Saturday, February 7, 2015

சிறப்பு அகதிகள் முகாமில் சிங்கள மீனவர்கள்



        சிறப்பு அகதிகள் முகாம்கள் இப்போது திருச்சியிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாரிலும் உள்ளது. அதில் ஈழத் தமிழர் அகதிகள் சிலரை தமிழக அரசு பிடித்து வைத்திருக்கிறதே? என்ற கேள்வி எல்லா தமிழர்கள் மத்தியிலும் தொடர்ந்து இருந்து வருகிறது. நடுவணரசில் காங்கிரஸ் இருக்கும்போது  கொடுக்கப்பட்ட வழிகாட்டலில் அத்தகைய "சிறப்பு அகதிகள் முகாம்கள்" ஏற்படுத்தப்பட்டன என்பதே அப்போது கிடைத்த பதில்.அப்படியானால் ஏன் பா.ஜ.க. அரசு வந்தபிற்பாடும் அவை நீடிக்கின்றன? என்ற கேள்வியும் தொடர்கிறது. "விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்க" ஏதோ ஆதாரம் வேண்டுமே என்பதற்காக இததகைய சிறப்பு அகதிகள் முகாம்களை நீடிக்க வைக்க நடுவணரசு எண்ணுகிறது என்பதே கிடைக்கும் செய்தியாக இருக்கிறது. தமிழகத்தை ஆளும் திராவிடக் கட்சிகள் ஏன் இத்தகைய முகாம்களை நீடித்து வைத்திருக்க வேண்டும்? ஒவ்வொரு முறையும் சிலரை இந்த சிறப்பு முகாம்களில் இருந்து வெளியே அனுப்பும்போது, எதற்காக சம்பந்தமே இல்லாத சிலரை, வயதான மூப்புகளைக் கூட உள்ளே இதில் வைக்க வேண்டும்? என்ற கேள்வியும் மனித உரிமை ஆர்வலர்கள் இடையே உண்டு.

    நடுவணரசு இந்த சிறப்பு அகதிகள் முகாம்களின் இருத்தலுக்கு  "நியாயம்"  கற்பிக்க அவற்றில் சிறைவாசிகளின் எண்ணிக்கையை "தக்கவைக்க" விரும்புவதால் தவிர்க்க முடியாமல் தமிழக அதிகாரிகள் அவற்றில் யாரையாவது போட்டு நிரப்பி வருகிறார்கள் என்ற பதிலும் கிடைத்து வந்தது. ஒரு "ஒற்றையாட்சி இந்திய அரசில்" இப்படிஎல்லாம்தான் இருக்கும்போல என்றும் நம்மை எண்ணவைத்தது.இப்போது இந்தியாவிலும் ஆட்சி மாற்றம், இலங்கையிலும் ஆட்சி மாற்றம் வந்துள்ளது. இரண்டு புதிய அடசிகளும் "தமிழர்களுக்கு எதிரானவர்கள் தாங்கள் அல்ல" என்று உரக்க கூறி வருகிறார்கள்.அதை உண்மை என்று தமிழக மக்களோ, ஈழ மக்களோ நம்பவில்லை. இந்த நேரத்தில் இங்கே இருக்கும் திருச்சி, செய்யார் சிறப்பு அகதிகள் முகாம்களில் இருக்கும் ஈழத் தமிழர்களில் ஐந்து, ஐந்து பேரை, இரண்டு முகாம்களிலும் சேர்த்து " பாத்து பேரை" தமிழக அரசு சென்ற வாரம் விடுதலை செய்துள்ளது. இதுதவிர சிலர் உயர்நீதிமன்ற ஆணையின் மூலமும் வெளியே வந்துள்ளனர்.

               இந்த சூழலில்தான் சிங்கள மீனவர்கள் ஐந்து பேர் திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இது இரு தேசிய இனங்களின் இளைஞர்கள் மததியில் சிறப்பு முகாமிற்குள் பிரச்சனையை உருவாக்குமா? என்று சிலர் வினவினார்கள். உருவாக்காது. ஏன் என்றால் ஈழத் தமிழர்கள் "மனிதாபிமானம்" கொண்டவர்கள். சிங்கள மக்கள் மீது அவர்களுக்கு எந்த கோபமும் கிடையாது. சிங்கள ஆளும்கூட்டதின் மீதுதான் அவர்களுக்கு எதிர்ப்பு உணர்வு உண்டு என்று நாம் கூறினோம். ஆனாலும் இந்த நேரத்தில், அதாவது "இலங்கை நீதிமன்ற உத்தரவுப்படி,இந்தியத் தமிழ் மீனவர்களை விடுதலை செய்த சிங்கள அரசு அவர்களது படகுகள் 87 ஐ விடாமல்" பிடித்து வைத்துக் கொண்டுள்ளது., இந்த நேரம்பார்த்து, இலங்கை சிங்கள மீனவர்கள் நமது இந்திய கடலோரம் வந்து இயற்கையாக, வரலாற்று வழக்கப்படி, அதாவது இருபுறமும் உள்ள  மீனவர்கள் வரலாற்று வழக்கப்படி இருபுறமும் கரையோரம் சென்று மீன் பிடிக்கும் முறைப்படி, வந்தபோது, மாட்டிக் கொண்டார்கள். அவர்களை பிடித்து சிறையில் அடைத்தபோது, நீதிமன்றம் அவர்களை சிறப்பு அகதிகள் முகாமில் போடச் செய்துள்ளது.இந்த செயல் என்னதான் வருகிற 16 ஆம் நாள் இந்தியாவிற்கு இலங்கை அதிபர் சிரிசேனா வருவதற்கு முன்பே, வருகிற 9 ஆம் தேதியே இலங்கையில் பிடிததுவைக்கப்பட்டுள்ள 87 படகுகளை விடுதலை செய்வோம் என்று இலங்கை அமைச்சர் வேலாயுதம் ராமேஸ்வரம் வந்து கூறினாலும், இதுவரை நடந்துவந்த கடந்த கால நிகழ்வுகள் நம்பிக்கைகளை விதைக்கவில்லை.

       அததகைய சூழலில், இலங்கை சிங்கள மீனவர்களை நீதிமன்றம் விடுவித்தாலும், சிறப்பு அகதிகள் முகாமில் வைத்திருப்பது, இலங்கை அரசுக்கு  எட்டட்டும். அதை ஒட்டி அவர்கள் நமது மீனவர்களின் படகுகள் 87 ஐ உடனே விடுதலை செய்யட்டும்.அப்போது நமது அரசும், சிங்கள மீனவர்களை சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்யட்டும். இலங்கை சிங்கள மீனவர்கள் "இங்குள்ள சிறப்பு அகதிகள் முகாம்கள்" பற்றி" இலங்கை அரசுக்கு தொலைபேசியில் சொல்லட்டும்.{ சிறைகளில் சுதந்திர கைபேசி உரையாடல்கள் சாதியமில்லாவிட்டாலும், சிறப்பு அகதிகள் முகாம்களில் சாத்தியம்} அதன்மூலம் இலங்கை அரசு, இந்திய அரசான தனது நண்பரிடம் "சிறப்பு அகதிகள் முகாம்களை கலைக்க ஆலோசனை" கூறட்டும். அதுவே இந்திய நடுவணரசின் சிறப்பு அகதிகள் முகாம் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தட்டும்.இவ்வாறு தமிழர்கள் எண்ணிப்பார்ப்பது தவறல்லவே?இந்த அளவு சீரிய சிந்தனை செய்யும் அதிகாரிகள் வாழ்க.