Sunday, January 2, 2011

ராஜா ---------தயா மோதல்.

ஆ.ராஜா வுடன் , தயாநிதி குழுவினர் முரண்பட்டு இருப்பதோ, முரண்பாடுகளை கிளப்பிவருவதோ, அதிகார மோதலுக்காக ராஜாவை அம்பலப்படுத்த தயா முயற்சி எடுப்பதோ தெரிந்த பழைய செய்திகள். ஆனால் அது அடுத்த கட்டத்திற்கு வந்துள்ளது புதிய செய்தி. டில்லி, சென்னை, பெரம்பலூர், திருச்சி, திருவானைக்காவல் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் திடீரென நடந்த சீ.பி.ஐ. சோதனைகள், யாரால் தூண்டப்பட்டன? யார் அதுகண்டு மகிழ்ந்தார்கள்? கட்டளை அனுப்பும் இடத்தில் அமர்ந்து கொண்டு அதற்கான ஆதாரங்களை கொடுத்தது யார்? இப்படிப்பட்ட கேள்விகள் இப்போது எழுந்துள்ளன.
இதுவரை ராஜா மீது தனக்கு இருந்த முரண்ப்பாட்டை அல்லது போட்டியை அல்லது தனக்கும், டாட்டாவுக்கும் இடையே இருந்த வர்த்தக போட்டியில் ஆ.ராஜா டாட்டாவால் பயன்படுத்தப்பட்டார் என்ற கோபத்தை, அய்யோபாவமான ராஜா மீது காட்டுவது தயாநிதிக்கு வாடிக்கையாக போய்விட்டது. இதில் ராஜாவின் அறிவு வளர்ச்சிக்காகவும், சிந்தனை திறமைக்காகவும், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர் என்ற காரணத்திற்க்காகவும் அவரை ஊழல்களுக்கு மத்தியிலும் ஆதரித்து வந்த சில நண்பர்கள் வசமாக இந்த வலையில் சிக்கிக்கொண்டனர். ஊழலுக்கு சாதியும், மதமும், ஏகபோக எதிர்ப்பும் கிடையாது என்று அந்த நண்பர்களுக்கு ஏனோ தெரியாமல் போய்விட்டது. இப்போது சோதனைகள் வந்தபின்பு அதை உணர்ந்திருப்பார்கள்.
சீ.பி.ஐ. சோதனைகளை நடத்த சில மனிதர்களின் வீடுகளை அடையாளம் காட்டியது தயாநிதிதான் என்றும், அதை அவர் தந்திரமாக தனக்கு இருக்கும் பழைய மற்றும் புதிய தொடர்புகளான அதிகார வர்க்க சக்திகளை பயன்படுத்திகொண்டார் என்றும் ராஜா ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். அதிலும் குறிப்பாக தலைமை அமைச்சர் அலுவலக சக்திகளையே பயன்படுத்திகொண்டார் என்பதே அவர்களது கணிப்பு. கணிப்பொ, கண்டுபிடிப்போ, இங்கே சென்னையிலும், திருச்சியிலும், பெரம்புலூரிலும் அந்த சீ.பி.ஐ. சோதனைகள் நடந்து கொண்டு இருக்கும் போது, தயாநிதி மாறன் டில்லியில் அமர்ந்து கொண்டு, அதை ரசித்துக்கொண்டும் அதை இயக்கிகொண்டும் இருந்தார் என்று கூறுகிறார்கள்.
தி.மு.க. தலைவர் குடும்பத்தில் உள்ள உள்பகை இந்த அளவுக்கு போயிருப்பதால் தான் இப்போது அனைத்தும் அம்பலமாகி இருக்கின்றன.

அழகிரி அபகரிப்பில் ,அமெரிக்கன் கல்லூரியா?

1881 ஆம் ஆண்டு மதுரையில் உருவாக்கப்பட்டது அமெரிக்கா கல்லூரி. அமெரிக்கா மதுரை மிஷன் என்ற பெயரில் ஒரு சொசைடி தொடங்கப்பட்டு, அதன் மூலம் இந்த கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. 129 ஆண்டுகள் பயணித்த இந்த கல்லூரியில் கடந்த எட்டு ஆண்டுகளாக சில சுய நல விரும்பிகளின் தலையீட்டால், தேக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த சுய நல விரும்பிகள் தங்கள் குடும்பத்திற்கும், தங்கள் அரசியலுக்கும் அந்த கல்லூரியை தாரைவார்க்க விரும்பி சில சித்து விளையாட்டுகளில் ஈடுபட்டுவருகிறார்கள். எந்த ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கும் உட்படாமல், சுதந்திரமான சொசைடிஆக அந்த சொசைடி நடந்துவந்தது. அதன்மூலம் மதுரையிலேயே மிக நல்ல பெயரை அந்த கல்லூரி பெற்றுவந்தது. பல அறிஞர் பெருமக்களை உருவாக்கித்தந்த கல்லூரி என்ற பெயரையும் அது பெற்றிருந்தது. தென்னிந்திய திருச்சபையுடன் நல்ல உறவை இந்த கல்லூரி கொண்டிருந்த போதும், தனித்து இயங்க அனைத்து உதவிகளையும் திருச்சபை இந்த கல்லூரிக்கு இத்தனை ஆண்டுகளாக செய்து வந்தது. தென்னிந்திய திருச்சபையை சேர்ந்த உறுப்பினர்கள் இந்த கல்லூரி விசயத்தில் தொடர்ந்து தங்களது ஒத்துழைப்பை நல்கி வந்தனர். இந்த சொசைட்டிக்கு சொந்தமான நிலம் நாற்பத்தேழு ஏக்கர். அதற்குள் இந்த கல்லூரியும் கட்டப்பட்டுள்ளது.
இதுவரை குறைந்த கட்டணத்தில் கல்வி கொடுக்கும் கல்லூரி என்ற நற்பெயரையும் இது எடுத்துள்ளது. சுய-நிதி கல்லூரிகள் எல்லாம் கட்டண கொள்ளை அடித்துவரும் இந்த காலத்தில் அந்த நாள் தொட்டு ஒரு நல்ல பெயருடன், நல்ல கல்வியை கொடுக்கும் ஒரு பிரபல கல்விநிலையம் மதுரையின் மத்திய பகுதியில் இருப்பது மதுரை மாநகருக்கே பெருமைப்படக்கூடிய விஷயம். இந்த கல்லூரியில் ஆசிரியர் நியமனத்திலும் சரி, மாணவர் சேர்க்கையிலும் சரி, விடுதி கட்டணங்களிலும் சரி, விடுதி உணவு கட்டணத்திலும் சரி, இதுவரை ஒரு நல்ல பெயரையும், முன்மாதிரி கல்லூரி என்ற பெருமையையும் இந்த அமெரிக்கன் கல்லூரி எட்டியிருக்கிறது என்றால் மிகையாகாது. அப்படிப்பட்ட ஒரு கல்லூரியை மதுரை மட்டுமின்றி, தென் மாவட்டங்களில் உள்ள அனைவரும் பாராட்டுவர். இந்த கல்லூரியில் தென்மாவட்டங்களை சேர்ந்த பலரும் இந்த கல்லூரியில் படித்து இன்று உலகம் முழுவதும் கல்வி பணியிலும், சமூக பணியிலும், நிர்வாக பணிகளிலும், நீதித்துறை பணிகளிலும், சிறப்பாக பெயர் பெற்று இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அனைவரும் உலகம் முழுவதிலுமிருந்து கேட்டுக்கொண்ட பிறகே நாம் இந்த கல்லூரியில் நடைபெறும் சிக்கல் பற்றி ஆராய்ந்து எழுத தலைப்பட்டோம்.
இந்த கல்லூரியை உருவாக்கும்போது உருவான சட்ட,திட்டங்களில், கல்லூரிக்கு முதல்வராக வருபவர்தான் கல்லூரியின் நிர்வாக குழுவிற்கு தலைமை தாங்க வேண்டும் என்று இருக்கிறது. அந்த விதியை அமுல்படுத்துவதில்தான் இப்போது பிரச்சனை எழுந்துள்ளது. தென்னிந்திய திருச்சபையுடன் நல்ல உறவை பேணும் வகையில் இந்த கல்லூரியின் நிர்வாக குழுவில், திருச்சபையின் பிஷப்பிற்கும் ஒரு நிர்வாக குழு உறுப்பினர் என்ற பொறுப்பு கொடுக்கப்படவேண்டும் என்று இருக்கிறது. அந்த வகையில் இந்த கல்லூரியின் பதினான்கு பேர் கொண்ட நிர்வாக குழுவில், திருச்சபையின் பிஷப்பும் ஒரு நிர்வாக குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அதன் விதிகளின் படி, கல்லூரி முதல்வர்தான் நிர்வாக குழுவிற்கு தலைமை தாங்குவார். திருச்சபை தனது உதவியுடன் இயங்கும் கல்வி சாலையில் மதச்சார்பற்ற அணுகுமுறை இருக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் அவ்வாறு கல்லூரி நிர்வாகத்தை முதல்வர் கையிலே கொடுத்துள்ளது. அதேசமயம் திருச்சபையின் பங்களிப்பும், பயன்பாடும் இருக்கும் விதத்தில் அதன் பிஷப்பையும் ஒரு நிர்வாக குழு உறுப்பினராக இருக்க ஏற்பாடு செய்துள்ளது.
2002 ஆம் ஆண்டிலிருந்து இந்த கல்லூரியை அங்குள்ள சீ.எஸ்.ஐ. பிஷப்பான கிறிஸ்டோபர் ஆசிர்வாதம் தனது குடும்பத்தின் கையிலெடுக்க முயற்சி செய்ய தொடங்கினார். கல்வி நிலையத்தில் நேரடியாக மத தலைவர் நுழையாமல் இருப்பது கல்விக்கு பாதுகாப்பு என்ற எண்ணம் இல்லாமல், அந்த கல்லூரியின் சொத்தை ஒரு தனி மனித சொத்து கண்ணோட்டத்துடன் மத தலைவர் பார்க்க தொடங்கியதி கெடுவைப்பானது என்று கிறித்துவ நம்பிக்கை கொண்ட பக்தர்களின் கருத்தாக இருந்தது. அதனால் அந்த கல்லூரியின் மாணவர்களும், முன்னாள் மாணவர்களும் சேர்ந்து இந்த பிஷப்பின் போக்கை கண்டித்து போராட தலைப்பட்டனர். அதில் பிரபல பேராசிரியர் சாலமன் பாப்பையா முன்னாள் நின்றார். அதற்கு எதிராக தனக்கும் ஆள்வோரின் ஆதரவு வேண்டுமே என்று கருதிய பிஷப்ப், தனது மைத்துனரான சென்னை பிஷப் எஸ்ரா சற்குணத்தை தொடர்பு கொண்டார். அவர் ஏற்கனவே தி.மு.க.காரர் என்ற பெயரை பெற்றிருப்பதனால், மதுரையின் தி.மு.க. தீர்மானிக்கும் சக்தியிடம் அந்த விவகாரத்தை ஒப்படைத்தார்.
இப்படித்தான் அழகிரி இந்த விசயத்தில் இறங்கியிருக்கிறார். பிஷப் கிறிஸ்டோபர் ஆசிர், பிஷப் எஸ்ரா சர்குனத்திற்கு மாமா மகன் என்பதாலும், இருவரும் நாசரேத் அருகே உள்ள பண்டாரவளையை சேர்ந்தவர்கள். அதேசமயம் முதல்வராக உள்ள சின்னராசும் சாயர்புரத்தை சேர்ந்தவர். முதல்வருக்கு அடுத்து துணை முதல்வர்தான் முதல்வர்ரக வரவேண்டும் என்ற விதி இங்கே கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் முதல்வருக்கு நிர்வாக தலைமை என்பதை உணர்ந்த பிஷப் கிறிஸ்டோபர் ஆசிர் இப்போது தனது உறவுக்காரரான மோகனை அந்த பொறுப்புக்கு அதாவது கல்லூரி முதல்வர் பொறுப்புக்கு கொண்டு வார கடினமாக முயன்று வருகிறார்.

பா.ஜ.க.மீது பாயும் முரசொலி

. முரசொலியில் கடந்த திங்கள் அன்று, சின்னகுத்தூசி மூலம் ஒரு கட்டுரையை கருணாநிதி எழுத வைத்துள்ளார். அதில், நீரா ராடியாவிற்கு பா.ஜ.க.அரசின் ரகசியங்களை அன்று அமைச்சராக இருந்த அனந்தகுமார் முன்கூட்டியே வழங்கியது உண்டா? இல்லையா? என்பது முதல் கேள்வி. டில்லியில் பா.ஜ.க.அரசு நீரா ராடியாவிற்கு வசந்த் குஞ்ச பகுதியில் நிலம் ஒதுக்கியதா? இல்லையா? அந்த நிலத்தில் நீரா ராடியாவின் அறக்கட்டளைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் அத்வானி கலந்து கொண்டு பாராட்டினாரா? இல்லையா? பா.ஜ.க. ஆட்சியில் நீரா ராடியா ஓல கோடி ரூபாயை சுவிஸ் வங்கி கணக்கில் செலுத்தினாரா? இல்லையா? நீரா ராடியா சுவிஸ் வங்கியில் போட்ட கருப்பு பணத்தில் பல பா.ஜ.க. தலைவர்களின் பணமும் உண்டா? இல்லையா?அனந்தகுமாருடன் மட்டுமின்றி பா.ஜ.க.வின் அகில இந்திய தலைவரான நித்தின் கட்காரிக்கும், நீரா ராடியாவிற்கும் வர்த்தக தொடர்பு இருக்கிறது என்பது உண்மையா? இல்லையா? --இப்படியாக கருணாநிதி சார்பாக கே.பி.சுந்தராம்பாள் போல முரசொலி பாடத்தொடங்கிவிட்டது. அப்படீனா நீரா ராடியா கூட சேர்ந்த எல்லோரும் வர்த்தக உறவும், சுவிஸ் வங்கி கருப்பு பணமும் வைத்திருப்பார்கள் என்று முரசொலி ஒப்புக்கொள்கிறதா? என்று பொதுமக்கள் கேட்க மாட்டார்களா?