Tuesday, January 24, 2012

மொழிப்போர் தியாகிகள் நாளில் உண்மையான சூளுரை.

இந்தி எதிர்ப்பு தியாகிகள் எனப்படுபவர்கள் தமிழ்நாட்டில் "தாய் மொழி தமிழுக்காக" போராடியவர்கள்.தாய் மொழி தமிழை கற்க விடாமல், மாற்று மொழி இந்தியை தமிழ்நாட்டு மக்கள் மீது திணிப்பது என்ற ஒரு தந்திரத்தை மத்திய அரசு எடுத்தபோது, அதை எதிர்த்து வீறு கொண்டெழுந்த போராட்ட வரலாற்றில்தான், தமிழ்நாட்டு அரசியலில் "திராவிட" கட்சிகள் ஆட்சிக்கு வந்தன. தந்தை பெரியார் தொடங்கி வைத்த அந்த போராட்டம் இன்று வரை உயிர் பெற்று நிற்கிறது. அதனால்தான் இன்றும் நாளைய சனவரி இருபத்தைந்தாம் நாளை திமுக, அதிமுக, மதிமுக, நாம் தமிழர், ஆகிய கட்சிகளும் "மொழிப்போர் தியாகிகள் நாளாக ", " வீரவணக்க நாளாக ", மொழிப்போர் ஈகிகள் நாளாக" அறிவித்துள்ளனர்.

முதல் கட்ட மொழிப்போர் 1938 முதல் 1940 வரையும், இரண்டாம் கட்ட மொழிப்போர் 1943 முதல் 1950 வரையிலும் , மூன்றாம் கட்ட மொழிப்போர் 1950 முதல் 1961 வரையிலும், நான்காவது கட்ட மொழிப்போர் 1963 முதல் 1965 வரையிலும் தமிழ்நாட்டில் நடந்தது. அதற்குப்பின் இன்றுவரை அந்த மொழிப்போர் நிகழ்வுகளில், தனித் தானே தியாகம் செய்த தமிழின உணர்வாளர்களின் நினைவாகவும், காவல்துறை துப்பாக்கி சூட்டில் தியாகியான தமிழின உணர்வாளர்களின் நினைவாகவும், நாம் அந்த நாளை தியாகிகள் நாளாக கடைப்பிடிக்கிறோம். இந்த நேரத்தில் ஒரு வாக்குறுதியை நாம் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. இந்தியாவின் முன்னால் தலைமை அமைச்சர் ஜவஹர்லால் நேரு ஒரு வாக்குறுதியை தமிழ்மக்களுக்கு தந்தார். அதில் தமிழ் பேசும் மக்களும், இந்தி பேசாத மாநிலத்தின் மக்களும், தாங்களாகவே முன்வந்து, இந்தி மொழியை ஏற்கும்வரை மத்திய அரசு இந்தியை திணிக்காது என்று ஒரு வாக்குறுதியை தந்தார். அந்த வாக்குறுதி "காற்றில்" பறக்க விடப்பட்டது என்பது வேறு ஒரு செய்தி. ஆனால் இப்போது ஆட்சியில் இருக்கும் தலைமை அமைச்சர் கூறியுள்ள வாக்குறுதியையாவது நிறைவேற்ற வேண்டாமா என்ற கேள்வியை நாம கேட்கவேண்டும்.


அது என்ன மன்மோகன் கொடுத்த வாக்குறுதி? 2004 ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற பின் , ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பாக ஒரு "குறைந்த பட்ச வேலை திட்டம்" முன்வைக்கப்பட்டது. அதில் தமிழ்மொழியை இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்குவதற்கு ஒரு வாக்குறுதி கொடுக்கப்பட்டது. அதாவது "அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில்" உள்ள அனைத்து மொழிகளையும் "இந்தியாவின் அட்சி மொழியாக" ஆக்குவதற்கான ஒரு ஆய்வு குழுவை நியமிப்போம் என்று கூறியிருந்தார். அதை மன்மோகன்சிங் 2004 ஆம் ஆண்டு மே ௨௭ ஆம் நாள் வெளியிட்டார்.அதன்படி,டாக்டர் சித்தகாந்த் மகாபத்ரா குழுவை நியமித்தார். அந்த குழுவும் தனது ஆலோசனைகளை மன்மோகன்சிங்கிடம் கொடுத்து விட்டது. அந்த குழு தனது ஆலோசனைகளை கொடுத்து நான்கு ஆன்டுகள் ஆகியும் மத்திய அரசு அந்த அறிவுரைகளை கிடப்பில் ஒட்டு விட்டு சும்மா இருக்கிறது. அதை இப்போது மொழிப்போர் தியாகிகள் நாள் கடைப்பிடிக்கும் திமுக வும் தனது கூட்டணி தலைவர்களிடம் கேட்கவில்லை. ஆகவே இந்த நாளில் நாம் உரத்த குரலில் அந்த சித்தகாந்த் மகாபத்ரா குழு அறிக்கையை வெளியிடு என்று மத்திய அரசை கேட்கவேண்டும். அதுவே இந்த நாளின் "கோரிக்கையாக" எழ வேண்டும். அதுவே "தமிழ்மொழியாயும்" இந்திய அட்சி ம்கொழி ஆக்குவதற்கு இட்டு செல்லும். அது மட்டுமே மொழிப்போர் தியாகிகளின் கனவை நனவாக்க ஒரே வழி.