Wednesday, October 27, 2010

கருத்துரிமை என்பது, காஷ்மிர்காரர் டில்லியில் பேசக்கூடாது என்பதுதானா? அருந்ததி எங்கேயும் பேசக்கூடாது என்பதுமா?


கிலானி காஷ்மீர்காரர். கிலானி ஹுரியத் அமைப்பின் ஒரு தலைவர். ஹுரியத் அமைப்பு காஷ்மீரில் இயங்கிவருகிறது. அது சுதந்திரம் என்று மூச்சுவீட்டுவருகிறது. ஹுரியத் தலைவர்களுடன், டில்லி பேச்சு வார்த்தை நடத்த போகிறோம் என்று கூறி வருகிறது.இந்த நேரத்தில் டில்லியில் அந்த கருத்தரங்கம் நடந்ததது. அதில் கிலானி பேச இருக்கும்போதே சில காஷ்மிரி பண்டிட்டுகள் அங்கேவந்து கலாட்ட செய்ய திட்டமிட்டார்கள். திட்டமிட்டே அவர்கள் வந்தார்கள் என்பதைவிட, திட்டமிட்டு அவர்கள் அனுப்பபட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஏன் என்றால் அவர்கள் கரங்களில் இந்திய தேசிய கொடிகள் கொடுத்துவிடப்பட்டிருந்தன. அதுவே அந்த காஷ்மிரி பண்டிதர்கள் இயக்கப்பட்டார்கள் என்பதற்கான ஆதாரமாக இருந்தது. அந்த பண்டிதர்கள் தங்கள் நோக்கமான கூட்டத்தை நடத்தவிடாமல் கலாட்டா செய்வது என்பதில் கவனமாக இருந்தார்கள். அந்த கலாட்டாவை காட்சி ஊடகங்களில் வெளியிடுவதிலும் வெற்றிகரமான பாத்திரத்தை அவர்கள் எட்டினார்கள். அதேசமயம் கூட்டத்தை நடத்திய இளைஞர்கள் அவர்களை விரட்டிவிட்டு கூட்டத்தை நடத்துவதில் கவனமாக இருந்தார்கள்.

அந்த காஷ்மீர் பற்றிய கருத்தரங்கில் ஹுரியத் தலைவர் கிலானி தவிர, அருந்ததி ராய், மற்றும் டில்லி பல்கலை கழக பேராசிரியர் கிலானி ஆகியோரும் பேச்சாளர்கள் ஆனால் கலாட்டா செய்ய அனுப்பப்பட்ட காஷ்மிரி பண்டிதர்களுக்கு, ஹுரியத் தலைவர் கிலானியை பேசவிடாமல் செய்யவேண்டும் என்பது மட்டுமே கொடுக்கப்பட்ட நிகழ்ச்ச்சி நிரல் என்று தெரிகிறது. அதனால் அந்த டில்லி கூட்டத்தில் கலாட்ட செய்ய வந்தவர்களுக்கு, அருந்ததிராய் முக்கியமாக பட வில்லை. அதாவது இந்திய தலைநகர் டில்லியில் வந்து " சுதந்திரம்" பற்றி பேசவந்த கிலானியை கலாட்ட செய்வோம்: அதேசமயம் காஷ்மீர் சென்று " சுதந்திரம்" பற்றி பேசவந்த அருந்ததிராயை பிரச்ச்சனை ஆக்குவோம் என்பதுதான் இவர்கள் கொள்கை போலிருக்கிறது. அதாவது அவர்களே தங்கள் கலாட்டா மூலமும், பிரச்னையை எழுப்புவதன் மூலமும், இந்தியா வேறு, காஷ்மீர் வேறு என்று காட்டுவது போல உள்ளது. அவர்கள் பார்வையில் இந்தியா வேறு, காஷ்மீர் வேறு, அதேபோல இந்தியாவில் உள்ள அருந்ததிராய் வேறு, காஷ்மீரில் உள்ள கிலானி வேறு, அதாவது இந்தியாவில் உள்ள அருந்ததி ராய் காஷ்மீர் சென்று சுதந்திரம் பற்றி பேசக்கூடாது: அதேபோல காஷ்மீரில் உள்ள கிலானி இந்தியா வந்து சுதந்திரம் பற்றி பேசக்கூடாது. இப்போது புரிகிறதா இந்த கருத்துரிமை குரல்வளையை நெறிப்பவர்கள் அவர்களே இந்தியாவையும், காஷ்மீரையும் பிரித்துவிட்டார்கள். உண்மை அவர்களை நிர்ப்பந்தித்து விட்டதா என்பது நமக்கு தெரியவில்லை.


இப்போது டில்லி கூட்டம் பற்றி கூச்சல் போட்ட பா.ஜ.க. புதிய வாய்ப்பாக அருந்ததி ராய் காஷ்மீரில் பேசிய பேச்சு கூக்குரல் போட வசதி ஆனது என்று கண்டு கொண்டது. காஷ்மீர் சென்ற அருந்ததி ராய் அங்கே உள்ள நிலைமைகளை பார்த்துவிட்டு, காஷ்மீர் என்றுமே இந்தியாவுடன் இணைந்து இல்லை என்று பகிரங்கமாக கூறிவிட்டார். இது இந்திய ஆளும்கூட்டத்திற்கு பெரும் அதிர்ச்சியாக போய்விட்டது. அதாவது உலகெங்கும் புகழ் பெற்ற எழுத்தாளராக இருக்கும் அருந்ததி ராய், காஷ்மீர் மக்களுக்கு சாதகமான ஒரு கருத்தை அதுவும் அவர்களது சுதந்திரம் பற்றிய கருத்தை காஷ்மீர் சென்று கூறியது அவர்களது அடிப்படையையே தகர்த்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள் போலும். இதில் அடிப்படையில் பா.ஜ.க. வேறு, காங்கிரசு வேறு என்று நாம் பிரித்து பார்க்க முடியாது. ஏன் என்றால், இந்தியா என்ற தேசத்தை காஷ்மீருடன் சேர்த்து உணர்ச்சிகரமாகவும், வரைபட பார்வையில் நின்றே நாட்டு பற்றை எடைபோடுபவர்கலாகவும், இருக்கின்ற ஒவ்வொரு இந்திய குடிமகனும் , இந்த விசயத்தில் உணர்ச்சிவசப்படவே செய்கின்றனர். சில வரலாற்று ஆசிரியர்களும், சில அறிவுஜீவிகளும், சில சுயாட்சி தத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்களும், சில மக்கள் சார்பு கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களும், சில மக்கள் மத்தியில் உள்ள உண்மையான உணர்வுகளை அங்கீகரிப்பவர்களும், சில ஊடகவியலாளர்களும், சில எழுத்தாளர்களும் இந்த ஏக இந்தியா என்ற கருத்துகொப்பை தாண்டி, மக்கள் சார்ந்த சுயாட்சி மனோபாவத்தை ஆதரிப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அடக்குமுறைகளால் எந்த மக்கள்தொகையின் உரிமை உணர்வையும் நசுக்கிவிட முடியாது என்று நம்புகிறவர்களாக இருக்கிறார்கள்.

அருந்ததி ராய் பேசிய பேச்சிற்காக அவர் மீது " ராஜ துரோகம்" என்று வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று கூக்குரலிடுகிறார்கள். அதை பல ஊடகங்களும் ஜால்ரா போட்டு வரவேற்கின்றன. இப்போது அருந்ததி எஆஇ இதற்கு பதில் சொல்லும் முகத்தோடு, காஷ்மீரில் உள்ள பத்து லட்சம் மக்கள் விரும்புவதைத்தான் சொன்னேன் என்கிறார். அங்குள்ள மக்கள் இந்திய ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளார்கள் என்கிறார். காஷ்மீரின் பண்டிட்டுகளுக்காக சேர்த்துதான் பேசுகிறேன் என்கிறார். அங்கே பலியாகும் இந்திய ராணுவத்தின் தலித் ராணுவ வீரர்களுக்காக பேசுகிறேன் என்கிறார். ஒரு ஆக்கிரமிப்பை காஷ்மீரில் நடத்துவதற்கு இந்திய ஏழை மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதை எதிர்த்துதான் பேசுகிறேன் என்கிறார். அங்குள்ள சோபியன் நகரில் ஆசியா, நிலோபர் ஆகிய இளம் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாகி, படுகொலை செய்யப்பட்டதை எடுத்துசொல்லி, அவர்களது உறவினர் ஷக்கீலை சந்தித்ததையும், அவர் இந்தியாவிடமிருந்து எந்த ஒரு நியாயமும் கிடைக்காதென கூறியதையும் எடுத்து சொல்கிறார். இப்போது மத்திய அரசு கிலானி மீதும், அருந்ததி ராய் மீதும் வழக்கு பதிவு செய்து பிரச்னையை சிக்கலாக்கபோவது இல்லை என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதுவும் அப்படி வழக்கு பதிவு செய்தால், அதுவே பல தரப்பினருடன் பேச்சுவார்த்தையை காஷ்மீரில் நடத்துவதற்கு இடையூறாக முடியும் என்றும் கூறுகிறது. அதேசமயம் ஒரு மூவர் குழுவை அப்படிப்பட்ட பேச்சுவார்த்தைக்காக மத்திய அரசு நிறுவ இருக்கும் நேரத்தில் , கருத்துகளுக்கு எதிரான வழக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கண்டிருக்கிறார்கள். அமெரிக்கா அதிபர் ஒபாமா வரும் நேரத்தில் அப்படி போடப்படும் வழக்கு, காஷ்மீர் பிரச்சனையில் பேச்சுவார்த்தைக்கு எதிராக அமைந்து ஒபாமாவின் எதிர்பார்ப்பை உடைத்துவிடும் என்றும் கூறுகிறார்கள்.

இவ்வாறு கருத்து சுதந்திரத்தை அங்கீகரிக்கும் பார்வை சிறிதும் இல்லாமல் அரசியல் காரனகளுக்காக வழக்கு பதிவு செய்வதை நிறுத்தி இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதே கருத்தை முன்னாள் மத்திய அமைச்சரவையின் செயலாளரான பி.ராமன் கூறும்போது, "ராஜ துரோகம்" என்பது அரசுக்கு எதிராக மக்களை திருப்புவது என்பதாக பொருள்படும் என்றும், அப்படிப்பட்ட காரியத்தை அருந்ததி ராய் செய்யவில்லை என்றும், அதேசமயம் அவர் காஷ்மீர் மக்கள் மத்தியில் உள்ள அதிருப்தி மனோபாவத்தை பிற பகுத் மக்கள் மத்தியில் இந்தியாவில் தெரிவிக்க செய்துள்ளார் எனவும் கூறுகிறார். அவர் மீது வழக்கு பதிவு செய்தால் அதுவே இந்த காஷ்மீரிகளுக்கு இந்தியாவுடன் இருக்கும் முரண்பாட்டை அதிகப்படுத்தும் என்றும் கூறுகிறார். வினைக்கு, எதிர்வினையாக ஆகிவிடக்கூடாது என்றும் அவர் எச்சரிக்கை செய்கிறார். அருந்ததி ராயின் பேச்சை ராஜ துரோகம் என்று எப்படி கூரமுடிய்ம் என்று ராமன் கேட்கிறார். இவர்கள் எல்லோருமே ஒன்றை மறந்துவிடுகிறார்கள். காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துலாவும் சில வாரங்களுக்கு முன்பு, காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல என்றும், அது நிபந்தனையின் பேரில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது என்றும் கூறினார். அதனால் அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையை கலைத்துவிட்டார்களா என்ன? இங்கே உள்ள ஆங்கில பிரபல ஏடு தனது தலையங்கத்தில் இத்தகைய கேள்வியை கேட்டிருக்கிறது. ஆனால் இங்கே தமிழ்நாட்டில் உள்ள ஒரு பிரபல தமிழ் ஏடு தனது தலையங்கத்தில், "ஏன் இன்னும் தயக்கம்" என்று தலைப்பிட்டு, அதில் காஷ்மீர் மக்களது சுதந்திர உணர்வு 1900ஆண்டில் இருந்ததுபோல இப்போது இல்லை என்றும் ஆகவே அங்கு நாம் "சுதந்திரம்" பற்றி பேச அனுமதிக்க கூடாது என்றும் எழுதியுள்ளது. இவர்கள் பாராமல் படித்த பழங்கதையை மட்டுமே ஒப்பித்துக்கொண்டிருக்கிரார்கள். வரலாறும், இன்றைய காஷ்மீரத்தின் நிலைமையும், இவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அதுவரை அருந்ததி ராய் சொன்னதுபோல, எழுத்தாளர்களை நசுக்கும் போக்கு கொண்ட இந்தியா அய்யோ பாவம் என்றுதான் நாமும் சொல்லவேண்டும்.