Monday, December 25, 2017

தேர்தலைத் தீர்மானிப்பது எது? பணமா, சின்னமா, அரசியலா?

சிறப்புக் கட்டுரை: தேர்தலைத் தீர்மானிப்பது எது? பணமா, சின்னமா, அரசியலா?

சிறப்புக் கட்டுரை: தேர்தலைத் தீர்மானிப்பது எது? பணமா, சின்னமா, அரசியலா?

டி.எஸ்.எஸ். மணி

தினகரனின் வெற்றி பல்வேறு செய்திகளைக் சொல்லிக்கொண்டு வருகிறது. ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள், டி.டி.வி.தினகரன்தான் இனி உண்மையான அதிமுக என்று நிரூபணமாக்கி இருக்கிறது. அதாவது வி.கே.சசிகலா அணிதான் உண்மையான அதிமுக என்ற கருத்தை, ஆர்.கே.நகர் வாக்காளர்கள், தமிழ்நாட்டு மக்கள் சார்பாகத் தேர்தல் ஆணையத்துக்குப் புரியும் மொழியில் கூறியுள்ளார்கள். அது மட்டுமல்ல, அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சியான பாஜகவும், அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியான திமுகவும் கட்டுத்தொகையை இழந்துள்ளன. தேர்தல் ஆணையத்தால் வெறும் சுயேச்சை வேட்பாளர் என்ற மரியாதையை மட்டுமே பெற்ற தினகரன் சாதாரணமாக 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இது எப்படி ‘பணம்’ மட்டுமே தேர்தலைத் தீர்மானிக்கும் என்ற கருத்தைக் கொடுக்கும்? இதில் என்ன அரசியல் செய்தியைப் படிக்கப் போகிறோம்?
தமிழ்நாட்டை ஆளும் ஒரு கட்சியை இடைத்தேர்தலில் தோற்கடிக்க முடியும் என்பதில் அரசியல் இல்லையா? அகில இந்திய அளவில் ஆளும் ஒரு கட்சி, ‘நோட்டோ’வை விடக் குறைவாக வாக்குகள் வாங்கி, கட்டுத் தொகையை இழந்துள்ளது அரசியல் இல்லையா? தமிழ்நாட்டில் மக்கள் மன்றத்திலும், சட்ட மன்றத்திலும் எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக தோற்பது மட்டுமின்றி, கட்டுத் தொகையையும் இழந்துள்ளது. இதுவும், அரசியலாகத் தெரியவில்லையா?
பணம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் பக்கத்திலிருந்து விளையாடியது என்பது உண்மைதான். ஆனால், அது எப்போதும் தீர்மானிக்கும் பங்கை வகிக்குமா? உதாரணமாக திமுகவின் ஒரு வாக்காளர், பணம் பெற்றதற்காக மாற்றிப் போடுவாரா? அதிமுகவின் ஒரு உறுப்பினர் பணம் பெற்றதற்காக மாற்றிப் போடுவாரா? அப்படி வாய்ப்பே இல்லை.
பணம் தருவது புதுப் பழக்கமா?
ஒவ்வொரு கட்சியும் தங்களது கட்சியின் உறுதியான வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். அதற்கு அவர்களும் சரி, வாக்காளர்களும் சரி, ஒரு நேர்மையற்ற ‘விளக்கத்தை’
வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருநாள் வேலைக்குச் செல்லாமல் வாக்களிக்கச் செல்வதால், தங்களது பணிக்கூலியை இழப்பதாகவும் அதை நிரப்பவே பணம் வாங்கிக்கொள்வதாகவும் ஒரு வித்தியாசமான விளக்கத்தைக் கூறி வருகிறார்கள். இது ஜனநாயகத் தேர்தல் முறையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. ஆகவே, நாம் ஏற்க முடியாதுதான். ஆனால், எல்லோரும் அதை ஒரு பழக்கமாக ஆக்கிவிட்டார்கள்.
இந்தப் பழக்கம், நான் சிறு வயதில் 1960 காலத்தில் நேரில் பார்த்த நிகழ்ச்சியை நினைவுக்குக் கொண்டு வருகிறது. ‘காங்கிரஸ் கட்சிக்காரர்களால் எங்கள் தெருவில் உள்ள வாக்குச் சாவடியில், உள்ளாட்சித் தேர்தலில்கூட, அதாவது நகராட்சிக்கு நடந்த தேர்தலில், ஒரு வீட்டில் சாப்பாடு போட்டு, வாக்காளர்களை அனுப்புவதை, திருநெல்வேலியில் சந்திப்பு பகுதியில் ஸ்ரீபுரம் தெருவில் பார்த்தவன் நான். அது மட்டுமல்ல... காங்கிரஸ் கட்சி மாட்டு சின்னத்தில் ஓட்டுப் போடச் சொல்லி ஒரு ரூபாயும், இரண்டு ரூபாயும் கொடுத்ததைத்தான் கம்யூனிஸ்டுகள் பாடலாகப் பாடினார்கள். ‘ஒரு ரூபாய் நோட்டும் தாரேன், உப்புமா, காப்பி தாரேன். மாட்டுச் சின்னம் பார்த்து நீ ஓட்டைப் போடு’ என்ற பாடல் அது.
இத்தகைய செயலை அறுபது ஆண்டுகளாகப் பழக்கமாக்கி விட்டார்கள் என்பதால் நாம் நியாயப்படுத்த முடியாது. ஆனால், அத்தகைய பணம் மட்டுமே தேர்தலைத் தீர்மானிப்பதில்லை என்ற உண்மையைச் சொல்லியே ஆக வேண்டும்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளுகின்ற ஆட்சியாளர்கள் கையில் உள்ள கட்சி, அதாவது தேர்தல் ஆணையத்தால் அதிமுக என்ற அங்கீகாரத்தைப் பெற்ற ஒரு கட்சி, ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் ஆறாயிரம் ரூபாய் பணம் கொடுத்ததாக, அனைவரும் அடித்துச் சொல்கிறார்கள். அப்படியானால் அந்தப் பணம் வெற்றியை தீர்மானிக்கவில்லையே? அந்தப் பணம் எல்லா வாக்காளர்களுக்கும் போய்ச் சேரவில்லை என்பதால் பலருக்கும் ‘கோபம்’ என்ற செய்தி ஒன்று நமக்கு கிடைத்துள்ளது. அது வேறு விஷயம்.
தேர்தல் நாளுக்கு முந்தைய நாள் தினகரன் அணி, ஒரு இருபது ரூபாய் நோட்டைக் கொடுத்தோ அல்லது அந்த வீட்டில் இருக்கும் ஒரு இருபது ரூபாய் நோட்டின் சீரியல் எண்ணைக் குறித்துக் கொண்டு, தேர்தலுக்குப் பிறகு அந்த எண்ணைக் காட்டிப் பணம் வாங்கிக்கொள்ளுங்கள் என்று வாக்குறுதி கொடுத்தோ வேலை செய்ததால்தான் வாக்குகள் சேர்ந்தன என்று சொல்வார் உண்டு. அதற்கும் தினகரன் பதில் கூறினார். “நான் கடன் சொல்லி ஓட்டு வாங்கினேன் என்கிறீர்களா?” என்கிறார். அப்படியே இருந்தாலும் “கடன் சொல்லி வாக்கு வாங்கினேன் என்றால், என் மீது அந்த மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்று நீங்களே சொல்வதாகத்தானே அர்த்தம்” என்று ஊடகவியலாளர்களைப் பார்த்துக் கேட்டார்.
அத்தகைய விவாதம் ஒருபுறம் இருக்கட்டும். நாம் மக்களது வாக்குகளில் உள்ள அரசியல் உணர்வுகளைக் காண வேண்டும்.
சின்னம் தீர்மானிக்குமா?
தேர்தலைப் பொறுத்தவரையில் சின்னம்தான் தீர்மானிக்கும் என்ற நிலை பழைய காலத்தில் இருந்தது உண்மையே. ஆனால், உயர் தொழில்நுட்பம் வளர்ந்த இக்காலத்தில், ஒரு சின்னம் என்பது புதிதாக அறிமுகம் ஆனாலும், அது மக்களை விரைவில் போய்ச் சேர்ந்துவிடும். அதுவே தினகரன் விஷயத்திலும் நடந்துள்ளது. தொப்பி சின்னம் எப்படி உடனடியாகப் பிரபலம் ஆனதோ... அது போலவே, குக்கர் சின்னம் இருபத்து நாலு மணி நேரத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாக அறிமுகம் ஆகிவிட்டது. ஆகவே, வேட்பாளர் மூலம் சின்னம் அறிமுகமாகிவிடும். சின்னம் மூலம் வேட்பாளர் அறிமுகமாக வேண்டியது இல்லை. இதுவே புதிய வரலாறு. இதையும் இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது.
எப்படி இந்த ஆண்டின் தொடக்கமே, ஜல்லிக்கட்டு எழுச்சி மூலம் பல புதிய வரலாறுகளை, படிப்பினைகளை ஏற்படுத்தியுள்ளதோ... பழைய மதிப்பீடுகள் பலவற்றைக் காலாவதியாக்கியுள்ளதோ... அதுபோல இந்தத் தேர்தலும் பல மதிப்பீடுகளைப் புதிதாக நிரூபித்துள்ளது. மக்களுடைய ஒட்டுமொத்த அரசியல் உணர்வுகளை, உதாரணமாக தமிழ்நாட்டு நலன்களுக்கு எதிராக இருக்கும் நடுவன் அரசின் செயல்களை எதிர்க்கும் மனோபாவம் என்ற அரசியல் உணர்வை, இந்தத் தேர்தல் பதிவு செய்துள்ளது. மத்திய அரசின் செயல்பாடுகள், தினகரனையும் அவரது குடும்பத்தாரையும் குறிவைத்துத் தாக்கியதைத் தமிழக மக்கள் கவனித்துக்கொண்டிருப்பது மட்டுமின்றி, கடுமையாக எதிர்க்கவும் செய்கிறார்கள் என்பதே அந்த அரசியல் உணர்வு. அதுவே தினகரனுக்கும், வி.கே.எஸ். அணிக்கும் ஆதரவாக எழுந்துள்ளது. அதற்கு, ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதே ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு.
ஊடகங்களின் தப்புக் கணக்கு
ஊடகங்கள் வழக்கம் போலவே, தவறாக வெற்றி பற்றி கணித்தார்கள். சிலர் கணக்குப் போட்டு தாங்கள் ஆய்வு செய்ததாகக் கூறி, வழக்கம் போலவே, தங்களது சொந்த விருப்பத்துக்கு ஒரு கணிப்பு வடிவம் கொடுத்தனர். அதுவும் இப்போது பொய்யானது. சிலர் திமுக வாக்குகளை தினகரனுக்குப் போடச் சொல்லி ஒரு தந்திரத்தை திமுக தலைமை செய்துள்ளதா எனக் கேள்விகளையும் எழுப்பினர். அது திமுக தலைமையை இழிவுபடுத்தும் கூற்று.
திமுக தலைமை, வேட்பாளர் தேர்வில் சிறிது கவனமாக இருந்திருக்கலாம் என அவர்கள் கூறியிருந்தால் அதில் நியாயம் இருக்கிறது. ஏன் என்றால், சென்ற முறை ஜெயலலிதா நிற்கும்போது, திமுக வேட்பாளராக இருந்த சிம்லா முத்துச் சோழன் 39,000 வாக்குகள் வித்தியாசத்திலேயே தோற்றார். அவரே நிறுத்தப்பட்ட்டிருந்தால், திமுக நிலைமை இப்போது போல ஆகியிருக்க முடியாது. அது அவர்கள் கட்சிக்குள் விவாதிக்க வேண்டிய விஷயம்.
குறிப்பிட்ட வேட்பாளரின் ஆதரவாக இருக்கும் அவர்களது சமூக வாக்குகள் இப்போது கணிசமாக தினகரனுக்கு விழுந்துள்ளது என்ற பேச்சு எழுந்திருக்காது. அதேபோல, நடிகர் விஷால் நிற்க முனையும்போது, மொழியைக் காரணமாக்கி மதுசூதனின் வாக்குகளை அவர் பறிப்பார் என்று ஆளும்கட்சி பயந்ததாகச் சொல்லப்பட்டது. அதுவும் இப்போது பொய்யானது. நமது தமிழ்நாட்டு மக்கள் வேட்பாளரைப் பார்ப்பார்களே தவிர, மொழிப் பின்னணியைப் பார்த்து வாக்குகளைப் போடுவது இல்லை. அதுவும் இங்கே நிரூபணமாகியுள்ளது.
இவ்வாறாக அரசியல், சமூகம், வேட்பாளர், நம்பிக்கை எனப் பல வகைக் காரணங்கள் இந்த வெற்றிக்குப் பின்னே இருக்கின்றன என்பதைப் பார்த்துத்தான் ஆக வேண்டும். நமது முன் முடிவுகளைப் புறம் தள்ளிவிட்டுத் திறந்த மனத்தோடு சிந்தித்தால், ஒவ்வொரு தேர்தல் முடிவிலிருந்தும் நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம்.
கட்டுரையாளர் குறிப்பு
டி.எஸ்.எஸ்.மணி
தமிழின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர். இந்திய அளவில் கவனிக்கத்தக்க பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளை விவாதித்து வருபவர்.
தொடர்புக்கு: manitss.mani@gmail.com

Tuesday, November 14, 2017

E.P.S and O.P.S. -Are they fighting?

சிறப்புக் கட்டுரை: ஈ.பி.எஸ்ஸைக் கவிழ்க்கப் பார்க்கிறாரா ஓ.பி.எஸ்?

சிறப்புக் கட்டுரை: ஈ.பி.எஸ்ஸைக்  கவிழ்க்கப் பார்க்கிறாரா ஓ.பி.எஸ்?
தினகரனை எதிர்த்துதான் எடப்பாடி பழனிசாமியும் (ஈ.பி.எஸ்) ஓ.பன்னீர்செல்வமும் (ஓ.பி.எஸ்) சேர்ந்தார்கள் என்று நினைத்தால், இரண்டு அணிகளும் சேர்ந்த பின்னாலும், இவர்கள் தனித்தனியாக இயங்கிவருவதைப் பார்க்கிறோம். ஓ.பி.எஸ்ஸுக்கு உரிய பதவி கிடைக்கவில்லை என்ற பொருள்பட அவரது அணியைச் சேந்த அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் கூறினார். இப்போது இரண்டு பேரும் சேர்ந்தே உள்ளோம் என்று காட்ட, ஈ.பி.எஸ். தலைமையிலான அரசு எவ்வளவோ முயன்றாலும், ஓ.பி.எஸ். அணியினர் வேறு யாருக்கோ விசுவாசம் செலுத்த இடையூறு செய்கிறார்கள் என்று தெரிகிறது.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி சமீபத்தில் நடந்த இரண்டு விழாக்களிலும் அது பளிச்சென்று தெரிந்தது. தேனியில் நடந்த விழாவில் ஓ.பி.எஸ். பேசி முடித்ததும் ஈ.பி.எஸ். பேச எழுந்திருக்கும்போது, வந்திருந்த கூட்டத்தில் பலர் எழுந்து சென்றுவிட்டனர். தேனி மாவட்டம், ஓ.பி.எஸ்ஸின் சொந்த மாவட்டமாக இருப்பதால், அவரது அரசியல் வாழ்க்கை அங்கு மையம் கொண்டிருப்பதால், அத்தகைய செயலை அவரால் நிகழ்த்திக்காட்ட முடியும்.
ஓ.பி.எஸ். பதிலடி
இது திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பது ஈ.பி.எஸ். அணியினருக்குத் தெரிந்துவிட்டது. ஓ.பி.எஸ்ஸை நிதியமைச்சராக ஆக்கிய பின்னும் பழைய நிதியமைச்சர் ஜெயக்குமாரே ஜி.எஸ்.டி. ஆலோசனைக்காக டெல்லி போவதும், எந்த எந்தப் பொருளுக்கு வரி குறைப்பு வாங்கியுள்ளேன் எனப் பட்டியலைப் படிப்பதும் நடந்துவருகிறது. அவர் ஈ.பி.எஸ். அணிக்காரர். அப்படியானால், பதிலுக்கு ஓ.பி.எஸ்ஸும் செய்வாரில்லையா?
அடுத்து 12-11-2017 அன்று, திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டையில், அதே விழா நடத்தப்பட்டது. அங்கு குறிப்பாக, ஓ.பி.எஸ்ஸுக்கு வேண்டியவரும், ஓ.பி.எஸ்ஸின் பங்கு இருப்பதாகப் பலராலும் நம்பப்படுபவரும், தாது மணல் புகழ் என அறியப்பட்டவருமான ஒருவர், பல வாகனங்களையும் ஆட்களையும் அனுப்பினார் என்கிறது ஒரு செய்தி. அப்படி வரவழைக்கப்பட்டவர்கள், “வருங்கால முதல்வர் ஓ.பி.எஸ். வாழ்க” என்று இன்றைய முதல்வர் ஈ.பி.எஸ். முன்னிலையிலேயே முழக்கமிட்டதாகக் கூறுகிறார்கள். அது தவிர தேனியில் செய்யப்பட்டது போலவே, பாளையிலும், ஓ.பி.எஸ். பேசி அமர்ந்ததும், வந்திருந்த அந்த கூட்டம், முதல்வர் ஈ.பி.எஸ். பேச எழும்போது, கூட்டத்தை விட்டு வெளியேறி விட்டார்களாம். இதுவும் திட்டமிட்ட செயல் என்கிறது ஈ.பி.எஸ் குரூப்.
எம்.ஜி.ஆர். திமுகவில் இருக்கும்போது, மதுரையில் முத்துப்பிள்ளையை (மதுரை முத்து) வைத்து கலைஞர் திமுக மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தார். மதுரை முத்து, கலைஞரின் மகனான மு.க.முத்துவை, மாநாட்டைத் தொடங்குவதற்கு முன்பு நடத்தப்பட்ட கழகப் பேரணியைத் தொடங்கிவைக்க ஏற்பாடு செய்தார். முத்து ஒரு வெள்ளைக் குதிரையில், கழகக் கொடி ஏந்தி பேரணிக்கு முன்னே வந்தார். அந்தக் காலகட்டத்தில் முத்து தன் படங்களில், எம்.ஜி.ஆர். போலவே நடித்திருப்பார். சொந்தக் குரலில் பாடுவார். அவரை எம்.ஜி.ஆருக்குப் போட்டியாகக் கருணாநிதி முன்னிறுத்துவதாகக் கருதப்பட்டது.
பேரணியில் எம்.ஜி.ஆர். பேசி முடித்ததும், மேடையை விட்டுக் கீழே இறங்கினார். உடனே கூட்டத்தில் பெரும்பான்மையினரும் பந்தலை விட்டு வெளியேறிவிட்டார்கள். அப்போது இயக்குநர் ஸ்ரீதரால் நடத்தப்பட்டுவந்த ‘சித்ராலயா’ என்ற வார ஏடு, இது பற்றி கட்டம் போட்ட செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்தச் செய்தியில், ‘மக்கள் யார் பக்கம்?’ என்று தலைப்பிட்டு, ‘மதுரை திமுக மாநாட்டில், எம்.ஜி.ஆர். பேசி முடித்து மேடையை விட்டுக் கீழே இறங்கி வெளியே சென்றதும் பெரும் கூட்டமும் வெளியேறியது’ எனப் போட்டிருந்தார்கள். அதை அப்படியே ஓ.பி.எஸ். பின்பற்றுகிறாரோ?
தாது மணல் விவகாரமும் அரசியலும்
தாது மணல் அள்ளும் விஷயத்தில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் கடற்கரைகளில், ஜெயலலிதா ஆட்சியில் அதிகாரிகள் மூலம் நேரடியாக ஆய்வுகளையும், சோதனைகளையும் மேற்கொண்டார். தாது மணல் கொள்ளை என்பதாகச் சிக்கிக்கொண்ட தனியார் பிரமுகரைப் பகைத்துக்கொண்டார். ஜெயலலிதா இருந்தவரை ககன்சிங் பேடியை வைத்து ஆய்வுசெய்து, ‘அணுசக்தி மணல் எடுக்கத் தடை’ விதித்தார்.
ஆனால், இன்று தாது மணலில் கார்னட் கனிம வளம் தோண்ட அரசு கொடுத்த அனுமதி, தவறாக எங்கோ கொண்டு போய் நிறுத்திவிட்டது என்கிறார்கள்.
அதிகமாக அள்ளியதாக முதலில் குற்றம் கூறப்பட்டது. பிறகு அதிலேயே இலுமனய்ட் கனிம வளம் கிடைத்தது தெரிந்தது. இப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த வழக்கின் விசாரணை நடக்கிறது. இப்போது அதில் அடர்த்தியாக மோனோசைட் கனிமம் கிடைக்கிறது என்றும் அது உலக ஆயுத வணிகர்களுக்கு மிகவும் தேவை என்பதும் வெளிவந்துள்ளன. அப்படிப் பலப் பல கோடிகளுக்கு எடுக்கப்பட்டது என்பதாகவும் கூறுகிறார்கள். அமெரிக்காவில் உள்ள பெரிய பன்னாட்டு மூலதனக்காரர்கள் அனுபவிக்கிறார்கள் என்றும் பேச்சு. இது எங்கே கொண்டுவிடும்?
சமீபத்தில், இந்த வழக்கில் அணுசக்தித் துறை, அணுசக்தி ஒழுங்குபடுத்தல் வாரியம் போன்ற அதிக அதிகாரம் படைத்த, இந்தியாவின் ‘பாதுகாப்பையும் இறையாண்மையையும்’ காப்பாற்றிவரும் துறைகளும் பங்குகொள்ளத் தொடங்கிவிட்டனர் என்கிறது செய்தி. கேள்வி கேட்கும் நிலையில் இந்திய அணுசக்தித் துறையும், மாட்டிக்கொண்ட நிலையில் அரசியல்வாதிகளும், அந்நிய சக்திகளும் நிற்கின்ற ஓர் இக்கட்டான நிலை எழுந்துள்ளது. அதில் தமிழ்நாட்டின் ஆளும்கட்சி விவகாரமும் சிக்கிக்கொண்டிருப்பது தெரிகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஜல்லிக்கட்டு எழுச்சியில், அன்றைய முதல்வர் கரத்தைப் பலப்படுத்த, மெரினா எழுச்சிக்கு ஆறு நாளும் உணவுப் பொட்டலங்கள் அளித்த கரங்கள் எவை? தூத்துக்குடியில் அதே நேரம் நடந்த எழுச்சிக்கு ஆரம்ப நிதி எங்கிருந்து வந்தது? இப்போது பாளை கூட்டத்துக்கு வாகனம் அனுப்பிய ‘தர்மக்கரம்’தான் இதையெல்லாம் செய்தது என்பது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.
ஒருமாதிரி இந்த உலக அரசியல் புரிகிறதா..?E.P.S.

Saturday, September 30, 2017

குஜராத் வளம்பெற, தமிழ்நாடு நட்டமடையலாமா?

குஜராத் வளம்பெற, தமிழ்நாடு நட்டமடையலாமா?

குஜராத் வளம்பெற, தமிழ்நாடு நட்டமடையலாமா?
டி.எஸ்.எஸ். மணி
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செப்டம்பர் 27ஆம் நாள் தமிழ்நாட்டுக்குச் சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்காக, 1500 மெகா வாட் மின்சாரத்தைக் குறைந்த விலைக்கு அதாவது யூனிட் ரூ.3.47 முதல் ரூ.3.97 விலைக்கு வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குஜராத்தில் உள்ள நான்கு ஆலைகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். அந்த நான்கு ஆலைகளில், குறைவான டெண்டர் அளித்த ராசி கிரீன் ஒரு யூனிட்டுக்கு, ரூ.3.47 எனக் கொடுத்திருந்ததையே எல்லா ஆலைகளுக்கும் அடிப்படை விலையாக நிர்ணயித்து இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு மின் வாரியத் தலைவர் சாய் குமார் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. குஜராத்தில் சூரிய ஒளி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 16 ஆலைகள் இந்த ஏலத்தில் பங்குகொண்டன.
ஒரு மெகா வாட்டுக்கு ஆறு கோடி என்ற அளவில் 9,000 கோடிக்கு இந்தப் பதினாறு ஆலைகளும் இந்த ஆண்டில் குஜராத்தில் சூரிய ஒளி மின்சார உற்பத்திக்காக முதலீடு செய்கின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில், ராசி கிரீன் ஆலையின் தலைமையில் இந்த 16 அலைகளும், 100 மெகா வாட் உற்பத்தி செய்ய இருக்கின்றன. நெய்வேலி லிக்னைட் ஆலை 709 மெகா வாட் தரும். ஆறு நிறுவனங்கள் ஆளுக்கு 100 மெகா வாட் தர உள்ளன. மற்ற நிறுவனங்கள் 54 மெகா வாட் வரை தர உள்ளன. ராசி கிரீன் ஆலை அதிபர் கிருஷ்ணகிரி தொகுதி முன்னாள் எம்.பி. நரசிம்மன், தங்களது சூரிய ஒளி மின் உற்பத்தி ஆலை நிறுவ 400 ஏக்கர் தேவைப்படுவதால், அவர் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் தங்கள் நிலத்தில் ஆலை வரும் என்கிறார்.
இன்று நிலக்கரி மூலம் அனல்மின் நிலையங்களின் உருவாக்கல் செலவைவிட, மிகக் குறைந்த செலவில் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது நூற்றுக்கு நூறு உண்மை. இந்தியா உலக அளவில் சூரிய ஒளி மின் உற்பத்தியில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது எனபதும் உண்மை. அதிலும், சூரிய ஒளி மின்சாரம் என்ற மின் உற்பத்தி, அனல்மின் நிலையங்கள் போலவோ, அணு உலைகள் போலவோ சுற்றுச்சூழல் ஆபத்தை ஏற்படுத்தப் போவது இல்லை என்பதும் உண்மை. ஆனால், இந்தத் திட்டங்கள் தமிழகத்துக்கு லாபகரமானவையா என்பதுதான் இப்போது கேள்வி.
அங்கே என்ன விலை?
தமிழ்நாட்டில் கையெழுத்திடப்பட்ட அதேநேரத்தில், அதே நாளில், குஜராத்தில் நடந்த ஓர் ஏலத்தில் இதே 16 ஆலைகள் குஜராத் அரசாங்கத்துக்கு ரூ.2.65 விலைக்கு ஒரு யூனிட் எனக் கொடுத்துள்ளார்கள். அதுதான் அங்குள்ள சந்தை விலை. அப்படியானால், தமிழ்நாட்டுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.3.47 என்றாலும் ஒப்பிடும்போது ரூ.150 கோடி நட்டமாகாதா?
அனல்மின் நிலையங்களின் சரிவும், சூரிய ஒளி மின் உற்பத்திக்கு வந்துள்ள போட்டியும் சேர்ந்து அடுத்த சில ஆண்டுகளில் இன்னமும் இந்த விலையை யூனிட்டுக்கு ரூ.1.50 அளவுக்குக் குறையும் என்றும் தொழிற்சாலை வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். ஒரு மெகா வாட் என்பது பத்து லட்சம் யூனிட் மின்சாரம். அப்படியானால் மேற்கண்ட ஒப்பந்தத்தில் உள்ள வேறுபாடு சுமாராக ஒரு யூனிட்டுக்கு, 1 ரூபாய் கூடுதலாகக் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கணக்கு பார்த்தோமானால், தமிழ்நாடு ஏன் மொத்தம் ரூ.150 கோடி பணம் அதிகமாகக் கொடுக்க வேண்டும்? யாருக்கு அந்தப் பணம் போய்ச் சேர்கிறது? ஆலைகளுக்கே போயிருந்தாலும் தமிழ்நாட்டுக்கு நட்டம்தானே? இவ்வாறு கேள்விகள் எழுகின்றன.
குஜராத்துக்கான மீட்சித் திட்டமா?
புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி உற்பத்தி செய்வதற்கு உகந்த சூழல் குஜராத்தில் இருக்கிறது என்று கூறி தலைமை அமைச்சரும், முன்னாள் குஜராத் முதலமைச்சருமான நரேந்திர மோடி குஜராத்தில் சூரிய ஒளி உற்பத்திக்கான மூலதனத்தை அதிகமாகக் கொட்டிவருகிறார். அதற்காக, குஜராத் அரசு பல்வேறு சலுகைகளையும் கொடுத்து வருகிறது. சமீபத்தில் மத்திய அரசும் சூரிய ஒளி மின்சாரம் தயார் செய்வதற்காக 7 விழுக்காடு வரை மானியம் தருவதாகக் கூறியுள்ளது. அதனால், இந்தியாவிலேயே, குஜராத்தான் சூரிய ஒளி மின் உற்பத்தியில் முதல் மாநிலமாக நிற்கிறது. ஏ.பி.பி. போன்ற பன்னாட்டு மூலதன நிறுவனங்களை மோடியின் முயற்சியால் குஜராத்துக்குள் நுழைய சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து அழைத்துள்ளார்கள்.
ஆனாலும், அதிகமான மூலதனம் போட வேண்டியிருப்பதாலும் விலை நிர்ணயத்திலும் உடனடியாக விற்க இன்னமும் சந்தை விரிவாகாதனாலேயும் அவை நெருக்கடியைச் சந்திக்கின்றன. அதை ஈடுகட்ட சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி ‘எல்லோருக்கும் மின்சாரம்’ என்று அறிவித்தார். அதற்காக, 28,000 மெகா வாட் அந்த குஜராத் ஆலைகளிலிருந்து வாங்குவதற்கும் உத்தரவிட்டுள்ளார். இது குஜராத்தில் நெருக்கடியைச் சந்திக்கும் ஆலைகளுக்குப் புனர்வாழ்வு கொடுக்க என்பது தெரிகிறது.
அதுபோலவே, இன்றைய தமிழ்நாடு அரசும் அதே காரணங்களுக்காக இந்த அவசர ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளதா என்பதே கேள்வி. ஏனென்றால், 2016ஆம் ஆண்டு கடைசியில் டிசம்பர் மாதம், இந்தியாவில் சூரிய ஒளி மின்சாரம் நடுவண் அரசின் என்.டி.பி.சி. மூலம் மிகக் குறைந்த விலை என்பதாக யூனிட்டுக்கு ரூ.3 என்றும், 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில், மத்தியப்பிரதேச மாநிலத்தில் ரேவா சூரிய ஒளி மின்சாரத் திட்டம் மூலம், ரூ.2.97க்கும், 2017ஆம் ஆண்டு மே மாதம் ராஜஸ்தானில் தார் பாலைவனத்தின் எல்லையில் உள்ள 10,000 ஏக்கர் நிலத்தில் உருவாக்கப்பட்டுள்ள பத்லா சூரிய ஒளி மின்சாரப் பூங்கா மூலம் சோலார் எலெக்ட்ரிக் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா 2016ஆம் ஆண்டு, மே 16இல் ரூ. 2.62க்கும், மே 18இல் ரூ.2.44க்கும் ஒரு யூனிட் மின்சாரத்தைக் கொடுத்தது என்பது நமது அமைச்சரவைக்குத் தெரியுமா, தெரியாதா என்பது நமக்குத் தெரியாது. அப்படியிருக்கையில், ஏன் குஜராத்தின் ஆலைகளையே இந்த அரசு சார்ந்திருக்க வேண்டும் என்பதும் அதுவும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும் என்பதும் நாம் சிந்திக்க வேண்டியது.
தமிழகத்துக்கு வேறு வழி இல்லையா?
இப்படிக் கேட்டோமென்றால், தமிழ்நாடு அரசு வேறொரு காரணத்தைச் சாக்காகக் கூறலாம். அது என்னவென்றால், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்கான விலையாக யூனிட்டுக்கு நாலு ரூபாய்க்கு மேல்தான் ஆலோசனை கூறியது என்றும், நாங்கள் அதற்கும் குறைவாகத்தான் வாங்கியிருக்கிறோம் என்றும் கூறலாம். ஆனால், மேலே கொடுத்திருக்கும் புள்ளிவிவரங்களிலிருந்து சில விஷயங்கள் தெளிவாகின்றன. குஜராத் அரசாங்கத்துக்குக் குறைந்த விலையில் அதே நாளில் கொடுத்ததையும் மத்தியப்பிரதேச மாநிலத்திலும், ராஜஸ்தான் மாநிலத்திலும் மேலும் குறைந்த விலைக்கு சூரிய ஒளி மின்சாரம் கிடைப்பதையும் ஒப்பிட்டோமானால், எதற்காக குஜாரத்தையே சார்ந்து தமிழ்நாட்டின் தேவைகள் நிரப்பப்பட வேண்டும் என்று கேட்கலாம்.
நாம் மேற்கோள்காட்டும் மத்தியப்பிரதேச மாநிலமும், ராஜஸ்தான் மாநிலமும்கூட பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியின் கீழ்த்தான் உள்ளன. ஆகவே, இது மத்தியில் ஆளும்கட்சியின் நன்மைக்கு என்றுகூட நாம் கூறவில்லை. இது குஜராத் வீழ்ந்துவிடாமல் காப்பதற்காகவா என்றே சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. மோடி கட்சிக்குள் தனது போட்டியாளர்களுக்கு எதிராகத் தனது சாதனையைக் காட்டும் நோக்கமாகவும் இருக்கலாம்.
ஏற்கெனவே பக்கத்து மாநிலமான கேரளாவில் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி இதுபோலவே சூரிய ஒளி மின்சாரம் வாங்கிய ஊழலில் சிக்கிக்கொண்டிருக்கிறார் என்பது இப்போது நினைவுக்கு வருகிறது.

Friday, August 25, 2017

குர்மீத் ராம் ரஹீம் சிங் ‘மனிதக் கடவுள்’ ஆனது எப்படி?

சிறப்புக் கட்டுரை: குர்மீத் ராம் ரஹீம் சிங் ‘மனிதக் கடவுள்’ ஆனது எப்படி? - டி.எஸ்.எஸ்.மணி

சிறப்புக் கட்டுரை: குர்மீத் ராம் ரஹீம் சிங் ‘மனிதக் கடவுள்’ ஆனது எப்படி? - டி.எஸ்.எஸ்.மணி
ஒரு மதத் தலைவருக்குப் பின்னால் எப்படி இவ்வளவு மக்கள் கூட்டம் திரண்டது? ஏன் பஞ்சாப் மாநிலமும், அரியானா மாநிலமும், சண்டிகர் யூனியன் பகுதியும் அலறுகின்றன? மத்திய ஆட்சி ஏன் மிரள்கிறது?
பஞ்சகுல்லாவில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இந்த குர்மீத் ராம் ரஹீம் சிங் மீது 2002ஆம் ஆண்டு போடப்பட்ட பாலியல் குற்ற வழக்கை அநாமதேயக் கடிதங்களுக்குப் பிறகு நீதிமன்றம் தானாகவே முன்னெடுத்து சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து விசாரிக்கப்பட்டு இரண்டு பெண் சிஷ்யர்களைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாகிய வழக்காகப் பதிவு செய்யப்பட்டது. அந்த இரண்டு பெண் சிஷ்யர்களில் ஒருவர் வயதுக்கு வராத சிறுமி. இன்று அறிவிக்கப்பட்ட தீர்ப்பில், குர்மீத் ராம் ரஹீம் சிங் ‘குற்றவாளி’ எனக் கூறப்பட்டு, எத்தகைய தண்டனை என்பது வருகிற 28 அன்று அறிவிக்கப்படும் என நீதிமன்றம் கூறியுள்ள நேரத்தில், குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் எனக் கூறுகிறார்கள். சிறுமி பாதிக்கப்பட்டதால், தண்டனை கூடும் என்ற கருத்தும் உள்ளது.
வெள்ளிக்கிழமை தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்பே, விசாரணை, விவாதங்கள் ஆகியவை அரசு தரப்பிலும் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பிலும் முடிந்துவிட்டன. வெள்ளிக்கிழமை தீர்ப்பை எதிர்பார்த்து லட்சக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் இரண்டு மாநிலங்களிலும் ஒரு யூனியன் பகுதியிலும் திரண்டிருந்தனர். பல தொண்டர்கள் கைகளில் ஐந்தடி நீளக் கம்புகளை வைத்திருந்தனர். இவர் தனது ஆசிரமமான ‘சிரசி’யிலிருந்து பஞ்சகுலா நீதிமன்றத்துக்குப் புறப்பட்டு வரும்போதும் 200 கார்களுடன் பவனி வந்தார். இதை எதிர்பார்த்து 150 பட்டாலியன் துணை ராணுவமும் ராணுவமும்கூட வரவழைக்கப்பட்டிருந்தனர். அதற்கு முன்பே கைபேசிகளையும் இணையத் தொடர்புகளையும், அரசு தற்காலிகமாக ரத்து செய்து வைத்திருந்தது. செய்தி பரவக் கூடாது என்ற அரசின் கவனம் அது. 230 தொடர் வண்டிகளும் பேருந்துகளும் ஆகஸ்ட் 24 முதல் 27 வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டிருந்தன.
மதியம் 2.30-க்கு என்று கூறி, 2.50-க்கு அவர் ‘குற்றவாளி’ என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. எந்த ஒரு தொடர்பு சாதனங்களும் இல்லாததால், ஆதரவாளர்கள் பல்லாயிரக்கணக்கில் நீதினமன்றம் முன்பு கூடியிருந்தவர்கள், விடுதலை என்ற தவறான செய்தியைக் கேள்விப்பட்டு ஆரவாரத்தில் கொண்டாடினர். இதேபோல, ஒரு தலைவர் ‘பிணையில் விடுதலை’ என்ற தவறான செய்தியால், தமிழகத்தில் குறிப்பாக காளையர்கோவிலில் வெடி போட்டு, கோபுரத்தில் போட்ட சரம் தீப்பற்றி எரிந்தது தமிழகத்தில்கூட நடந்துள்ளது. பிறகு உண்மைத் தீர்ப்பு கேள்விப்பட்டு வன்முறைகளில் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் ஆதரவாளர்கள் ஈடுபட்டனர்.
இரண்டு மாநிலத்திலும் ரயில்வே நிலையங்களும் நீதிமன்றம் அருகே பெட்ரோல் பங்குகளும் தீக்கிரையாகின. பிரபல தொலைக்காட்சி ஊடக வாகனம் தீக்கிரையானது. 17 பேர் பலியானதாகவும் 200 பேர் காயம்பட்டதாகவும் முதலில் தெரிந்தது. வன்முறையும் தொடர்கிறது. ராணுவமும் துணை ராணுவமும் இறங்கி அடிக்கின்றனர்; சுடுகின்றனர். பலிகள் கூடிக்கொண்டே போகும்.
இதை பற்றிய செய்தியை நமது மாநிலத்தில், ‘கற்பழிப்பு சாமியார்’ எனப் போடுகிறார்கள். இவர் வெறும் கற்பழிப்புக் குற்றவாளியாக மட்டுமே பார்க்கப்பட்டாரா? அப்படியானால் எப்படி இந்த அளவுக்கு மக்கள் லட்சக்கணக்கில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட இவருக்குப் பின்னால் மட்டுமல்ல, இவருக்கு ஆதரவாகத் தெருவுக்கு வந்து போராட முடியும்? தமிழ்நாட்டிலும் ஒரு சாமியார் வன்புணர்ச்சிக்காக இரண்டு ஆயுள் தண்டனை வாங்கிய வரலாறு உண்டு. எத்தனை பேர் அவருக்காகப் போராட வந்தார்கள்?
இந்த குர்மீத் ராம் ரஹீம் சிங் உதவியை நாடி 2012ஆம் ஆண்டு அதாவது இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, காங்கிரஸ் கட்சி தேர்தலில் ஆதரவு கேட்டு வந்தது. இவரும் அப்போது காங்கிரஸை ஆதரித்தார். அடுத்து 2014ஆம் ஆண்டு, பாரதிய ஜனதா இவரது ஆதரவைக் கேட்டார்கள். இவரும், பாஜக-வுக்கு ஆதரவு கொடுத்தார். ஏன் இப்படிப் பெரிய கட்சிகள் எல்லோரும் இவருக்கு பின்னால் சென்றார்கள்? அப்படியானால் அந்தப் பெரிய கட்சிகளை விட இவர் அந்த வட்டாரத்தில் பெரியவர் என்றுதானே பொருள்? ஏன் இவருக்கு இந்த அளவுக்கு ஆதரவு?
சீக்கிய மதத்தில் சாதிகள் கிடையாது என்பதுதானே பொதுவான புரிதலாக இங்கே இருக்கிறது? உண்மை நிலை அப்படி இல்லை. சீக்கிய மதத்திலிருந்து வெளியே வந்த ஒடுக்கப்பட்ட மக்களது தலைவரான இவர், இந்து மதத்தின் சாதிக் கட்டமைப்பையும் ஏற்றுக்கொள்ளாமல், தனித்த அடையாளத்தைக் காட்டி உருவாக்கியதுதான் ‘தேரா சச்சா சவுதா’. இவரது ஆதரவாளர்களில், பெண்கள் அதிகம். குர்மீத் ராம் ரஹீம் சிங் தலைமை தாங்கும் ‘தேரா சச்சா சவுதா’ என்ற மதப் பிரிவு, ‘சாதிகள் கூடாது’ என்ற சமூக நீதியைப் பரப்புரை செய்து நடைமுறைப்படுத்துகிறது. அதற்கே உரித்தான ஆதரவு இருக்கத்தானே செய்யும்? சாதிகளை எதிர்த்த தலைவர்களைப் புரிந்துகொண்டுள்ள தமிழ் மண், அவர்கள் பின்னால் திரண்ட மக்கள் கூட்டத்தையும் உணர்ந்துள்ள தமிழ் மண் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அடுத்து 104 நல்வாழ்வுத் திட்டங்களை இவர் அமல்படுத்திவருகிறார். அதில், குறைந்த விலைக்கு உணவுப் பொருள்கள் வழங்குகிறார். இங்கே அதுபோல செய்பவர்களை, ஏழை மக்கள் அணிதிரண்டு அரசியல் தலைமையில் ஏற்றுக்கொள்கிறார்களே அதுபோல. அடுத்து, இலவசமாக மருந்துகளை வழங்குகிறார். இங்கும்கூட, அரசியல் தலைமைகள், இலவச மருத்துவமனைகளையும் குறைந்த விலைக்கு மருந்துகளையும் வழங்கி எளிய மக்களைக் கவர்வதில்லையா? அதுபோல. நல்வாழ்வுத் திட்டங்களை வழங்கும் பணியை அரசு செய்யாதபோது, அதைச் செய்கின்ற மதத் தலைவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்களா?
ஆகவே, பின்தங்கியுள்ள மக்களை, கோடிக்கணக்கில் பின்தங்கியவர்களாகவே தக்கவைத்துக்கொள்ளும் ஒரு மோசமான சமூக, பொருளாதார, அரசியல் சூழ்நிலையை ஆளவந்தோர் தக்கவைத்துக்கொள்ளும் வரை சாதி, மத, வேறுபாடுகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டுள்ள ஒரு சமூகத்தை நாம் வைத்துக்கொண்டிருந்தால், அங்கே சமத்துவம் பேசுபவர்கள், நல்வாழ்வுத் திட்டம் தருபவர்கள் பின்னால்தான் கோடிக்கணக்கில் மக்கள் அணி திரள்வார்கள். அந்த உண்மையைத்தான் நாம் பஞ்சாப், அரியானா மாநிலங்களில் சந்திக்கிறோம்.
அதற்காகப் பாலியல் வன்முறையைச் செய்தவரை எப்படி ஆதரிக்க முடியும் என்பது நியாயமான கேள்வி. ஆனால், இவ்வாறு அணி திரண்டுள்ள மக்கள், இன்றைய ஆள்வோர்மீது நம்பிக்கை இல்லாத சூழ்நிலையில், சாதாரணப் பொதுமக்கள் இது போன்ற சாமியார்களை நம்புவதும் அரசு வேண்டுமென்றே பொய் வழக்குகளைப் போட்டுள்ளதாகக் கருதுவதும் நடக்கத்தான் செய்யும். அதையும் தாண்டி, இந்த குர்மீத் ராம் ரஹீம் சிங் ஒரு திரைப்பட நடிகராகவும் ஆகிவிட்டார். கேட்கவா வேண்டும்? சில படங்களில் இவர் பெரிய கதாநாயகனாக நடித்துள்ளார். ஆளும் பொலிவுடன் உயரமாக, தாடி வைத்து ஆக்ரோஷத்துடன் தோற்றமளிப்பார். இவையெல்லாம் இருப்பதால்தான் இவருக்குப் பின்னால் மக்கள் கூட்டமும் அரசியல் கட்சிகளும் செல்கின்றன என்பதே இன்றைய நிலை.
எளிய மக்கள் மத்தியில்தான் பிரபலம் என்று நினைத்தால் அது தவறு. படித்த, பணக்கார, மேல்நிலை வாழ்க்கையில் உள்ளோரும் இவரை அதிகமாக நேசிக்கிறார்கள், அணி திரள்கிறார்கள் என்கின்றன ஊடகங்கள். அது மட்டுமின்றி, நீதிமன்றம் முன்னால் திரண்ட 300 ஊடகங்களில், வெளியூர் ஊடகத்தார் இவரை பாலியல் குற்றவாளி எனப் புரிந்துகொண்டு செய்தி எடுக்கும்போது, உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவரிடம், ஆங்கிலக் காட்சி ஊடகம் கேட்கிறது: “ஏன் இவருக்குப் பின்னால் இவ்வளவு கூட்டம்?” அதற்கு அவர் பதில் கூறுகிறார்: “ஒரு பேரிடர் வருமானால், இவரது ஆதரவாளர்கள்தான் அங்கே களத்தில் இறங்கி உதவிகள் அனைத்தும் செய்வார்கள். பாலியல் தொழிலுக்குச் செல்லும் பெண்கள் பல நூறு பேரை இவரது ஆதரவாளர்கள் மீட்டு, திருமணம் செய்து வைத்துள்ளனர்.”
அதாவது சமூக அர்ப்பணிப்புள்ள, சமூக நீதியைப் பரப்புகின்ற, நல்வாழ்வுத் திட்டங்களைச் செயல்படுத்துகிற ஒரு கூட்டத்தையும், அதன் தலைவரான குர்மீத் ராம் ரஹீம் சிங்கையும், மக்கள் மனிதக் கடவுளாகப் பார்க்கிறார்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது. அப்படியானால், இந்த நற்பணிகளைச் செய்ய வேண்டிய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி தானே எழுகிறது.
கட்டுரையாளர்: டி.எஸ்.எஸ்.மணி
தமிழின் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர். இந்திய அளவில் கவனிக்கத்தக்க பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ச்சியாக கலந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளை விவாதித்து வருபவர்.
கட்டுரையாளர் தொடர்புக்கு: manitss.mani@gmail.com

Wednesday, August 9, 2017

வெடிமருந்து பற்றாக்குறையும் பாஜக அரசின் தோல்வியும் -

சிறப்புக் கட்டுரை: வெடிமருந்து பற்றாக்குறையும் பாஜக அரசின் தோல்வியும் - Azhageswaran, Trade union leader, Ordinance Factory, Tiruchi.

சிறப்புக் கட்டுரை: வெடிமருந்து பற்றாக்குறையும் பாஜக அரசின் தோல்வியும் - டி.எஸ்.எஸ்.மணி
கடந்த 21.07.2017 அன்று தலைமை தணிக்கை (சி.ஏ.ஜி) அதிகாரியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் ராணுவத்தின் போர் ஆயத்தநிலை குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. குறிப்பாகப் போர் ஏற்பட்டால் 10 நாள்களுக்குத் தாக்குப்பிடிக்கும் அளவில் மட்டுமே இந்திய ராணுவத்திடம் ஆயுத வெடிபொருள்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் சி.ஏ.ஜி. அறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பினர். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லி, “சி.ஏ.ஜி. அறிக்கையில் ஆயுத வெடிபொருள்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திலிருந்த பற்றாக்குறை பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அதில் குறிப்பிட்டிருந்த காலகட்டத்துக்குப் பிறகு ஏராளமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆயுதங்கள், வெடிபொருள்கள் கொள்முதல் செய்வதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்பட்டுள்ளன. ஆயுதங்கள், வெடிபொருள்களை வாங்குவதற்கான அதிகாரம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. எனவே நாட்டைப் பாதுகாக்க போதுமான அளவு ஆயுதங்களும், வெடிபொருள்களும் இந்தியப் படைகளிடம் உள்ளது” என்று விளக்கம் அளித்தார்.
இவ்வாண்டு மட்டுமல்ல, கடந்த நான்கு ஆண்டுகளாக சி.ஏ.ஜி. ஆயுத வெடிபொருள்களில் நிலவிவரும் பற்றாக்குறை குறித்து தனது அறிக்கையில் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறது. ஆனால், டோக்லாம் பிரச்னையின் காரணமாக இந்தியாவுக்கும், சீனாவுக்குமிடையில் ஒரு போர்ச்சூழல் உருவாகியுள்ள நிலையில் இம்முறை சி.ஏ.ஜி. அறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் கடும் விவாதங்கள் எழுந்தன.
சி.ஏ.ஜி. அறிக்கையில் வெடிபொருள் பற்றாக்குறை குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ள விவரங்களை மறுத்து ‘நாட்டைப் பாதுகாக்க போதுமான அளவு ஆயுதங்களும், வெடிபொருள்களும் இந்தியப் படைகளிடம் உள்ளது’ என்று பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்த கருத்துகள் உண்மைதானா? இதை தெளிவுபடுத்திக்கொள்ள பாஜக அரசு பதவியேற்ற பின்னர், வெடிபொருள்கள் பற்றாக்குறை பிரச்னைக்குத் தீர்வு காணுவதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.
முதலாவதாக, கடந்த செப்டம்பர் 18இல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் உரி ராணுவ முகாம்மீது தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து ஆலோசிப்பதற்காகப் பாதுகாப்புக்கான அமைச்சரவைக்குழு கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பாகிஸ்தான் மீது போர் தொடுப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் கலந்துகொண்ட முப்படைத் தளபதிகள், ஆயுதப்படைகளிடம் போதுமான வெடிபொருள்கள் இல்லை என்பதை சுட்டிக்காட்டினார்கள். அதன் பின்னரே அரசு இப்பிரச்னைமீது கவனம் செலுத்தத் தொடங்கியது.
அக்கூட்டத்தில் வெடிபொருள்கள் பற்றாக்குறைக்குத் தீர்வு காணுவதற்கான முடிவும் எடுக்கப்பட்டது. அதாவது அவசரத்தேவை கருதி தரைப்படை மற்றும் விமானப்படையின் துணைத்தளபதிகள், பற்றாக்குறை நிலவும் வெடிபொருள்களைத் துரித வழியில் கொள்முதல் செய்து கொள்வதற்கான அதிகாரங்களை வழங்குவதென முடிவு செய்யப்பட்டது. இதற்காக உயரதிகாரிகள், ஆயுதப்படைகளின் பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் நிதிப்பிரிவு பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுக்கள் செப்டம்பர் மாத இறுதியில் ரஷ்யா மற்றும் இஸ்ரேல் நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டு வெடிபொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.
இக்குழுக்களுக்கு டிசம்பர் மாதம் வரையிலான மூன்று மாதங்களுக்கு மட்டுமே கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது. பின்னர் அது மேலும் மூன்று மாதங்களுக்கு அதாவது மார்ச் 2017 வரை நீட்டிக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் ரூ.12,000 கோடி மதிப்பீட்டில் 11 வகையான வெடிபொருள்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின்னர் அக்குழுக்களுக்கு அதிகாரங்கள் விரிவுபடுத்தப்படவில்லை. ஒப்பந்தங்கள் அதே நிலையில் இருந்தது.
இரண்டாவதாக, கடந்த 2016 நவம்பர் மாதம் இந்தியத் தனியார் நிறுவனங்களிடமிருந்து வெடிபொருள்களைக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை ராணுவம் மேற்கொண்டது. இதையொட்டி எட்டு வகையான வெடிபொருள்களின் தேவைக் குறித்த அறிவிப்பை ராணுவம் வெளியிட்டது. இந்த வெடிபொருள்களை ராணுவத்துக்கு விநியோகிக்கத் தயாராக உள்ள நிறுவனங்களின் விருப்பங்கள் கோரப்பட்டது. ஆனால், இந்த நடைமுறைகளில் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களும், படைக்கலத் தொழிற்சாலைகளும் பங்கேற்கக் கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்தது.
அத்துடன் ரூ.100 கோடி சொத்து மதிப்பும், கடந்த மூன்றாண்டுகளாக ரூ.200 கோடிகளுக்கு மேல் வர்த்தகம் செய்துள்ள நிறுவனங்கள் மட்டுமே இந்த நடைமுறைகளில் பங்கேற்க வேண்டும் என்று அவ்வறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மேற்கண்ட நிதி வரம்புக்குள் வரமுடியாத சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ராணுவத்தின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நிதி வரம்புகளைத் தளர்த்தும்படி கோரிக்கை விடுத்தன.
இதேவேளையில், 2017 மார்ச் மாதத்தில் படைக்கல சர்வீஸ் துறை தனியார் நிறுவனங்களிடமிருந்து வெடிபொருள்களைக் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. ராணுவம் அறிவித்ததுபோல், எட்டு வகை வெடிபொருள் தேவை குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த நடைமுறைகளிலும் பாதுகாப்பு, பொதுத்துறை நிறுவனங்களும், படைக்கலத் தொழிற்சாலைகளும் பங்கேற்க முதலில் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், திடீரென கடந்த ஜூன் மாதம் பொதுத்துறை நிறுவனங்களும், படைக்கலத் தொழிற்சாலைகளும் இந்த நடைமுறைகளில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு தனியார் நிறுவனங்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியது. ஏற்கெனவே வெடிபொருள்கள் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பையும், வெளிநாடுகளிடமிருந்து வெடிபொருள்களைத் தயாரிப்பதற்கான தொழில்நுட்ப பரிமாற்ற உரிமங்களையும் பெற்றிருக்கும் படைக்கலத் தொழிற்சாலைகளை இந்த நடைமுறைகளில் பங்கேற்க அனுமதித்தால் அந்நிறுவனங்கள் குறைந்த விலைக்கு வெடிபொருள்களை விநியோகம் செய்ய முன்வரும். இது தங்களைப் பாதிக்கும் என்று தனியார் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தற்போது இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பதற்காகப் பிரதமர் அலுவலகத்துக்குப் பிரச்னை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில்தான் தற்போது சி.ஏ.ஜி. அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கை வெளியாகவிருந்த நேரத்தில்தான், கடந்த மார்ச்சுடன் நிறைவுற்ற துணைத்தளபதிகள் வெடிபொருள்களைக் கொள்முதல் செய்வதற்கான கூடுதல் அதிகாரம் தற்போது மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வெடிபொருள்கள், உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்துகொள்வதற்காக தனிநிதி ரூ.20,000 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.
வெடிமருந்து கொள்முதல் நடைமுறைகள் இவ்வாறாக இருக்க. நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் பேசும்போது, “படைக்கலத் தொழிற்சாலைகள் வெடிபொருள்கள் தயாரிப்பில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார். ஆனால், வெடிபொருள்கள் தயாரிப்பதற்காக தொடங்கப்பட்ட நாளந்தா படைக்கலத் தொழிற்சாலையைச் செயல்பட வைப்பதற்கான நடவடிக்கைகளை இவ்வரசு மேற்கொள்ளவில்லை.
இந்த நிகழ்வுகள் அனைத்தும், வெடிபொருள்கள் பற்றாக்குறை குறித்து சி.ஏ.ஜி-யின் அறிக்கையில் சொல்லப்பட்ட கருத்துகள் சரியானவையே என்பதை உறுதி செய்கிறது. மேலும் கடந்த மூன்றாண்டுகளாக பாஜக ஆட்சியில் இப்பிரச்னையைத் தீர்ப்பதற்குச் சரியான, முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.

Sunday, August 6, 2017

வாஜ்பாய் - மோடி: காஷ்மீர் பத்திரிகையாளரின் ஒப்பீடு!

சிறப்புக் கட்டுரை: வாஜ்பாய் - மோடி: காஷ்மீர் பத்திரிகையாளரின் ஒப்பீடு! - டி.எஸ்.எஸ்.மணி

சிறப்புக் கட்டுரை: வாஜ்பாய் - மோடி: காஷ்மீர் பத்திரிகையாளரின் ஒப்பீடு! - டி.எஸ்.எஸ்.மணி
ஆகஸ்ட் 1இல், சென்னை வந்திருந்த காஷ்மீர் ஊடகவியலாளர் டாக்டர் ராஜா முசாபர் பட் அவர்களைச் சந்தித்து அவரது உரையாடலைக் கேட்கவும் கேள்விகளை எழுப்பவும் சென்றேன்.
வழமையாக காஷ்மீர் பற்றி நமது மக்களிடம் எடுத்துச்சொல்லும் ஊடகங்கள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள், கல் எறியும் இளைஞர்கள் ஆகியோர்தான் காஷ்மீர் வன்முறைகளுக்குக் காரணம் என்பதாகத் தொடர்ந்து கூறிவருகின்றன. இடையிடையே, இந்திய ராணுவமும், தனது மனித உரிமை மீறல்களால் அங்குள்ள நிலைமையை அசாதாரணமாக ஆக்கி வருகிறது என்ற செய்திகளும் நமது ஊடகங்களில் வருவதுண்டு. எப்படியோ பாகிஸ்தான்தான், காஷ்மீர் பிரச்னைக்கெல்லாம் முக்கியக் காரணம் என்பதுதான் நமக்கு ஆள்வோரால் மாறிமாறி சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி, வேறொரு செய்தியையும் கூறிவருகிறது. அதுதான் ஜம்மு காஷ்மீருக்குக் கொடுக்கப்பட்டுள்ள 370 என்ற சிறப்பு சட்டப்பிரிவு. அந்தச் சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்ற குரலும் அவ்வப்போது எழுப்பப்படுகிறது. அதென்ன அவர்களுக்கு மட்டும் தனிச் சலுகை என்பது பல்வேறு இந்திய மக்கள் மத்தியில் எழுப்பப்படும் கேள்வி. எல்லா இந்தியரும் ஒன்றுதானே என்பதன் நியாய அடிப்படையில் சாதாரண மக்களுக்கு வரும் சந்தேகம் அது.
ஊடகவியலாளர் டாக்டர் ராஜா முசாபர் பட் பேசத் தொடங்கினார்.
“இந்தியச் சுதந்திரத்துக்கு முன்னால் ஆங்கிலேயர் இந்தியாவை ஆளும் காலத்தில், காஷ்மீர் தனி நாடாக இருந்தது. அங்கு முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும், இந்துக்கள் [பண்டிட்கள்] சிறுபான்மையினராகவும் வசித்து வந்தார்கள். 1820 முதலே, காஷ்மீர் மன்னர்களால் ஆளப்பட்டது. அம்ரிஸ்டர் ஒப்பந்தம் என்ற பெயரில், ஜம்முவை ஆண்ட, டோக்ரா மன்னருக்குக் காஷ்மீர் விற்கப்பட்டது. 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபோது, காஷ்மீர் இந்தியாவுடன் இல்லை. அப்போது காஷ்மீர் ஹரிசிங் என்ற இந்து மன்னனால் ஆளப்பட்டுக்கொண்டு இருந்தது. (நமக்கு ஒரு சந்தேகம். காஷ்மீர் இந்தியாவின் தலை, அதை விட்டுக்கொடுக்கக் கூடாது என்று சில தேச பக்தர்கள் இப்போது கூறுகிறார்களே? அப்படியானால் சுதந்திர இந்தியக் குழந்தை தலையில்லாமலா பிறந்தது? சரி. போகட்டும்)
அப்போது தனி நாடாக காஷ்மீர் இருப்பதை பொறுக்க முடியாத, பாகிஸ்தான், காஷ்மீர்மீது தனது ராணுவத்தை ஏவி, ஆக்ரமிக்க முனைந்தது. (நாங்க நாட்டை இரண்டா பிரிக்கிறோம். முஸ்லிம் எல்லோரும் அந்தப்பக்கம் போங்க... இந்துக்கள் எல்லோரும் இந்தப்பக்கம் வாங்க என்று கூப்பிட்டதை வைத்து, பாகிஸ்தான் முஸ்லிம்களுக்காக ஒதுக்கப்பட்டதனால், முஸ்லிம் அதிகம் வகிக்கும் காஷ்மீர் தங்களுக்கு என்று பாகிஸ்தான்காரன் நினைத்து விட்டான் போலிருக்கு) 1947 அக்டோபர் 22இல் பழங்குடி படையினரை ஏவி பாகிஸ்தான், ஜம்முமீது படையெடுத்து, ஏழே நாள்களில் ஆறு லட்சம் மக்களைக் கொன்று குவித்தது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத காஷ்மீரின் அரசர் மஹாராஜா ஹரிசிங், இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உதவியை நாடினார்.
காஷ்மீருக்குள் பிரபலமாக இருந்த ஷேக் அப்துல்லா மஹாராஜ் ஹரிசிங்குடன் சண்டை போட்டதால், மஹாராஜா ஹரிசிங் இந்தியாவுடன் ஒப்பந்தம் போட நிர்ப்பந்திக்கப்பட்டார். அதையொட்டி, 1947இல், அக்டோபர் 26ஆம் நாள் அன்று காஷ்மீர் மஹாராஜா ஹரிசிங், இந்திய அரசுடன் சில நிபந்தனைகளுடன் கூடிய ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 1947 ஆம் ஆண்டே, அக்டோபர் 27ஆம் நாள், அதாவது மறுநாளே, இந்தியாவில் அன்று பொது ஆளுநராக (கவர்னர் ஜெனரல்) இருந்த மவுன்ட் பாட்டன், காஷ்மீர் மஹாராஜா ஹரிசிங்குக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அதில், ‘காஷ்மீரில் சட்ட - ஒழுங்கு சரியாகி, அதன் மண்ணிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் (பாகிஸ்தான் படையினர்) அகற்றப்பட்ட பிறகு, காஷ்மீர் மக்களிடம் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தி அவர்களது கருத்துகளைக் கேட்டு பிறகு இந்திய அரசுடன் காஷ்மீரை இணைக்கலாம் என்று இந்திய அரசு விரும்புகிறது’ என்று எழுதியுள்ளார். இப்படித்தான், நிபந்தனையுடன் காஷ்மீர், இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
இத்தகைய இணைப்பை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அன்று நேரு தலைமையிலான இந்திய அரசு, இந்தப் பிரச்னையை, ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சலுக்கு எடுத்துச் சென்றது. (இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் உலக அரங்குக்கு காஷ்மீர் பிரச்னையை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று கூறி வருகிறார்கள்) அதையொட்டி, ஐ.நா. பாதுகாப்பு சபை போர் நிறுத்தத்தை அறிவித்து, எல்.ஓ.சி. என்ற ‘கட்டுப்பாட்டுக்குள் உள்ள எல்லை’ என்பதாக அறிவித்தது. அதுவே, பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள காஷ்மீரை, ஆசாத் காஷ்மீர் அல்லது பாக் ஆக்ரமிப்பு காஷ்மீர் என்றும் இந்தியப் பகுதிக்குள் உள்ள காஷ்மீரை, ஜம்மு காஷ்மீர் என்றும் அழைக்கத் தொடங்கினோம். ஆனால், பாகிஸ்தான் பகுதிக்குள் காஷ்மீரின் இன்னொரு பகுதி, ‘கில்ஜித் பலடிஸ்தான்’ என்று இருக்கிறது. (சமீபத்தில் காஷ்மீரில் இந்திய அரச படையால் சுட்டுக்கொல்லப்பட்ட லஷ்கர் ஈ தொய்பாவின் காஷ்மீர் தளபதி அபு துஜானா கில்ஜித் இந்தப் பகுதிக்காரர்).
காஷ்மீர் பகுதி தனி அந்தஸ்துடன் கூடிய பகுதியாக அறிவிக்கப்பட்டது. 1949 அக்டோபர் 17இல் தான். ஆர்டிகிள் 370 வந்தது. அதன்படி, இந்திய நடுவண் அரசு, பாதுகாப்பு, வெளி விவகாரம், தகவல் தொடர்பு ஆகிய மூன்றை மட்டுமே தீர்மானிக்கும். மற்றவற்றை காஷ்மீர் பகுதி ஆட்சியே தீர்மானிக்கும். அதன்படி, காஷ்மீர் பகுதிக்கு தனி தலைமை அமைச்சர் (பிரதமர்) உண்டு. காஷ்மீரின் இடைக்கால அரசாங்கத்தில், முதல் பிரதமராக ஷேக் அப்துல்லா நியமிக்கப்பட்டார். அப்போது இந்தியப் பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு. இந்தியாவில் அப்போது இரண்டு பிரதமர்கள் இருந்தனர்.
அண்ணா இதைச் சுட்டிக்காட்டி கூட்டங்களில், ‘மாநில சுயாட்சி’ பற்றி பேசியதை நான் கேட்டிருக்கிறேன்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், வெளியார் யாரும் சொத்துகளை வாங்க முடியாது என்ற உரிமை சட்டப்பிரிவு 370இல் கொண்டு வரப்பட்டதாக எண்ணிக்கொண்டு சிலர் இப்போது, அந்த சட்டப்பிரிவை எதிர்த்து பேசி வருகிறார்கள். ஆனால், 1946ஆம் ஆண்டே, பஞ்சாபைத் சேர்ந்த பணக்கார முஸ்லிம்கள், ஜம்மு காஷ்மிரில் சொத்துகளை வாங்க முயன்றபோது, காஷ்மீரில் வாழ்ந்துவந்த பண்டிதர்களின் நிர்பந்தத்தால், மஹாராஜா ஹரிசிங் கொண்டுவந்த சட்டம்தான் காஷ்மீருக்குள் வெளி வட்டாரத்தார்கள் சொத்துகளை வாங்கக் கூடாது என்ற சட்டம். ஆனால் 370ஆவது சட்டப்பிரிவு, 1949இல்தான் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு விவரம் புரியாமலே ‘வெறுப்பு’ பரப்பப்படுகிறது.
திடீரென ஷேக் அப்துல்லா 1953ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி இந்திய அரசால் கைது செய்யப்படுகிறார். தமிழ்நாட்டில் உள்ள கொடைக்கானலில், பிறகு டெல்லியில், பிறகு மீண்டும் தமிழ்நாட்டில் உள்ள நீலகிரியில் சிறை வைக்கப்படுகிறார். ஷேக் அப்துல்லாவுக்குப் பதிலாக, நேருவுக்கு வேண்டிய பக்ஷி குலாம் முஹம்மது காஷ்மீர் பிரதமராக அறிவிக்கப்படுகிறார். மேற்கண்ட ஒப்பந்தங்களுக்கெல்லாம் மாறுபட்டு, 1957 ஆம் ஆண்டு இந்தியா, ‘காஷ்மீர் முழுமையுமே, இந்திய அரசுக்குச் சொந்தமானது’ என்று அறிவித்தது.
1965இல் பாகிஸ்தான் சட்டவிரோதமாக காஷ்மீருக்குள் ஊடுருவல் செய்ததால் இரண்டாவது இந்தியா - பாகிஸ்தான் போர் உருவானது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் மூன்று பகுதிகளாக ஜம்மு, லடாக், காஷ்மீர் என்று பிரிக்கப்படுகிறது. தனி மாநிலமாக தனது சட்டங்களை அமலாக்கி வந்த காஷ்மீரில் இப்போது இந்தியாவின் 300 சட்டங்கள் அமலாக்கப்பட்டு வருகின்றன.
இந்திய அரசின் ஆள் தூக்கி சட்டங்களான, ஆயுதப் படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டம், பொது பாதுகாப்புச் சட்டம், பயங்கரவாத தடுப்பு சட்டம் (போடோ) மற்றும் தடா ஆகியவை மனித உரிமைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது. 1990இல் ஆயுதப் படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டம் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்தது. பதினேழு ஆண்டுகளில், பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், 16,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2002இல் ‘பயங்கரவாத தடைச் சட்டம்’ கொண்டுவரப்பட்டது. ‘திட்டமிட்டுக் காணாமல் ஆக்கப்பட்டோர்’ எண்ணிக்கை அதிகமானது. அதன் விளைவாக, பெண்கள் ‘அரை விதவை’ ஆக்கப்பட்டனர். 208 இடங்களில் கொன்று புதைக்கப்பட்டவர்கள் இடுகாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 2,500 இடங்களில் மொத்தமாக பிணங்கள் புதைக்கப்பட்டுள்ளன. சித்ரவதை செய்து விசாரிக்க ஒரு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஷேக் அப்துல்லா 1953இல் இருந்து, 1964 வரை சிறையில் வைக்கப்பட்டார். பிறகு விடுதலையாகி, பாகிஸ்தான் ராவல்பிண்டியில் இருந்தார். அவர் பாகிஸ்தானுடன் ஓர் ஒப்பந்தம் கையெழுத்துப் போட இருந்தநேரத்தில் நேரு மறைந்தார். 1975இல் ஷேக் அப்துல்லா இந்தியாவிடம் சரணடைந்து, காஷ்மீரின் முதல்வராக ஆனார். ஜம்மு காஷ்மீரில் இருக்கும் 50 லட்சம் மக்களைக் கவனிக்க, இந்திய ராணுவத்தின் ஏழு லட்சம் அங்கே நின்று கொண்டிருக்கின்றனர். ஷேக் அப்துல்லாவின் தேசிய முன்னணி கட்சி 85 தொகுதிகளில், 67இல் வெற்றி பெற்றது. அதனால் அவர்கள், ‘சுயாட்சி’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.
1999 முதல் 2004 வரை வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி இந்தியாவை ஆண்டது. வாஜ்பாயின் அணுகுமுறை காஷ்மீர் மக்களுக்கு ‘இதமாக’ இருந்தது. அவர் மனிதாபிமானத்தோடு நடந்துகொண்டார். வாஜ்பாய் பேச்சுவார்த்தை வழியை நாடினார். காஷ்மீருக்குள்ளும் பேச்சுவார்த்தை, பாகிஸ்தானுடனும் பேச்சுவார்த்தை என்ற வழியைக் கடைப்பிடித்தார். அவருக்கு அதற்கான ‘அரசியல் திடம்’ இருந்தது. இப்போது முப்தி முஹம்மது செய்யது தலைமையிலான ‘மக்கள் ஜனநாயகக் கட்சி’ (பி.டி.பி), பாஜக-வை நம்பியது. ஆறு மாதங்களில், எந்த மாற்றமும் இல்லை. காஷ்மீர் இளைஞர்கள் மிகவும் ஆக்ரோஷத்தோடு இருக்கிறார்கள். மோடி, வாஜ்பாய் போல இல்லை.” இவ்வாறு அந்த ஊடகவியலாளர் கூறினார்.
அவரது உரை முடிந்து, கேள்வி நேரத்தில், “காங்கிரஸ் தலைமையிலான ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி’ ஆட்சிக்கும், பாஜக தலைமையிலான ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி’ ஆட்சிக்கும், காஷ்மீரைக் கையாள்வதில் மாறுபாடு இருக்கிறதா” என்றால், “இல்லை” என்கிறார்.
“காஷ்மீரில் ஹுரியத் மாநாடு கூட்டணிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறதா?” என்ற கேள்விக்கும் “இல்லை” என்கிறார்.
“அமெரிக்கா சமீபத்தில், ஜம்மு காஷ்மீரைக் குறிப்பிடும்போது, இந்திய அரசால், ‘நிர்வகிக்கப்படும் பகுதி’ என்று கூறியதன் மர்மம் என்ன” என்று வினவினோம்.
“சீனாவை எதிர்ப்பதற்காக, அமெரிக்கா காஷ்மீரை ஒரு சுயாட்சி பகுதியாக ஆக்கத் துடிக்கிறதோ என்பது தெரியவில்லை. தனக்கு காஷ்மீரில் அதன்மூலம் ஒரு விமானத்தளத்தை ஏற்படுத்திக் கொண்டு, சீனாவை எதிர்க்க எண்ணுகிறதோ, என்னவோ” என்கிறார்.
அடுத்து, “பிரதமர் நரேந்திர தாமோதர மோடி அவர்கள், நாகாலாந்தில் நாற்பது ஆண்டுகளுக்கு மேல், ஆயுதம் தாங்கிய விடுதலைப் போரை நடத்தி வரும் என்.எஸ்.சி.என். (ஐ.எம்) என்ற நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில் (ஐசக்-முய்வா) உடன் ஓர் ஒப்பந்தம் கையெழுத்துப் போட்டுள்ளார். அதன்படி, நாகாலாந்துக்கு ‘இறையாண்மை’ கொடுக்க இருப்பதாக செய்திகள் கசிகிறதே. அதுபோல காஷ்மீருக்குச் சாத்தியமில்லையா?” என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.
அதற்கு டாக்டர் ராஜா முசாபர் பட் பதிலளிக்கையில், “மோடி இன்று மக்களவையில் பெரும்பான்மை பெற்றுள்ளார். மாநிலங்களவையில் கணிசமாக வந்துவிட்டார். அவருக்கு ‘அரசியல் திடம்’ இருக்குமானால் அவர் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணலாம். அவர் வாஜ்பாய் போல இல்லையே?”. இவ்வாறு அந்த ஊடகவியலாளர் வருந்தினார்.
கலந்துரையாடலை ஏற்பாடு செய்த, மனிதநேய மக்கள் கட்சியின் வழக்கறிஞர் அணிக்கும் நன்றியைக் கூறிக்கொண்டு வெளியேறினோம்.

Saturday, July 22, 2017

இந்திய - சீன மோதலில் இலங்கையின் பங்கு! - டி.எஸ்.எஸ்.மணி

சிறப்புக் கட்டுரை: இந்திய - சீன மோதலில் இலங்கையின் பங்கு! - டி.எஸ்.எஸ்.மணி

சிறப்புக் கட்டுரை: இந்திய - சீன மோதலில் இலங்கையின் பங்கு! - டி.எஸ்.எஸ்.மணி
சீனா, இந்தியா எல்லை பிரச்னை என்பதை இந்திய ஊடகங்கள் போர் வரை கொண்டு நிறுத்திய பிறகு, இப்போது இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் முதன்முறையாக வாய் திறந்து, “இரு நாடுகளும் தங்கள் ராணுவத்தைத் திரும்பப் பெறும்" எனப் பேசியிருக்கிறார்.
இது நமது ஆங்கில ஏட்டின் செய்தி. அதுவும் அமெரிக்கா, ‘இரு நாடுகளும் பேசித் தீருங்கள்’ என்று கூறிய பிறகுதான் நடக்க வேண்டுமா? சரி. இருக்கட்டும். நல்லது நடந்தால் சரி. இப்போதாவது இந்திய அரசு, ‘தாங்களும் எல்லை மீறிச் சென்றிருப்பதை இவ்வாறு ஒப்புக்கொள்கிறார்களா?’ என்ற கேள்விக்குக்கூட நாம் போக வேண்டாம். ஆனால், சீனாவிலிருந்து வரும் ‘க்ளோபல் டைம்ஸ்’ என்ற ஏடு, தனது தலையங்கத்தில், ‘இந்து தேசியவாதத்தால் சீன விரோத உணர்வு வளர்ந்து வருகிறது. மோடி பதவியேற்ற பிறகு, இந்து தேசியவாத உணர்வு மேலோங்கி வருகிறது. இந்து தேசியவாதத்தால் இரு நாடுகளிடையே போர் மூளும் அபாயம் உருவாகி உள்ளது’ என்று கூறியுள்ளது.
இது நமது தமிழ் ஏட்டின் செய்தி. இந்தச் செய்திகூட, உண்மையில் சீனா அப்படிக் கண்டுபிடித்துள்ளதா அல்லது இந்திய அரசியலுக்குள் புகுந்து, ஆளும் பாஜக-வுக்கு எதிராக உள்ள காங்கிரஸ் மற்றும் இடசாரி கட்சிகளை வளைத்துப்போட இப்படி எழுதுகிறார்களா என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. இது ஒருபுறம் இருக்க, மீண்டும் ஈழத் தமிழர்கள் விஷயத்தில் ‘புதிய’ அணுகுமுறை உற்சாகப்படுத்தப்படுகிறது.
அதாவது, மஹிந்த ராஜபக்சே ஆட்சியில், ‘தமிழின அழிப்பு போர்’ நடத்தப்பட்டு, தமிழின விடுதலை தற்காலிகமாக தள்ளிப்போடப்பட்டது. அத்தகைய சிங்களப் பேரினவாதப் போரின் வெற்றிக்கு யார், யார் ஒத்துழைப்புக் கொடுத்தார்கள் என்பது, உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்குத் தெரிந்த செய்தி. ஆனால் போர் முடிந்த பிறகு அமெரிக்கா வேறொரு நிலையை எடுத்தது. மஹிந்தா அரசுக்கு எதிராக அமெரிக்கா, ஐக்கிய நாட்டு மனித உரிமை கழகத்தில் போர்க் குற்றங்களுக்கு எதிராக கொண்டுவந்த தீர்மானத்தைக்கூட, இந்திய அரசு நீர்த்துப்போகச் செய்தது. அத்தகைய செயலையும் அமெரிக்கா அங்கீகரித்தது.
சீனா முழுமையாக ‘மஹிந்தா ஆதரவு நிலையையே’ எடுத்தது.
தீர்மானத்தைக் கொண்டுவந்தவர்கள், மஹிந்த ராஜபக்சே அரசுக்கு எதிராகவும், சீனா போன்ற நாடுகள் ஆதரவாகவும் இருந்தார்கள். ஆனால், யாருமே தமிழர்களுக்கு ஆதரவாக இருந்ததாகத் தெரியவில்லை. இந்த அரசியல் விளையாட்டு அடுத்து இலங்கையில் நடந்த தேர்தலில் அம்பலமானது.
தேர்தல்வரும் நேரத்தில் இலங்கை அதிபர் மஹிந்தா, “இந்திய அரசின் வெளிவிவகாரத்துறையின் உளவு நிறுவனமான ரா அதிகாரி தனது கட்சிக்கு எதிராக சதி செய்கிறார்” என பகிரங்கமாக அறிவித்தார். உடனே ஓர் அதிகாரியை இந்திய அரசு மாற்றியது.
அதேநேரம், மஹிந்தாவுக்கு எதிராக அதிபருக்கு நின்ற மைத்திரிபால சிறிசேனா, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெற்றிருந்தார். அவருடன் கூட்டுச்சேர்ந்திருந்த ரணில் விக்ரமசிங்கே அமெரிக்கா மற்றும் இந்திய அரசின் ஆதரவைப் பெற்றிருந்தார். இந்திய அரசுக்கோ, அமெரிக்க அரசுக்கோ, ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்கு அரசியல் தீர்வு வர வேண்டும் என்பதை விட, இலங்கைத் தீவில் ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே முக்கியக் குறிக்கோளாக இருந்தது. அதுவே நடந்தேறியது.
அதனால், அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் இந்த ஆண்டு மீண்டும் ஐக்கியநாட்டு மனித உரிமைக் கழகத்தில் இலங்கை பற்றிய தீர்மானம் விவாதத்துக்கு வந்தபோது, ‘தாங்கள் விரும்பிய ஆட்சி இலங்கையில் நிறுவப்பட்டு விட்டதே’ என்ற நிலைப்பாட்டில், இலங்கை அரசு போர்க்குற்ற விசாரணைக்காகக் கேட்ட கால அவகாசத்தை ஏற்றுக்கொண்டனர்.
ஆனாலும், அவர்கள் ஆதரவு பெற்ற மைத்திரி-ரணில் அரசும், சீனசார்பு நிலையை எடுத்து, ஹம்பந்தோட்டா துறைமுகம், நாடு தழுவிய நெடுஞ்சாலை போன்ற ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சீன அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொடுத்து விடும் ஒப்பந்தங்களை போட்டுவிட்டனர்.
இது அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் பெருத்த அடியைக் கொடுத்துள்ளது.
ஆகவே, இன்றைய இலங்கை அரசுக்கும் நெருக்கடியைக் கொடுக்க அமெரிக்காவும் இந்திய அரசும் திட்டமிடுகிறார்கள். ஏற்கெனவே, இந்த தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில், சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்த அல்லது மட்டுப்படுத்த, அமெரிக்க சந்தையை உற்சாகப்படுத்த அல்லது அமெரிக்க மேலாதிக்கத்தை விரிவுபடுத்த அமெரிக்க அரசு, இந்திய அரசை மட்டுமே நம்பி இருக்கிறது.
ஆகவேதான், இந்தியப் பெருங்கடலில் ஏற்கெனவே அமெரிக்காவின் பிடியில் உள்ள ‘டியாகோ கார்சியா’ என்ற ஆங்கிலேயர்களின் தீவு, ‘அமெரிக்கா ராணுவத் தளமாக’ இயங்கிவரும் வேளையில், அதனால் இந்தியாவுக்கு ஆபத்து உண்டு என்ற உண்மை ஊரறிந்தது என்றாலும்கூட, ஆறு மாதங்களுக்கு முன்பு அதன் அருகே மீன் பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மீனவர்கள், ‘டியாகோ கார்சியா’ தீவில் உள்ள அமெரிக்கப் படையால் பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு, கைதாகி, தண்டம் கட்டிய செயலைக்கூட இந்திய அரசோ, ஊடகங்களோ பெரிதுபடுத்தவில்லை. மாறாக, இலங்கையில் வந்து இறங்கியுள்ள சீனாவின் சக்திதான், இந்தியாவுக்குப் பெரும் ஆபத்தை உருவாக்கும் என்ற செய்தியை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் சுஷ்மா ஸ்வராஜ் கூறும்போது, ‘கடல் வழியாக சீனா இந்தியாவை சுற்றி வளைக்கும் ஆபத்து இல்லை’ எனக் கூறியுள்ளார். ஏன் என்றால், ‘சீனா நேரு காலத்திய பஞ்சசீலக் கொள்கைப்படியான அமைதிவழி சக வாழ்வு என கூறும்போது, நாங்களும் அதையே விரும்புகிறோம். தூதரக உறவுகள் நடைபெறுகின்றன. தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம், செப்டம்பரில் சீனாவில் நடக்க இருக்கின்ற பிரிக்ஸ் மாநாட்டுக்கு முன்னால் நடக்கும்’ என்றெல்லாம் இப்போது சுஷ்மா கூறுகிறார்.
அமெரிக்காவின் தேவைக்காகவோ, இந்திய ஆட்சியாளர்கள் இரண்டு ஆண்டுகளில் வரவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுக்காகவோ, ‘சீனாவுடன் ஒரு மோதல் போக்கை’க் காட்டி காட்டி, மக்கள் மத்தியில் ஒருவிதமான, ‘இந்திய தேசிய வெறியை’ ஏற்படுத்த முயன்றுவந்தாலும், அதை ‘தமிழ்நாட்டில் விற்க’ ஈழத் தமிழர் பிரச்னைதான் கிடைத்ததா என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது. ஆகவே, இந்திய அரசின் பாதுகாப்புக்கு இடையூறாக சீனா இருந்தாலும், அமெரிக்கா இருந்தாலும் அதை புரிந்துகொள்வதில் இந்திய மக்கள் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. அதே சமயம், ‘ஈழத் தமிழர் பிரச்னை’யைப் பயன்படுத்தி, அமெரிக்கா இந்திய அரசுகளின் மேலாதிக்கத்தை ஈழத் தமிழர்களின் மேல் திணிக்க எண்ணாதே என்றும் கூற வேண்டியிருக்கிறது.

Tuesday, July 11, 2017

My second article in minnambalam on China-India border issue.

சீனா - இந்தியா பிரச்னை : ராகுல்மீது தேசவிரோத முத்திரை!

சீனா - இந்தியா பிரச்னை : ராகுல்மீது தேசவிரோத முத்திரை!
நடந்து வரும் பிரச்னை மாறி,மாறி, மாறிவரும் செய்திகளாக வெளியிடப்படும் நேரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டில்லியிலுள்ள சீன தூதுவரைப் போய் சந்தித்து விட்டு வந்திருக்கிறார். அதைச் சீன ஊடகம் வெளியிட்ட பிறகு, காங்கிரஸ் பேச்சாளர் மறுத்த பிற்பாடு, சீன ஊடகம் தனது வெளியீட்டை இணையத்திலிருந்து எடுத்த பிறகு, கடைசியாக "ராகுல் சீன தூதரைச் சந்தித்தார்" என்பதை காங்கிரஸ் வெளிப்படையாக அறிவித்துள்ளது. இத்தனைக் குழப்பங்கள் ஏன்? , இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள பிரச்னை, எதிர்க் கட்சியின் "உள் நுழைவில்" வந்து விட்டது ஏன்? சீனப் பிரச்னை இப்போது " இந்தியாவிற்குள் உள் விவாதமாக" மாறி இருக்கிறது. 1962-இல் சீன-இந்திய பிரச்னை என்பது, கொள்கை ரீதியாக சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு அல்லது ஆதரவு கொண்ட பல கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் "தேச விரோதிகள்" என்று முத்திரைக் குத்தப்பட்ட சூழலைச் சந்தித்தது.. அதையொட்டி, அவர்கள் "கைதும்" செய்யப்பட்டார்கள். ஆனால் இப்போது அப்படிச் சூழல் இல்லை. ஏனென்றால், ஆளும் கட்சியாக நேற்று வரை இருந்த காங்கிரஸ் கட்சித் தலைமைமீது இப்போது அதே "முத்திரை" குத்தப்படுகிறது.
இரண்டு "வட இந்திய ஊடகங்கள்" ராகுல் காந்தியின் "சீன தூதர் சந்திப்பை" காலையிலேயே "தேச விரோத செயல்" என்று பாட ஆரம்பித்து விட்டார்கள். இப்போதெல்லாம் "அரசியல் செய்வதில் கட்சிகளை விட, ஊடகங்கள்தான் முதன்மைப் பணியைச்" செய்கின்றன. அதனால்தான் காங்கிரஸ் பேச்சாளர் முதலில் திணறினார். அந்த அளவுக்கு "ஊடகப் பரப்புரை" பெரிய அரசியல் கட்சிகளையே தாக்குகிறது. காட்சி ஊடக விவாதங்களில், டில்லியின் மூத்த ஊடகவியலாளர் ஒருவர் ராகுல் நடவடிக்கையை," அரசனைவிட, அதிகமான அரச விசுவாசம்". என்று வர்ணித்திருப்பது, "அதீதமாக" இருக்கிறது. இப்போது முன்னாள் அமைச்சரும், சோனியா அணியைச் சேர்ந்தவருமான மணிசங்கர் அய்யர், ராகுல் காந்தியின் நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ளார். அதற்கு ,"நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில், எதிர்க் கட்சித் தலைவர் "அடல் பிகாரி வாஜ்பாயியை" அனுப்பி உலக அரங்கில் பேச வைத்தார் என்பதை இன்று மணி சங்கர் அய்யர் சுட்டிக் காட்டுகிறார். அதேபோல, எதிர்க்கட்சியையும் ஆளும்கட்சி நாட்டின் வெளிவிவகாரக் கொள்கைகளில் ஈடுபடுத்த வேண்டும் என்பதே அவரது வாதம். பதட்டம் இருக்கும்போதே, மோடி அரசாங்கத்தின் மூன்று அமைச்சர்கள் ஏன் சீனாவுடன் பேசிக் கொண்டிருந்தார்கள் என்று ராகுல் காந்தி இப்போது திருப்பிக் கேட்கிறார். இப்படி இந்த இரண்டு அகில இந்தியக் கட்சிகள் மத்தியில், ஒரு "லாவணி" விவாதமாக அது மாறியிருக்கிறது.
ஆனால், நாம் இந்தப் பிரச்னையில், பாஜக அணுகுமுறையும், காங்கிரஸ் அணுகுமுறையும் எப்படி, எப்படி மாறி வருகிறது என்பதைக் காண வேண்டியிருக்கிறது. உதாரணமாக, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், அதாவது மன்மோகன் சிங் ஆட்சியில், வெளிவிவகாரத் துறையின் கொள்கைகள் எப்படி இருந்தன என்று பார்க்க வேண்டும். இப்போது விவாதமாகும் பிரச்னையே உண்மையில் செல்வாக்கு செலுத்துவதிலோ, அதிகார போட்டியிலோ, அடிப்படையில் மோதிக் கொண்டும், குலாவிக் கொண்டும் இருப்பவர்கள், அமெரிக்காவும், சீனாவும்தான். இந்தியா தனது வெளிவிவகாரக் கொள்கைகளில், "தன்னைப் பாதுகாக்க" என்று மட்டும் நிலையை எடுத்தால் இது அவ்வளவு சிக்கலைத் தராது. இந்திய அரசு, அமெரிக்க வல்லரசை ஒட்டிச் சிந்திக்கும்போதோ, அல்லது அமெரிக்காவின் "தேவைகளை" வலுப்படுத்த, சில "ஆதரவுப் பணிகளை" செய்யும்போதோ, இந்தச் சிக்கல் அதிகமாக ஆகிறது. இதை நாம் இரண்டு நாள் முன்பு ஒரு கட்டுரையில் கண்டோம். மீண்டும் அதே இடத்தையும் சேர்த்தே அணுக வேண்டியிருக்கிறது.
மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில், இதே சீனா, மற்றும் அமெரிக்க விஷயங்களில், "பல பல்டிகளை" வெளிவிவகார கொள்கைகளில் இந்தியா அடித்தது. அவை என்ன? உதாரணமாக "ஈரான்" நாட்டிடம், " எரிவாயு " வாங்க, அதை பாகிஸ்தான் வழியாக, "குழாய்" மூலம் கொண்டு வர, இந்திய வெளிவிவகாரத் துறை முடிவு செய்தபோது, அமெரிக்கா பகிரங்கமாக அதை எதிர்த்து இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுக்கவில்லையா? அதையொட்டி, அன்றைய அமைச்சர் நட்வர் சிங், பதவி இழக்கவில்லையா? அதற்குப் பிறகு அதே நிலையை, பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த மணி சங்கர் அய்யர் எடுத்தபோது, அவரும் தூக்கி அடிக்கப்படவில்லையா? இந்த இரு அமைச்சர்களும், "சோனியா காந்தி விசுவாசி" என்பதும் தெரியாத செய்தியா? மன்மோகன் சிங் தனது "உலக வங்கி விசுவாசத்தை, அமெரிக்காவிடம் உள்ள விசுவாசமாகக் " காட்டினார் என்று விமர்சிக்கப் படவில்லையா? அதேபோல, அமெரிக்காவின் 123 என்ற அணு உலைகள் ஒப்பந்தம், கையெழுத்தான போதும், செயல்படுத்த முடியாத சூழலில், "பிரான்ஸ், ரஷியா" என்று இந்திய ஆளும் வர்க்கம் அணு உலைகளை வாங்க அலையும் நேரத்தில், "அமெரிக்காவைச் சார்ந்து இருக்கும் ஜப்பான் சென்று அணு உலை வாங்க" மன்மோகன் சிங் முயல வில்லையா? உடனே மறுநாளே, பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி, சீனா சென்று, அதே அணு உலை விஷயமாகப் பேச வில்லையா ? அமைச்சர் அந்தோணி "சோனியா விசுவாசி" என்பது ஊரறிந்த செய்திதானே?
அதாவது காங்கிரஸ் ஆட்சியின் கடைசி கட்டத்திலேயே, "அமெரிக்க- சீன" நெருக்கங்களில், மாறி,மாறி, மன்மோகனின் காய் நகர்த்தல்களுக்கும், சோனியாவின் காய் நகர்த்தல்களுக்கும், "பெரும் மோதல்களாக " இருந்தன. அதாவது, இந்திய ஆட்சியாளர்கள், ஒரே "வெளிவிவகாரக் கொள்கைகளில்" நிலையாக நிற்க முடியவில்லை. இது காங்கிரஸா, அல்லது பாரதிய ஜனதாவா என்பது அல்ல. இந்தியா ஆட்சியாளர்களோ, அல்லது ஆளும் வர்க்கமோ, இரண்டு விதமான "உலக ஒழுங்குகளுக்குள்" உள்ள முரண்பாட்டில், தவிக்கிறார்கள். ஒன்று பழைய, அமெரிக்கா தலைமையிலான, "உலக ஒழுங்கு". இன்னொன்று இன்று, மாறிவரும் உலகச் சூழலில், சீனா வளர்ந்து வந்த பிறகு," டாலருக்கும், ஈரோவுக்கும்" போட்டியாக, "பிரிக்ஸ்" ஏற்படுத்த முயலும், "புதிய உலக ஒழுங்கு".
மன்மோகன், சோனியா இடையே உருவான மோதல்கள்தான், சோனியாவுக்கு, அவரது அமெரிக்கப் பயணத்தின்போது, " வழக்கு ஒன்றைப் போட்டு சமன் கொடுக்க " முயற்சி எடுத்த அமெரிக்கச் செயல் என்று பார்க்காமல் இருந்துவிட முடியுமா? ஆகவே அதன் தொடர்ச்சியாகத்தான், இன்று ராகுல் சீனாவுடன் "பேசித் தீர்க்க" முயலும் நடவடிக்கைக்கு சென்றுள்ளார் என்பதாகப் புரிந்து கொள்வோமா? அல்லது இது சாதாரண இரு பெரிய கட்சிகளுக்கும் இடையில் உள்ள "லாவணி" என உதறித் தள்ளப் போகிறோமா? எப்படியோ, இந்திய ஆட்சியாளர்கள், ஒரு " சரியான வெளிவிவகாரக் கொள்கையை" உருவாக்குவதில் இன்னும் வெற்றிபெறவில்லை என்றே கருத வேண்டியுள்ளது. அதைத்தான் சுப்பிரமணிய சாமியும், "என் கையில் கொடுத்தால் நான் சீனாவுடன் உடனடியாக பேசித் தீர்த்துவிடுவேன்" என்றும், "நான் பெரிய ஆள் ஆகிவிடக் கூடாது" எனச் சிலர் நினைக்கிறார்கள் என்று அவர் சமீபத்தில் கூறியதும் நினைவுக்கு வருகிறது.

Saturday, July 8, 2017

Spl Story-China-India border isuue- by T.S.S.Mani

சிறப்புக் கட்டுரை: சீனா - இந்தியா சர்ச்சை... எல்லைத் தகராறா? இயலாத தகராறா? - T.S.S.மணி

சிறப்புக் கட்டுரை: சீனா - இந்தியா சர்ச்சை... எல்லைத் தகராறா? இயலாத தகராறா? - T.S.S.மணி
ஒரு வாரமாக ஊடகங்களில், சீனா - இந்தியா போரையே நடத்தி விட்டனர். கெட்டிக்காரத்தனமாக சிக்கிம் எல்லையில், சீனா தனது ராணுவத்தை நிறுத்தியுள்ளது. எல்லை ஓரத்தில் ஒரு சாலை அமைக்கிறார்கள். அதன்மூலம் அவர்களது பெரும் ராணுவ வாகனங்கள் நடமாடும். எந்த நேரத்திலும் இந்தியா மீது தாக்கலாம். அதனால்தான் இந்தியா தனது ராணுவத்தைப் பலமாக அந்த எல்லையில் குவிக்கிறது. எந்த நேரத்திலும் போர் மூளலாம். ஜி-20 மாநாட்டில்கூட இந்தியப் பிரதமரும், சீனப் பிரதமரும் பேச மாட்டார்கள். ‘பிரிக்ஸ்’ கூட்டத்தில்கூட இருவரும் தனியாகப் பேசிக்கொள்ள மாட்டார்கள். 1962இல் நடந்த இந்திய - சீனப் போர் போல இருக்குமா? ‘நாங்கள் 1962 போல பலவீனமாக இல்லை, இப்போது பலம் வாய்ந்தவர்கள்’ என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லி பேசினார். அதற்கு, ‘இருக்கலாம். நாங்களும் முன்னைப் போல இல்லை. மேலும், பல மடங்கு உங்களை விட பலம் வாய்ந்தவர்களாக ஆகியிருக்கிறோம்’ என்று சீன தூதர் கூறினார். இப்படியெல்லாம் நம்மூர் ‘பாமரனை’ப் பாதிக்கும் அளவுக்குச் செய்திகள். கடைசியில், ஜி-20 வந்தது. மோடியும், ஸீ ஜின்பிங்கும் கைகொடுத்துக் கொண்டனர். நன்றாகப் பேசினர். ஒருவரை ஒருவர் புகழ்ந்தனர். இப்படியாகச் செய்திகள் வருகின்றன.
ஒரு காட்சி ஊடக விவாதத்தில் ஒரு மூத்த ஊடகவியலாளர் கூறினார். “இந்தியா அருகே அமெரிக்கா தானே அதிக ராணுவ பலத்தை வைத்துக்கொண்டு மிரட்டுகிறது? ‘டியாகோ கார்சியா’ தீவில் தனது ராணுவத்தளத்தை வைத்துக்கொண்டுள்ளது. அதில் போர் கப்பல்களையும், போர் விமானங்களையும் வைத்துக் கொண்டிருக்கிறது. அந்தத் தீவிலிருந்து, அரை மணி நேரத்தில், கேரளா மீதும், கன்னியாகுமரி மீதும் குண்டு போட முடியுமே? அமெரிக்காவிடம், போர் விமானங்கள் தாங்கிய 18 போர்க் கப்பல்கள் இருந்தால், சீனாவிடம் ஒன்றுதானே இருக்கிறது? பங்களா தேஷ் போர் நேரத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா தானே வந்தது? சீனா வரவில்லையே? அமெரிக்காவின் ஏழாவது போர்க் கப்பல்தானே வங்காள விரிகுடா கடலுக்கு வந்து இந்தியாவை மிரட்டியது? (1962-க்குப் பிறகுதான், 1971 வந்தது என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள்) எதற்காக இந்தச் சிறிய எல்லை பிரச்னையை வைத்து, போர், போர் என்கிறார்கள்?” எனக் கேட்டார். இன்னொரு மூத்த ஊடகவியலாளரான, பதிப்பகத்தார், “இந்த எல்லை பிரச்னை ஒர் இரவில் தீரக்கூடியதா? சீனாவுடன் இந்தியா இன்னமும் வணிகத்தை அதிகப்படுத்தி, நல்லுறவைக் கூட்ட வேண்டும். அதன்பிறகு தானாகவே இந்த எல்லைப் பிரச்னையைப் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும்” என்கிறார். ஆனால், இங்கே பொது வெளியில், ஒரு கவிஞர், தனது கவிதை மூலம், “சீன எதிர்ப்புதான்” அவரது “இந்திய தேசப்பற்று” என்பதை நிரூபிக்க முயன்று வருகிறார். இவையெல்லாம் அதிகமாக நமது வட்டார ஊடகங்களில், விவாதமாக ஆக்கப்படுவதில்லை. மாறாக, அடுத்த நாட்டுடன் பிரச்சனையா? உடனடியாக எது நியாயம் என்றுகூட பார்க்காமல், ‘இந்திய தேசப்பற்றை’ உயர்த்திப் பிடித்து, பக்கத்து நாட்டைப் பற்றி தாக்கி எழுதிவிட வேண்டும் என்பதே இங்கு ‘பொதுப் புத்தி’யாக இருக்கிறது. ஆனால், இதற்கு இடையில் வேறு சில அறிவார்ந்த கருத்துகளும், வருகின்றன. ஒரு கவிஞர் சொன்னார். சமீபத்தில் ஒரு கூட்டத்தில், ஒரு பிரபல ஊடக ஆசிரியர், “பாகிஸ்தானை நாம் ஐரோப்பா அருகே அனுப்பிவிட முடியுமா? சீனாவை நாம் ஆப்பிரிக்க கண்டத்துக்கு அனுப்பி விட முடியுமா? இந்தியாவாகிய நாம்தான் கண்டம் விட்டு கண்டம் தாண்டி நகர்ந்து செல்ல முடியுமா? ஆகவே இருக்கும், அண்டை நாடுகளுடன் எப்படி சமாதானமாக வாழ்வது என்று சிந்திக்க வேண்டும்” என்றாராம். இவ்வாறு நல்ல ஆரோக்கியமான சிந்தனைகள் வரும் நேரத்தில், ‘தேசப்பற்று’ என்ற பெயரில், ‘தேசிய வெறி’யைத் தூண்டாதே என்ற எச்சரிக்கையுடன் இந்த விவகாரத்தை அணுக வேண்டும்.
மேலும் அலசலுக்காக, நான் இரண்டு மூத்த ஊடகவியலாளர்களிடம் பேசினேன். இன்று காலை சிலர் “மக்மோஹன் எல்லைக்கோடு, இரண்டு நாடுகளுக்கும் இடையில் உள்ளதை முன்பு ஒப்புக்கொண்ட சீனா, இப்போது ஒப்புக்கொள்ள மறுக்கிறதே” என்று கூறினார்கள். “அது அப்படி இல்லையே. ஆங்கிலேயர்கள், இந்தியாவை விட்டுச் செல்லும்போது, ஆங்கிலேயரான மக்மோஹன், இப்படி ஒரு கோட்டைப் போட்டு அதுதான் எல்லை என்று இந்தியாவிடம் கூறிவிட்டுச் சென்றான். அதை அப்போதே சீனா ஒப்புக் கொள்ளவில்லையே” என்று கேட்டேன். அவர்களும் எனது வாதத்தை ஒப்புக்கொண்டார்கள். உண்மையில், மக்மோஹன் எல்லைக்கோடு, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில், ஓடும் பிரம்மபுத்திரா நதியை ஒரு ‘எல்லை’யாகக் காட்டி வரையப்பட்டது. அந்த பிரம்மபுத்திரா நதி, ஆறு மாதங்கள், ஒரு புறமும், முழுமையாக மாறுபட்ட பாதையில் ஆறு மாதங்களும், ஓடக்கூடிய நதி. அதாவது அதை எல்லையாகப் போட்டால், இரு நாடுகளுக்கும், ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் இடையில் சண்டையும் சச்சரவும் வந்துகொண்டே இருக்கும். வரட்டுமே சண்டை என்று எண்ணி, வெளியே சென்ற ஆங்கிலேயர்கள், ‘பிளவுபடுத்தி, ஆட்சி செய்’ என்ற நோக்கில் விட்டுச் சென்றார்களா என்பது ஆராயப்பட வேண்டும். அந்த இடைப்பட்ட பகுதிக்குப் பெயர்தான் ‘ஆக்சை சின்’. இந்தப் பகுதிதான் 1962இல் சர்ச்சைக்குள்ளான பகுதி. நான் மேற்கூறிய இரண்டு மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவர் கூறினார், “நான் அஸ்ஸாம் சென்றிருந்தேன். அங்கே உள்ள நதிநீர் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றிடம் விவாதித்தேன். அவர்கள் பிரம்மபுத்திரா நதி பற்றிய தங்கள் ஆராய்ச்சியைக் கூறினார்கள். அவள் கடலைப் போன்ற நதி. அந்த நதியை, அவளது பாதையை நாம் கணிக்கவே முடியாது. பிரம்மபுத்திரா நதியின் பாதையை நம்பி நாங்கள் பயிர்களை விதைத்திடுவோம். பிறகு அவள் அந்தப் பாதைக்கும் வந்து விடுவாள். ஆகவே, நாங்கள் பயிர் செய்வதற்கு ஒதுங்கி, அவளுக்கு நிறைய இடத்தை விட்டுவிட்டுத்தான் பயிர் செய்வோம். இவ்வாறு கூறினார்கள். அவர்கள் அந்த நதியை ‘அவள்’ என்றே பெண் பாலுடன் மிக மரியாதையாக அழைத்தார்கள். ஆகவே அந்த பிரம்மபுத்திராவை எல்லையாக ஓர் ஆங்கிலேயர் போட்டுக் கொடுத்தால், அதிலேயே வில்லங்கம்" இருக்கிறது” என்கிறார்.
இவ்வாறு இந்த விவாதம் சென்றது. நாம் 1962 இல் நடந்தது என்ன என்று சிறிது திரும்பிப் பார்க்க வேண்டும் அல்லவா? அன்று ‘இந்திய- சீன எல்லையில் போர் நடந்தது. போரில் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் அதிக தூரம் வந்துவிட்டு திரும்பிச் சென்று விட்டது. செல்லும்போது, பல இந்திய ராணுவ வீரர்களை போர்க் கைதிகளாகப் பிடித்துச் சென்று விட்டது. பிறகு அவர்களை விடுதலை செய்து எச்சரிக்கை செய்தது’. இவையெல்லாம் நாம் கேள்விப்பட்ட செய்திகள். அதனால்தான் இன்றைய இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லி நாங்கள் 1962 போல இல்லை என்று கூறுகிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் மக்களவை உறுப்பினர் பி.ராமமூர்த்தி, நாடாளுமன்றத்திலேயே, ‘இது சீன ஆக்கிரமிப்பு அல்ல. வெறும் எல்லைத் தகராறு’ என்று பேசிவிட்டு, அதையே புத்தகமாக வெளியிட்டார். அந்தப் புத்தகத்தையும் இந்திய அரசு ‘தடை’ செய்தது. அமெரிக்கா, இந்தப் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்குக்கு எதிராக அன்றும் சரி, இன்றும் சரி செயல்படுவது வெள்ளிடை மலை. அன்றைய சூழலில், நேருவின் ஆட்சிக் காலத்தில், அமெரிக்காவின் வலியுறுத்தலில்தான், நேரு நமது படைகளை சீனா மீது ஆக்கிரமிக்க அனுப்பினார் என்றும், அது எல்லை ஓரத்தில் சீனா அப்போது கட்டிவந்த ஏவுகணை தளத்தை கட்ட விடாமல் செய்வதற்காக அமெரிக்காவால் தூண்டி விடப்பட்டது என்றும் கம்யூனிஸ்டுகள் பேசி வந்தார்கள். இந்திய - சீனப் போரில், கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டதும், பிறகு அதையும் ஒரு காரணமாக வைத்தே கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்ததும் வேறு கதை. இங்கிலாந்திலிருந்து வந்த ‘நீவில் மாக்ஸ்வெல்’ என்ற பிரபல எழுத்தாளர், அந்தப் போர் பற்றி மூன்று ஆண்டுகள் இந்திய வந்து ஆராய்ச்சி செய்து, பல இந்திய ராணுவ வீரர்களையும், தளபதிகளையும் சந்தித்து, ஒரு புத்தகம் எழுதினார். அந்தப் புத்தகத்தின் பெயர், ‘இந்தியாவின் சீனப் போர்’. அந்தப் புத்தகத்தையும் இந்திய அரசு தடை செய்து விட்டது. இவ்வாறு இந்திய அரசின் செயல்பாடுகளில், அந்தக் காலம்தொட்டே, பல கேள்விகள் இன்னமும் நிற்கின்றன.
இன்று நடக்கும் இந்த விவாதத்தில் இந்திய அரசு, சீனா மீது கூறும் குற்றச்சாட்டு, ‘சீனா பூடான் எல்லையில் சாலை போடுகிறது. அது நமது பாதுகாப்புக்கு ஆபத்து’ என்பதே. அதுவும், இந்தியப் பிரதமர் மோடி அவர்கள், அமெரிக்க அதிபரைச் சந்தித்துவிட்டு வந்த பிறகே பெரிதாகக் கிளப்பப்பட்டது. ஆனால், சீனா கிளப்பும் பிரச்னை பெரியது. இந்திய ராணுவம் தொடர்ந்து எல்லை மீறுவதாகவும், இப்போதும் சீன எல்லைக்குள் வந்திருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள். அதையும் தாண்டி, சிக்கிம் தனி நாடக இருந்தது. அதை இந்தியா ஆக்கிரமித்துக் கொண்டது. சிக்கிமை தனிநாடாக அறிவிக்க சிக்கிம் மக்கள் விரும்புகிறார்கள் என்ற குண்டையும் தூக்கிப் போடுகிறார்கள். உள்ளபடியே சிக்கிம் 1975 வரை தனி நாடாகத்தான் இருந்தது. இந்திரா காந்தி ஆட்சியில், சிக்கிம் மக்களிடம் பொதுக்கருத்துக் கேட்டு இந்தியா தன்னுடன் சிக்கிமை இணைத்துக் கொண்டது என்பது இன்று ஊடகங்களின் செய்தி. ஆனால், ஒரே நள்ளிரவில், திடீரென இந்திய ராணுவம் சிக்கிம் நாட்டுக்குள் சென்று, சிக்கிமை இணைத்துக் கொண்டது என்பது நமது நினைவில் இருக்கும் செய்தி. தனிக் கொடியுடனும், தனி தேசிய கீதத்துடன் வாழ்ந்த சிக்கிம் மக்கள் அந்த இணைப்புக்குப் பிறகு, இந்தியக் கொடியுடனும், இந்திய தேசிய கீதத்துடனும்
வாழ வைக்கப்பட்டார்கள். நெருக்கடி நிலைக்குப் பிறகு, ஜனதா கட்சி ஆட்சி வந்த பிறகு, பிரதமராக மொரார்ஜி தேசாய் வந்த பிறகு, மொரார்ஜி லண்டன் செல்கிறார். அங்கே ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வி, “நீங்கள் சிக்கிம் இணைப்பை ஏற்றுக்கொள்கிறீர்களா?” அதற்கு மொரார்ஜி தேசாயினுடைய பதில், “நான் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், இந்தியப் பிரதமராக நான் எதுவும் செய்ய முடியாது”. இதுதான் இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை அமைச்சருக்கே உள்ள நிலை. அப்படியானால், இந்தியாவை ஆள்வது யார்? முடிவுகளைத் தீர்மானிப்பது யார்? ‘அரசு இயந்திரம்தான்’ என்றால், அது என்ன தன்மையைக் கொண்டது? அது ‘விரிவாக்கம்’ என்ற தன்மையைக் கொண்டதா? அது ‘பிராந்திய மேலாதிக்கம்’ என்ற தன்மையைக் கொண்டதா? இதுபோன்ற கேள்விகளுக்கும் நாம் விடை காண வேண்டியுள்ளது.Spl Story-

Thursday, April 27, 2017

மன்னார்குடி மகுடிக்கு மன்னார்குடியே சிக்கியதா? -

சிறப்புக் கட்டுரை: மன்னார்குடி மகுடிக்கு மன்னார்குடியே சிக்கியதா? - T.S.S.மணி

சிறப்புக் கட்டுரை: மன்னார்குடி மகுடிக்கு மன்னார்குடியே சிக்கியதா? - T.S.S.மணி
டி.டி.வி.தினகரனின் கைது பல அரசியல் கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒருவர் இந்தியாவின் ‘புனிதமான’ தேர்தல் ஆணையத்தையே ‘லஞ்சம்’ கொடுத்து லாபம் பெறப் பார்த்தால், கண்டிப்பாக அவரைக் கைது செய்ய வேண்டும். வழக்கு போட வேண்டும். விசாரிக்க வேண்டும். தண்டனை வழங்க வேண்டும். இதுதான் நாம் எல்லோரும் எதிர்பார்க்கும் ஒன்று. அவ்வாறுதான் டி.டி.வி.தினகரன் கைதும் நடந்தது என்றால் பிரச்னை இல்லை. ஆனால், விடுதலைச் சிறுத்தை தலைவர் தொல்.திருமாவளவன் சொல்வது போலவும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் சொல்வது போலவும், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கருதுவது போலவும் இந்தக் கைது ‘ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை’ என்றால், இது மிகவும் ‘கேவலமான’ ஒன்று. அதை நடுவண் அரசை நடத்தும் பாஜக செய்தது என்று நிரூபணமானால் அது நாட்டின் மரியாதையைக் கெடுக்கக் கூடியது.
சுகேஷ் சந்திரசேகர் என்பவர் குறைந்தபட்சம் 16 வழக்குகளில் கைது செய்யப்பட்டவர். அவர் எப்போதுமே ‘மோசடி’ வழக்குகளில் அதிகமாகச் சிக்குபவர். அப்படிப்பட்டவர் ரூ.1.50 கோடி பணத்துடன் பிடிபடுகிறார். எப்படி இந்தப் பணம் வந்தது என்றால், அதிமுக-வுக்கு இரட்டை இல்லை சின்னத்தை வாங்கித் தர ரூ.50 கோடி பேசி, ரூ.10 கோடி வாங்கி, அதில் இது மீதி பணம் என்று டெல்லி காவல்துறை கண்டுபிடித்தார்களாம். டெல்லி காவல்துறை, டெல்லியை ஆள்வதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் கட்டுப்பாட்டில் இல்லை. நடுவண் அரசின், ‘உள்துறை’யின் கீழ்தான் உள்ளது என்ற உண்மை, டெல்லியில் கெஜ்ரிவால் ஆட்சிக்கு வந்தபின், அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் நாட்டுக்குத் தெரிந்த செய்தி. இதுவரை டெல்லியை ஆண்டுவந்த காங்கிரஸ் கட்சியிலும், நடுவண் அரசிலும் அவர்களே ஆண்டதால் இந்த ரகசியம் நமக்கு கசியவில்லை.
நமது நாட்டு காவல்துறையைப் பொறுத்தமட்டில், ‘ஒரு முன்னாள் குற்றவாளி’யைப் பயன்படுத்தி, தாங்கள் விரும்பும் வழக்குகளை ‘புனைந்து’ கொள்வார்கள் என்பது தெரிந்த செய்தி. அதிலும் பிரபல ‘மோசடி’ வழக்குப் பேர்வழியைப் பயன்படுத்தியே, அடுத்த மோசடி வழக்கையும் புனைவது அவர்களது ‘அவசரத்துக்கு எளிதான செயல்’. அவ்வாறுதான் டெல்லி காவல்துறை என்ற ‘உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கையாளுதலில் உள்ள இலாகா செய்துள்ளதா?’ என்பது போகப்போகத்தான் தெரியும். அப்படியே தினகரன் லஞ்சம் கொடுக்க ‘முயன்றார்’ என்று நிரூபணமானாலும், அது லஞ்சம் கொடுத்த வழக்காக ஆகாது. மாறாக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்காகத்தான் இருக்கும். அதேபோல, டெல்லி காவல்துறையினர் தினகரனை நான்கு நாள்களாக, மாலை முதல் நள்ளிரவு வரை கேள்விகள் கேட்டுத் துளைத்து விசாரித்தார்களாம். அதுவே ஒரு மனிதனைச் சோர்வடைய வைத்து, ‘உளவியல் ரீதியாகச் சித்ரவதை மூலம் பெறவேண்டிய சொற்களை பெரும்முறை’. அதேசமயம், ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு, அஇஅதிமுக கட்சியை நெருங்க முடியாமல் இருந்த நடுவண் அரசுக்கு, டெல்லி காவல்துறை மூலமே நெருங்கி அதன் துணைப் பொதுச்செயலாளரையே கைது செய்து, ‘அவமானப்படுத்தி விட்டோம்’ என்ற திருப்தியைப் பெற்றுக் கொள்ளலாம்..
அதுமட்டுமல்ல... எந்த அதிமுக, ஜெயலலிதா தலைமையில் இருந்தபோது நடுவண் அரசு தனது ‘புதிய சட்டத் திருத்தங்கள்’ மூலம் ரயில்வே பாதுகாப்பு காவல்துறைக்கும், எல்லை பாதுகாப்பு படைக்கும், ‘மாநிலங்களுக்குள் நுழைந்து, மாநில அரசின் உதவியின்றியே கைது விசாரணை செய்யும் உரிமை’யைக் கொண்டுவர முயற்சி செய்தபோது, ஜெயலலிதாவால் தடுத்து நிறுத்தப்பட்டதோ, அதே அதிமுக கட்சியின் துணைப் பொதுச்செயலாளரை நடுவண் அரசின் கைகளில் உள்ள அதிகாரமான ‘டெல்லி காவல்துறை’ மூலம், ஒரு வழக்கை டெல்லியிலேயே புனைந்து, கைது செய்து சென்னைக்கே கொண்டுவர முடிகிறது என்ற ‘இறுமாப்பை’ காட்டும் ‘ஒற்றையாட்சி அதிகாரவர்க்க மனப்போக்கு’ என்றும் பார்க்க வேண்டியிருக்குமோ?
அதாவது ‘ஒற்றையாட்சி மனப்போக்கு’ என்பது இந்தியத் துணைக் கண்டம் முழுமையையும், ‘தானே தனது சித்தப்படியே’ ஆளும் ஒரு ‘வெறி’. அத்தகைய ஒற்றையாட்சியை எதிர்த்து, ஒரு காலத்தில், ‘மாநில சுயாட்சி’ என்றும், ‘மாநில உரிமைகள்’ என்றும் பேசப்பட்டது. ஆனால், அதன் பரிணாம வளர்ச்சியாக ஜெயலலிதா காலத்தில், அவராலேயே முன்மொழியப்பட்டு, 2014 நடாளுமன்றத் தேர்தல் களத்தில், ‘கூட்டுறவுடன் கூடிய கூட்டமைப்பு’ என்ற சொல்லாடல் இந்திய அரசியல் வானில், அறிமுகப்படுத்தப்பட்டது. அவ்வாறு ஒரு ‘கூட்டமைப்பு’ என்பது நிலவுகின்ற ‘ஒற்றையாட்சி’ கட்டமைப்பை அகற்றி, அதன் இடத்தில் நிறுவப்பட வேண்டிய ஒன்று. அதாவது, நடுவண் அரசுக்கு, ‘அனைத்து அதிகாரங்களும்’ என்ற சொல்லாடலை அகற்றிவிடக் கூடிய வீரியமுள்ளது. அதை ‘ஆண்டு, அனுபவித்த, அதிலேயே ரசித்து, சுவைத்த அதிகார வர்க்கம்’ எப்படி விட்டுக் கொடுக்கும்? எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?
அதனால்தான், நடுவண் அரசில் ‘ஐக்கிய முற்போக்கு அரசு’ இருக்கும் காலத்தில், அதன் அங்கமாக இருந்த திமுக கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளரைக் கூட, திமுக கட்சியின் தலைவர் மகளைக் கூட, நடுவண் அரசின் அதிகாரம், குறிப்பிட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட காங்கிரஸ் அமைச்சர்களைத் தொடாமல், கைதுசெய்து, வழக்கு நடத்த முடிகிறது. ‘உள் துறை’ என்பதும், ‘பிரதமர் அலுவலகம்’ என்பதும், அத்தகைய ஒற்றையாட்சி அதிகார மையமாகச் செயல்படுகின்றன. இந்த ஒற்றையாட்சி மாற்றப்பட்டு, ‘உண்மையான கூட்டமைப்பு’ ஒரு கட்டமைப்பாக உருவாகி வருமானால், இத்தகைய நடுவண் அதிகாரம் செயல்பட முடியாது.
இத்தகைய ‘ஒற்றையாட்சி மனோபாவம்’ இந்த டி.டி.வி. வழக்கிலும் செயல்படுகிறதோ என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது. ஏனென்றால், நடுவண் அரசு அதிகாரத்துக்குட்பட்டு, தேர்தல் ஆணையம், அதிக எண்ணிக்கை உள்ள ஒரு கட்சியின் சின்னத்தை, கொடியை, கட்சிப் பெயரை முடக்குகிறது. அத்தகைய செயல், நீதிமன்றம் செல்லும்போது, சில மாதங்கள் கழித்து தோல்வி அடையலாம். இந்த ‘சின்னம் பெற லஞ்சம்’ கொடுக்க முயன்ற வழக்கும், நீதிமன்றம் செல்லும்போது, சில மாதங்கள் கழித்து தோல்வி அடையலாம். ஆனால் வருகிற ஜூலை, ஆகஸ்ட் மாதத் தேவைகளுக்காகவே மோடி அரசு இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. அது என்ன தேவை?
அதுதான் வர இருக்கின்ற ஜூலை மாத குடியரசு தலைவர் தேர்தலும், ஆகஸ்ட் மாத துணைக் குடியரசு தலைவர் தேர்தலும். அந்தத் தேர்தல்களில், பிரதமர் நரேந்திர மோடி ஒரு பெரும் சவாலை எதிர்கொள்கிறார். அந்தச் சவால், எதிர்க்கட்சியான காங்கிரஸ் மூலமோ, அல்லது ஏதாவது மாநிலக் கட்சி மூலமோ அல்ல. அது தன்னை உருவாக்கி வளர்த்த ஆர்.எஸ்.எஸ். சக்திகளிடமிருந்து. ஆர்.எஸ்.எஸ். சக்திகள் ஏற்கெனவே, மோடி அரசு கொண்டுவந்த, கார்ப்பரேட் நலனுக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தன. ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டலில், பாரதிய கிசான் சபா, வனாஞ்சல் சமிதி, பாரதிய மஸ்துர் சபா ஆகியவை லட்சக்கணக்கான விவசாயிகளையும், ஆதிவாசிகளையும், தொழிலாளர்களையும் திரட்டி எதிர்த்தது. அதுவே மோடியின் முதலாளிகளான கார்ப்பரேட்கள், அந்நிய ஏகாதிபத்தியங்களுக்குத் தலைவலியாகப் போய் விட்டது. அதேபோல அமெரிக்காவுடனான ஒப்பந்தங்களோ, இஸ்ரேலுடனான ஒப்பந்தங்களோ, பாகிஸ்தானுடனான ஒப்பந்தங்களோ அவர்களது எதிர்ப்பைச் சந்திக்கலாம். அதுவே சிவசேனா மூலம் அவ்வப்போது வெளிப்படுகிறது. அத்தகைய நேரங்களில், பிரதமருக்கு ‘இசைவாக செல்லக்கூடிய’ ஒருவரே குடியரசு தலைவராக கொண்டு வரப்பட வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். சக்திகள் ‘முழுமையான மதவாதம்’ என்றால், மோடியினுடையது, ‘கார்ப்பரேட் மதவாதம்’ என்று அழைக்கலாம். இப்போது கார்ப்பரேட் மதவாதத்துக்கும், முழுமையான பழமை மதவாதத்துக்கும் உள்ள போட்டியே நாம் காணுகின்ற குடியரசு தலைவர் தேர்தல். கார்ப்பரேட் மதவாதம், தனது நேரடி மதவாதச் சக்திகளாக, ‘கார்ப்பரேட் ஆசிரமங்களை’ நிறுத்துகிறது. அதுவே மோடியால் ஆதரிக்கப்படும், யமுனை நதியைக் கெடுத்த ஸ்ரீ,ஸ்ரீ.ரவிசங்கரும், கோவை மேற்குத் தொடர்ச்சி மலையைக் கெடுத்த ஜக்கு வாசுதேவரும்.
கார்ப்பரேட் தலைமை தாங்க வேண்டுமா? அல்லது மதவாதம் தலைமை தாங்க வேண்டுமா? என்ற போட்டியே அவர்களது கூட்டணிக்குள் உள்ள குத்து, வெட்டு. அதாவது வருகிற குடியரசுத தலைவர் தேர்தலோ, துணைக் குடியரசு தலைவர் தேர்தலோ மக்களுடைய தேவைகளுக்காக அல்ல. மாறாக, ஆளுவோருக்குள், ஆளும் வர்க்கத்துக்கும், ஆளும் கூட்டத்துக்குள், ஆளும் கும்பலுக்கும் உள்ள போட்டியின் விளைவே.
அந்தப் போட்டியில், ‘அமைதிப்படை அமாவாசை’யாக மோடி வருகிறார். அதனால் தன்னை வளர்த்த முதியவர்களான அத்வானியோ, முரளி மனோகர் ஜோஷியோ குடியரசு தலைவர் பதவிக்கு நிறுத்தப்பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். அதன் விளைவே, தங்கள் கைகளில் உள்ள சக்கராயுதத்தை (ஒற்றையாட்சி அதிகாரத்தை) விஷ்ணு போல சுழட்டி, சி.பி.ஐ. மூலம்,, பழைய வழக்கு கோப்புகளைத் தூசு தட்டி எடுத்து, பாபர் மசூதி இடிப்பில் அத்வானி, ஜோஷி, உமா பாரதி பங்குகளை மறு ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் மூலம் ஏற்பாடு செய்து விட்டார். அத்தகைய மோடி, எப்படி இந்தத் தேர்தலில், அஇஅதிமுக வாக்குகளைப் பெறுவது என்று சிந்திக்க மாட்டாரா? 50 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளும், 135 சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளும், மொத்தமாகக் கிடைப்பது என்றால் சாமான்யமான விஷயமா?
அதுமட்டுமல்ல. நான்கு மாநிலத் தேர்தல்களில், பாஜக வெற்றி பெற்றிருக்கும் சூழலில், எதிர்க்கட்சிகளை குடியரசு தலைவர் தேர்தலில் தோற்கடிக்க இன்னமும் 24,௦௦௦ வாக்குகள் தேவைப்படுகிறது. ஆகவேதான், மோடியின் அக்கறை அதிமுக பக்கம் திரும்புகிறது. முதலில் ஒன்றுபட்ட அதிமுக-வின் மொத்த வாக்குகளையும் அள்ளிவிடலாம் என எண்ணியவர், தங்களது நடுவண் அதிகாரத்தை, சசிகலா அணியினர் ‘ஏற்கவில்லை’ என்றவுடன், ‘உடையட்டும்’ என முயற்சித்து, பிறகு, ‘பெரும்பான்மை’ சசிகலா அணியிடம் இருப்பதைப் பார்த்து மிரண்டுபோய், ‘இணையட்டும்’ என முடிவெடுத்து, அதற்கான முயற்சிகளை முன்னெடுக்க உதவுவதும், ஆனால், சசிகலா அணியினரோ, குறிப்பாகத் தினகரனோ வந்துவிடக் கூடாதென, தேர்தலை ரத்து செய்வதும், தினகரனைக் கைது செய்வதும், அதன்மூலம் அசிங்கப்படுத்தி அவர்களை விலக்கி வைத்து, அதிமுக இணைப்பைச் சாதிப்பதும், எல்லாமே, குடியரசு தலைவர் தேர்தலுக்காக மட்டுமே. ஆகவேதான் இந்த வழக்குகளை ‘தற்காலிகமானவை’ என நாம் அழைக்கிறோம்.
இன்னொரு அச்சமும் பிரதமர் மோடிக்கு இருக்கிறது. இப்போது சோனியா களத்தில் இறங்கி, 16 கட்சிகளை குடியரசு தலைவர் தேர்தலுக்காக இணைக்கிறார். காங்கிரஸ் முயற்சியை ஆர்.எஸ்.எஸ். சக்திகள் ஆதரிக்குமோ என்ற அச்சமும் மோடிக்கு உண்டு. ஏனென்றால் ஏற்கெனவே 1984ஆம் ஆண்டு, டெல்லியில் நடந்த சீக்கியருக்கு எதிரான கலவரத்தில், காங்கிரஸின் சேவாதளத்துடன் ஆர்.எஸ்.எஸ். சக்திகளும் இறங்கினர் என்ற பழைய செய்தி நினைவுக்கு வருகிறது. கேரளாவின் தேர்தலில், சி.பி.எம். கட்சியைத் தோற்கடிக்க காங்கிரஸ் கட்சிக்கு ஆர்.எஸ்.எஸ். சக்திகள் ஆதரவு கொடுத்த செய்திகளும் நிறையவே உள்ளன. ஆகவே சோனியாவின் வேட்பாளரை, மோடிக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். ஆதரித்துவிட்டால் என்ன செய்வது? இருக்கும் பாஜக வாக்குகளே உடையுமே? ஆகவே ‘கையில் உள்ள அதிமுக வாக்குகளை விடக் கூடாது’ என எண்ணுகிறார். அதன் விளைவே இந்த ‘அவசர’ செயல்பாடுகள்.
இதில் ஓ.பி.எஸ். அணியினர், ‘மன்னார்குடி குடும்பம்’ விலக்கப்பட வேண்டும் என்று கூறுவது இன்னொரு கேலிக்கூத்து. ஏனென்றால் ம.நடராசனோ, திவாகரனோ, தொடக்கத்திலிருந்தே தினகரனுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள். அதனால் தினகரன் ஒரு காட்சி ஊடக நேர்காணலில் பெயர் சொல்லி, ‘நடராசனோ, திவாகரனோ கட்சிக்குள் நிரந்தரமாக வர மாட்டார்கள்’ என்று கூறினார். அவரது பகிரங்க அறிவிப்புக்குப் பிறகு, தீபா தம்பி தீபக் என்ற அரசியலில் இல்லாத இளைஞனை அறிக்கை கொடுக்க வைத்து, அதில், ‘தினகரனை நீக்க வேண்டும்... ஓ.பி.எஸ். பொதுச்செயலாளர் ஆக வேண்டும்’ என்று சம்பந்தப்பட்டவர்கள் எழுதிக் கொடுத்ததும் நாடறிந்த ரகசியம். அதேபோல நடராஜனுக்கு வேண்டிய கவிஞர் சினேகன் நேரடியாக ஓ.பி.எஸ். அணியில் வந்து சேர்ந்ததும், யாருடைய வேலை என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.
திவாகரன், தினகரனை கருத்தில்வைத்து, ‘எங்கள் குடும்பத்தினர் கட்சிக்குள்ளும், ஆட்சிக்குள்ளும் தலையிட மாட்டோம்’ எனக் கடிதம் எழுதி, அதை, முதல்வர் எடப்பாடிக்கும், சசிகலாவுக்கும் அனுப்பியதும் அனைவரும் அறிந்ததே. அதேபோல மகாதேவனின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட மூத்த அமைச்சர்கள் தங்கமணி அணியினரிடம் தினகரனுக்கு எதிராகக் காய் நகர்த்தச் செய்ததும் திவாகரன் என்பது ஊடகங்களில் வெளிவந்தது. இவ்வாறு, ஓ.பி.எஸ். அணியிலும் மன்னார்குடி குடும்பம், எடப்பாடி அணியிலும் மன்னார்குடி குடும்பம் இருப்பதால் ‘தினகரனே மன்னார்குடி குடும்பம்’ என்ற உண்மை புரியப்பட வேண்டும். ஆகவே, தினகரனின் கைதுக்குப் பின்னால் குடும்பத்தின் சதி இருக்குமானால், அது, மன்னார்குடி மகுடிக்கு, மன்னார்குடி சிக்கியதாகவே பொருள்படும்.

Wednesday, March 29, 2017

சிறப்புக் கட்டுரை: ஆர்.கே.நகர் தேர்தலையொட்டி, தமிழக அரசியலில் அணிச்சேர்க்கைகள்!

சிறப்புக் கட்டுரை: ஆர்.கே.நகர் தேர்தலையொட்டி, தமிழக அரசியலில் அணிச்சேர்க்கைகள்!

வியாழன், 30 மா 2017
ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலில், யார் வெற்றி பெறுவார்கள் என்ற கணிப்பை ஆளாளுக்கு ‘ஜோசியம்’ சொல்வதுபோல கணித்துக்கொண்டு இருக்கிறார்கள். எல்லோரும் ‘கிளி ஜோசியக்காரர்’களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை நிலை அந்தத் தொகுதியில் ‘வேறு மாதிரி’ இருக்கிறது. ஊடகங்களின் அவதானிப்புகள், அதில் வரும் விவாதங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் பேசப்படுகின்றன என்பது என்னவோ உண்மைதான். அதையொட்டி கட்சிகளின் அல்லது குழுக்களின் தலைவர்களும், தங்களது ‘புதிய, புதிய’ கோரிக்கைகளை, அல்லது கருத்துகளை தூவுகிறார்கள். ‘2017ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு பெரும் மாற்றத்தை கொண்டு வந்திருப்பதை கவனித்துத்தான் இவர்கள் சூழலைக் கணிக்கிறார்களா?’ என்ற கேள்வி நமக்கு எழுகிறது.
2016ஆம் ஆண்டு இறுதி வரை தமிழ்நாட்டு அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரண்டு பெரும் ‘ஆளுமைகள்’ இருந்தன. அல்லது அரசியல் வெளியை ஆக்கிரமித்துக் கொண்டு இருந்தன. ஜெயலலிதாவின் மறைவும், கருணாநிதியின் அமைதியும் அந்த ‘இரண்டு ஆளுமைகள்’ இல்லாத தமிழ்நாடாக இங்குள்ள ‘அரசியல் வெளியை’ வெளிச்சம்போட்டுக் காட்டிவிட்டன. அந்த ‘வெற்றிடத்தை’ நிரப்ப, மாநிலக் கட்சிகளும், அகில இந்தியக் கட்சிகளும் ‘விரும்புகின்றன’ என்பது உண்மை. ஆனால், அதற்கான எந்தச் சூழலும் தமிழ்நாட்டில் ‘இல்லை’ என்பதுதானே உண்மை. அந்த இரண்டு ‘பெரும் ஆளுமைகள்’ தலைமை தாங்கிய இரண்டு பெரும் கட்சிகள் தமிழ்நாட்டின் தேர்தல் அரசியல் பாதையை கிட்டத்தட்ட ‘ஆக்கிரமித்துக்’ கொண்டு பிற அகில இந்தியக் கட்சிகளுக்கோ, மாநிலத்தின் சிறிய கட்சிகளுக்கோ, நிற்கக்கூட இடமில்லாமல் செய்துவிட்டன. சமீபத்திய 2014 நாடாளுமன்றத் தேர்தலும், 2016 சட்டமன்றத் தேர்தலும் அதற்கான உதாரணமாக அமையவில்லையா? ஜெயலலிதாவின் செயல் தந்திரங்களில், 2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இடதுசாரிகள் உட்பட சிறிய கட்சிகளின் இருத்தலையே கேள்விக்குறியாக்கி விடவில்லையா? இனி மீண்டும் தாங்கள் வந்த பாதையில், தங்களது கட்சியை வளர்த்துக்கொள்ளல் என்பது அந்தச் சிறிய கட்சிகளுக்கு, சுலபமான காரியமா?

இந்த 2017ஆம் ஆண்டு நிலைமையை ஆய்ந்து பார்த்தால், 2016 வரை நாம் செய்திருந்த சில மதிப்பீடுகளை மறுபரிசீலனைக்கு உள்ளாக்க வேண்டுமா? இல்லையா? அவை என்ன மதிப்பீடுகள்? ஜெயலலிதாவின் ஆளுமையென்று கூற வெட்கப்பட்டு, அ.இ.அ.தி.மு.க என்று ஒரு கட்சியின் பெயரை கூறி நாம் அழைத்து வந்தோம். கலைஞரின் ஆளுமை என்று கூற வெட்கப்பட்டு, அதை தி.மு.க. என்று ஒரு கட்சி பெயரில் அழைத்து வந்தோம். தி.மு.க. என்ற ஒரு பெரிய ஆலமரம் அண்ணாவால் உருவாக்கப்பட்டு, போராடி, எழுந்து உருவாக்கி வந்திருந்தாலும், கடைசியில், கலைஞர் என்ற ஆளுமைக்குள் அடங்கி விடவில்லையா? அ.தி.மு.க என்ற பெரிய கட்சியை எம்.ஜி.ஆர் என்ற பெரும் ஆளுமை உருவாக்கிக் கொடுத்து, வளர்ந்திருந்தாலும் அது கடைசியில் ஜெயலலிதா என்ற ஆளுமைக்குள் அடங்கி விட்டது உண்மைதானே? இரண்டு ஆளுமைகளும் இல்லாத இந்த புதிய ஆண்டில், நாம் அ.இ.அ.தி.மு.க. என்றோ, தி.மு.க. என்றோ இரண்டு அமைப்புகள் இருந்தாலும் அவற்றை ஒரு முழு கட்சியாகக் கணிக்க முடிகிறதா? இன்று அ.தி.மு.க என்பது பகிரங்கமாக தேர்தல் ஆணையம் மூலம் அழைக்கப்படக் கூடாது என்று தடை அறிவிப்பு தமிழ்நாட்டுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இது என்ன புதிய விந்தை? இது என்ன புதிய வேதனை? இப்படி நமக்கே கேள்விகள் எழலாம். தேர்தல் ஆணையம் ஏன் செய்தது என்று நமக்கு பல காரணிகள் புலப்படலாம். ஆனாலும் ஒரு பெரிய ஆலமரம் அதன் விழுதுகள் எங்கும் பரவியுள்ள நிலையில், கண்ணுக்குத் தெரியக் கூடாது என்று நடுவண் ஆணைய உத்தரவால் மறுக்கப்படுவது சாதாரணச் செயல் அல்ல. இந்திய அரசியலுக்கே கடந்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில், சவால் விட்டு நின்ற ஒரு தமிழ்நாட்டு ஆளுமை இல்லை என்ற நிலையில்தானே, நடுவண் சக்திகளுக்கு அந்தத் துணிச்சல் வருகிறது? குஜராத்தின் மோடியா? தமிழ்நாட்டு லேடியா? என்று துணிச்சலாக கேட்ட ஒரு தமிழ்நாட்டு பெண் அரசியல்வாதி இல்லை என்ற நிலையில்தானே தேர்தல் ஆணையம் தனது அரசியலைப் பாய்ச்சுகிறது? ஒரு கோடியே எழுபது லட்சம் உறுப்பினர்கள் கொண்ட ஒரு கட்சியின் ஒரேயொரு கடைசித் தொண்டன்கூட, தேர்தல் ஆணையம் மீது கோபப்பட்டு, எந்த எதிர்ப்பையும், எந்த மூலையிலும் காட்டவில்லையே? ஏன்?
ஜெயலலிதா என்ற ஆளுமை வீழ்ந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத தமிழ் மனம் அதை பின்தொடர்ந்து வருவதாகக் கூறும் யாரையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் இல்லை. ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க-வை அந்த மனங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த நிலை, பின் ஒரு காலத்தில் மாறலாம். அது வேறு. ஆனால், இப்போது அத்தகைய சூழலில் இருக்கும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில், அ.தி.மு.க. என்ற கட்சியின் பெயருக்குத் தடை போட்ட தேர்தல் ஆணையத்தை எதிர்க்க யாரும் தயாரில்லை. அப்படியானால் ஜெயலலிதா என்ற ஆளுமைதான் உண்மை, அ.தி.மு.க. என்ற கட்சி ஒரு மாயை என்று கூறிவிட முடியுமா? இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முறை அப்படிக் கற்றுக் கொடுக்கவில்லையே? கட்சி என்பதற்கு பல விதிகள் உள்ளன. அதன்படி அது செயல்பட வேண்டும். அதற்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம் வேண்டும். அதற்கு எம்.எல்.ஏ-க்கள் வேண்டும். எம்.பி-க்கள் வேண்டும். தேர்தல் சின்னம் வேண்டும். இப்படியெல்லாம் இந்திய அரசியல் சட்டத்தின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனாலும்கூட, 122 எம்.எல்.ஏ-க்களும், 25 எம்.பி-க்களும், ஒரு கட்சியின் பெயரையும், சின்னத்தையும் அங்கீகரிக்கப் போதாது என்ற சீரிய முடிவை எடுத்துள்ள தேர்தல் ஆணையமும் ஒரு புதிய சாதனைதான் படைத்துள்ளது. எப்படி இருந்தாலும் இந்த புதிய சூழல் நமக்கு தனிநபர் ஆளுமையையும், கட்சியின் இருத்தலையும் பற்றி மறுபரிசீலனை செய்ய உதவ வேண்டும்.
அதேபோல தான் தி.மு.க-வும் உள்ளது. தலைவர் கலைஞர் அமைதியாகயிருக்கும் சூழலில், செயல் தலைவர் அறிவிக்கப்பட்ட நிலைமையில், பகிரங்கமாகத் தெரியாவிட்டாலும், தொண்டர்கள் மத்தியிலோ, அந்தக் கட்சியின் வாக்காளர்கள் மத்தியிலோ, முன்பு இருந்த நம்பிக்கை அதே போல இல்லை என்பதுதான் உண்மை. அங்கும்கூட தனிநபர் ஆளுமை என்பது, கலைஞரைப் போலவே, பொதுவெளிகளில் ஸ்டாலினுக்குக் கிடைப்பது என்பது இனிதான் என்ற நிலை உள்ளது. அதனால்தான் ஸ்டாலினுடைய செயல்பாடுகளில், பல கேள்விகள் தொண்டர்கள் மத்தியில் எழுகின்றன. உதாரணமாக, ஜெயலலிதாவின் ஆட்சியுடன் மோதாப் போக்கை கடைப்பிடித்ததோ, பன்னீர்செல்வம் ஆட்சி மீதும், அதே மோதாப்போக்கை செயல்படுத்தியதையும், கலைஞரது தலைமை செயல்பாடுகளிலிருந்து ஸ்டாலின் செயல்பாட்டை வேறுபடுத்திப் பார்க்க தொண்டர்களுக்கு உதவியுள்ளது. ஆகவே தி.மு.க-விலும்கூட, கலைஞரது ஆளுமை என்பதைக் கட்சியின் பலம் என எடுத்துக் கொண்டவர்களுக்கு பல கேள்விகள் எழுந்துள்ளன.
அந்தக் கேள்விகள் இந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும், எழுந்துள்ளன. உதாரணமாக தி.மு.க-வின் வேட்பாளராக ஒரு சாதாரணத் தொண்டரை அல்லது கட்சியின் பகுதி பொறுப்பாளரை நிறுத்திய விஷயம். ஜெயலலிதாவை எதிர்த்து, நின்ற முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியனின் உறவுக்கார பெண்மணியை நிறுத்தாமல், ஏன் இப்படி ஸ்டாலின் செய்தார் என்கிற கேள்வி தொண்டர்கள் மத்தியில் இருக்கிறது. அந்தப் பெண்மணிக்கு தொகுதி வாக்காளர் மத்தியில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளம் என்ற செல்வாக்கும், வாக்கு வங்கியும் உள்ளதே என்றும் கேட்கிறார்கள். சாதாரண வேட்பாளரை நிறுத்தியே வெல்வோம் என்று வியாக்கியானங்கள் வந்தாலும், இதற்குப் பின்னால் என்ன உள்ளது என்ற கேள்வி எழாமல் இல்லை. பன்னீர்செல்வத்துக்காக சட்டப் பேரவையில் எடப்பாடி ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் பேசுவதும், அதையே கலகம் செய்யும் வேலையில் ஈடுபடுவதும் தி.மு.க-வுக்குத் தேவையா? எனவும் வினவுகிறார்கள். சபாநாயகருக்கு எதிராக இந்த நேரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து, அவருக்கு ஆதரவாக சபையையே மாற்றிவிட்டது ஏன் என்றும் கேட்கிறார்கள். நடுவண் அதிகாரத்தால் சின்னமும், கட்சிப் பெயரும் மறைக்கப்படும் வேளையில், தினகரன் அணிக்குப் பலம் சேர்ப்பதற்காக, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து அவர்களது பலத்தை நிரூபித்துக் காட்ட உதவினாரா? என்றும் ஸ்டாலின் பற்றி கேள்விகளை எழுப்புகிறார்கள். இத்தகைய கேள்விகளுக்கு இடம் கொடுக்காத அரசியலை, மோதல் அரசியலை கலைஞர் கொண்டிருந்ததால், அவரது ஆளுமை உயர்த்திப் பிடிக்கப்படுகிறது. இவ்வாறு இருப்பதால், தனிநபர் ஆளுமை கட்சியாக இதுவரை காணப்பட்டதா? இப்போது எதிர்பார்க்கும் அளவு கட்சி முன்புபோல இல்லையா? என்ற எண்ணம் வருகிறது. அதற்குள் அண்ணன், தங்கை அரசியல், அண்ணன், தம்பி அரசியல் என்பதும் பேசப்படாமலில்லை.
இத்தனைக்கும் இடையில், அ.இ.அ.தி.மு.க. மூன்று அணிகளாக இருப்பதால் அவர்களது வாக்குகள் சிதறும் என்பதும், அதனால் தி.மு.க வெற்றி உறுதி என்றும், தி.மு.க. தொண்டர்களும், பொதுவான புரிதல்களும் இருக்கின்றன. மூன்று அணிகளா? இரண்டு அணிகளா? என்று அ.தி.மு.க பற்றி பலவாறு பேசப்பட்டாலும், இப்போது அதன் தொண்டர்கள் மத்தியில் இருக்கும் விஷயம் கட்சியின் பெயரையும், சின்னத்தையும் காப்பாற்றுவது எப்படி என்றும், தி.மு.க-வைத் தோற்கடிப்பது எப்படி எனவும் இருக்கிறது. தினகரனுக்கு எதிராக ‘தினகரன்’ நிருபரா? என்கிற கேள்வியையும் கூட அவர்கள் நகைப்புக்கிடையே வெளிப்படுத்துகிறார்கள்.
இந்த நேரத்தில், ஓ.பி.எஸ். அணியின் முக்கிய அறிவுஜீவிப் பேச்சாளர் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தனது நேர்காணலில், கட்சியை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்றே திரும்ப, திரும்ப கூறுகிறார். சசிகலா அணிக்கு எதிராக அனைத்து வேலைகளையும், டெல்லி வரை சென்று செய்து பார்த்த பின்னால், ஆர்.கே.நகர் தொகுதியின் மண்ணின் மைந்தரை நிறுத்தியுள்ளோம் என வீராப்பு பேசிய பிற்பாடு, தேர்தல் நெருங்கும் நேரத்தில், களை இழந்து, கட்சி ஒன்றுபட வேண்டும் என்றும், தி.மு.க-வைத் தோற்கடிக்க வேண்டும் என்றும் பேசுவது, வேறு ஒரு செய்தியைக் கூறவில்லையா? அதுதவிர பாண்டியராஜன், ‘சபாநாயகரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நாங்கள் உள்ளே இருந்தால் சபாநாயகருக்கு ஆதரவாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ. போட்டதுபோல் ஓட்டுப் போட்டிருப்போம்’ என்கிறார். அதற்கு வக்காலத்துப்போல, ‘அம்மாவால் நியமனம் செய்யப்பட்ட சபாநாயகர். அதனால் எதிர்க்க மாட்டோம்’ என்கிறார்.

ஜெயலலிதா மரணத்தில் கேள்விகளை எழுப்பிய பொதுமக்கள், சசிகலாவைக் கேள்விக்கு உள்ளாக்கியது முதற்கட்டம் நடந்த உண்மை. அதுவே சசிகலாவுக்கு சிறை என்ற அறிவிப்பு வந்ததும், ‘ஆண்டவனே தண்டித்துவிட்டான்’ என பொதுமக்கள் பேசுவதும் உண்மை. ஆகவே, அந்த எதிர்ப்பும், கோபமும், அப்படியே ஐம்பது விழுக்காடு இறங்கிவிட்டது என்பதையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டியிருக்கிறது. அத்தகைய எந்த எதிர்ப்பும், கோபமும், பொதுமக்களுக்கு டி.டி.வி. தினகரன் மீது இல்லை. அ.தி.மு.க. கட்சியின் தொண்டர்களைக் கையாளும் வட்டாரத்து தலைவர்களான வெற்றிவேல், நேதாஜி, கார்த்தி, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தினகரன் அணியிலேயே இருக்கிறார்கள் என்பதும் உண்மை. வாக்காளர்களை, வாக்குச்சாவடிக்கு கொண்டுவருவதும், அவர்களை வாக்களிக்க வைப்பதும் ஒரு பெரிய ‘கலை.’ இந்த கலையைத் தெரிந்த வட்டாரத்து தலைவர்கள் வெற்றிக்கு பெரிதும் உதவுவார்கள். ஆட்சி யார் கையில் இருக்கிறதோ, அது ‘இடைத்தேர்தல்களில்’ செல்வாக்கு செலுத்தும் என்பதும் உண்மை.
இவ்வாறாக கட்சியையும், சின்னத்தையும் முடக்கியவர்கள் என்ற கெட்ட பெயரை, ஓ.பி.எஸ். அணியும், ஸ்டாலின் அணியும் பெறும்போது, கட்சியையும், சின்னத்தையும் மீட்கும் பெரிய களத்தில் நிற்பவராக தினகரனை அந்தக் கட்சியின் தொண்டர்கள் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற செய்தியும் இருக்கிறது. அதுவே புதிய ஒரு ஆளுமையை கொண்டுவர உதவுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- டி.எஸ்.எஸ்.மணி,
சமூகச் செயற்பாட்டாளர்