Thursday, April 19, 2012

மகேஷின் கட்டுரையும், அதையொட்டி புதிய கோணமும்.

கீற்று இளைய தளத்தில் வெளிவந்த மகேஷின் கட்டுரை.

நேற்று(15.04.2012) முதல் இந்தியாவின் கிழக்கு கடல் பகுதியில் மீன் பிடி தடைக் காலம் தொடக்கி உள்ளது. இனி 45 நாட்கள் இயந்திர படகு மீனவர்கள் கடலில் சென்று மீன் பிடிக்க முடியாது.

மீன் வளத்தை பெருக்கும் பொருட்டு, மீன்களின் இனப்பெருக்க காலத்தில் இந்த தடை விதிக்கப்படுவதாக அரசுகள் கூறுகின்றன. மேலோட்டமாக பார்க்கும்போது மீனவர்களுக்கு நன்மை பயக்கும் விஷயமாக இது தோன்றினாலும், இதிலிருக்கும் உள்குத்து மிக மோசமானதாகும்.

பல கடல் சார் விஞ்ஞானிகள், அக்டோபர் மாதம் தான் இந்திய கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலம் என்று சொல்லி கொண்டிருக்கும் பொழுது, மத்திய அரசு ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவின் கிழக்கு கடலிலும், ஜூன், ஜூலை இந்தியாவின் மேற்கு கடலிலும் மீன் பிடி தடை விதிக்க காரணம் என்ன? அதே போல் ஒரே சீதோஷ்ண நிலை கொண்ட இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் தடை விதிக்கக் காரணம் என்ன?



மீன்பிடி தடை என்ற பெயரில் வெளி பொருத்தும் இயந்திரப் படகுகள் தவிர மற்ற அனைத்து இயந்திரப் படகுகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. இது சட்டம் போடுபவர்களின் உச்சபட்ச அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மீன்கள் தனது முட்டைகளை பெரும்பாலும் பாறை இடுக்கிலும் மணற்பரப்பிலுமே இடுகிறது. ஏற்கனவே காங்கிரஸ் அரசால் மீனவர்களுக்கிடையில் திணிக்கப்பட்ட, இழு வலையால் மட்டுமே தொழில் முறை பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. (காங்கிரஸ் ஆட்சியில் இழுவலை தொழில் திணிக்கப்பட்டதால், மீனவரல்லாத உள்ளூர் மற்றும் வெளியூர் பண முதலைகள் மீன் பிடித் தொழிலில் கால் பதித்தது தனிக் கதை). இழு வலை என்பது கடலின் அடி ஆழத்தில் மணற்பரப்பு வரை சென்று கிடைக்கும் அனைத்தையும் வாரி சுருட்டும், மிகச் சிறிய கண்ணிகளை கொண்ட, பலம் வாய்ந்த நைலான் வலை. மற்ற அனைத்து பாரம்பரிய வலைக் கண்ணிகளும், தூண்டில்களும் முதிர்ந்த மீன்களை மட்டுமே பிடிக்கும் வகையிலே அமைக்கப்பட்டிருக்கும். பாரம்பரிய வலைகள் அனைத்தும் கடலின் மேல் பகுதியிலும், நடுப் பகுதியிலும் மீன்பிடிக்கும் வகையிலேயே அமைக்கப்பட்டிருக்கும். சிறிய அளவிலான மீன்கள் தப்பி செல்லும் வகையில் பெரிய அளவிலான கண்ணிகளே பாரம்பரிய வலைகளில் பின்னப்பட்டிருக்கும். இவை பெரும்பாலும் பருத்தி நூல் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. ஆனால் மீன் பிடி தடைக் காலத்தில் பாரம்பரிய வலைகள் மற்றும் தூண்டில்களைப் பயன்படுத்தும் இயந்திரப் படகுகளையும் தடை செய்யக் காரணம் என்ன?

அதற்குக் காரணம், இந்தக் கால கட்டங்களில் வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் இந்தியக் கடல் பகுதியில் மீன் பிடிக்க இது உதவியாக இருக்கிறது. ஆம் இந்த மீன் பிடி தடையானது வெளிநாட்டு மீன் பிடிக் கப்பல்களை கட்டுப்படுத்தவில்லை. ஒரிசா கடல் பகுதி வரை வந்து சிங்கள மீனவர்களும் இந்த காலகட்டத்தில் மீன்களை அள்ளி செல்கின்றனர். வெளிநாட்டு மீன் பிடி கப்பல் முதலாளிகளுக்கு ஆதரவாக இந்த சட்டம் தொடர வேண்டுமா? இது எப்படி ஒரு உண்மையான மீன் பிடி தடைக் காலமாக இருக்க முடியும்? இவையெல்லாம் சட்டம் செய்பவர்களின் அறியாமையா? அல்லது தெரிந்தே செய்யும் அயோக்கியத்தனமா?

மீன் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் முக்கியமான காரணிகள் இழு வலை மட்டுமல்ல, ஆலைக் கழிவுகள், அணு உலைக் கழிவுகள், சாயப் பட்டறை கழிவுகள், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்களினால் கடலில் கலக்கும் பல ஆயிரம் காலன் கொதிநீர் - இப்படி பல முக்கியமான காரணங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் 45 நாட்கள் நிறுத்திவைக்க இந்த அரசுகள் உடன்படுமா?

பெரும்பாலும் கரைப் பகுதியில், மீன்கள் குறிப்பாக இறால் இனப்பெருக்கம் செய்வது ஆறுகள் வந்து கலக்கும் முகத்துவாரங்களில் தான். ஆனால் இன்று மணற் கொள்ளைகளால் பாலாறு உட்பட பல ஆறுகளும் கடல் வரை வந்து சேருவதில்லை. அது மட்டுமின்றி வந்து சேரும் ஆறும் முழுவதுமாக ஆலைக் கழிவுகளால் ரசாயனம் கலந்த விஷமாகத்தான் கடலில் வந்து கலக்கின்றது.

இப்பொழுது சொல்லுங்கள் இந்த மீன் பிடி தடைக் காலம் உண்மையில் யாருக்காக?

பி.கு:- புதுச்சேரி அரசு மீன்பிடி தடைக் காலங்களில் விசைப் படகு உரிமையாளர்களுக்கு 30,000 இழப்பீடு தொகையாக வழங்குகிறது. இந்த நடைமுறை இதுவரை தமிழ்நாட்டில் பின்பற்றப் படவில்லை.

- எஸ்.ஏ.மகேஷ், அகில இந்தியப் பாரம்பரிய மீனவர் சங்கம்

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்










மகேஷ் கட்டுரை ஒரு நல்ல தொடக்கம்.எல்லா நாடுகளையும் போல, இந்திய நாடும் இரண்டு உலகங்களை கொண்டிருக்கிறது. அதில் ஒன்று "நிலம் சார்ந்த உலகம்". இன்னொன்று "கடல் சார்ந்த உலகம்". இந்த நிலம் சார்ந்த உலகத்தில் உள்ள அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கமும் இங்கே அரசாங்கம் என்று ஒன்றை கட்டி கொண்டு ஆட்சி நடத்துகிறார்கள். கடல் சார்ந்த உலகில் உள்ளவர்களுக்கு அதில் எந்த பங்களிப்பும் இல்லை. ஆனால் கடல் சார்ந்த உலகத்தாரை இந்த நிலம் சார்ந்த உலகத்தார் தங்களது ஆட்சிக்குள் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள். கடல் சார்ந்த உலகத்தின் முதுகெலும்பான மீனவர்கள் பூர்வகுடி மக்கள். அவர்களை "பழங்குடிகள்" என்று அழைக்க வேண்டும். ஆனால் நிலம் சார்ந்த ஆட்சியாளர்கள், அந்த கடல் சார்ந்த பழங்குடி மக்களை, தமிழ்நாட்டில் "மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்" என்று அழைக்கிறார்கள்.

அதாவது தங்களுக்கு புரிந்த தங்கள் உலகின் சொல்லாடல்களுக்குள், அந்த கடல் சார்ந்த பழங்குடிகளை "கட்டுப்படுத்தி" அல்லது "அவர்கள் மீது தங்களது "நாட்டாமையை" திணித்து, அவர்களை தாங்கள் உருவாக்கியுள்ள இட ஒதுக்கீடு பட்டியலில் ஒரு இடத்தில் "பாவம் கிடக்கட்டும்" என்று போட்டு வைத்து விட்டார்கள். அந்த மீனவர்களுக்கு அதன்மூலம் ஆட்சியாளர்கள் "பிச்சை" போடுவது போல ஒரு இடத்தை ஒதுக்கியுள்ளார்கள். அந்த விவகாரமே" இந்த மீனவர்களுக்கு புரியாததால் அவர்களும் அதிகம் அது பற்றி கண்டுகொள்ள வில்லை. அதனால்தான் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை கூட அவர்கள் அதிகம் பயன்படுத்தவதில்லை. அல்லது பயன்படுத்தும் நிலையில் இல்லை.

இப்படிப்பட்ட மீனவ மக்களை இந்த இன்னொரு உலகின் எசமானர்கள் எப்படி தீர்மானிக்க முடியும்? அதற்கு முற்று புள்ளி வைக்க வேண்டும். நேபாளத்தில் மாவோவாதிகள் தனி படை வைத்திருந்தார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன், இப்போது அந்த புரட்சிகர படையும், ஏற்கனவே உள்ள ராணுவத்துடன் இணைக்கப்ப்ட்டள்ளது. அப்படியானால் அரசுக்கு முக்கிய அங்கமான படையில், புரட்சிக்காக உருவாக்கப்பட்ட "மக்கள் படையும்" இருப்பதால், நாளை எந்த வர்க்க நலனும், உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராக முழுமையாக் செயல்படுத்தலில் இருந்து "தடை" போட ஒரு மக்கள் படை எழ முடியும். அதே சூழல் இந்த மீனவ மக்களுக்கு, "தமிழீழத்தில்" உருவானது. தம்பி பிராபகரன் தலைமையில் உருவான படையில், "கடல் புலி படை" முக்கியமானது. ஆட்சிக்கு ஈழத்தமிழர்கள் எழும் போது, கடல் புலிகளின் பங்கை விட்டு விட முடியாது. அவர்கள் தங்கள் படையுடன் தனகளது மீனவ மக்களது நலன்களை "ஆட்சிக்குள்"எடுத்து வைக்க முடியும். நிலம் சார்ந்த ஆட்சியாளர்கள் , கடல் சார்ந்த ஆட்சியாளர்களுடன், சேர்ந்துதான் ஆள முட்யும். அவ்வாறு புலிகள் மட்டுமே இயல்பாகவே இந்த நிலம்- கடல் என்ற சிக்கலுக்கு தீர்வு கொடுக்கும் ஒரு அனைத்து நாட்டு கொள்கைவாதிகள்.

மார்கிசம் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் ஆன தத்துவம்தான். ஆனால் அதுகூட, இந்த நிலம்-கடல் என்ற வேறுபாட்டை புரிந்து கொள்ள வில்லை. நிலம் சார்ந்த அறிவுஜீவிகளுக்கு, கடல் சார்ந்த "அறிவு" கிடைக்க வாய்ப்பில்லை. கடல் சார்ந்த பழம்குடி சமூகத்திலிருந்து வந்த காரணத்தால், பிரபாகரனால் ஒரு கடல் சார்ந்த படையை உருவாக்கி நிறுத்த அதிகம் சாத்தியப்பட்டது. அதுவே அந்த மக்களின் விடுதலைக்கும் வழி தரும். ஆகவே "தமிழன் மட்டும்தான்" இந்த இரு உலகம் தத்துவத்தில், கடல் சார்ந்த பழங்குடிகளை "ஆட்சிக்கு " தயார் செய்வதில் இயற்கையாகவே ஈடுபட்டான் என்பதற்கு புலிகள் இயக்கம் ஒரு சான்று. அபப்டிப்பட்ட தமிழ் தேசிய இனத்தை, எப்படி விவரம் அறிந்த ஏகாதிபத்தியவாதிகள் விட்டு வைப்பார்கள்? தமிழ் தேசிய இனம் மட்டுமே ஏகாதிபத்தியத்திற்கு மரண அடி கொடுப்பதற்கான ஒரே முதன்மை தேசிய இனம் என்பது பல இடங்களில் இப்போது நிரூபணமாகி நிற்கிறது.


அபப்டிப்பட்ட படையுடன் மீனவ பழங்குடிகள், ஆட்சியில் பங்கு பெறும்வரை, " சலுகை" அளவில் அவர்களது கோரிக்கைகளை நிறைவு செய்ய "பழங்குடிகள் " என்ற பட்டியலில் அந்த மக்களை சேர்த்து அதன்மூலம் அவர்களுக்கான " தனி ஒதுக்கீடு கல்வி, வேலை வாய்ப்பு, சட்டமன்ற , நாடாளுமன்ற தொகுதிகள்" கொடுக்கப்பட வேண்டும்.அப்போதுதான் மீன்பிடி தடை காலமும், வேறு ஒரு கூட்டத்திற்கு பயன்படுவதற்காக ஒதுக்கப்படாமல், மீனவ மக்களின் நலனுக்கு ஏற்றவாறு ஒதுக்கப்படும்.. ,

No comments:

Post a Comment