Sunday, July 3, 2016

minnambalam: சாரு மஜூம்தார்: ‘இந்தியாவின் சே குவேரா’ -

சாரு மஜூம்தார்: ‘இந்தியாவின் சே குவேரா’ - டி.எஸ்.எஸ்.மணி

திங்கள், 4 ஜூலை 2016

(படம்: சாரு மஜூம்தார்)
2016ஆம் ஆண்டு, மார்ச் மாதம் நக்சல்பாரி புரட்சியின் 50ஆம் ஆண்டு தொடங்கியிருக்கிறது. இந்தியப் புரட்சி வரலாற்றில் தவிர்க்கமுடியாத ஒரு இடத்தைப் பெற்றது நக்சல்பாரி எழுச்சி. அதன் சிற்பி தோழர் சாருமஜூம்தாரின் பங்களிப்பை அவரை வெறுப்பவர்களும், விமர்சிப்பவர்களும்கூட ஒப்புக்கொள்கிறார்கள். நக்சல்பாரி புரட்சியாளர்களுக்கு எதிராக 1967, 1968, 1969, 1970, 1971ஆம் ஆண்டுகளில், சிபிஎம் கட்சியின் சார்பாக மேற்குவங்கத்தில் குறிப்பாக, கல்கத்தாவில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி, நக்சல்பாரி புரட்சியாளர்களைக் கொலைசெய்த கவுதம் தேப்கூட ஒரு கட்டத்தில், சாருமஜூம்தாரை ‘இந்தியாவின் சே குவேரா’ என்று வர்ணித்ததாக ‘தி வீக்’ ஆங்கில வார ஏட்டில் கூறியுள்ளார்.
தனது கல்லூரிக் காலங்களில், சிபிஎம் கட்சியின் மாணவர் அணியான எஸ்எஃப்ஐ தலைவராக இருந்த கவுதம் தேப், நக்சல்பாரி புரட்சியாளர்களுக்கு எதிராக அன்றைய காலகட்டத்தில் வெடிகுண்டுகளைத் தயாரித்ததாகவும், கல்லூரி மாடியிலிருந்து குண்டுகளை வீசியதையும், கத்திக் குத்துக்கு உள்ளானதையும் கூறியுள்ளார். ஆனால் அன்றைய 1968, 1969, 1970, 1971ஆம் ஆண்டுகளில், கல்கத்தா நகரில் உள்ள கல்லூரிகள் நக்சல்பாரி கோட்டையாக இருந்த உண்மையைக் கூறவில்லை. அன்றைய தெற்கு கல்கத்தா மாநிலக் கல்லூரி, மத்திய மருத்துவக் கல்லூரி, ஜதாவப்பூர் பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்விச் சாலைகளை வரிசையாகக் கொண்டிருந்தது. அந்தக் கல்லூரிகளில் எல்லாம் நக்சல்பாரி புரட்சிகரச் சிந்தனைகளை ஏந்திய மாணவர்களும், மாணவிகளும் நிறைந்திருந்தனர். அப்போது, மேற்குவங்கத்தை ஆண்டுவந்த சிபிஎம் உள்ளடங்கிய பங்களா காங்கிரஸ் கூட்டணியில், 1967இல் ஜோதிபாசு உள்துறை அமைச்சராக இருந்தார். அவர் நக்சல்பாரி புரட்சியாளர்களை அடக்க, மத்திய சிறப்புக் காவல்படையை கொண்டுவந்து கல்கத்தா நகர வீதிகளை வங்காள இளைஞர்களின் இரத்தத்தால் நனைத்தார். அன்று, தெற்கு கல்கத்தாவின் ஒவ்வொரு கல்லூரியையும் தங்கள் வசம் வைத்திருந்த நக்சல்பாரி புரட்சிகரச் சிந்தனையுள்ள மாணவர்கள், ‘மொலோடோவ் காக்டைல்’ என்ற பெட்ரோல் குண்டுவகைகளை, சாலையில் வரும் ராணுவத்துக்கு எதிராக எறிந்தனர். ஒரு பெரும் போர்க் காட்சியை ஏற்படுத்திக் காட்டினர். துணை ராணுவம் பயந்து ஓடியது.
உதாரணமாக, துர்காபூர் பிராந்திய பொறியியல் கல்லூரி விடுதி (ஆர்.ஈ.சி). தோழர் வினோத் மிஸ்ரா அதே கல்லூரி விடுதியில் படித்துவிட்டு, அங்கேயே தலைமறைவுப் பணிகளில் ஈடுபட்டுவந்த காலம். கல்லூரி விடுதிக்கு வந்திருந்த தோழர் வினோத் மிஸ்ரா முன்னிலையிலேயே, காட்டிக்கொடுத்த எஸ்எஃப்ஐ மாணவர்களைக் கொண்டுவந்து, புரட்சிகர மாணவர்கள் நையப் புடைக்கிறார்கள். இந்தச் சம்பவத்தை, எங்களுடன் தமிழ்நாட்டில் தலைமறைவுப் பணிகளில் முழுநேரமாக சென்னை தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றிய எனது நண்பரும், நெல்லை மாவட்டத்துக்காரருமான வினோத் மிஸ்ராவின் வகுப்புத் தோழனான ரவிச்சந்திரன் சொல்லக் கேட்டுள்ளேன். அதற்குப்பிறகு, ரவிச்சந்திரன் சென்னை ஐ.ஐ.டி-யில் தனது விஞ்ஞானி படிப்பை முடித்துவிட்டு, கான்பூர் ஐ.ஐ.டி-யில் போய்ச் சேர்ந்தார். இந்தளவுக்கு கல்கத்தா வீதிகள் புரட்சிகர மாணவர்களின் எழுச்சியில் இருந்தபோது, ‘தேசப்பிரதி’ என்ற நக்சல்பாரி கட்சியின் அதிகாரபூர்வ வார ஏட்டில், அதன் ஆசிரியர் சரோஜ் தத்தா ஒவ்வொரு வாரமும், கடைசிப் பக்கத்தில் தீட்டிய கட்டுரைகள் மாணவர்கள் மத்தியில் பெரும் தீயை உருவாக்கின. அப்படி அந்தக் கட்டுரைகளில் என்ன இருந்தது?
கரம்சந்த் காந்தி, இந்திய சுதந்திரத்துக்கு ஆங்கிலேயருடன் சேர்ந்து எப்படி துரோகமிழைத்தார் என்பதும், 1857ஆம் ஆண்டு நடந்த ‘சிப்பாய் கலகம்’ என்று அழைக்கப்பட்ட ‘முதல் சுதந்திரப் போர்’ என்று கார்ல் மார்க்ஸால் வர்ணிக்கப்பட்ட போரில், ஆங்கிலேயரை எதிர்த்து மங்கல் பாண்டே தலைமை எடுத்தார் என்பதும் இருந்தன. காந்தியாரின் சிலைகளை அகற்றிவிட்டு, மங்கல் பாண்டேக்கு சிலையை நிறுவுங்கள் என்று சரோஜ் தத்தா தீட்டிய கட்டுரைகள் எடுத்துரைத்தன. மாணவர்களும் உடனடியாக செயல்களில் இறங்கினார்கள். கல்கத்தா நகரம் மட்டுமல்ல; இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் மாணவர்கள் அந்தப் பணியை கைகளில் எடுத்துக்கொண்டு செயல்பட்டனர். ஆந்திராவில் ஒவ்வொரு கல்லூரியும் பல்கலைக்கழகமும் வாரங்கல் பிராந்திய பொறியியல் கல்லூரி (ஆர்.ஈ.சி.), ஹைதராபாத் உஸ்மானிய பல்கலைக்கழகம் என ஒவ்வொன்றும் நக்சல்பாரிகள் கோட்டைகளாக மாறின. தமிழ்நாட்டில், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கோவையில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, சி.ஐ.டி.பொறியியல் கல்லூரி, நெல்லை மாவட்டத்தின் அனைத்து கலைக்கல்லூரிகள், சென்னை சட்டக் கல்லூரி, காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி என எல்லாமே நக்சல்பாரி புரட்சிகர மாணவர்களின் கோட்டைகளாக அல்லது செல்வாக்கு மண்டலங்களாக உருவானது. எல்லா கல்லூரிகளிலும், மாணவர்கள் கல்கத்தாவிலிருந்து வந்த ‘லிபரேஷன்’ என்ற புரட்சிகர கட்சியின் அதிகாரபூர்வ ஆங்கில ஏடான ‘விடுதலை’ யை வாங்கிப்படித்து அதில், ‘தேசப்பிரதி’ ஏட்டில் வெளியான தோழர் சரோஜ் தத்தாவின் வங்காளக் கட்டுரைகளின் மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டு அந்தந்த மாநிலங்களில் பண்பாட்டுப் புரட்சியை நடத்தும்பொருட்டு, காந்தியாரின் சிலைகளை அகற்றத் தொடங்கினர்.
தோழர் சரோஜ் தத்தாவின் அத்தகைய ஆழம்பொதிந்த வரலாற்று உள்ளடக்கங்களைக் கொண்ட வீர வரிகள், இந்திய துணைக்கண்டமெங்கும் பெரும் காட்டுத்தீயை ஏற்படுத்தியதால்தான் சரோஜ் தாத்தாவை கைது செய்தபோது, வங்காள காவல்துறை அவரை அதிகாலையில் கல்கத்தா கடற்கரையோரம் நிறுத்திவைத்து சுட்டுக் கொன்றது. அதை நேரில்பார்த்த சாட்சியாக, வங்க பிரபல திரைப்பட நடிகர் இப்தா (இந்தியன் புபிள்ஸ் தியேட்டர் அசோசியேசன்) வின் தலைவர் உத்பல் தத், வெளியேவந்து கூறியதால் அது உலகுக்குத் தெரிந்தது. இவ்வாறு புரட்சிகர எழுத்துகளுக்கு தூக்கு தண்டனை கொடுத்தவர்கள்தான் இந்த ஆட்சியாளர்கள். எண்ணிப்பார்த்தால், இதே நிலைதான் இன்றைக்கு ஈழத் தமிழனுக்கும் அவர்களது விடுதலைக்கான போராளிகளுக்கும் என்பது புரியும்.
மேலேகூறியுள்ள பொறியியல் கல்லூரிகளில் ஏன், நக்சல்பாரி கருத்துகள் செல்வாக்குச் செலுத்தின? பொறியியல் கல்லூரி மாணவர்கள், இந்தியாவை தொழில்மயமான நாடாக சொந்தக் கால்களில் நிற்கவைக்க தங்களது படிப்பு உதவும் என நம்பியிருந்தனர். ஒரு நிலவுடைமைச் சமுதாயத்தில் அது எப்படி சாத்தியமாகும்? பண்ணையார்களையும், பண்ணை அடிமைகளையும் கொண்ட கிராமங்கள் நிறைந்த இந்திய துணைக் கண்டத்தில், உற்பத்திக்கான ஆலைகள் நிறைந்த சூழலை உருவாக்க முடியுமா? இந்த நாட்டை ஆள்வோர் அதற்குச் சம்மதிப்பார்களா? ஆளும் அவர்கள் யார்? இந்தியாவின் ஆளும்வர்க்கம், இந்த நாட்டை கொள்ளையடிக்கும் அந்நிய நாட்டு ஏகாதிபத்தியவாதிகளிடம் அடிமைகளாக சார்ந்து நிற்கிறார்களே? நிலவுகிற நிலவுடைமை அமைப்புமுறையும், அந்நிய ஏகாதிபத்தியவாதிகளாலும்,. அவர்களைச் சார்ந்துவாழும் இந்திய முதலாளிகளாலும் பாதுகாக்கப்படுகிறதே? அத்தகைய நிலப்பிரபுத்துவ அமைப்பைத் தகர்த்தெறியாமல், அந்நிய ஏகாதிபத்தியவாதிகளை இந்த நாட்டைவிட்டு விரட்ட முடியாதே? அதன்பிறகுதான் இந்தியாவை சொந்த நாட்டு மூலதனத்தைக்கொண்டு சொந்த நாட்டு முதலாளிகள், ஆலைகளைக்கட்டி உற்பத்திசார்ந்த பொருளாதாரத்தை வளர்க்க முடியும்? அப்படியானால், அதற்கு ஆணிவேராக இருக்கும் நிலவுடைமை உறவுகளை அறுத்தெறிய வேண்டுமே? விவசாயப் புரட்சியால் மட்டும்தானே அது சாத்தியம்? சீனா அத்தகைய புரட்சியை நடத்தி வெற்றிகண்டதால்தானே தொழிலில் முன்னேறி வருகிறது? அந்த வழிதானே இந்தியாவும் எடுக்க வேண்டும்? அதற்கு ஒரேவழி நக்சல்பாரி வழி புரட்சிதானே? இப்படியாக, தாங்கள் படிக்கும் கல்விக்கு ஒப்ப சிந்தித்ததால், பொறியியல் கல்வி படிப்போர் அதிகமாக இதில் ஈர்க்கப்பட்டனர். அத்தகைய கல்லூரிகளும், அதன் விடுதிகளும், புரட்சியாளர்களின் கோட்டைகளாக மாறின.
இத்தகைய சிந்தனையை செயல்வடிவில் கொடுத்தவர்தான் சாரு மஜூம்தார். அதனால்தான், சாரு மஜூம்தாரின் புரட்சிகர கருத்துகள் நெருப்புபோல மாணவர்கள் மத்தியில், இந்திய துணைக் கண்டமெங்கும் பரவியது. அவர் எப்படி இத்தகைய கருத்துகளை உருவாக்கினார்? ஆங்கிலேயன் ஆட்சிக் காலத்தில், 1920இன் காலங்களில் இந்தியாவில் உருவான பொதுவுடைமை கட்சி, புரட்சியை நடத்தி நாட்டை தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் கரங்களில் கொண்டுவர பாடுபட்டது. ஆள்வோரின் அடக்குமுறைகளுக்கு உள்ளானது. இந்திய சுதந்திரத்துக்குப்பிறகு, மீண்டும் கம்யூனிஸ்டுகள் போராட்டங்களையும், ஆயுதப் புரட்சியையும் நடத்த முனைந்தனர். கட்சி தடை செய்யப்பட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்பில் புரட்சியை முன்னெடுக்க முனைந்தது. 1962ஆம் ஆண்டு இந்திய-சீனப் போர் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பல பெரும் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மேற்குவங்கத்தில், டார்ஜிலிங் மாவட்ட கட்சி செயலாளர் தோழர் சாரு மஜூம்தாரும் கைதானார். விடுதலையானவுடன் நேராக கட்சி அலுவலகத்துக்கு வந்த சாரு, அங்கிருந்த அகில இந்தியச் செயலாளர் எஸ்.ஏ.டாங்கேயின் படத்தை இழுத்து கீழேபோட்டு, ‘இனி, நான்தான் கம்யூனிஸ்ட் கட்சி’ என்று கூறியதாகச் சொல்வார்கள். அந்தளவுக்கு கட்சியில் இருந்த புரட்சியாளர்களுக்கு, தலைமைசெய்த துரோகத்தின்மீது கோபம்.
அந்த நேரத்தில் தமிழ்நாட்டில், கோவை மாவட்டத்தில் உக்கடம் பகுதியைச் சேர்ந்த தோழர் அப்பு, ‘மார்க்சிய புரட்சியாளர்கள்’ என்ற பெயரில், தோழர் ராமுண்ணியுடன் சேர்ந்து ‘தீக்கதிர்’ என்ற ஏட்டை கொண்டுவருகிறார். பிற்காலத்தில் அப்பு, தமிழ்நாட்டு நக்சல்பாரி தலைவராகவும், ராமுண்ணி கேரள நக்சல்பாரித் தலைவராகவும் ஆனார்கள் என்பது வரலாறு. அதன்பிறகு பி.டி.ரணதிவே, ஜோதிபாசு, ஈ.எம்.எஸ்., ஏ.கே.கோபாலன், பி.ராமமூர்த்தி, சுந்தரய்யா போன்ற தலைவர்கள் எல்லாமே இணைந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைவிட்டு வெளியேறி, ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)’ எனத் தொடங்கினர். மக்கள் ஜனநாயகப் புரட்சிதான் தங்கள் பாதை என்று அறிவித்தனர்.
அதை நம்பிய புரட்சிகரத் தோழர்களான சாரு மஜூம்தார், அப்பு, ராமுண்ணி போன்றோர் அந்தக் கட்சியில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டனர். தீக்கதிர் ஏட்டையும் அந்த கட்சிக்குக் கொடுத்துவிட்டனர். அந்த மார்க்சிஸ்ட் கட்சியும், 1967இல் தேர்தலில் பங்குகொள்ள முதன்மை கொடுத்தது. மேற்குவங்கத்தில், வங்காள காங்கிரஸ் உடன் சேர்ந்து ஐக்கிய முன்னணியைக் கட்டியது. தேர்தலில் வென்றது. இதுதான், மாசேதுங் கூறிய புரட்சிக்கான ஐக்கிய முன்னணி என்றது. கடுப்பாகிவிட்டார் தோழர் சாரு மஜூம்தார். இனி, இவர்களை நம்பியும் பயனில்லை. இன்னமும் புரட்சிக்கான சூழல் உருவாகவில்லை என மார்க்சிஸ்ட் கட்சி கூறியதால், புரட்சிகர சூழல் நிலவுவதை நிரூபிக்க தோழர் சாரு மஜூம்தார் எத்தனித்தார்.
- தொடரும்
கட்டுரையாளர்:
(படம்: டி.எஸ்.எஸ்.மணி)
டி.எஸ்.எஸ்.மணி தமிழின் முக்கியமான பத்திரிக்கையாளர்களில் ஒருவர். இந்திய அளவில் கவனிக்கத்தக்க
பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். தந்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்துனராக உள்ளார். தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ச்சியாக கலந்துகொண்டு அரசியல் நிகழ்வுகளை விவாதித்து வருபவர்.

No comments:

Post a Comment