Friday, July 29, 2011

சீ.பி.எம். திடீரென இலங்கைத் தமிழர் மாநாடு போட காரணம் என்ன?

நாளை அதாவது ஜூலை 30 ஆம் நாள் சென்னையில் "இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தீர்வு என்ன?" என்பதாக ஒரு மாநாடு போடுகிறார்கள். இது என்ன மார்க்சிஸ்டுகளுக்கு புது அக்கறை என்று கேட்டு விடாதீர்கள். அவர்கள் இத்தனை ஆண்டுகளும் ஏறத்தாழ அறுபது ஆண்டுகளாக அந்த பிரச்னையை "ஆய்வு" செய்துகொண்டு இருக்கிறார்கள். மார்க்சிஸ்டு என்றால் மற்றவர்களைப்போல உடனடியாக ஒரு தீர்வை நம்புவதும், அதை பரப்புவதும், அதையே நடைமுறைப்படுத்த துணிவதும் முடியுமா என்ன? நிதானமாக அங்கே இருக்கும் வர்க்க சக்திகள் பற்றி ஆய்வு செய்து, அதன்பிறகு அங்கே இருக்கும் கம்யுனிஸ்ட் கட்சியிடம் கருத்து கேட்டு, பிறகு அந்த பிரச்சனையில் , கம்யுனிஸ்ட் கட்சி தலைமையில் ஆட்சி நடக்கும் அருகாமை நாடுகளின் கருத்து என்ன என்று தெரிந்து கொண்டு, பிடகு உலக நாடுகள் மத்தியில் என்ன கருத்து இருக்கிறது என்று தெரிந்து கொண்டு, எக்கதிபத்தியங்கள் என்ன நிலைப்பாடு எடுத்திருக்கிறார்கள் என்று கவனித்து, கடைசியாக தாங்கள் வாழும் நாட்டின் அரசு என்ன சொல்கிறதோ அடஹ்ர்கு விரோதம் இல்லாமல் முடிவு எடுக்க வேண்டாமா?


மூச்சு விடாமல் இத்தனை விவரங்களையும் சேர்க்கும் மார்க்சிசிடுகள், அதை தங்கள் "அரசியல் தலைமைக் குழு" விடம் காட்டி, அவர்கள் பொதுச்செயலாளரின் நேரடிப் பார்வைக்கு வைத்த பிறகு, அவர்கள் அத்தனை கருத்துகளையும் "தொகுத்து எழுதி" பிறகுதானே கட்சி முடிவு செய்ய முடியும்? அப்படி எடுக்கும் முடிவும் "தப்பித் தவறி" கூட, "தெலுங்கான" பிரச்சனை பற்றி குழப்பம் ஏற்பட்டது போல, " மேற்கு வங்கத்தில் "கூர்காலாந்த்" பிரச்சனை மீது முடிவு எடுக்காமல் தள்ளிப் போட்டு, "மாநில ஒற்றுமையை " காப்பாற்றியது போல , "பிரிவினைவாதம்" தலைதூக்க அனுமதிக்க கூடாது அல்லவா? அட. மார்க்சிசிடுகளே, நீங்கள் "தெலுங்கானாவில்" எடுத்த முடிவான, "ஒன்றுபட்ட ஆந்திரா" என்பது தெலுங்கான தவிர்த்த, ராயலசீமா, கடலோரம் ஆகிய ஆந்திராவின் பாணனை திமிங்கிலங்களுக்கு, அதாவது ரெட்டிகளுக்கும், கம்மா நாயுடுகளுக்கும், தெலுங்கானா பகுதியில் நிலங்களை ஆதிக்கம் செலுத்தவே உதவும். அதனால்தான் அங்கே " தெலுங்கானாவை ஆதரிக்கும் மாவோவாதிகள்" செல்வாக்கு உயர்கிறது.

தோழர்களே நீங்கள் மேற்கு வங்கத்தில் மாநிலத்தின் ஒற்றுமையை கட்டிக் காக்க எண்ணி, "கூர்காலாந்து " மக்களின் நியாயமான உரிமையை மறுத்துவந்ததால், இன்று மம்தா அதையே ஆயுதமாக்கி, "அதிக சுயாட்சியை கூர்காலாண்டுக்கு" வழங்கி நற்பெயர் பெற்று விட்டார். இது இன்றைய கதை. நேற்று அதாவது 1978 ஆம் ஆண்டு, முழு அஸ்ஸாம் மாநிலமும் "மாணவர் எழுச்சியில்" எழுந்த போது, நீங்கள் அதை எதிர்த்து நிலை எடுத்ததால் உங்களை அந்த மாநிலத்தை விட்டே மாணவர்கள் எழுச்சி விரட்டி அடித்ததே நினைவு இருக்கிறதா? இவாறு எங்கெல்லாம் "சுயாட்சி முழக்கம்" எழுகிறதோ அங்கெல்லாம் ஏதாவது காரணம் சொல்லிக்கொண்டு, அதை நீங்கள் எத்ரித்து வருகிறீர்கள். அதுதான் உங்கள் வரலாறாக இருக்கிறது. "உழைக்கும் மக்களின் ஒற்றுமை" எண்பதை பிரிவினைவாதிகள் உடைத்து விடுவதாக கற்பனைக் கதையை அவிழ்த்துவிடும் நீங்கள் "அடக்கப்படும் தேசிய இனங்களையோ, அடக்கப்படும் பிரதேச மக்களையோ, அதிகாரப் பரவலாக்குதளுகாக போராடும் மக்களையோ கண்டுகொள்வதில்லை. அதன்விளைவு அந்த குறிப்பிட்ட மக்களிடமிருந்து நீங்கள் "தனிமைப்படுவதைதவிர" வேறு வழியில்லை.


இப்போது இலங்கை பிரச்சனை எண் உங்களுக்கு "முக்கியமாக" படுகிறது? இன்று "தமிழ்நாடு "விழித்துக் கொண்டுள்ளது. நீங்கள் இருக்கும் "கூட்டணிதலைமை" இலங்கை விசயத்தில் ஒரு முடிவை எடுத்து உள்ளது. இலங்கை தமிழருக்காக பேசுகிறது. ராஜபக்சே உலக அளவில் "போர்க்குற்றவாளி" என்று அம்பலப்பட்டு கிடக்கிறார். இந்தி பேசும் மாநிலங்களில் கூட "ஹெட்லைன்ஸ் டுடே" வெளியிட்ட "சேனல் நாலு" பகிரங்கமாக போர்குற்றம் பற்றி மக்களிடம் எடுத்து சென்று விட்டது. ஆதியோ ஒட்டி மத்திய அரசும் ஒரு முடிவு எடுத்தாக வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. .மார்கிசிடுகளின் தோழர்களாக கருதப்பட்ட "ஜேவிபி கட்சிகூட" தேர்தலில் தோற்று விட்டது. அதனால் தாங்களும் ஏதாவது தமிழருக்கான தீர்வு என்று கூறவேண்டிய கட்டாயம். இல்லாவிடில் சீ.பி.ஐ. என்ற மற்றொரு இடதுசாரி கட்சி, "தமிழருக்கு ஆதரவாக" செல்வது அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடும். அதனால் இலங்கையின் ஒற்றுமையை பாதுகாக்க சீ.பி.எம். இறங்குகிறதா என சந்தேகம் எழுகிறது.

அதனால்தான் தோழர்களே, நீங்கள் லெனின் "தேசிய இனங்கள்" பற்றி கூறியதை படியுங்கள். ஸ்டாலின் " தேசிய இன சுதந்திரம்" பற்றி சொன்னதை செவி மடுங்கள். "பிரிந்து செல்வதற்கான் ஆரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமை" என்ற சொற்கள் உங்கள் கண்களுக்கு புலப்படட்டும். அதை "ஈழத் தமிழர்கள்" எப்படி பெற முடியுமோ அவர்கள் பெற்றுக் கொள்ளட்டும் என்று சொல்லத் தோன்றும். ஆயுதம் தாங்கிய போறோ, அரசியல் ரீதியான போராட்டமோ, எதுவானாலும் அடக்கப்படும் சிறுபான்மை தேசிய இனத்திற்கு "பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமை" மட்டுமே விடுதலை வாங்கித் தரும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதை அந்த நாட்டு ஈழத் தமிழ் குடிமக்கள் "தமிழீழம்" மூலம் பெற்றுக்கொண்டாலும் அது அவர்களது வழி என்று கூறி குறுக்கே நிற்காதீர்கள். இன்று உலக அரங்கில் "ஏகாதிபத்தியத்தின் வளர்ந்த வடிவமான வல்லரசுகளுக்கு எதிரான சக்தி தேசிய இனங்கள்" தான் எண்பதை உணருங்கள்.