Sunday, July 27, 2014

சரிப் பார்வையும், சதிப் பார்வையும்.



   உலக சமூகத்தின் மனச்சாட்சி உலுக்கியதால், இலங்கை அரசு மீது  ஒரு "போர்க் குற்ற விசாரணையை" ஐ.நா.மனித உரிமைகள் கழகம் தொடங்கியுள்ளது. அதன் "உலக அளவில் பெயர் பெற்ற மூன்று உறுப்பினர்கள்" இலங்கைக்கு அருகாமை நாடான இந்தியாவில் உள்ள "ஈழத் தமிழ் அகதிகளை" விசாரித்தால் "வன்னிப் போரின் கடைசி நிலவரங்களை" தெரிந்துகொள்ளலாம் என்பதால் அதை தடுக்கு நோக்கத்தில், இந்தியா வருவதற்கு நடுவணரசு "விசா" கொடுக்கவில்லை. மகிந்தா அதரவு சக்திகள் இன்னமும் நடுவணரசில் செல்வாக்கு செலுத்துவதால் இந்த "கொடுமை" நடக்கிறது. நடுவணரசை இணங்கவைக்க எததகைய "சாட்சியங்கள்" போர்க் குற்றத்தை அம்பலப்படுத்தும்?  எததகைய "சாட்சியங்கள்" தமிழக மக்களையும் கொந்தளிக்க வைத்து, போர்குற்ற விசாரணை நடத்த "நிர்ப்பந்தம்"தரும்? 

      கடைசி கட்டத்தில் வன்னிப் போரில் நடந்த சில முக்கியமான "காட்சிகள்" சேனல் 4 மூலம் அம்பலமான காட்சிகள் அவ்வாறு ஒரு நிர்ப்பந்தத்தை உரூவாக்கும் என்றால், அவற்றை "அழித்துவிடவோ", "உருமாற்றி" விடவோ, "திசை திருப்பி"விடவோ, மகிந்தாவின் உளவுத்துறையும், அதை ஒட்டியே சிந்திக்கும் "இந்திய உளவு துறையும்', சிந்திக்கும், செயல்படும் என்பதுதானே உண்மை. அப்படி அவர்கள் என்ன சிந்தித்தார்கள்? என்ன செயல்பட்டார்கள்? 

      "போர்குற்றங்களை" "இன அழிப்பு" என்று அழைக்கும் அளவுக்கு சில முக்கிய "தரவுகள்" அல்லது, "சாட்சியங்கள்" கிடைத்துள்ளன. அவற்றை  சேனல்-4 தொலைக் காட்சியும் வெளியிட்டுள்ளது. அவற்றில் முக்கியமானவை என்று சிலவற்றை கூறலாம். முதலில் " வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த  நடேசன், புலித்தேவன், கேப்டன் ரமேஷ்" ஆகியோர் "கொலை" செய்யப்பட காட்சிகள். இதற்கு இலங்கை அரசு "வேறு பதிலை" கொடுக்கிறது.ரமேஷ் உயிரோடு இருந்தபோது எடுத்த "விசாரணையை" வெளியிட்ட போது, அதற்கும்கூட, அவரை "போராளி" என்றும் பல குற்றங்களை செய்துள்ளார் என்றும் இலங்கை அரசு கூறிவருகிறது. அடுத்து "இசைப்பிரியாவின்" படுகொலை. இசைப்பிரியாவை ஒரு பயிற்சி பெற்ற போராளி என்றும், அவர் "போரில் இறந்தார்" என்றும் ஒரு தேதியை இலங்கை "ராணுவ இணைய தளத்தில்" வெளியிட்டு,  அதற்கும் ஒரு பதிலை பதிவு செய்கிறார்கள். ஆனாலும் விடாமல் அவர் பிடிபட்டு  இழுத்து செல்லப்படுவதை படமாக வெளியிட்டு, அந்த தேதிக்கும், கொல்லப்பட்டதாக இலங்கை அரசு வெளியிட்ட தேதிக்கும் உள்ள இடைவெளியை கூறி நாம் அம்பலப்படுதவேண்டியுள்ளது.அதையே சேனல்-4 பதிலாக  கூறுகிறது. 

      ஆனால் "பாலச்சந்தர்" விஷயம் அப்படியல்ல. அந்த சிறுவன் பச்சிளம் பாலகன் என்பது  உலகுக்கு தெரிந்துவிட்டது. அந்த சிறுவன் தனது தந்தையிடம் "துப்பாக்கி" இருப்பதையே ஏற்றுக் கொள்ளாதவன் என்பதும் பதிவாகி விட்டது. அப்படிப்பட்ட "அப்பாவி சிறுவனை" எப்படி விசாரித்து பிறகு, சுட்டுக் கொன்றுள்ளார்கள்? என்பது உலக சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கவே செய்துள்ளது. அதுவே தமிழக மக்களையும் கொந்தளிக்க செய்துள்ளது. அந்த "சாட்சியை" எப்படி "கலைப்பது" என்பதுதான் இலங்கை-இந்திய உளவு துறையினருக்கு முன்னே நிற்கும் "சவால்". அந்த சவாலை சந்திக்கத்தான் இந்த புதிய படம் வெளிவர இருக்கிறது. அதாவது "புலிப்பார்வை" என்ற இந்த படத்தின் சொந்தக்காரர்கள் என்றைக்கும் ஈழத் தமிழர்கள் மீது அக்கறையோ, அனுதாபமோ, கொண்டவர்கள் அல்ல. மாறாக எதையுமே "வணிகமாக்கலாம்" என்று எண்ணுபவர்கள். அதனால் அவர்களது இந்த சித்தரிப்பு ஒரு திட்டமிட்ட "சதி" யாகவே படுகிறது.

                 அதாவது பாலச்சந்த்ரனை ஒரு "போராளியாக" சித்தரித்தால், அவன் "போரில் இறந்தான்" என்றும், "குழந்தைப் போராளிகளை" விடுதலை புலிகள் பயன்படுத்தினார்கள் என்பதாகவும், ஒரு "நச்சு பரப்புரையை" செய்துவிடலாம் என்று  சம்பந்தப்பட்டவர்கள் "சதித் திட்டம்" போடவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். ஏன் என்றால், ஐ.நா. விசாரணை குழுவிற்கு இந்தியா விசா கொடுக்க மறுத்ததை எதிர்த்து, பெரும் புயல் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் நாடாளுமன்றத்திலும் கிளம்பி விட்டது. ஆளவே அதன் வீச்சு நடுவணரசை அசைப்பதற்கு முன்னால் இப்படி ஒரு "திசை திருப்பலை" செய்ய அவர்கள் முயற்சிக்கிறார்கள். அதனால்தான் அந்த பட விளம்பரதில்கூட, அவர்கள், "இது ஒரு பாலா பற்றிய நமபமுடியாத உண்மை" என்று பரப்ப தொடக்கி விட்டார்கள். சம்பந்தப்பட்ட நிறுவனம் "பிரபல காட்சி ஊடகங்களை"  வைத்திருப்பதால், அந்த காட்சி ஊடகத்தில் "தங்கள் முகம்" வரவேண்டும் என்ற எண்ணத்தில் பல "தமிழ் ஆர்வலர்கள்" கண்டிக்க மறுக்கிறார்களோ என்ற கருதும் தமிழ்நாட்டில் இருக்கிறது.