Wednesday, March 29, 2017

சிறப்புக் கட்டுரை: ஆர்.கே.நகர் தேர்தலையொட்டி, தமிழக அரசியலில் அணிச்சேர்க்கைகள்!

சிறப்புக் கட்டுரை: ஆர்.கே.நகர் தேர்தலையொட்டி, தமிழக அரசியலில் அணிச்சேர்க்கைகள்!

வியாழன், 30 மா 2017
ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலில், யார் வெற்றி பெறுவார்கள் என்ற கணிப்பை ஆளாளுக்கு ‘ஜோசியம்’ சொல்வதுபோல கணித்துக்கொண்டு இருக்கிறார்கள். எல்லோரும் ‘கிளி ஜோசியக்காரர்’களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை நிலை அந்தத் தொகுதியில் ‘வேறு மாதிரி’ இருக்கிறது. ஊடகங்களின் அவதானிப்புகள், அதில் வரும் விவாதங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் பேசப்படுகின்றன என்பது என்னவோ உண்மைதான். அதையொட்டி கட்சிகளின் அல்லது குழுக்களின் தலைவர்களும், தங்களது ‘புதிய, புதிய’ கோரிக்கைகளை, அல்லது கருத்துகளை தூவுகிறார்கள். ‘2017ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு பெரும் மாற்றத்தை கொண்டு வந்திருப்பதை கவனித்துத்தான் இவர்கள் சூழலைக் கணிக்கிறார்களா?’ என்ற கேள்வி நமக்கு எழுகிறது.
2016ஆம் ஆண்டு இறுதி வரை தமிழ்நாட்டு அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரண்டு பெரும் ‘ஆளுமைகள்’ இருந்தன. அல்லது அரசியல் வெளியை ஆக்கிரமித்துக் கொண்டு இருந்தன. ஜெயலலிதாவின் மறைவும், கருணாநிதியின் அமைதியும் அந்த ‘இரண்டு ஆளுமைகள்’ இல்லாத தமிழ்நாடாக இங்குள்ள ‘அரசியல் வெளியை’ வெளிச்சம்போட்டுக் காட்டிவிட்டன. அந்த ‘வெற்றிடத்தை’ நிரப்ப, மாநிலக் கட்சிகளும், அகில இந்தியக் கட்சிகளும் ‘விரும்புகின்றன’ என்பது உண்மை. ஆனால், அதற்கான எந்தச் சூழலும் தமிழ்நாட்டில் ‘இல்லை’ என்பதுதானே உண்மை. அந்த இரண்டு ‘பெரும் ஆளுமைகள்’ தலைமை தாங்கிய இரண்டு பெரும் கட்சிகள் தமிழ்நாட்டின் தேர்தல் அரசியல் பாதையை கிட்டத்தட்ட ‘ஆக்கிரமித்துக்’ கொண்டு பிற அகில இந்தியக் கட்சிகளுக்கோ, மாநிலத்தின் சிறிய கட்சிகளுக்கோ, நிற்கக்கூட இடமில்லாமல் செய்துவிட்டன. சமீபத்திய 2014 நாடாளுமன்றத் தேர்தலும், 2016 சட்டமன்றத் தேர்தலும் அதற்கான உதாரணமாக அமையவில்லையா? ஜெயலலிதாவின் செயல் தந்திரங்களில், 2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இடதுசாரிகள் உட்பட சிறிய கட்சிகளின் இருத்தலையே கேள்விக்குறியாக்கி விடவில்லையா? இனி மீண்டும் தாங்கள் வந்த பாதையில், தங்களது கட்சியை வளர்த்துக்கொள்ளல் என்பது அந்தச் சிறிய கட்சிகளுக்கு, சுலபமான காரியமா?

இந்த 2017ஆம் ஆண்டு நிலைமையை ஆய்ந்து பார்த்தால், 2016 வரை நாம் செய்திருந்த சில மதிப்பீடுகளை மறுபரிசீலனைக்கு உள்ளாக்க வேண்டுமா? இல்லையா? அவை என்ன மதிப்பீடுகள்? ஜெயலலிதாவின் ஆளுமையென்று கூற வெட்கப்பட்டு, அ.இ.அ.தி.மு.க என்று ஒரு கட்சியின் பெயரை கூறி நாம் அழைத்து வந்தோம். கலைஞரின் ஆளுமை என்று கூற வெட்கப்பட்டு, அதை தி.மு.க. என்று ஒரு கட்சி பெயரில் அழைத்து வந்தோம். தி.மு.க. என்ற ஒரு பெரிய ஆலமரம் அண்ணாவால் உருவாக்கப்பட்டு, போராடி, எழுந்து உருவாக்கி வந்திருந்தாலும், கடைசியில், கலைஞர் என்ற ஆளுமைக்குள் அடங்கி விடவில்லையா? அ.தி.மு.க என்ற பெரிய கட்சியை எம்.ஜி.ஆர் என்ற பெரும் ஆளுமை உருவாக்கிக் கொடுத்து, வளர்ந்திருந்தாலும் அது கடைசியில் ஜெயலலிதா என்ற ஆளுமைக்குள் அடங்கி விட்டது உண்மைதானே? இரண்டு ஆளுமைகளும் இல்லாத இந்த புதிய ஆண்டில், நாம் அ.இ.அ.தி.மு.க. என்றோ, தி.மு.க. என்றோ இரண்டு அமைப்புகள் இருந்தாலும் அவற்றை ஒரு முழு கட்சியாகக் கணிக்க முடிகிறதா? இன்று அ.தி.மு.க என்பது பகிரங்கமாக தேர்தல் ஆணையம் மூலம் அழைக்கப்படக் கூடாது என்று தடை அறிவிப்பு தமிழ்நாட்டுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இது என்ன புதிய விந்தை? இது என்ன புதிய வேதனை? இப்படி நமக்கே கேள்விகள் எழலாம். தேர்தல் ஆணையம் ஏன் செய்தது என்று நமக்கு பல காரணிகள் புலப்படலாம். ஆனாலும் ஒரு பெரிய ஆலமரம் அதன் விழுதுகள் எங்கும் பரவியுள்ள நிலையில், கண்ணுக்குத் தெரியக் கூடாது என்று நடுவண் ஆணைய உத்தரவால் மறுக்கப்படுவது சாதாரணச் செயல் அல்ல. இந்திய அரசியலுக்கே கடந்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில், சவால் விட்டு நின்ற ஒரு தமிழ்நாட்டு ஆளுமை இல்லை என்ற நிலையில்தானே, நடுவண் சக்திகளுக்கு அந்தத் துணிச்சல் வருகிறது? குஜராத்தின் மோடியா? தமிழ்நாட்டு லேடியா? என்று துணிச்சலாக கேட்ட ஒரு தமிழ்நாட்டு பெண் அரசியல்வாதி இல்லை என்ற நிலையில்தானே தேர்தல் ஆணையம் தனது அரசியலைப் பாய்ச்சுகிறது? ஒரு கோடியே எழுபது லட்சம் உறுப்பினர்கள் கொண்ட ஒரு கட்சியின் ஒரேயொரு கடைசித் தொண்டன்கூட, தேர்தல் ஆணையம் மீது கோபப்பட்டு, எந்த எதிர்ப்பையும், எந்த மூலையிலும் காட்டவில்லையே? ஏன்?
ஜெயலலிதா என்ற ஆளுமை வீழ்ந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத தமிழ் மனம் அதை பின்தொடர்ந்து வருவதாகக் கூறும் யாரையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் இல்லை. ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க-வை அந்த மனங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த நிலை, பின் ஒரு காலத்தில் மாறலாம். அது வேறு. ஆனால், இப்போது அத்தகைய சூழலில் இருக்கும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில், அ.தி.மு.க. என்ற கட்சியின் பெயருக்குத் தடை போட்ட தேர்தல் ஆணையத்தை எதிர்க்க யாரும் தயாரில்லை. அப்படியானால் ஜெயலலிதா என்ற ஆளுமைதான் உண்மை, அ.தி.மு.க. என்ற கட்சி ஒரு மாயை என்று கூறிவிட முடியுமா? இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முறை அப்படிக் கற்றுக் கொடுக்கவில்லையே? கட்சி என்பதற்கு பல விதிகள் உள்ளன. அதன்படி அது செயல்பட வேண்டும். அதற்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம் வேண்டும். அதற்கு எம்.எல்.ஏ-க்கள் வேண்டும். எம்.பி-க்கள் வேண்டும். தேர்தல் சின்னம் வேண்டும். இப்படியெல்லாம் இந்திய அரசியல் சட்டத்தின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனாலும்கூட, 122 எம்.எல்.ஏ-க்களும், 25 எம்.பி-க்களும், ஒரு கட்சியின் பெயரையும், சின்னத்தையும் அங்கீகரிக்கப் போதாது என்ற சீரிய முடிவை எடுத்துள்ள தேர்தல் ஆணையமும் ஒரு புதிய சாதனைதான் படைத்துள்ளது. எப்படி இருந்தாலும் இந்த புதிய சூழல் நமக்கு தனிநபர் ஆளுமையையும், கட்சியின் இருத்தலையும் பற்றி மறுபரிசீலனை செய்ய உதவ வேண்டும்.
அதேபோல தான் தி.மு.க-வும் உள்ளது. தலைவர் கலைஞர் அமைதியாகயிருக்கும் சூழலில், செயல் தலைவர் அறிவிக்கப்பட்ட நிலைமையில், பகிரங்கமாகத் தெரியாவிட்டாலும், தொண்டர்கள் மத்தியிலோ, அந்தக் கட்சியின் வாக்காளர்கள் மத்தியிலோ, முன்பு இருந்த நம்பிக்கை அதே போல இல்லை என்பதுதான் உண்மை. அங்கும்கூட தனிநபர் ஆளுமை என்பது, கலைஞரைப் போலவே, பொதுவெளிகளில் ஸ்டாலினுக்குக் கிடைப்பது என்பது இனிதான் என்ற நிலை உள்ளது. அதனால்தான் ஸ்டாலினுடைய செயல்பாடுகளில், பல கேள்விகள் தொண்டர்கள் மத்தியில் எழுகின்றன. உதாரணமாக, ஜெயலலிதாவின் ஆட்சியுடன் மோதாப் போக்கை கடைப்பிடித்ததோ, பன்னீர்செல்வம் ஆட்சி மீதும், அதே மோதாப்போக்கை செயல்படுத்தியதையும், கலைஞரது தலைமை செயல்பாடுகளிலிருந்து ஸ்டாலின் செயல்பாட்டை வேறுபடுத்திப் பார்க்க தொண்டர்களுக்கு உதவியுள்ளது. ஆகவே தி.மு.க-விலும்கூட, கலைஞரது ஆளுமை என்பதைக் கட்சியின் பலம் என எடுத்துக் கொண்டவர்களுக்கு பல கேள்விகள் எழுந்துள்ளன.
அந்தக் கேள்விகள் இந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும், எழுந்துள்ளன. உதாரணமாக தி.மு.க-வின் வேட்பாளராக ஒரு சாதாரணத் தொண்டரை அல்லது கட்சியின் பகுதி பொறுப்பாளரை நிறுத்திய விஷயம். ஜெயலலிதாவை எதிர்த்து, நின்ற முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் உறவுக்கார பெண்மணியை நிறுத்தாமல், ஏன் இப்படி ஸ்டாலின் செய்தார் என்கிற கேள்வி தொண்டர்கள் மத்தியில் இருக்கிறது. அந்தப் பெண்மணிக்கு தொகுதி வாக்காளர் மத்தியில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளம் என்ற செல்வாக்கும், வாக்கு வங்கியும் உள்ளதே என்றும் கேட்கிறார்கள். சாதாரண வேட்பாளரை நிறுத்தியே வெல்வோம் என்று வியாக்கியானங்கள் வந்தாலும், இதற்குப் பின்னால் என்ன உள்ளது என்ற கேள்வி எழாமல் இல்லை. பன்னீர்செல்வத்துக்காக சட்டப் பேரவையில் எடப்பாடி ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் பேசுவதும், அதையே கலகம் செய்யும் வேலையில் ஈடுபடுவதும் தி.மு.க-வுக்குத் தேவையா? எனவும் வினவுகிறார்கள். சபாநாயகருக்கு எதிராக இந்த நேரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து, அவருக்கு ஆதரவாக சபையையே மாற்றிவிட்டது ஏன் என்றும் கேட்கிறார்கள். நடுவண் அதிகாரத்தால் சின்னமும், கட்சிப் பெயரும் மறைக்கப்படும் வேளையில், தினகரன் அணிக்குப் பலம் சேர்ப்பதற்காக, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து அவர்களது பலத்தை நிரூபித்துக் காட்ட உதவினாரா? என்றும் ஸ்டாலின் பற்றி கேள்விகளை எழுப்புகிறார்கள். இத்தகைய கேள்விகளுக்கு இடம் கொடுக்காத அரசியலை, மோதல் அரசியலை கலைஞர் கொண்டிருந்ததால், அவரது ஆளுமை உயர்த்திப் பிடிக்கப்படுகிறது. இவ்வாறு இருப்பதால், தனிநபர் ஆளுமை கட்சியாக இதுவரை காணப்பட்டதா? இப்போது எதிர்பார்க்கும் அளவு கட்சி முன்புபோல இல்லையா? என்ற எண்ணம் வருகிறது. அதற்குள் அண்ணன், தங்கை அரசியல், அண்ணன், தம்பி அரசியல் என்பதும் பேசப்படாமலில்லை.
இத்தனைக்கும் இடையில், அ.இ.அ.தி.மு.க. மூன்று அணிகளாக இருப்பதால் அவர்களது வாக்குகள் சிதறும் என்பதும், அதனால் தி.மு.க வெற்றி உறுதி என்றும், தி.மு.க. தொண்டர்களும், பொதுவான புரிதல்களும் இருக்கின்றன. மூன்று அணிகளா? இரண்டு அணிகளா? என்று அ.தி.மு.க பற்றி பலவாறு பேசப்பட்டாலும், இப்போது அதன் தொண்டர்கள் மத்தியில் இருக்கும் விஷயம் கட்சியின் பெயரையும், சின்னத்தையும் காப்பாற்றுவது எப்படி என்றும், தி.மு.க-வைத் தோற்கடிப்பது எப்படி எனவும் இருக்கிறது. தினகரனுக்கு எதிராக ‘தினகரன்’ நிருபரா? என்கிற கேள்வியையும் கூட அவர்கள் நகைப்புக்கிடையே வெளிப்படுத்துகிறார்கள்.
இந்த நேரத்தில், ஓ.பி.எஸ். அணியின் முக்கிய அறிவுஜீவிப் பேச்சாளர் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தனது நேர்காணலில், கட்சியை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்றே திரும்ப, திரும்ப கூறுகிறார். சசிகலா அணிக்கு எதிராக அனைத்து வேலைகளையும், டெல்லி வரை சென்று செய்து பார்த்த பின்னால், ஆர்.கே.நகர் தொகுதியின் மண்ணின் மைந்தரை நிறுத்தியுள்ளோம் என வீராப்பு பேசிய பிற்பாடு, தேர்தல் நெருங்கும் நேரத்தில், களை இழந்து, கட்சி ஒன்றுபட வேண்டும் என்றும், தி.மு.க-வைத் தோற்கடிக்க வேண்டும் என்றும் பேசுவது, வேறு ஒரு செய்தியைக் கூறவில்லையா? அதுதவிர பாண்டியராஜன், ‘சபாநாயகரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நாங்கள் உள்ளே இருந்தால் சபாநாயகருக்கு ஆதரவாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ. போட்டதுபோல் ஓட்டுப் போட்டிருப்போம்’ என்கிறார். அதற்கு வக்காலத்துப்போல, ‘அம்மாவால் நியமனம் செய்யப்பட்ட சபாநாயகர். அதனால் எதிர்க்க மாட்டோம்’ என்கிறார்.

ஜெயலலிதா மரணத்தில் கேள்விகளை எழுப்பிய பொதுமக்கள், சசிகலாவைக் கேள்விக்கு உள்ளாக்கியது முதற்கட்டம் நடந்த உண்மை. அதுவே சசிகலாவுக்கு சிறை என்ற அறிவிப்பு வந்ததும், ‘ஆண்டவனே தண்டித்துவிட்டான்’ என பொதுமக்கள் பேசுவதும் உண்மை. ஆகவே, அந்த எதிர்ப்பும், கோபமும், அப்படியே ஐம்பது விழுக்காடு இறங்கிவிட்டது என்பதையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டியிருக்கிறது. அத்தகைய எந்த எதிர்ப்பும், கோபமும், பொதுமக்களுக்கு டி.டி.வி. தினகரன் மீது இல்லை. அ.தி.மு.க. கட்சியின் தொண்டர்களைக் கையாளும் வட்டாரத்து தலைவர்களான வெற்றிவேல், நேதாஜி, கார்த்தி, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தினகரன் அணியிலேயே இருக்கிறார்கள் என்பதும் உண்மை. வாக்காளர்களை, வாக்குச்சாவடிக்கு கொண்டுவருவதும், அவர்களை வாக்களிக்க வைப்பதும் ஒரு பெரிய ‘கலை.’ இந்த கலையைத் தெரிந்த வட்டாரத்து தலைவர்கள் வெற்றிக்கு பெரிதும் உதவுவார்கள். ஆட்சி யார் கையில் இருக்கிறதோ, அது ‘இடைத்தேர்தல்களில்’ செல்வாக்கு செலுத்தும் என்பதும் உண்மை.
இவ்வாறாக கட்சியையும், சின்னத்தையும் முடக்கியவர்கள் என்ற கெட்ட பெயரை, ஓ.பி.எஸ். அணியும், ஸ்டாலின் அணியும் பெறும்போது, கட்சியையும், சின்னத்தையும் மீட்கும் பெரிய களத்தில் நிற்பவராக தினகரனை அந்தக் கட்சியின் தொண்டர்கள் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற செய்தியும் இருக்கிறது. அதுவே புதிய ஒரு ஆளுமையை கொண்டுவர உதவுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- டி.எஸ்.எஸ்.மணி,
சமூகச் செயற்பாட்டாளர்