Wednesday, December 22, 2010

புலிகள் இடத்தில் எலிகளா? டில்லி செய்யும் சதிகளா?

இப்போது டெல்லிக்கு கவலை அவர்கள் சொல்வது போல, ஈழத்தமிழர்களை முள்வேலி முகாம்களில் இருந்து வெளியே கொண்டு வந்து மறுகுடியேற்றம் செய்ய வைப்பது அல்ல. அவர்கள் சொல்லிக்கொள்ளாதது போல, இலங்கை தீவில் வணிகரீதியாக நிரந்தர தளம் அமைத்துக்கொள்ள இந்திய பெரு முதலாளிகளுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தல் என்பது டெல்லிக்கு முக்கியமான கவலை. ஆனால், மகிந்தா ராஜபக்சே அரசு இலங்கை தீவின் நிலங்களை மட்டுமின்றி, நீர் நிலைகளையும், கடலையும் கூட சீன அரசிற்கு எழுதி வைத்துக் கொண்டிருக்கிறது. இதுதான் டெல்லிக்கு பெரும் கவலையாக இருக்கிறது. ஆகவே, இன்றைய டெல்லியில் நோக்கமே இலங்கை தீவில் வணிகத்திற்கான தளங்களை உருவாக்குவதாக இருக்கிறது. அதற்காக, மகிந்தா அரசிற்கு நெருக்கடி கொடுக்கவேண்டிய தேவையும் டெல்லிக்கு இருக்கிறது.

80ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இந்திய அரசு இலங்கை தீவின் அரசாட்சிக்கு எதிராக பகைமை உணர்வு பெற்று வந்த ஈழத்தமிழர்களை போராளிகளாக உருவாக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், இந்தியாவிற்குள் செய்து வந்தது. பல போராளி இயக்கத்திற்கு பயிற்சி தளங்கள் அமைத்துக்கொள்ள உதவி செய்வதும், பயிற்சி கொடுப்பதும், ஆயுதம் கொடுப்பதும் போன்ற வேலைகளைச் செய்தது. அதேநேரம் சிங்கள அரசின் படைகளுக்கும் பயிற்சி கொடுத்தலை தொடர்ந்தது. தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல், தமிழீழ விடுதலைக்காக சமரசமற்ற போரை நடத்த தயாராகிவிட்ட அல்லது நடத்திய போராளி அமைப்பை நிர்மூலம் செய்வதற்கான அனைத்து பணிகளையும் டெல்லியே முன்நின்று கவனித்தது. ராஜபக்சே அரசிற்கு ஆயுதங்கள் கொடுத்தது மட்டுமின்றி, ராணுவ தந்திரங்களை சொல்லிக்கொடுத்து, இந்திய அமைதிப்படை காலத்தில் புலிகள் கையாண்ட போர் முறைகளில் இருந்து கற்று அதற்கு மாற்றான தந்திரங்களை கொழும்பு அரசிற்கு வழிகாட்டல் கொடுத்து, 4ம் வன்னிப்போரை நடத்தியதில் அதிமுக்கிய பங்கை டெல்லி செலுத்தியது. புலிகளை போரில் வென்றதற்கும், தமிழின அழிப்பில் முதன்மை பங்கை ஆற்றியதற்கும், மகிந்தா அரசின் பாராட்டுதல்களை பெற்ற இந்திய அரசிற்கு, போருக்கு பின் வணிகத்திற்காக தளம் அமைத்து கொடுப்பதில் கொழும்பு ஏன்? பின்வாங்குகிறது என்பது தான் டெல்லியில் கேள்வியாக இருக்கிறது.

அவர்களது வாதப்படி செய்த உதவிக்கு நன்றி வேண்டாமா? என்பது தான் நமக்கு புரிகிறது. மீண்டும் கொழும்பு அரசை நிர்ப்பந்தம் செய்து சீன செல்வாக்கில் இருந்து, இலங்கை வணிகத்தை இந்திய மற்றும் அமெரிக்க முதலாளிகளின் சுரண்டல் தளமாக ஆக்குவதற்கு புதிய திட்டங்களை டெல்லி வகுத்துள்ளது. இந்திய அரசின் வெளிவிவகாரத் துறை அமைச்சகத்தின் உளவுப்பிரிவான ரா அமைப்பு, தனது வழிகாட்டல்களிலும், கட்டுப்பாட்டிலும் பரந்தன் ராஜன் என்ற ஞானசேகரன் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எஃப். என்ற ஈழத்தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி என்ற அமைப்பையும், தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள விளாத்திகுளம் ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த வரதராஜ பெருமாள் என்பவர் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எஃப். என்ற ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற அமைப்பையும், வைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது உலகறிந்த செய்தி. இந்திய அரசிற்கு இலங்கை பிரச்சனையில் நெருக்கடி வரும்போதெல்லாம், மேற்கண்ட இரண்டு அமைப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு சில வேலைகளை செய்வார்கள் என்பதும் நாடறிந்த செய்தி.

இப்போது, இந்த அமைப்புகள் வேறு சில அமைப்புகளையும் சேர்த்துக்கொண்டு ஒரு புதிய ஐக்கிய முன்னணியை உருவாக்கி இருக்கிறார்கள். பெங்களூரில் ராஜன் நடத்தும் குழந்தைகள் பள்ளி அருகே நவம்பர் மாதம் 13, 14ம் தேதிகளில் நடத்தப்பட்ட சிறப்பு மாநாட்டில் கூடிய இவர்கள் ஈழத்தமிழர் விடுதலைக்கான ஒன்றுபட்ட முன்னணி என்பதாக ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதை ஈ.டி.யூ.எஃப். என்று அழைக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் 10 கோரிக்கைகளை தயார் செய்திருக்கிறார்கள். அந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில், டெல்லியை நோக்கி தமிழ்நாட்டில் இருந்து ஒரு ஈழத்தமிழர் நடைபயணத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். 2011 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் நாள் திருபெரும்புதூரில் ராஜிவ்காந்தி நினைவிடத்தில் இருந்து புறப்படும் இந்த நடைப்பயணத்தில் காங்கிரஸ் கட்சியின் இரா.அன்பரசு [வழக்கமாக ரா கருத்துக்களை வெளிப்படுத்துபவர்], சீ.பி.ஐ.யின் தா.பாண்டியன் [ஏன் இவர்?] சீ.பி.எம்.இன் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

இந்த நடைபயணத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள 117 அகதிகள் முகாம்களிலும் இளைஞர்களை தயார் செய்து வருகிறார்கள். தமிழ் இனத்தின் உரிமைகளை இந்தியா மீட்டு தரவேண்டும் என்றும், இது ஈழத்தமிழர்களின் கோரிக்கை என்றும் ஒரு துண்டறிக்கையை இவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். அதை ஒவ்வொரு அகதிகள் முகாம்களிலும் ரகசியமாக கொடுத்து, அவலநிலையில் வாழும் ஈழ இளைஞர்களை அந்த நடைபயணத்திற்காக தயார் செய்கிறார்கள். மகிந்தாவை எதிர்த்தே இவர்களது விளக்கங்கள் இருக்கின்றன.

1. சிங்கள ஆட்சியாளர் தமிழ் இனத்தவரை வாழவைக்கப் போகிறார்கள், உரிமைகள் வழங்கப் போகிறார்கள் என்று கூறுவதும், எதிர்பார்ப்பதும் வீணான கற்பனையாகும். தமிழ் இனத்தை அழிப்பதுதான் பௌத்த சிங்கள இனத்தவரின் கொள்கையாகும். இதனைத் தடுத்து நிறுத்ததான் இந்தியா 1987ல் இலங்கை விஷயத்தில் தலையிட்டது. 50 ஆயிரம் துருப்புகளை வைத்துக்கொண்டு தமிழருக்கு உரிமை பெற்றுக்கொடுக்க முடியாமல் திரும்பியது இந்தியா. சிங்களத் தலைமை ஒரு நயவஞ்சகமான தலைமை, அவர்களை நம்பி எந்த ஒப்பந்தமும் செய்ய முடியாது. எனவே இந்தியா ஈழத்தமிழரையும் அவர்களது உரிமைகளையும் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன், முன்னைநாள் பிரதமர் அமைதிப்படையை அனுப்பியது போன்று ஓர் படையை அனுப்பி தமிழ் இனத்துக்கு உயிர்ப் பாதுகாப்பையும், நில உரிமையையும் பெற்றுத்தரவேண்டும் என்று இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

2. 1987ம் ஆண்டு ஈழத்தமிழ் மக்களுக்கு வாக்குறுதி அளித்ததன்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைந்த, அனைத்து அதிகாரங்களும் உள்ளடக்கிய மாநிலம் ஒன்றினை ஈழத்தமிழ் மக்களுக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும் என இந்திய அரசை வேண்டிக்கொள்கிறோம்.3. இந்தியாவையும் ஈழத்தமிழ் மக்களையும் சிறிலங்கா அரசு பல தடவைகள் ஏமாற்றியுள்ளது. மறுவாழ்வு, மறு கட்டமைப்பு என்று கூறி சிறிலங்கா அரசு சிங்கள மக்களைத் தமிழர் பகுதிகளில் குடியேற்றி வருகிறது. இதனை இந்தியா உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும் என இந்திய அரசை வேண்டிக்கொள்கிறோம்.

4. பிரித்தானியரிடமிருந்து விடுபட்ட 1948ம் ஆண்டுக்குப் பின்னர், தமிழரது பூர்விக நிலங்களில் சிங்கள அரசால் குடியமர்த்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தையும் முற்றாக அகற்றவேண்டும் என்று இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.5. புத்த பிக்குகள் ஈழத்தமிழருக்குச் சொந்தமான பூர்விகப் பகுதிகளில் எங்கெங்கு அரசமரங்கள் இருக்கின்றனவோ அவற்றின் கீழே பௌத்த மதத்தைப் பரப்ப, அரசின் ஆதரவோடு புத்த விகாரைகளைக் கட்டி வருகின்றனார்கள். அவ்வாறு கட்டும் சட்டத்திற்குப் புறம்பான செயலைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்றும், ஏற்கனவே கட்டப்பட்ட புத்த விகாரைகளை இடித்து அகற்றவேண்டும் என்றும் இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

6. 2009ம் ஆண்டு ஈழத்தில் நடைபெற்றது பயங்கரவாத எதிர்நடவடிக்கை அல்ல, சிங்கள இனத்தவரின் தமிழ் இன அழிப்பு நடவடிக்கைதான் அங்கு நடைபெற்றது. பயங்கரவாதம் என்று உலகுக்குக் காண்பித்த சிங்கள அரசு செய்தது இனப்படுகொலைதான். இதனை விசாரிப்பதற்கு மிகப்பெரிய சக்திவாய்ந்த ஜனநாயக நாடான இந்தியா முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இந்திய மக்கள் இதனை கண்டிப்பாக வரவேற்பார்கள். எந்த நாடும் தனது சொந்த மக்கள் மீது இவ்விதம் குண்டுகள் வீசி, அழித்தது கிடையாது. அங்கு நடைபெற்றது எதிர்நாட்டின் மீது படையெடுப்புதான். எனவே நடத்தப்பட்ட படுகொலைகள் விசாரிக்கப்படுவதற்கு இந்தியா முன்மொழிய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

7. ஈழத்தமிழரது பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு அவர்கள் ஈழத்துக்குத் திரும்பும் வரை, தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களை பராமரிக்கும் பொறுப்பினை மத்திய அரசு நேரடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். சுதந்திரம் கேட்ட எங்கள் மக்கள் தமிழக பொலிசாரால், குறிப்பாக கியூ பிரிவினரால் முகாம்களுக்குள் அடிமைகள் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து எங்கள் மக்களை மத்திய அரசு மீட்டுத்தர வேண்டும்.8. திபெத்திய அகதிகளுக்கு வழங்குகிற உரிமைகள் போன்று ஈழத்தமிழ் மக்களுக்கும், அவர்கள் நாடு திரும்பும் வரை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்விதமான தீர்வொன்றினை ஏற்படுத்திக்கொடுக்கும் வரை இந்தியாவில் இருக்கும் ஈழத்து அகதிகள் யாரையும் திருப்பி அனுப்பக்கூடாது என்று இந்தியாவைக் கேட்டுக்கொள்கிறோம்.9. இலங்கையின் மொத்தக் கடற்பரப்பில் 80 சதவீதமான பகுதி தமிழ் இனத்துக்குச் சொந்தமானது. எனவே, வடக்கு கிழக்குக் கடல் பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமை தமிழர்களுக்கு மட்டுமே உண்டு. வடக்குகிழக்குக் கரையோரப் பகுதிகளை சிங்களர் அரசின் துணையுடன் ஆக்கிரமித்துவிட்டனர். அரசினால் குடியமர்த்தப்பட்ட சிங்களரது கரையோரக் குடியிருப்புகள் முற்றாக அகற்றப்பட வேண்டும் என்று கோருகிறோம்.10. மேற்படி கோரிக்கைகள் அனைத்தும் சாத்தியம் இல்லை என்று இந்தியா கருதினால், சிறிலங்கா அரசு தமிழர் மீது யுத்தம் புரிவதற்கு நிதி உதவி வழங்குவதற்காக, நன்கொடை நாடுகள் என்று ஓர் அமைப்பை ஏற்படுத்தி போர்க்கருவிகள் வாங்குவதற்கு பெருமளவு பணஉதவி செய்தனர் பிறநாட்டினர். அதேபோன்று தமிழ் இனத்தின் பிரச்சினைகளைத் தீர்த்து உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க, தமிழர்கள் அகதிகளாக வாழும் நாடுகள் அனைத்தையும் இணைந்த அமைப்பொன்றினை ஏற்படுத்த வேண்டும். சமாதான நாடுகள் என்ற அமைப்பின் மூலம் எங்கள் இனத்தின் பிரச்சினைகளை ஆராய்ந்து உண்மைகளைக் கண்டறிந்து நிரந்தரத் தீர்வொன்றினை ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் இந்தியாவைக் கேட்டுக்கொள்கிறோம்.

மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து ஒரு இயக்கத்தை தங்கள் நலனுக்காக கட்டியமைக்க இந்திய அரசு துணிந்துவிட்டது. இதுபோன்ற நெருக்குதல்கள் மூலம்தான் மகிந்தா அரசை, இந்திய முதலாளிகளிடம் அடிபணிய வைக்க முடியும் என்பது டெல்லியின் திட்டம். அதேசமயம், புலிகள் இல்லாத களத்தில் தங்கள் வீட்டு எலிகளைக் கொண்டு நிரப்பிவிட டெல்லி எண்ணுகிறது. இதை நம்பிச் செல்லும் இளைஞர்கள், ஈழத்தமிழர்களை பலிகடா ஆக்கி தங்களது வணிக சுரண்டலை சாதித்துக்கொள்ள திட்டமிடும் வல்லாண்மை அரசுகளை புரிந்து கொள்வார்களா?