Tuesday, February 3, 2015

ஆட்சி மாறியது; காட்சி மாறியதா?


      மகிந்தா வின் ஆட்சி காட்டுமிராண்டி ஆட்சி.உண்மைதான். தமிழின அழிப்பு ஆட்சி.உண்மைதான். ஒரு மாபெரும் இன அழிப்பு போரை நடத்தி, அதற்கு இந்திய வல்லரசுதான் முழு பொறுப்பு என்பதுபோல " இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம்" என்று பகிரங்கமாக நாடாளுமன்றத்தில் அறிவித்த ஒரு சிங்கள பவுத்த பேரினவாத ஆட்சியின் தலைவர்தான் மஹிந்த ராஜபக்சே. அப்படிப்பட்ட ஒரு கொடியவரின் குடும்பமே கொள்ளை அடித்துவந்த ஸ்ரீலங்கா நாட்டில், தென்னிலங்கை மக்களும்கூட வெறுக்கும் அளவுக்கு ஒரு ஆட்சியை நடத்திவந்த மகிந்தா, உலக சமூகத்தின் வெறுப்பையும் சம்பாதிததுவிட்ட மகிந்தா,ஐ.நா.மனித உரிமை கழகத்தின் தீர்மானப்படி, ஒரு உலக விசாரணையை சந்திக்கும் மகிந்தா,அமெரிக்காவின் மற்றும் ஐரோப்பாவின் வெறுப்பை சம்பாதித்து  விட்ட மகிந்தா, ஐ.நா.சபையின் பொதுச்செயலாளரின் கோபத்திற்கு உள்ளான மகிந்தா, இப்போது இலங்கை மக்களால் தேர்தல் மூலம் தூக்கி எறியப்பட்டுல்லார்ட் என்பது உண்மை. அதை மேற்கண்ட வெறுப்பு கொண்டவர்களும், கோபம் கொப்பளிததவர்களும், மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள் அல்லது வரவேற்றார்கள் என்பதும் உண்மை.அது தமிழர்களுக்கும், ஜனநாயகம் விரும்புவோருக்கும் ஒரு " மூச்சுவிடும் வெளியை " அளித்துள்ளது என்பதும் உண்மைதான்.

    ஆனால் இலங்கை தீவில் ஏற்கனவே இருந்துவரும் "இனச்சிக்கல்" அல்லது "இன ஒடுக்கல்" அல்லது "இன அடக்குமுறை" அல்லது " இன விடுதலைப்போர்" அல்லது "இன விடுதலைக்கான போரை அடக்கும் மனோநிலை" அல்லது ஏற்கனவே இருந்துவரும் "சிங்கள பவுத்த" இனத்தவர் மட்டுமே ஆட்சித் தலைமைக்கு வரமுடியும் என்ற சட்டம் இந்த தேர்தல்மூலம் கிடைத்துள்ள "ஆட்சி மாற்றத்தால்"  மாற்றப்பட்டுவிடுமா? என்றால் "வாய்ப்பில்லை" என்பதே எல்லா திசைகளில் இருந்தும் வருகின்ற பதிலாக இருக்கும். இப்போது ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள மைத்திரி பால சிரிசேனா, ரணில் விக்ரமசிங்கே, சந்திரிகா, சரத் பொன்சேகா, மற்றும் அவர்களை ஆதரித்து  ஆட்சிக்கு கொண்டுவதுள்ள புத்த பிக்குகளின் ஜாதிக கட்சி, ஜனதா விமுக்தி பெரமுனா, ஆகியவை மேற்கண்ட கேள்விகளுக்கான "விடைகளை" அல்லது "மாற்றை" தரக்கூடியவர்களா? என்றால் அதுவும் இல்லை.

      உலக சமூகத்தின் வெறுப்பை சம்பாதித்து, ஐ.நா.மனித உரிமை கழகத்தின் "போர் குற்ற விசாரணையை" எதிர்கொள்ளும் மகிந்தா அரசாங்கம், செல்வாக்கை இழந்த நிலையில், சிங்கள பவுத்த ஆளும்வர்க்கம் அல்லது ஆளும் கும்பல், என்ன நினைக்கும்?அல்லது நினைத்திருக்கும்? ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் எதிரான ஒரு பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுதியதால், தென்னிலங்கை மக்கள் மத்தியிலும் "கடுமையான பசி,பட்டினி, விலைவாசி உயர்வு" ஆகியவற்றை சந்தித்துவரும் வேளையில், அந்த இலங்கை தீவின் மக்கள் மத்தியில் "தொடர்ந்து" ஆள விரும்பும் சிங்கள பவுத்த பேரினவாதம் என்ன நினைக்கும்?அல்லது நினைத்திருக்கும்? செல்வாக்கு இழந்த கும்பலை தூர எறிந்துவிட்டு, புதிய கும்பலை ஆட்சிக்கு கொண்டுவந்து தங்கள் கொள்கைகளை தொடரத்தானே நினைக்கும்? அல்லது நினைத்திருக்கும்?

       அப்படிச் சூழலில்தான் மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க "இந்திய ஆளும்வர்க்கமும், அமெரிக்க ஆளும்வர்க்கமும் " சரியான தருணத்தில் உதவிக்கு வந்தனர். அவர்களின் குறிப்பாக அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஏற்பாடுதான், மைதிரிபாலா சிரிசேனா. ஐ.தே.க.கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே, ஏற்கனவே அமெரிக்க சார்பு கொள்கை உடையவர் என்பது ஊரறிந்த உண்மை. கடைசிவரை மகிந்தா நம்பி இருந்தது "இந்திய ஆளும்வரக்கத்தை". இந்திய ஆளுமவர்க்கமும் தனது மகிந்தா சார்பு நிலைப்பாட்டை கடைசிவரை மாற்றிக்கொள்ளவில்லை. டில்லியின் தலைமையிலிருந்து செயல்படும் "உளவுத் துறையினர்" கடைசி வரை மகிந்தாவை காப்பாற்றவே  விரும்பினர். அதற்கான காரணங்கள் ஊரறிந்தவைதான். ஐ.பி.கே.எப். என்ற "இந்திய அமைதிப் படை" மூலம் வடக்கு-கிழக்கு இலங்கையில் முதல் "தமிழின அழிப்பை" தொடங்கிவைத்த "பெருமை" இந்திய அரசுக்கே சொந்தம். அதை இரண்டாம் "கட்ட " இன அழிப்பு போருக்கு இட்டுச் சென்ற "பெருமைதான்" மகிந்தா ராஜபக்சேவிற்கு சொந்தமானது. இந்த செய்தியை மறைமுகமாக அவ்வப்போது கூறி, மகிந்தா இந்திய அரசை மிரட்டி வந்தார் என்பதும் தெரிந்த கதை.

      அதனால்தான் இந்திய அரசு, "ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம்" மன்மோஹன்சிங்  தலைமையில் இருக்கும்போதே, ஐ.நா.மனித உரிமைகழகத்தில், அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட "இலங்கை போர்குற்றங்கள் அல்லது மனித உரிமை மீறல்கள்" பற்றிய தீர்மானத்தில், நீர்ததும்போகும் அளவுக்கு "திருத்தங்கள்" கொண்டுவருவதும், "இலங்கைக்கு உள்ளேயே" விசாரணை" என்ற பதத்தை பயன்படுத்தி, மகிந்தாவிற்கு "பிணை எடுத்துவிடும்" பணியை செய்வதுமாக இரண்டு முறையும், மூன்றாவது முறை தீர்மானம் வரும்போது,"வெளி விசாரணை எப்படியும் வந்துவிடும்" என்ற நிலையில், அதை "புறக்கணிப்பதும்" என்ற நிலையை எடுத்தது. இது மகிந்தா அரசை காப்பாற்றுவதற்கான செயல் என வெளிப்படையாக தெரிந்தாலும், இந்திய அரசு "தன்னை" ஒரு உலக விசாரணையிலிருந்து "காப்பற்றிக்கொள்வதற்கான" செயல் எனபதே அதன் சாரம்சமாகும்.

        இலங்கை தீவிற்குள் இரண்டு இனங்களுக்கும் இடையே "சண்டை" நடந்தால், அல்லது "இன வேற்றுமை" இருந்தால், அதை பயன்படுத்திக் கொண்டு, இரண்டு "தேசிய இனங்களுக்கும்" இடையே "பிளவை" ஏற்படுத்தி, இரண்டு இனங்களுமே அருகிலே உள்ள "பெரிய அரசை" சார்ந்து நிற்க செய்யவேண்டும் என்று எந்த "பெரிய அரசுமே" நினைக்கத்தானே செய்யும்? அந்த நினைப்புதான் இந்திய அரசின் நினைப்பும். அதனால்தான் "இந்திராகாந்தி" காலத்தில் "ஈழப்போராளிக்குழுக்களுக்கு" கொடுக்கப்பட்ட "கருவிகளும், பயிற்சிகளும்" என்பதை எத்தனைபேர் சிந்தித்து பார்க்கப்போகிறார்கள்? அதேநேரம் "ஆளும் சிங்கள ராணுவத்திற்கும் " ஆயுதப்பயிற்சி கொடுக்காமல் இருந்ததா இந்திய அரசு? இல்லையே? அதற்க்கு என்ன பொருள்? அமேரிக்கா ஒரு உலக "சாவு வியாபாரியாக" உலகில் எந்த இடத்தில இரண்டு குழுக்களுக்குள், அல்லது நாடுகளுக்குள், அல்லது இனங்களுக்குள் "மோதல்" இருந்தாலும் இரண்டு பக்கத்திற்கும் தனது "ஆயுதங்களை" விற்று "பிழைப்பை" நடத்தும் என்று உரக்க கூவிவரும் நாம், அதேபோல்தான் இந்திய அரசும், தனது செல்வாக்கிற்கு உட்பட்ட "தெற்காசியாவிற்குள்" அல்லது "தென்கிழக்கு ஆசியாவிற்குள்" இரண்டு சக்திகள் மோதிக கொண்டால் இரண்டிற்கும் ஆயுதம் கொடுத்து,,இரண்டையுமே "தனது காலடியில்" விழ வைப்பதற்கான தன்மைகளை கொண்ட ஒரு" பிராந்திய மேலாதிக்க வல்லரசுதான்" என்பதை புரிந்துகொள்ளவோ, பகிரங்கமாக அறிவிக்கவோ ஏன் தயங்குகிறோம்?

       அத்தகைய ஒரு நிலையில்தான் இலங்கையில் நடந்து முடிந்த "அதிபர் தேர்தலின்" முடிவுகளையும், அதை ஆதரித்து ஓடிவரும் "இந்திய,அமெரிக்க அரசுகளையும்" நாம் காண வேண்டும். சந்திரிகா இந்திய அரசுக்கு நெருக்கமானவர் என்பதும், ரணிலும், மைத்திரி பாலாவும் அமெரிக்கக் அரசுக்கு நெருக்கமானவர்கள் என்பதும் நாடறிந்த உண்மைதான். அதை இலங்கை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இன்றுவரை, இந்திய அரசை ஆட்சி செய்யும், "தேசிய ஜனநாயக கூட்டணி" தலைமையில் இருக்கும் நரேந்திர  மோடியை இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரசிங்கே சந்திப்பதும், இணைந்து திட்டமிடுவதும், அதை ஒட்டி "அகதிகளை திருப்பி அனுப்புவது" என்ற நிர்ப்பந்த அரசியலை ஆலோசிப்பதும், அதன்மூலம் மார்ச் மாதம் வர இருக்கும் "ஐ.நா.மனித உரிமை கழகத்தின்" விசாரணைக் குழு அறிக்கையிலிருந்து, இலங்கையையும், இந்தியாவையும் "காப்பாற்ற" திட்டமிடுவதும், அமெரிக்க வெளிவிவகார துணை அமைச்சர் இலங்கை வருகை தந்து "அமெரிக்காவின் முழு ஒத்துழைப்பை" உறுதி கூறுவதும், அதை ஒட்டி, "மைத்திரிபால இந்தியா வர இருப்பதும், அடுத்து மோடி இலங்கை செல்ல இருப்பதும்" எல்லாமே ஒரு திட்டமிட்ட "இந்திய-அமெரிக்க" ஆதிக்கத்தை இலங்கை மீது மட்டுமின்றி, இந்தியப் பெருங்கடல் மீது, "டியாகோ கார்சியா" என்ற  தளம் அமைக்கும் பழைய திட்டத்திற்கு புதிய மெருகு கொடுக்க முயற்சிப்பதாக இருக்கிறது என்று புரிய வேண்டாமா?

     இதை இந்திய மக்களையும், குறிப்பாக இந்தியாவில் உள்ள "தமிழ்நாடு மக்களையும்" ஏற்க வைக்க வேண்டும் என்றால், அதற்கு "சீனா ஆபத்து" என்ற ஒரு "மிகையான" செய்தியை பரப்புவது அவர்களுக்கு கை வந்த கலைதானே? ஒரு புறம் இந்திய அரசு "அமெர்க்காவையும்  திருப்தி செய்து, சீன நட்பையும்" உறுதி செய்யும் நேரத்தில், இலங்கையில் "சீனாவால் பெரும் ஆபத்து" என்ற பூதத்தை "ஊடகங்களுக்காக " கிளப்பிவிடும் இந்திய அரசின் "தந்திரத்தில்" அமெரிக்க குள்ள நரியும் ஒளிந்துகொண்டிருப்பதை புரிந்துகொள்ள முடியும். எப்படியும் சீனாவிற்கு "தென் சீனக் கடலில்" ஜப்பானுடன், "போர்த்திர" வகையில்,மோதல் இருக்கும்போது, ஜப்பானை பின்னாலிருந்து ஆதரிக்கும் அமெரிக்க வல்லரசு, ஒபாமாவின் இந்திய வருகையின்போது "இந்திய-அமெரிக்க" கூட்டு அறிக்கையில் "தென்சீனக் கடலில் இந்தியாவின் செல்வாக்கை உறுதி செய்வோம்" என்று "தேவையற்ற" சொற்களை சேர்த்து சீனாவை "வெறுப்படைய" செய்தது. ஒபமா விமானம் ஏறிய உடனேயே இந்திய அரசு, தனது வெளிவிவகார அமைச்சர் சுஷ்மாவை சீனாவிற்கு அனுப்பி தங்கள்" நட்பை" உறுதியாக  அறிவித்தது.அடுத்து மோடியின் சீன பயணத்தை அறிவித்துள்ளது. இதுதான் இலங்கைதீவில், இந்தியாவிற்கும், சீனாவிற்கும் "போட்டியும்,மோதலும்" முதனமையாக இருக்கிறது என்பதற்கான பொருளா? இருவரும் "சந்தைப்போட்டி" வைத்துக் கொண்டுள்ளனர் என்பதும், அமெரிக்காவை சார்ந்து அந்த சந்தைப்போட்டியில் இந்திய அரசு நிற்கிறது என்பதும் இதில் வெளிப்படையாக தெரியவில்லையா? இந்தப் பொருளில் ஏற்கனவே நவ சம சாச கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்னா பேசவில்லையா?

               பகிரங்கமாக "தமிழின அழிப்பு போரை" நடத்தி இனப்படுகொலை செய்த ராஜபக்சே கும்பலுக்கும், "போருக்கான நிதிநிலை அறிக்கையை" நாடாளுமன்றத்தில் ஆதரித்த "ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விகிரமசின்கேவிற்கும் " சாராம்சத்தில் வேறுபாடு இருக்கிறதா? கடைசி கட்ட வன்னிப் போரில், மகிந்தாவின் வெளிநாடு பயணத்தை ஒட்டி, "இன அழிப்பு போருக்கு" தலைமை முடிவுகள் எடுத்த மைத்திரிபால சிரிசேனா மாறுபட்டவரா? உலக சமூகத்தின் கோபத்திற்கு ஆளான போதும்,"ஐ.நா.மனித உரிமை கழகத்தின் விசாரணையை" அனுமதிக்க மாட்டேன் என்று முரட்டுத்தனமாக கூறிய மகிந்தாவும், இப்போது "இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கான" ஐ.நா. ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றும் அதனால்,வெளியிலிருந்து விசாரணை சாத்தியமில்லை எனவும், உள்நாட்டிலேயே போரில் மனித உரிமை மீறல் பற்றிய விசாரணை" என்றும்,அதுபற்றி தாங்கள் "ஐ.நா.மனித உரிமை கழகத்துடன் பேசுவோம்" எனவும் கூறுகின்ற இலங்கை பிரதமர் ரணில் விகிரமசின்கேவின் கூற்றும் வேறுபட்டவையா?

     ஆகவே எப்போது, சிங்கள ராணுவம் வடக்கு-கிழக்கு பகுதிகளை விட்டு வெளிஏறுகிறதோ , எப்போது மாகாணங்களுக்கு "நில உரிமை, காவல் உரிமை"வழங்கப்படுகிறதோ, எப்போது ஈழத் தமிழர்களது நிலங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறதோ, அதாவது சிங்கள ராணுவத்தாலும், சிங்கள குடியேற்றதாலும்  ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களிலிருந்து ஆக்கிரமிப்பு சக்திகள் அகற்றப்படுகிறதோ, அன்றுதான் ஆட்சி மாறியதால், காட்சி மாறியுள்ளது என்று கொள்ள முடியும்.அதுமட்டுமல்ல. 1987 இன் ராஜீவ் காந்தி-ஜெயவர்தனே  ஒப்பந்தப்படி வடக்கும்-கிழக்கும் இணைக்கப்பட்டால்தான் புதிய ஆட்சி மீதும் நம்பிக்கை பிறக்கும். தமிழர்களுக்கு அதிகாரம் தருவதற்கு ஓடிவரும் அமெரிக்க-இந்திய அரசுகள் தங்கள் சொல் கேட்கும் இலங்கை அரசிடம், "ஆங்கிலேயே அரசு  ஸ்காட்டிற்கு" நடத்திய " பொதுவாக்கெடுப்பு போல" ஒரு பொதுவாக்கெடுப்பை ஈழத் தமிழர் இடையே நடத்தி அதன்மூலம் உலகுக்கு தங்களது "ஜனநாயக அணுகுமுறையை" நிரூபிக்க தயாராவர்களா?--தெ.சீ.சு.மணி.ஊடகவியலாளர்.{ டிஎஸ்.எஸ்.மணி} மக்கள் சிவில் உரிமை கழக தேசியக் குழு உறுப்பினர்.{பி.யு.சி.எல். சென்னை பெருநகர மாவட்ட செயலாளர்}..