Wednesday, August 9, 2017

வெடிமருந்து பற்றாக்குறையும் பாஜக அரசின் தோல்வியும் -

சிறப்புக் கட்டுரை: வெடிமருந்து பற்றாக்குறையும் பாஜக அரசின் தோல்வியும் - Azhageswaran, Trade union leader, Ordinance Factory, Tiruchi.

சிறப்புக் கட்டுரை: வெடிமருந்து பற்றாக்குறையும் பாஜக அரசின் தோல்வியும் - டி.எஸ்.எஸ்.மணி
கடந்த 21.07.2017 அன்று தலைமை தணிக்கை (சி.ஏ.ஜி) அதிகாரியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் ராணுவத்தின் போர் ஆயத்தநிலை குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. குறிப்பாகப் போர் ஏற்பட்டால் 10 நாள்களுக்குத் தாக்குப்பிடிக்கும் அளவில் மட்டுமே இந்திய ராணுவத்திடம் ஆயுத வெடிபொருள்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் சி.ஏ.ஜி. அறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பினர். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லி, “சி.ஏ.ஜி. அறிக்கையில் ஆயுத வெடிபொருள்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திலிருந்த பற்றாக்குறை பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அதில் குறிப்பிட்டிருந்த காலகட்டத்துக்குப் பிறகு ஏராளமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆயுதங்கள், வெடிபொருள்கள் கொள்முதல் செய்வதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்பட்டுள்ளன. ஆயுதங்கள், வெடிபொருள்களை வாங்குவதற்கான அதிகாரம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. எனவே நாட்டைப் பாதுகாக்க போதுமான அளவு ஆயுதங்களும், வெடிபொருள்களும் இந்தியப் படைகளிடம் உள்ளது” என்று விளக்கம் அளித்தார்.
இவ்வாண்டு மட்டுமல்ல, கடந்த நான்கு ஆண்டுகளாக சி.ஏ.ஜி. ஆயுத வெடிபொருள்களில் நிலவிவரும் பற்றாக்குறை குறித்து தனது அறிக்கையில் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறது. ஆனால், டோக்லாம் பிரச்னையின் காரணமாக இந்தியாவுக்கும், சீனாவுக்குமிடையில் ஒரு போர்ச்சூழல் உருவாகியுள்ள நிலையில் இம்முறை சி.ஏ.ஜி. அறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் கடும் விவாதங்கள் எழுந்தன.
சி.ஏ.ஜி. அறிக்கையில் வெடிபொருள் பற்றாக்குறை குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ள விவரங்களை மறுத்து ‘நாட்டைப் பாதுகாக்க போதுமான அளவு ஆயுதங்களும், வெடிபொருள்களும் இந்தியப் படைகளிடம் உள்ளது’ என்று பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்த கருத்துகள் உண்மைதானா? இதை தெளிவுபடுத்திக்கொள்ள பாஜக அரசு பதவியேற்ற பின்னர், வெடிபொருள்கள் பற்றாக்குறை பிரச்னைக்குத் தீர்வு காணுவதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.
முதலாவதாக, கடந்த செப்டம்பர் 18இல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் உரி ராணுவ முகாம்மீது தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து ஆலோசிப்பதற்காகப் பாதுகாப்புக்கான அமைச்சரவைக்குழு கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பாகிஸ்தான் மீது போர் தொடுப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் கலந்துகொண்ட முப்படைத் தளபதிகள், ஆயுதப்படைகளிடம் போதுமான வெடிபொருள்கள் இல்லை என்பதை சுட்டிக்காட்டினார்கள். அதன் பின்னரே அரசு இப்பிரச்னைமீது கவனம் செலுத்தத் தொடங்கியது.
அக்கூட்டத்தில் வெடிபொருள்கள் பற்றாக்குறைக்குத் தீர்வு காணுவதற்கான முடிவும் எடுக்கப்பட்டது. அதாவது அவசரத்தேவை கருதி தரைப்படை மற்றும் விமானப்படையின் துணைத்தளபதிகள், பற்றாக்குறை நிலவும் வெடிபொருள்களைத் துரித வழியில் கொள்முதல் செய்து கொள்வதற்கான அதிகாரங்களை வழங்குவதென முடிவு செய்யப்பட்டது. இதற்காக உயரதிகாரிகள், ஆயுதப்படைகளின் பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் நிதிப்பிரிவு பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுக்கள் செப்டம்பர் மாத இறுதியில் ரஷ்யா மற்றும் இஸ்ரேல் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டு வெடிபொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.
இக்குழுக்களுக்கு டிசம்பர் மாதம் வரையிலான மூன்று மாதங்களுக்கு மட்டுமே கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது. பின்னர் அது மேலும் மூன்று மாதங்களுக்கு அதாவது மார்ச் 2017 வரை நீட்டிக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் ரூ.12,000 கோடி மதிப்பீட்டில் 11 வகையான வெடிபொருள்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின்னர் அக்குழுக்களுக்கு அதிகாரங்கள் விரிவுபடுத்தப்படவில்லை. ஒப்பந்தங்கள் அதே நிலையில் இருந்தது.
இரண்டாவதாக, கடந்த 2016 நவம்பர் மாதம் இந்தியத் தனியார் நிறுவனங்களிடமிருந்து வெடிபொருள்களைக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை ராணுவம் மேற்கொண்டது. இதையொட்டி எட்டு வகையான வெடிபொருள்களின் தேவைக் குறித்த அறிவிப்பை ராணுவம் வெளியிட்டது. இந்த வெடிபொருள்களை ராணுவத்துக்கு விநியோகிக்கத் தயாராக உள்ள நிறுவனங்களின் விருப்பங்கள் கோரப்பட்டது. ஆனால், இந்த நடைமுறைகளில் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களும், படைக்கலத் தொழிற்சாலைகளும் பங்கேற்கக் கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்தது.
அத்துடன் ரூ.100 கோடி சொத்து மதிப்பும், கடந்த மூன்றாண்டுகளாக ரூ.200 கோடிகளுக்கு மேல் வர்த்தகம் செய்துள்ள நிறுவனங்கள் மட்டுமே இந்த நடைமுறைகளில் பங்கேற்க வேண்டும் என்று அவ்வறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மேற்கண்ட நிதி வரம்புக்குள் வரமுடியாத சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ராணுவத்தின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நிதி வரம்புகளைத் தளர்த்தும்படி கோரிக்கை விடுத்தன.
இதேவேளையில், 2017 மார்ச் மாதத்தில் படைக்கல சர்வீஸ் துறை தனியார் நிறுவனங்களிடமிருந்து வெடிபொருள்களைக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. ராணுவம் அறிவித்ததுபோல், எட்டு வகை வெடிபொருள் தேவை குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த நடைமுறைகளிலும் பாதுகாப்பு, பொதுத்துறை நிறுவனங்களும், படைக்கலத் தொழிற்சாலைகளும் பங்கேற்க முதலில் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், திடீரென கடந்த ஜூன் மாதம் பொதுத்துறை நிறுவனங்களும், படைக்கலத் தொழிற்சாலைகளும் இந்த நடைமுறைகளில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு தனியார் நிறுவனங்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியது. ஏற்கெனவே வெடிபொருள்கள் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பையும், வெளிநாடுகளிடமிருந்து வெடிபொருள்களைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப பரிமாற்ற உரிமங்களையும் பெற்றிருக்கும் படைக்கலத் தொழிற்சாலைகளை இந்த நடைமுறைகளில் பங்கேற்க அனுமதித்தால் அந்நிறுவனங்கள் குறைந்த விலைக்கு வெடிபொருள்களை விநியோகம் செய்ய முன்வரும். இது தங்களைப் பாதிக்கும் என்று தனியார் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தற்போது இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பதற்காகப் பிரதமர் அலுவலகத்துக்குப் பிரச்னை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில்தான் தற்போது சி.ஏ.ஜி. அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை வெளியாகவிருந்த நேரத்தில்தான், கடந்த மார்ச்சுடன் நிறைவுற்ற துணைத்தளபதிகள் வெடிபொருள்களைக் கொள்முதல் செய்வதற்கான கூடுதல் அதிகாரம் தற்போது மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வெடிபொருள்கள், உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்துகொள்வதற்காக தனிநிதி ரூ.20,000 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.
வெடிமருந்து கொள்முதல் நடைமுறைகள் இவ்வாறாக இருக்க. நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் பேசும்போது, “படைக்கலத் தொழிற்சாலைகள் வெடிபொருள்கள் தயாரிப்பில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார். ஆனால், வெடிபொருள்கள் தயாரிப்பதற்காக தொடங்கப்பட்ட நாளந்தா படைக்கலத் தொழிற்சாலையைச் செயல்பட வைப்பதற்கான நடவடிக்கைகளை இவ்வரசு மேற்கொள்ளவில்லை.
இந்த நிகழ்வுகள் அனைத்தும், வெடிபொருள்கள் பற்றாக்குறை குறித்து சி.ஏ.ஜி-யின் அறிக்கையில் சொல்லப்பட்ட கருத்துகள் சரியானவையே என்பதை உறுதி செய்கிறது. மேலும் கடந்த மூன்றாண்டுகளாக பாஜக ஆட்சியில் இப்பிரச்னையைத் தீர்ப்பதற்குச் சரியான, முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.