Thursday, April 18, 2013

முஸ்லிம் தமிழர்கள் என்றால் ஏன் அப்படி பயப்படுகிறார்கள்?


     அய்யா. தமிழ் இந்துவாய் இருந்தால் என்ன? தமிழ் கிருத்துவராய் இருந்தால் என்ன? தமிழ் முஸ்லிமாய் இருந்தால் என்ன? மதமற்ற தமிழராய் இருந்தால் என்ன? தமிழ் நாத்திகராய் இருந்தால் என்ன? தமிழர்தானே? அவர்களது மொழி தமிழ்தானே? அவர்களது உணர்வு ஒன்றுதானே? அனேகமாக அவர்களுக்கு தமிழைத் தவிர வேறு மொழி தெரியாதே? அப்படி இருக்கும்போது எப்படி அவர்களுக்குள் நீங்கள் பிரித்து வைக்க முடியும்? இப்படி நாம் கேட்டால், அது கொழும்புக்கும், டில்லிக்கும்  புரியவில்லை. காரணம் என்ன? அவர்கள் இந்த மத வேறுபாடுகளை வைத்து, தமிழர்களை நிரந்தரமாக பிரித்து வைத்து விடலாம் என்று எண்ணுகிறார்கள். எண்ணுவது என்ன, எண்ணுவது? பிரித்து வைத்து விட்டோம் அல்லவா? என்று இறுமாநது கூறுகிறார்கள்.பல பத்து ஆண்டுகளாக் இந்த மத வேறுபாடுகளை பயன்படுத்தி, பிரித்து வைத்து, அதன்மூலம் "தமிழ் ரத்தம்" குடித்தவர்கள் மீண்டும் இப்போது இந்த மத வேறுபாடுகளை கடந்து, தமிழர்கள் "மதம் தாண்டி" ஒன்றுபடுவதை எப்படி "சகித்து கொள்வார்கள்?".  

            அதனால்தான் அந்த சென்னை சந்திப்பு, அவர்களுக்கு "கிலியை" ஏற்படுத்தி விட்டது. "புலியை விட கிலியை" ஏற்படுத்திய ஒரு "அரசியல் சந்திப்பாக" அவர்கள் அதை கணக்கு போடுகிறார்கள். அது என்ன சந்திப்பு?. அய்யா. யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.அவர் "தனிப்பட்ட" பணிகளுக்காக சென்னை வந்திருந்தார். அப்போது சில முஸ்லிம் நண்பர்கள் "வாங்க, ஓட்டலுக்கு சாப்பிட" என்று அழைத்தார்கள். அப்படியே சாப்பாட்டுநேரம் பல நண்பர்களையும் சந்திக்கலாம் என்றனர்.இங்கே ஒரு "முஸ்லிம் கூட்டமைப்பு" இருக்கிறது என்பதோ, அது சமீபத்தில்தான் உருவானது என்பதோ, அது அமெரிக்க தூதரகம் முன்னால் பெரும் போராட்டத்தை நடத்தியது என்பதோ, விஸ்வரூபம் படத்திற்கு எதிராக போராடி, முதல்வர் முன்னிலையில் பேசி "தீர்வு" கண்டது என்பதுவோ, பெரமபலூரில் "குழந்தை திருமண விவகாரத்திற்காக" மாவட்ட அடசியாளரை எதிர்த்து கூட்டாக போராடியது என்பதோ, அந்த யாழ்ப்பாண எம்.பி.க்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. வந்த இடத்தில் சந்தித்தோம் எனபதே அவரது புரிதலாக் இருந்திருக்கு வேண்டும். 

           ஆனால் தமிழ்நாடு முஸ்லிம்களுக்கு அப்படி அல்ல. அவர்கள் இலங்கை விவகாரங்களை உற்று கவனித்து வருபவர்கள். அது மட்டுமின்றி,கொழும்பில் "ஹலால்" உணவு முறையை "தடுத்த" சிங்கள பவுத்த பிக்குகளின் முயற்ச்சியை உற்று கவனிப்பவர்கள். ஏற்கனவே தமிழ்நாட்டில் உருவாகும் தமிழின உணர்வுகளுடனும், சிங்கள எதிர்ப்பு உணர்வுகளுடனும், இரண்டற கலந்தவர்கள். சிங்கள பவுத்த "பிக்குகள்" தம்புள்ள பள்ளிவாசலை இடித்த போதும், காலி மாவட்ட மசூதியில் சிங்கள காடையர்கள் "நாயை கொன்று ரத்தத்தை தெளித்தபோதும்" பொங்கி எழுந்தவர்கள்.  இப்படி ஏற்கனவே கொதித்து போயிருக்கும் "தமிழ் முஸ்லிம்களுக்கு" சமீபத்தில் நடந்துவரும் முஸ்லிம்கள் மீதான சிங்கள தாக்குதல்கள்  "கோபத்தை "கிளறாதா?

              அதனால்தான் அவர்கள் யாழ்ப்பாண எம்.பி. சென்னை வரும்போது, தங்கள் நண்பர்கள் உடன்வரும்போது, "சந்தித்து" பல "ஆதங்கங்களை" கொட்டிக் கொள்ள வேண்டும் என்று "தயாரிப்புகளுடன்" வந்தார்கள் போலும். அந்த முஸ்லிம் தமிழர்கள்,  சிங்களர்கள் மீது மட்டும் இன்றி, தமிழ் போராளிகள் மீதும் பல "கோபங்களை" கொண்டிருந்தார்கள் என்பது அந்த சந்திப்பில் வெளிப்பட்டது. ஆனாலும் அவர்களுக்கு, "ஈழத் தமிழர்கள்" ஒன்றரை லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டதை "தாங்கிக் கொள்ள" முடியவில்லை எனபதும் அங்கே  தெரிந்தது.அவர்களது பல கேள்விகளுக்கு பொறுமையாக  அந்த  "யாழ்ப்பாண எம்.பி." பதில் விளக்கம் அளித்ததையும் காண முடிந்தது. அந்த முஸ்லிம் தமிழர்கள் ஒரு செய்தியை கூறினார்கள். தாங்கள் பின்பற்றும்  மார்க்கமான "இசுலாம்" எந்த மக்கள் பாதிக்கப்பட்டாலும், அவர்களுக்காக ஆதரவு கொடுக்கும்படி தங்களுக்கு போதித்துள்ளது என்றார்கள். அதனால் பாதிக்கப்படும் "தமிழ் மக்கள்" பக்கம் தான் தாங்கள் நிற்கிறோம் என்றனர்.

                அப்போது அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு, வரலாற்றிலிருந்து பல செய்திகளை சுரேஷ் பகிர்ந்து கொண்டார்.இந்தியவம்சாவளி தமிழர்களான மலையக தோட்ட தொழிலளர்களுக்கு "குடியுரிமை" வழங்க கூடாது என்று "சிங்களம்" முடிவு செய்யும்போது, யாழ்ப்பாண்ததவரான "பொன்னம்பலம்" சிங்களருடன் சேர்ந்து கொண்டு  "இந்திய வம்சாவளிகளுக்கு"  குடியுரிமை கொடுப்பதை மறுத்தாரே? என்று அவர்கள் கேட்டனர். அதற்க்கு பொறுமையாக சுரேஷ், "பொன்னம்பலம் தவிர்த்த, பிற தமிழர் தலைவர்கள், தந்தை செல்வா உட்பட இந்திய வம்சாவளிகளுக்கு ஆதரவாகத்தான்" அன்று இருந்தார்கள் என்ற செய்தியை கூறினார். அது இங்குள்ள முஸ்லிம் தமிழர் தலைவர்களுக்கு திருப்தியாய்  இருந்தது.அடுத்து வழமையாக முஸ்லிம்களை புண்படுத்தி வரும், "மட்டகிளப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பள்ளிவாசலில் "உள்ளே புகுந்த புலிப்படை "சரமாரியாக" தொழுகைக்கு வந்தவர்களை சுட்டு கொன்றதே? என்று கேட்டார்கள். அது ஒரு "நடக்க கூடாத தவறான துயர சம்பவம்தான்" என்று சுரேஷ் கூறினார். ஏற்கனவே விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அந்த சம்பவம் பற்றி "ஒரு துன்பியல் நிகழ்வு" என்று தெரிவித்து இருந்தது இங்குள்ள முஸ்லிம் தமிழர்களுக்கும் தெரியும் என்பதால், அந்த பதிலையும் கடினப்பட்டு சீரணித்து கொண்டனர். அடுத்து " யாப்பானத்திளிருந்து முஸ்லிம்களை கெடு நேரம் முடியும் முன்பு வெளியேற்றியது" பற்றிய கேள்வி. அது "தவறான முன்னுதாரணம்" என்றும் சுரேஷ் ஒப்புக் கொண்டார். அதனால் அவர்கள் அவரை நடபுடனே காண தொடங்கினர். மன்னார் மாவட்ட ஆயர் ராயப்பு சோசப்பு, "முஸ்லிம்களுக்கு காணி கொடுப்பதை எதிர்த்தாரே? "என்று ஒரு கேள்வி வந்தது. அதற்க்கு, ஏற்கனவே முஸ்லிம்கள் இருந்த பகுதியில் சிங்களரை குடியேற்றிவிட்டு, இப்போது திரும்பி வரும் முஸ்லிம்களுக்கு ஏற்கனவே "முஸ்லிம் அல்லாத தமிழர்கள்" வாழ்ந்துவந்த இடங்களை வேண்டும் என்றே அரசாங்கம் ஒத்துக்கியதால் வந்த எதிர்ப்பு என்றும், அதுபோன்ற பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்றும் சுரேஷ் பதில் தந்தார். அத்தகைய முரண்பாடுகளை சிங்களம் "பிளவுபடுத்தி ஆளும்" தந்திரத்தை கையாள்கிறது என்று இங்குள்ள முச்ல்ம்கள் உணர்ந்துகொண்டனர். 

                  அதன்பிறகு இப்போது முஸ்லிம்கள் மீது, சிங்களம் செய்து வரும் அட்டூழியங்கள் பற்றிய கேள்விகள் வந்தன.. இங்குள்ள முஸ்லிம் தமிழர்களுக்கு அங்கே  அன்றாடம் நடக்கும் அனைத்து விசயங்களும் "அத்துபடியாக" இருக்கிறது. மட்டக்கிளப்பில், முஸ்லிம் தமிழ் பெண் ஒருத்தரின், "பர்தா" கிழிக்கப்பட்டது வரை இங்குள்ளவர்கள் தெரிந்து வைத்துள்ளனர் என்பது அங்கே பிரதிபலித்தது.புத்த பிக்குகள் இலங்கையில், "பொதுப்பால சேனா" என்று ஒரு அமைப்பை கட்டிக் கொண்டு இன்று முஸ்லிம் தமிழர்களை எதிர்த்து தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர் என்றும், அந்த அமைப்பை தொடக்கி வைத்தவர் "கோத்தபாயி ராஜபக்சே" என்றும் இங்குள்ள முஸ்லிம்கள் ஆதாரபூர்வமாக தெரிந்து வைத்திருந்தனர். இந்தியாவின் பா.ச.க.கட்சி தலைவி சுஷ்மா ஸ்வராஜ் கொழும்பு சென்றபோது, ராஜபக்சேவிடம் "வைர மாலை" பெற்றதையும், தனியாக அவர ராஜபக்சேவிடம் பேசிவிட்டு வந்த பிற்ப்பாடுதான், முஸ்லிம்கள் அறுபது ஆண்டுகளாக வழிபாட்டு தளமாக நடத்திவரும், "தம்புள்ள" பள்ளிவாசலில், வெள்ளிக் கிழமை தொழுகை நேரத்தில் நுழைந்த புத்த பிக்குகள் அந்த பள்ளியை இடிக்க தொடங்கினர் என்றும் "வரலாற்று சான்றுகளை" அந்த முஸ்லிம் தலைவர்கள் எடுத்து  கூறினார்.

                     சுரேஷ் "பிரமிக்கும்" அளவிற்கு இங்குள்ள முஸ்லிம் தலைவர்கள் "ஆதாரங்களை" கூறினார். தமிழர்களின் "உரிமை" வென்றேடுப்பில், முஸ்லிம் தமிழர்களுக்கு "என்ன கிடைக்கும்?" என்று அவர்கள் வினவினர். தநதை செல்வா ஏற்கனவே, "தமிழர்களின் விடுதலையில், முஸ்லிம்களுக்கு என்று" அவர்கள் விரும்பும் பட்ச்சத்தில், "சுயாட்சி பகுதி" உறுதி செய்யப்படும் என்று அப்போதே கூறியுள்ளார் என சுட்டிக் காட்டினார்.    இது இங்குள்ள முஸ்லிம் தமிழர்களுக்கு ஆரோக்கியமான பதிலாக தெரிந்தது. சமீபத்தில் நடந்த "கிழக்கு மாகான சபை "தேர்தலில், தங்களது "தமிழ் தேசிய கூட்டமைப்பு" அக்குள்ள முஸ்லிம் கூட்டமைப்புடன் சேர்ந்து தேர்தலில் நிற்க முயன்றது என்றும், இருவரும் சேர்ந்து ஆட்சியை கிழக்கில் அமைத்திருக்க முடியும் என்றும், அதில், கிழக்கு மாகான முதல்வராக "ஒரு முஸ்லிம் வருவதை ஏற்றுக் கொள்கிறோம்" என்றும் தாங்கள் கூறிய பிறபாடும்கூட, அங்குள்ள முஸ்லிம் கட்சியினர், ஏற்கனவே ராஜபக்சேவின் கூட்டணியில் இருப்பவர்கள், தனித்து தேர்தலில் நின்று வெற்றி பெற்ற பிற்பாடு, ராஜபக்சே தலைமையிலான் கூட்டணியில் சேர்ந்துகொண்டு, கிழக்கு மாகான ஆட்சியை அமைத்துள்ளர்கள் என்று சுரேஷ் விளக்கினார்.   இந்த சந்திப்பு பற்றி இந்த வார "இந்தியா டுடே" தமிழ் ஏடு "புதிய கூட்டணி சாத்தியமா? என்று எழுதியுள்ளார்கள்.

                இந்த அளவுக்கு முஸ்லிம் தமிழர்களை, இந்து தமிழர்களும், கிருத்துவ தமிழர்களும் ஏற்றுக் கொண்டு செயலபடும் ஒரு சூழல் நல்லதொரு முன்மாதிரிதான் என்று சந்திப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் உணர்தல் ஏற்பட்டது. இப்படி அனைத்து மத சார்பு தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படும் ஒரு ஆக்கபூர்வமான் ஒற்றுமை, இந்த தமிழ் மக்களை ஒடுக்க நினைக்கும் சிங்களத்திற்கு வேண்டுமானால் "ஆத்திரத்தை" கிளப்பலாம். எதற்காக நமமூர் "உளவு துறையினருக்கும்" அதிர்ச்சியை கிளப்ப வேண்டும்?