என எண்ணினார்கள். ஏனென்றால் வங்காள தேசத்திலிருந்து வந்தவர்களை வெளியேற்றுவது என்ற பழங்குடி கட்சி மற்றும் பாஜகவின் கொள்கைகளை வங்காளிகள் கிராமப்புறங்களில் ஏற்பதில்லை. தவிர, சுதேசி திரிபுரா மக்கள் முன்னணி தலைவர் ஏன்.சி.தேவர்மா இப்போதும், தனி பழங்குடி மாநிலம் கோரிக்கையை விடவில்லை. பாஜகவோ தேர்தல் பரப்புரையில் ஒரே திரிபுரா என முழங்கியது.
வடகிழக்கு மநில மக்களின் உணர்வுகள்
திரிபுரா மாநிலத்தின் 2011ஆம் ஆண்டு கணக்குப்படி, மொத்த மக்கள் தொகை, 3673017 அதில் பழங்குடி மக்களின் எண்ணிக்கை 853920 அதாவது மொத்த மக்கள் தொகையில் 30 -95 % அதாவது முப்பத்தொரு விழுக்காடு மக்கள்தொகையில் பழங்குடி மக்கள் இருக்கிறார்கள். திரிபுராவின் பழங்குடிகள் மத்தியில் ஆழமாக ஊறிப்போயிருக்கும் வங்காள இனத்தின் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு என்ற உணர்வை எப்போதுமே சிபிஎம் கட்சி கண்டுகொள்வதில்லை. அதாவது, வட கிழக்கு மாநிலங்களை இந்திய தேசிய கீதத்தில் இணைக்கவில்லை என்ற உண்மை விவாதிக்கப்படுவதில்லை. வங்காளக் கவி ரவீந்திரநாத் தாகூர் நமக்கெல்லாம் எப்படி மரியாதைக்குரியவரோ, அது போல வட கிழக்கு பழங்குடி மக்களுக்கு இருக்க முடியுமா? இந்தியாவிலிருந்து, வட கிழக்கு மாநிலங்களுக்குச் செல்பவர்களை, அவர்கள், " நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறீர்களா?" எனக் கேட்கிறார்களே, ஏன்? அந்த அளவுக்கு தூரம் தள்ளி" நிற்கும் வட கிழக்கு பழங்குடி மக்களிடம், வங்காள தேசிய இனம் உள்ளே இணைந்து சென்று வாழ்ந்துகொண்டிருப்பதை அவர்கள், ஆக்கிரமிப்பாக பார்க்கிறார்களா என்று தெரிய வேண்டாமா?
1980ஆம் ஆண்டுக்கு முன்பே அஸ்ஸாம் மாநிலத்தில், மாணவர்களின் அமைப்பான, அனைத்து அஸ்ஸாம் மாணவர் அமைப்பு எழுச்சியை உருவாக்கவில்லையா? தங்களது கல்வியையும், வேலைவாய்ப்பையும் வங்காளிகள் பறித்துக்கொண்டதாக அஸ்ஸாமியர்கள் கருதவில்லையா? அதனாலேயே, வங்காளிகளை அதிகமாகக் கொண்ட சிபிஎம் கட்சி, அந்த எழுச்சியை எதிர்க்க நிலைப்பாடு எடுக்கவில்லையா? அதனாலேயே, அஸ்ஸாமியர்கள் சிபிஎம் கட்சி அலுவலகங்களைக் கூடத் தாக்கி, அவர்களை மாநிலத்தை விட்டு வெளியேற்றவில்லையா? அதேபோல நக்சல்பாரி கட்சியின் ஒரு பிரிவான, சத்யநாராயண சிங் தலைமையிலான பிரிவு, அஸ்ஸாம் மாணவர்களின் எழுச்சிக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தபோது, அவர்களையும், ஆசு மாணவர் அமைப்பு விரட்டியடித்ததை நினைவில் கொள்ள வேண்டாமா? அதே நேரத்தில், வினோத் மிஸ்ரா தலைமையிலான நக்சல்பாரி கட்சி, சிபிஐ (எம்எல்) அஸ்ஸாம் மாணவர்கள் தலைமையிலான மக்கள் எழுச்சி ஒரு தேசிய இனத்தின் எழுச்சி. ஆகவே அதை எதிர்க்காமல், அன்று தேசிய இன உரிமைப் போர்தான் பிரதானமானது என்று நிலைப்பாடு எடுத்த காரணத்தால், அந்த மாநிலத்திலேயே தொடர்ந்து பணியாற்ற முடிந்தது என்ற உண்மைகளை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அதன் பிறகு, அந்த மாணவர் அமைப்பே, அஸ்ஸாம் கண பரிஷத் என்ற கட்சியாக மாறிய பிறகு, வெகுமக்களது கோரிக்கையைவிட, முதலாளிகளின் நலன்களை உயர்த்திப் பிடித்ததால், வீழ்ந்தது என்பது வேறு கதை.
அதேபோல, குடியரசுத் தலைவர் தேர்தலில், சென்ற முறை, பிரணாப் முகர்ஜி நின்றபோது, பழங்குடி சமூகத்தின் சங்மா வை எதிர்த்து, வங்காளப் பற்றுடன் பிரணாப் முகர்ஜியை சிபிஎம் கட்சித் தலைமை ஆதரித்ததால், டெல்லியிலுள்ள சிபிஎம் கட்சிக் கிளையில், பெரும் சச்சரவு எழுந்ததும், டெல்லியிலுள்ள, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சிபிஎம் கிளை கலைக்கப்பட்டதும், நினைவில் கொள்ள வேண்டும் அல்லவா? அதேபோல, திரிபுரா ஆதிவாசிகள் எந்த அளவுக்கு "அந்நியர்களின் அக்கிரமிப்பாக வங்காள இனத்தவரைக் கருதி, தங்கள் மாநிலத்தின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள் பறிபோவதாகக் கருதுகிறார்கள்" என்பது, ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கு விவாதப் பொருளாக ஆக வேண்டாமா? அதுதானே, பழங்குடிகளுக்குத் தனி மாநிலம் என்ற கோரிக்கையை, சுதேசி திரிபுரா மக்கள் முன்னணி முன்வைக்கக் காரணமாக இருக்கிறது? ஏற்கனவே, பிகார், மத்தியப் பிரதேசம் மாநிலங்களின் பழங்குடி வாழ் பகுதிகள்தானே, ஜார்க்கண்டாகவும் சத்தீஸ்கராகவும் உருவாகியிருக்கிறது?
இதுபோலப் பல அருமையான, அனுபவங்களை" திரிபுரா தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள மார்க்சிஸ்ட் கட்சி தயாரா என்ற கேள்வியே நமக்கு எழுகிறது.
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: டி.எஸ்.எஸ்.மணி தமிழின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர். இந்திய அளவில் கவனிக்கத்தக்க பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளை விவாதித்து வருபவர். தொடர்புக்கு: manitss.mani@gmail.com)