Sunday, June 16, 2013

தோழர் மணிவண்ணன் மரணம் கூறும் பாடங்கள்


       இயக்குனர், திரைக்கலைஞர் மணிவண்ணன் அவர்களது மரணம் நண்பர்கள் பலர் இடையே தொடர்ந்து இரண்டு நாளாக விவாதத்தை கிளப்பியுள்ளது. நேற்று தோழரது மரணம் கேள்விப்பட்டவுடன், பி.யு.சி.எல். கூட்டத்தில் இருந்த நாங்கள் உடனே ஒரு இரங்கலை அங்கேயே பதிவு செய்து விட்டு, மாலையும், கையுமாய், தோழரைக் காண, அவர் வீடு சென்றோம். நேற்று மாலை நல்ல கூட்டம் அங்கே அலைமோதிய நேரம். பேராசிரியர் சரஸ்வதி,[பி.யு.சி.எல். மாநில தலைவர்], மாவட்ட பொருளாளர் பாரதி விஜயன், நான், முகேஷ், எம்.ஜி.ஆர்.டி.வி.ஹமித், கவிஞர் சுமித்ரா[ நாம் தமிழர்] அனைவரும் சென்று மாலை வைத்தோம். இன்று இறுதி ஊர்வலம் சென்று, இடுகாட்டில் தோழரை எரியூட்டும் வரை நின்று, மீனவர் சங்கம் மகேஷ், வழக்கறிஞர் அருள், நான் ஆகியோர் திரும்பினோம். ஆனால் தோழரது நினைவுகள் மீண்டும் மீண்டும் "பகிர்ந்து கொள்ள" வேண்டியது என்று உணர்ந்தோம். அவரது இழப்பு "பொதுவாழ்க்கைக்கு" பெரும் இழப்பு, வேறு ஒருவர் அவரது இடத்தை நிரப்ப முடியாது என்றும், பேசிக் கொண்டோம். எனக்கு தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பாக உணர்ந்தேன். "தோழர்,தோழர்" என்றுதான் என்னை அழைப்பார்.
           1976 இல் முதன்முறையாக, கோவை சி.ஐ.டீ. பொறியியல் கல்லூர்ரி விடுதியில் சந்தித்தேன். நான் அப்போது, சாருமசும்தார் வழி, நக்சல்பாரி கட்சியின் தலைமறைவு தோழர். அவர் "சாரு எதிர்ப்பு" நக்சல்பாரி கட்சியின் முழு நேர ஊழியர். அதன்பிறகு, 1989இல்  மதுரை வங்கி கொள்ளைக்காக சில தோழர்களை குறிப்பாக பெங்களூரு ஆசிரியர் வீரமணியை, காவல்துறை "சித்திரவதை" செய்வதற்கு எதிரான "உண்மை அறியும் குழு" அனுப்ப, உதவி பெற சென்றோம். அபபோ து அவர் பிரபல இயக்குனர். பழைய கதைகளை பகிர்ந்து கொண்டோம். நீண்டபயணம் சுந்தரம், சுப வீரபாண்டியன்,இன்று மாவோயிச  தலைவர் என்ற குற்றச்சாட்டில் சிறையில் இருக்கும் விவேக், ஆகியோருடன் நான் சென்ற நேரம். பழைய கோவை சந்திப்புகளை பகிர்ந்து கொண்டோம். 
                  இப்போது 2009, மீண்டும் எங்கள் சந்திப்புகளை அதிகப்படுத்தியது. "ஈழம்" அதற்கு காரணமாக இருக்கிறது. நிறைய பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிட்டியது. அவரது பணிகளுக்கு எனது உதவியையும் எனகளது முயற்சிகளுக்கு அவரது உதவிகளையும் பகிர்ந்து கொண்ட காலம்  "புலிகளை" ஆதரிக்கும் இந்த காலத்தில், "நீங்கள் முன்பு மறுத்த சாருமசும்தார் வழியான "அழித்தொழிப்பை"  இப்போது ஏற்றுக் கொள்கிறீர்களா?" என்று நான் வினவினேன். முழுமையாக் "ஆம்" என்றார். " இனவிடுதலை போரை" உள் வாங்கிய  ஒரு தோழர், "வர்க்கபோரின்" உயர் கட்டங்களையும் புரிந்து கொண்டு டுதானே ஆகவேண்டும். எனக்கு "தோழர் மறைவு" தனிப்பட்ட இழப்பும் கூட. ---தெ.சி.சு.மணி.