Saturday, January 15, 2011

தமிழன் என்றால் உழவன் என்றல்லோ பொருள்

தை மாதம் முதல் நாள். பொங்கல் திரு நாள். அறுவடை திருநாள். உழவுத்தமிழன் தான் குடும்பத்துடன் வயலில் வியர்வை சிந்தி, உழைத்து சேர்த்த நெல்மணிகளை அறுத்து குவித்து மகிழும் நாள். அதையே பொங்கலாக பொங்கி, குடும்பம், குடும்பமாக கரும்பு கட்டி கொண்டாடும் திருநாள். அதனால் அதுவே ஆண்டாண்டு காலமாக வழங்கப்படும் தமிழர் திருநாள். உழவுத்தொழில் தமிழனின் பழம் பெரும் தொழில். உழுது, விதைத்து, தண்ணீர் பாய்ச்சி, நாத்து நட்டு, வரப்பு கட்டி, களை பிடுங்கி, உரமிட்டு, அறுவடைக்கு காத்திருக்கும் உழவுத்தமிழனை தமிழகம் மரபு வழியில் சந்தித்து வந்தது. அதையே பசுமை புரட்சியின் கதாநாயகர்களும், விவசாயத்தை அறிந்திராத அரசியல்வாதிகளும், தமிழ்நாட்டின் இயற்கை விவசாயத்தை திட்டமிட்டு அழிக்க தலைப்பட்டனர்.வீரிய விதைகளை இறக்கிவிட்டு, மரபு விதைகளை விரைந்து அழிப்பதில் முன்னேறினர். அமெரிக்கா தாயாரிப்பான வீரிய விதைகளால் உருவாகும் பூச்சிகளை அழிக்க, பூச்சி மருந்துகளை அங்கிருந்தே இறக்குமதி செய்தனர். அதுபோன்ற பூச்சிமருந்து தயாரிப்புதான், போபாலில் நச்சு வாயுக்களை கக்கி மனிதர்களை அழித்தது. அதுவும் அமெரிக்கா பன்னாட்டு மூலதன நிறுவனம்தான். தவிர செயற்கை ரசாயன உரங்களை கொண்டுவந்து கொட்ட தொடங்கினர். இவையெல்லாமே பன்னாட்டு நிறுவங்களுக்கு வங்கத்தை கொடுத்தது.
நிலமற்ற உழவனோ, சிறு நில உழவனோ, நடுத்தர விவசாயியான உழவனோ, நசுக்கப்படும் நிலை கண்டு, ஆள்வோர் கவலை கொள்ளவில்லை. நிலங்களும் இப்போது பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலை போகின்ற நிலைமை. இயற்கை விவசாயம் மட்டுமே, மரபு வழி விதிகளும், உரங்களும், மட்டுமே விவசாயத்தை காப்பாற்றும் என்ற நிலைமை அதவே இயக்கமாக ஆகின்ற ஒரு சூழல். இத்தகைய சூழ்நிலையில் இந்த பொங்கல் வருகிறது. நமதி உழவர்களின் உழைப்பால் விளைந்த விளைபொருள்களை சந்தைக்கு எடுத்துச்செல்லும்போது, அமெரிக்காவின், ஐரோப்பாவின் மானியம் பெரும் விவசாயி உறவாக்கிய விலை பொருள்களை சந்தைஎன்கும் குவிக்க ஊக்குவிக்கும், ஒரு அரசு. அதற்காகவே உலக வர்த்தக அமைப்பு மூலம் செய்துகொள்ளும் ஒப்பந்தத்தில் இந்திய அரசு வெளிநாட்டார் பொருள்களை சந்தையில் இறக்குகிறது. இதுவே இந்திய விவசாயத்தை நசுக்க வெளிசக்திகள் செய்யும் சதியாக ஆகிறது. இத்தகைய சூழலில்தான் இந்த பொங்கலும் வருகிறது. உழவுத்தமிழன் கணக்குப்பார்க்கும் நாளாக இதை காணவேண்டும்.
பயிர் நிலங்கள் யார் கையில்? உழுபவன் கையில் இருக்கும் நிலங்கள் ஊருக்கே உணவை தரும். சோம்பேறிகள் கைகளில் இருக்கும் நிலங்கள் தரிசாகும். தரிசாக போடப்படும். பயிர் நிலங்கள் சோம்பேறிகள் கைகளில் குவிந்து கிடந்தால் உழைப்பவன் அதிலே கூலியாகிறான். உழவு தொழிலை ஈடுபாட்டுடன் செய்பவன் உழும் நிலத்தின் உரிமையாளனாக இருந்தால் மட்டுமே உழவுக்கும், தொழிலுக்கும் ஊக்கம் கிடைக்கும். சிலர் கைகளில் குவிந்து கிடக்கும் பயிர் நிலங்களை, உழுபவன் கைகளில் பெரும்போதே, உழவுத்தமிழர் வாழ்வு பெறுவான். உழவர் திருநாள், தமிழர் திருநாள் என்பது உண்மையானால் உழவர் விடுதலை மாத்திரமே தமிழர் விடுதலையை சாத்தியமாக்கும் என்ற உண்மையை உணரவேண்டும்.
பொங்குக பொங்கல். பொங்குக உண்மை. பொங்குக விடுதலை உணர்வு.