Wednesday, September 5, 2012

பள்ளம் ராஜுவின் பொழிப்புரையை கருணாநிதி எழுதுகிறாரா?


      இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சர் பள்ளம் ராசு. அவர் சிங்கள வீரர்களுக்கு  இந்தியாவில் பயிற்சி கொடுப்பது என்பது இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ள நல்லுறவை வலுப்படுத்துவது என்று திருவாய் மலர்ந்தார். அதை கலைஞர் உட்பட அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவருமே, மற்ற கட்சிகளுடன் சேர்ந்து எதிர்த்தார்கள். சிங்கள வீரர்களுக்கு பயிற்சியா? அதை நாமும் அனுமதிப்பதா? இந்தியாவில் எங்கும் அப்படிப்பட்ட பயிற்ச்சியை கொடுக்க கூடாது. இன்று மட்டுமல்ல, எதிர்காலத்திலும் அப்படி சிங்கள வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கக் கூடாது. இவ்வாறு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியை சந்தித்து திமுக எம்.பி.கள் கூறினர்.இது ஊடகங்களிலும் வெளிவந்தது. ஆனால் இன்று கலஞட் அவர்கள் வேறொரு அறிககையை கொடுத்துள்ளார்கள். அதில்  சிங்கள விளையாட்டு வீரர்களை எப்படி சென்னையிலிருந்து திருப்பி அனுப்பலாம் என்று வினவியுள்ளார். 

                          அதற்கு ஈன்று காலை அவரது முரசொலியில் கேள்வி பதிலில், இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும், குறிப்பாக கிரிக்கட்டு விளையாட வீரர்கள் சென்று வரத்தான் செய்வார்கள் என்றும் குறிப்பிட்டார். இப்போது, கால்பந்து விளையாட்டு வீரர்களை திருப்பி அனுப்பியது, இரு நாட்டு உறவுகளை கெடுக்கும்  என்று கூறியுள்ளார். ஈழத்தமிழர்களை ஒன்றரை லட்சம் பேரை கொன்று குவித்து, இந்திய தமிழர்கள் உட்பட உலக தமிழர்கள் மத்தியில் பெரும் துன்பத்தை ஏற்படுததியது இரு நாட்டு உறவுகளை கெடுக்கும் என்று கலைஞர் கூறியதில்லை. ஆனால் இன்று பள்ளம் ராஜுவின் கருத்தை வலியிறுத்துகிறார். ஏன்?

                      
                            விளையாட்டு வீரர்களை இலங்கைக்கு முதல்வர்  திருப்பி அனுப்பியது, மாதா கோவிலுக்கு வந்த பக்தர்களை மக்கள் திருப்பி அனுப்புவதை தூண்டி விட்டது என்பது கலைஞரின் வாதம். இதுவே சிங்கள மேட்டுக்குடிகளின் குரலாகும். அப்படி குரலை கலைஞர் ஏன் எதிரொலிக்கிறார்?  விளையாட்டு வீரர்களை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கால்பந்து விளையாட தமிழக முதல்வர் அனுமதித்திருந்தால், அதுவே மக்கள் மத்தியில் ஒரு கலகத்தை உருவாக்கி, அதன்மூலம் தமிழ்நாட்டு மக்கள் வந்துள்ள சிங்கள விளையாட்டு வீரர்களை அடித்து விரட்டி, அந்த விளையாட்டு வீரர்களின் உயிருக்கு "ஆபத்து" ஏற்பட்டிருந்தால், கலைஞர் அப்போது என்ன சொல்வார்? தமிழக முதல்வர், எதற்காக அந்த விளையாட்டு வீரர்களை சென்னைக்குள் விளையாட அனுமதித்தார்? என்று கேட்க மாட்டாரா?.

                    தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஒரு முதல்வர், வந்திறங்கிய சிங்கள விளையாட்டு வீரர்களை எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாவண்ணம், பக்குவமாக திருப்பி அனுப்பி, சட்ட ஒழுங்கை பாதுகாத்துள்ளார் அது ஏன் நான்கு முறை முதல்வராக இருந்த கலைஞருக்கு புரியவில்லை? அதை ஏன் கலைஞர் எதிர்க்கிறார்? சட்ட ஒழுங்கு தமிழ்நாட்டில் கேட்டுப் போகட்டும் என்று கலைஞர் நினைக்கிறாரா? நினைப்பார். ஏன் என்றால் அத்தனைக்கு எதிரானவர்கள் ஆட்சியில் இருந்துவிட்டால், எப்போதுமே சட்ட ஒழுங்கு கெடட்டும் என்று கலைஞர் நினைப்பதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை. அதனால்தான் சிங்கள விளையாட்டு வீரர்களை, இலங்கைக்கு திருப்பி அனுப்பிய செயலை கலைஞர் ஒப்பவில்லை. . 
                    

                 இதேபோல ஆசிரியர் வீரமணியும் கோவிலுக்கு வரும் பக்தர்களை தாக்குதல் கூடாது என்று கூறியுள்ளார். இந்த "மாபெரும்" நடுநிலைவாதிகள், நீதிக்கும், அநீதிக்கும் மத்தியில் நடுநிலை எடுக்கிறார்கள். இவர்கள் உரிமை இழந்த தமிழினத்திற்கும், உரிமைகளை பறித்த சிங்களத்திற்கும் மத்தியில் நடுநிலை எடுக்கிறார்கள். இவர்கள் திடீரென "நடுநிலைவாதிகளாக" மாறி சிங்களத்தை  ஆதரிக்க காரணம் என்ன?  பவர்கள் ஆட்சியில் இருந்த பொது எப்படிப்பட்ட நடுநிலையை அமுல்படுத்தினார்கள் என்பதை நாம் திரும்பி [ஆர்த்தாலே நமக்கு புரிந்துவிடும்.

               
                      திமுக தலைவர் கலைஞர் ஆட்சியில் இருக்கும்போது, சென்னையில் அப்பாவித்தனமாக உலாவி வந்த "ஈழவேந்தனை" இலங்கைக்கு வெளியேற்றினார். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த "சிவாஜிலிங்கத்தை" மருத்துவ சிகிச்சைகாக கூட தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்காமல், விமான நிலையத்திலேயே  இலங்கைக்கு திருப்பி அனுப்பினார். இந்திய அரசின் "விசாவில்" சென்னை விமான நிலையம் வந்திறங்கிய புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் "பார்வதி அம்மாளை" விமான நிலையத்திற்கு வெளியே கூட வரவிடாமல், ஜாங்கிட் தலைமையில் ஆயுத காவலர்களை பெரும் அளவில் அனுப்பி, அங்கிருந்தே திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்தார். அதாவது தமிழர்களை இன்னமும் சொல்லப்போனால் ஈழத்தமிழர்களை, அதிலும் சிங்கள நாட்டில்  உயிருக்கு ஆபத்து என்று இங்கே வந்த ஈழத்தமிழர்களை அதே சிங்கள கொடியவன் கையில் சிக்குமாறு திருப்பி அனுப்பினார். ஆனால் சிங்கள விளையாட்டு வீரர்களுக்கு, கோபம் கொண்ட தமிழர்களால் எந்த ஆபத்தும் ஏற்படாமல் பாதுகாப்பாக திருப்பி அனுப்பிய ஜெயலலிதாவின்  செயலை சுட்டி காட்டி, அது இரு நாடுகளின் நட்புறவை கெடுத்துவிடும் என்று கூறுகிறார்.  

                 இதன்மூலம் இந்திய பாதுகாப்பு இணை அமைச்சர் பள்ளம் ராஜுவின் சொற்களுக்கு, கருணாநிதி பொழிப்புரை எழுதியுள்ளாரா? ஏன் அந்த விளையாட்டு வீரர்கள் மீது கலைஞருக்கும், டில்லி அரசுக்கும் அத்தனை அக்கறை? அந்த கால்பந்தாட்ட விளையாட்டு வீரர்களான சிங்கள இளைஞர்கள்  கொழும்பில் உள்ள "ராயல் கல்லூரி" என்ற மேட்டு குடி கல்லூரின் மாணவர்கள். அந்த சிங்கள மேட்டுக்குடி கல்லூரிதான், அந்த நாட்டில் உள்ள சிங்கள தலைவர்கள் ஜெயவர்தனே உட்பட பலரும் படித்த "கவுரமான கல்லூரி" என்று சிங்கள கொடுமதி படைத்த, தமிழின விரோத மேட்டுக்குடிகாரர்களின் எண்ணம். அதனால் அவர்கள் கொந்தளிப்பாகி, தமிழக முதல்வருக்கு எதிராக குரலை எழுப்புகின்றனர். 

                இந்தியா எங்கும் ஏழு இடங்களில் சிங்களம் தனது "தூதரகங்களை" நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளது. அந்த தூதரகங்கள் மூலம் செல்வி.ஜெயலலிதாவிற்கு எதிராக ஒரு பெரும் பரப்புரையை கிளப்ப திட்டமிட்டுள்ளது. இந்தியா எங்கும் காங்கிரஸ்  மற்றும் பாஜக அல்லாத ஒரு ஆட்சி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விடக் கூடாது என்று ராஜபக்சே தலைமையிலான சிங்கள அரசு திட்டமிட்டு அதற்காக வேலை செய்ய இந்த சிங்கள அரசின் தூதரகங்களை பயன்படுத்தப் போவதாக செய்திகள் வந்துள்ளன. அதற்கான முன்னோட்டமே கலைஞர் இந்த விளையாட்டு வீரர்களின் வெளியேற்றத்தை  பற்றி ஏறுக்கு மாறான கருத்துக்களை வெளியிடுகிறார். 

         அதேபோன்ற  கருத்தை இந்தியாவிற்க்கான இலங்கை துணை தூதர் வெளியிட்டிருக்கிறார். அவரும் இரு நாட்டு நல்லுறவு கெட்டுவிடும் என்று கூறியுள்ளார். அப்படியானால் தமிழர் விரோத கருத்துக்களை வெளியிட்ட பள்ளம் ராஜுவின் கருத்துகளுக்கு, பொழிப்புரை எழுதுவதில் இன்று கலைஞர் அந்த இலங்கை துணை தூதருடன் போற்றி போடுகிறார் என்றுதானே பொருள்?

                 இலங்கை தீவில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட போதும், இலங்கை கடற்படையால் இருபத்தேழு ஆண்டுகளில், ஐந்நூறுக்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் கோளை செய்யப்ப்பட்ட போதும், கெட்டுப் போகாத இரு நாட்டு உறவுகள், சிங்கள விளையாட்டு வீரர்களை ஆபத்து வரும் சூழலில், பாதுகாப்பாக தமிழக முதல்வர் வெளியேற்றியதனால்,  "கெட்டுவிடும்" என்று கூறுவாரானால், கலைஞர் "எந்தப் பக்கம்" எனபதை உலகத் தமிழர்கள் மீண்டும் புரிந்து கொள்ள வேண்டும்.