Wednesday, March 9, 2011

மன்னர் மண்டியிட்டாரா?

தன்னை ராஜ ராஜ சோழனின் வாரிசு என்று அழைத்துக்கொண்ட, கேரளாவின் மாவேலி அரசரின் ஆட்சி போல ஆளும் மன்னர் என்று பெருமைப்பட்டுக்கொண்ட ஒருவர், தமிழ் மன்னர்கள் மக்களாட்சியை நடத்தத் வந்தனர் என்று மன்னர்களை அவர்களது ஆட்சிகளை நியாயப்படுத்தி வாதிட்ட ஒருவர் இன்று சோனியா என்ற காங்கிரஸ் தலைவியிடம் மண்டி இட்டுவிட்டாரா? இருக்கவே முடியாது. காங்கிரசிடம் கேட்ட தொகுதிகளை கொடுத்திருக்கலாம். காங்கிரசிடம் பணம் எதிர்பார்த்து தமிழ்நாட்டு மன்னர் செல்லவேண்டிய அவசியம் இல்லை. காங்கிரஸ் வாக்குகளில்தான் தமிழ்நாட்டில் வெற்றி பெறவேண்டும் என்ற நிலையும் தி.மு.க.விற்கு இல்லை.பின் எதற்காக தி.மு.க. தலைமை காங்கிரசிடம் மண்டியிடவேண்டும்?

தி.மு.க. தலைமை தேர்தல்களை சந்திக்க புதிய உத்திகளை திருமங்கலம் தேர்தல் தொடங்கி நடைமுறைப்படுத்துகிறது. அது இந்திய நாடாளுமன்ற டேஹ்ர்தல்களுக்கு புதிய உத்திதான். மக்களிடம் பெற்றதை மக்களிடமே தருவது என்பது அதற்கு பெயர். நம்மை ஆட்சியி அமரவைத்த மக்களால்தான் நமக்கு அதிகமான நிதி சேர்ந்தது என்று ஒப்புக்கொள்ளும் தி.மு.க.தலைமை அதில் ஒரு பகுதியை அந்த மக்களுக்கே திருப்பி தருவது என்று நடைமுறை தந்திரத்தை செயல்படுத்தி வருகிறது. இத்தகைய தர்மச்செயலை பலரும் பலமாதிரி பேசுகிறார்கள்.தேர்தல் நேரம் இல்லாதபோது, அரசு மக்களுக்கு இலவசமாக மழை, வெள்ள நிவாரணம் கொடுக்கலாம். இலவசமாகவான்ன தொலைகாட்சி பெட்டிகளை கொடுக்கலாம். சமையல் வாயு அடுப்புகளை கொடுக்கலாம். முதியோருக்கு கண்ணாடி கொடுக்கலாம். ஏழைகளுக்கு செருப்பு கொடுக்கலாம்.மாணவர்களுக்கு சிக்கொள் கொடுக்கலாம். தேர்தல் நேறத்தில் மட்டும் கொடுக்க கூடாது. இது என்னய்யா சட்டம் என்று கேட்கிறது தி.மு.க.தலைமை.

தேர்தல் நேரத்தில் மக்களிடம் பெற்றதை மக்களிடமே கொடுக்கும் தி.மு.க.தலைமையின் பெருந்தன்மையை யாரும் புரிந்துகொள்ள மறுக்கிறார்களே? அது என்ன நியாயம்? தேர்தல் ஆணையத்திற்கும் அது புரியவில்லை. மக்கள் இன்று ஏழைகளாக இருப்பது தேர்தல் ஆணையத்திற்கு தெரிய வேண்டாமா? அவர்களை ஒரு மன்னர் ஆட்சி ஏதோ முடிந்த அளவு தேர்தல் நேரத்திலாவது வசதியாக வைத்திருக்க முயல்கிறதே? இது விளங்க வேண்டாமா? இந்த தேர்தல் ஆணையம் எப்போதுமே மாநில கட்சிகள் சொன்னால் கேட்பதில்லை. மத்தியில் உள்ள எதிர்க்கட்சி சொன்னாலும் கேட்பதில்லை. மாறாக மத்தியில் ஆளும் கட்சி அதுவும் காங்கிரஸ் போன்ற நூறு ஆண்டு கட்சி சொன்னால் மட்டும்தான் கேட்கிறது.


அதனால்தான் எத்தனை மண்டியிட்டாலும் பரவாயில்லை, மன்னரின் மூத்த மைந்தன் கண்டுபிடித்த இந்த தேர்தல் தந்திரத்தை எப்படியாவது அமுல்படுத்தி மக்களுக்கு அவர்களது சொந்தமான நிதியில் ஒரு சிறு தொகையாவது போய்சேர வேண்டுமே என்று மன்னர் கவலைப்பட்டு தேர்தல் ஆணையஹ்திற்கு புரியும் மொழியில் அதை சொல்ல காங்கிரஸ் தலைமையுடன் மண்டியிட்டாவது கூட்டணி என்று அமைத்துக்கொண்டுள்ளார்.மன்னர்களை புரிந்துகொல்பதே இந்த தமிழர்களுக்கு கடினம் போலிருகிறது.அதுவும் தமிழ் மன்னர்களை தமிழர்கள் புரிந்துகொள்ளவே மாட்டேன் என்கிறார்களே?


தொழிற்சங்கம் நடத்துபவர்களுக்கு இது புரிய வேண்டும். தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய சம்பளத்தின் ஒரு பகுதியே போனஸ் என்ற ஊக்கத்தொகை என்று கூறுவதில்லையா? அதுபோலத்தான் இதுவும். இப்போது காங்கிரஸ் தி.மு.க.வுடன் சேர்ந்தாகிவிட்டது. இனி தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்து தி.மு.க.வின் செயல்தந்திரத்தை முறியடிக்க முடியுமா?