Saturday, October 12, 2013

மூன்று விக்கட் வீழ்ந்தது.


      பாலாறு மணல் கொள்ளையை  எதிர்த்து  பி.யு.சி.எல். நடத்திய "அதிவேக  பந்து  வீச்சில்",  இன்று  "மூன்று விக்கட்டுகள் வீழ்ந்தன". காஞ்சி மாவட்டம் "பாலாறு நதி, செய்யாறு நதி " கரைகளை அனேகமாக அரித்து எடுத்து விட்ட, "மணல் கொள்ளையர்கள்" பழைய சீவரம் தொடக்கி  "அனுமதி வழங்கப்படாத" பகுதிகள் உட்பட " கொடுக்கப்பட்ட அளவுக்கு மேலே" முப்பது அடி வரை மணலை  தோண்டி எடுத்துள்ளனர். அனுமதிக்கப்படாத "பொக்லைன்' இயந்திரங்களையும் பயன்படுத்தி இந்த மணல் கொள்ளை "சட்ட விரோதமாக" நடந்துள்ளது. இத்தகைய கொடூர செயலை எதிர்த்து, "தமிழக விவசாயிகள் சங்கம்" தமிழினியன் தலைமையிலும், பழைய சீவரம் வட்டாரத்தில், அருங்குன்றம் தேவராஜ், குணசீலன் தலைமையிலும், தொடர்ந்து மக்களை திரட்டி போராடி வந்தது.

                    அதன் தொடர்ச்சியாக , பி.யு.சி.எல். என்ற "மக்கள் சிவில் உரிமை கழகத்தில்" சேர்ந்த அந்த தோழர்கள், ஒரு "உண்மையறியும் குழாம்" தங்கள் பகுதிக்கு வந்து இந்த கொடூரங்களை பற்றிய உண்மைகளை எடுக்க வேண்டும் என கேட்டனர். பி.யு.சி.எல். உண்மையறியும் குழாம், "சென்னை-காஞ்சி-திருவள்ளூர்" மாவட்ட குழு சார்பாக மாவட்ட தலைவர் பேரா.சங்கரலிங்கம், மாநில தலைவர் பேரா.சரஸ்வதி, மக்கள் கட்டிட கலைஞர் சுதிர் ஆகியோர் தலைமையில் புறப்பட்டு சென்றது. விவசாயிகள் சங்க தோழர்களின் உதவியுடன், இரண்டு நதி கரைகளிலும், நேரில் கண்ட, கேட்ட காட்சிகளை, படங்களாகவும், கான் ஒளியாகவும், குறிப்புகளாகவும் எடுத்து, ஆவணமாக்கினர்.

                 அதை 09-10-13 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், ஊடவியலாளர்கள் கூட்டம் நடத்தி வெளிப்படுத்தினர். அரசுக்கும், கொடுத்து விட்டனர். அதில் தமிழக அரசை "மணல் ஒப்பந்தக்காரர்கள்" ரூ.5,200 கோடிக்கு மேல் ஏமாற்றி உள்ளனர் என்ற கணக்கையும் கொடுத்துள்ளனர். இந்த செய்திகள் தமிழக அரசை "நிலை குலைய செய்து" இன்று காலை செய்திப்படி, "காஞ்சி மாவட்ட ஆட்சி தலைவர், பொதுப்பணித்துறை காஞ்சி வட்டார உதவி நிர்வாக பொறியியலாளர், பொதுப்பணித்துறை மதுராந்தகம் வட்டார உதவி நிர்வாக பொறியியலாளர்" ஆகிய மூன்று விக்கட்டுகள் "இடை நீக்கம்" என்ற அளவில், "வீழ்த்தப்பட்டுள்ளன". ஆட்டம் தொடரும். பி.யு.சி.எல். தனது "அதிவேக பந்து வீச்சை" தொடந்து நடத்தும். மேலும் விக்கட்டுகளை வீழ்த்தும்.