Thursday, January 22, 2015

பேராசிரியர் இளவரசு மரணம்.


       திருச்சி மாவட்டம் காட்டூரைச்செர்ந்தவர் தோழர் இளவரசு.தூய வளனார் கல்லூரி என்ற செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்தார். சட்டக் கல்லூரியில் சேர்ந்தவர் சட்டப் படிப்பை விட "தமிழ்" கற்க ஆர்வம் கொண்டு, ஓராண்டிலேயே சட்டப்படிப்பை விட்டுவிட்டு, திருவனந்தபுரம் சென்று தமிழ் படித்து, அதில் ஆராய்ச்சி பட்டம் வரை பெற்றார். அதன்மூலம் ஒரு சிறந்த தமிழ் பேராசிரியர் தமிழ்நாட்டிற்கு கிடைத்தார். தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி, அதை தொடர்ந்து சென்னை நந்தனம் கலை கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி ஆகியவற்றில் தமிழ் பேராசிரியராக பணியாற்றினார். அவ்வமயம் "தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர்சங்கததின்" மாநிலத் தலைவராகவும் செயல்பட்டார்.

    "உலகத் தமிழ் கழகம்" என்ற தமிழுக்கான அமைப்பை, தேவநேயப்பாவாணர், பெருஞ்சித்திரனார், தமிழ்குடிமகன் ஆகியோருடன் உருவாக்கியவர்களில் முக்கிய பங்கு வகித்தார். அவ்வமயமே அரணமுறுவலும் இலவரசுடன் இணைந்து அந்த தமிழ் பணிகளில் ஈடுபட்டார். "தென்மொழி" ஏட்டின் ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் உடன் நல்ல நெருக்கமான தொடர்பில் செயல்பட்டுவந்தார்.1969இல்  தமிழ்குடிமகன் என்ற இளையான்குடி சாத்தையா பரமக்குடியில் மாநாடு போட்டபோது அவருடன் இணைந்து அந்த மாநாட்டின் வெற்றிக்காக இளவரசு செயல்பட்டார். பெருஞ்சித்திரனார் ஒரு வழியிலும், தமிழ்குடிமகன் ஒரு வழியிலும் தமிழுக்காக பாடுபடும்போது, தோழர் இளவரசு தமிழ்குடிமகனுடன் சேர்ந்து, "தமிழியக்கம்" கண்டார். அது" தமிழ், பகுத்தறிவு, பொதுவுடைமை" என்ற கொள்கைகளை முன்வைத்து இயங்கியது. அப்போது தோழர் அரணமுறுவலும் அந்த இயக்கத்தில் முக்கிய செயல்பாட்டாளராக முன்னின்றார். இளவரசும், அரணமுறுவலும் இணைந்து அப்போதிலிருந்து செய்ல்பட்டுவந்தார்கள்.

யாழ் நூல்நிலையம் எரிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டில் இருந்தவர்கள் அந்த நூல்நிலையத்தை புனரமைக்க "நூல் திரட்டும்" பனி ஒன்றை தொடங்கினார்கள்.அதற்கான பணிக்கு, நெடுமாறன் தலைவராகவும், அரணமுறுவல் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்கள்.அதில் இளவரசு இறங்கி செயல்பட்டார். அரசு கல்லூரி ஆசிரியர் என்பதனால் தான் எந்த பொறுப்பையும் அந்த இயக்கத்தில் எடுத்துக்கொள்ளாமல், பொறுப்பாக செயல்பட மட்டுமே செய்வது அவரது பண்பு. 1977 இல் "தமிழக-ஈழ நட்புறவு கழகம்" என்ற அமைப்பை இளவரசும், அரணமுறுவலும் தொடங்கினார்கள். ஈழத் தமிழர் விடுதலைக்காக "ஈரோஸ்" அமைப்புடன் கைகோர்த்து, இருவரும் செயல்பட்டனர். அப்போது ஈரோஸ் அமைப்பிற்கு ரத்னசபாபதி தலைவராக இருந்தார். பாலகுமாரன் போன்றோர் பரிச்சயமானார்கள். "லங்கா ராணி" நாவல் எழுதிய அருளரும்  நண்பரானார். ஈரோஸ் அமைப்பின் அங்கயர்கன்னியும் அறிமுகமானார். ஈரோஸ் அமைப்பு "கெஸ்" என்ற "ஜெனரல் ஈழம் ஸ்டுடண்ட்ஸ் யூனியன்" { GUES } என்ற அமைப்பை வைத்திருந்தனர். அந்த மாணவர் அமைப்பிற்கு, நா.பத்மநாபா தலைமை தாங்கினார். அதில் சுரேஷ் பிரேமச்சந்திரன், சாந்தன், கேதீஸ்வரன், சிறீதரன்,என்பவர்கள் இருந்தனர். அவர்கள் ஈரோஸ் அமைப்பின் மீதும் , அதன் தலைவர் ரத்தினசபாபதி மீதும் கருது வேறுபாடுகளை கொண்டிருந்தனர். அதனால் அந்த மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் தனியாக ஒரு ஈழப் புரட்சிக்கான அமைப்பு ஒன்றை தொடங்கினார்கள். அதற்கு பெயர் " ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி" என்று ஆயிற்று. அதனுடன் தோழர் இளவரசும்,அரணமுறுவலும்  அதிக நெருக்கம் கொண்டிருந்தனர்.உலக அளவில் ரஷியாவின் பாதை, சீனாவின் பாதை என்று பிரிந்த  காலம்.ஈரோஸ் அமைப்பு ரஷிய சார்பாகவும், ஈ.பி.ஆர்ட்.எல்.எப். மாவோ காட்டிய சீனா வழியை ஆதரித்தும் கருது கொண்டிருந்தனர். இரு அமைப்புகளும் "பாலஸ்தீனம்" சென்று "ஆயுதப்பயிற்சி" எடுத்தனர். அதில் ஈரோஸ் , "பி.எல்.ஒ. என்ற அரபாத் தலைமையிலான அமைப்புடன் மட்டுமே தொடர்பு கொண்டிருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பு, லெபனானில் இருந்த ஜார்ஜ் ஹப்பாஸ் தலைமையிலான " பி.எப்.எல்.பி. என்ற பாபுலர் பிரண்ட் பார் த லிபரேசன்  ஆப்
பாலஸ்தீன்" அமைப்பிடம் ஆயுதப் பயிற்சி பெற்றது.

     1983 இல் ஈழததில் நடந்த கொடூரமான இனப்படுகொலையை கண்டிதது முதன்முதலாக சென்னை வள்ளுவர் கோட்டத்திலிருந்து "தமிழியக்கம்" பெயரில், தோழர் இளவரசின் தலைமையில்தான் ஒரு பேரணி நடந்தது.பிறகு திமுக அந்த பிரச்சனைகளை கையிலெடுத்துக் கொண்டது.தமிழ்குடிமகன் திமுக கட்சி பணிகளில் ஈடுபட முக்கியதுவ்ம் கொடுத்தார். அதனால் இளவரசு,"தமிழியக்கம்" பணிகளை கையிலெடுத்து செயல்பட்டார். அதுநேரம் தலைமறைவு இயக்கமான சி.பி.ஐ.{எம்-எல்] விடுதலை தோழர்களும் தோழர் இளவரசுடன் இணைந்து பணியாற்றினார்கள்."தமிழியக்கம்" என்ற பெயரில் ஒரு மாத இதழும் கொண்டுவரப்பட்டது. அதற்கு அரணமுறுவல் ஆசிரியராக இருந்தார். அதில்தான் முதன்முதலில், "கச்சத் தீவு தாரைவார்தல்" விவகாரமாக கட்டுரை வெளிவந்தது.

    இன்றுகாலை{ 22-01-2015] தோழர் இளவரசு இயற்கை எய்தினார். அவரது இல்லத்திலிருந்து, சென்னை வேளச்சேரி,டி.சி.எஸ்.எதிரே,ராமகிரி நகர்,ஏகே.எஸ்.தோட்டம்,எஸ் 3,ஜி பிளாக் இலிருந்து . நாளை மதியம் 3 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்படும்.வேளச்சேரி குருநானக் கல்லூரி அருகே உள்ள மின்சுடுகாட்டில் இறுதி நிகழ்வு செய்யப்படும்.அஞ்சலியுடன்,--தெ.சி.சு.மணி.,ஊடகவியலாளர்.