Friday, October 8, 2010

காஷ்மீர் முதல்வர் உண்மையை சொன்னால், வட கிழக்கிலும் சொல்லவேண்டுமா?

காஷ்மீர் பிரச்சனை என்று ஒன்று இருப்பதாக இந்தியா முழுவதும் ஊடகங்கள் மக்களுக்கு சொல்லிவருகின்றன. ஆனாலும் காஷ்மீர் பிரச்சனை என்ன என்று சொல்லியிருக்கிறார்களா? இப்படி கேள்வி கேட்டோம் என்றால், அதற்கு பதில் சொல்ல சரியான ஆள் இப்போது கிடைத்துவிட்டார். காஷ்மீர் பிரச்சனை பற்றி வெள்யே சொல்வதற்கு அங்குள்ள ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரைத்தவிர, வேறு யார் சிறந்தவர் என்பது நமக்கு தெரியவில்லை. ஏன் என்றால் இதுவரை ஊடகங்கள் நமக்கு சொல்லிவந்த செய்திகள் எல்லாம், காஷ்மீரில் பிரிவினைவாதிகள் இருக்கிறார்கள் என்றனர். நாமும் ஓஹோ அப்படியா? என்றோம். பிறகு காஷ்மீர் பிரிவினைவாதிகள்தான், ஹுரியத் மாநாடு என்று ஊடகங்கள் கூறின. நாமும் அப்படியா? என்றோம். பிறகு அந்த பிரிவினைவாதிகளில் தீவிரமானவர் கிலானி என்று ஊடகங்கள் கூறின. நாமும் அப்படியா? என்றோம்.

நாம் தமிழ்நாட்டில் இந்தியாவின் கடை கோடியில் இருக்கிறோம்., காஷ்மீர் இந்தியாவின் தலை என்று சொல்லக்கூடிய மறு கோடியில் உள்ளது. ஆகவே ஊடகங்கள் சொல்வதுதானே நமக்கு தெரியும்? இப்போது அந்த பிரிவினைவாதி என்று வர்ணிக்கப்பட்ட, பிரிவினைவாதிகளுக்குள் தீவிரவாதி என்று விளக்கப்பட்ட கிலானி, தாங்கள் கூறியதை வழிமொழிந்துள்ளார் முதல்வர் ஓமர் அப்துல்லா என்று கூறுகிறார். அப்படியானால் கிலானி என்ற தீவிரவாத பிரிவினைவாதி கூறியதை, ஆமோதிக்கும் காஷ்மீரின் முதல்வர் ஓமர் அப்துல்லாவும் ஒரு பிரிவினைவாதி என்று இந்த பிரபல ஊடகங்கள் முத்திரை குத்த தயாரா? அரசியல் கட்சிகளில் வலதுசாரி கட்சி என்ற பெயரை தக்கவைத்துக்கொள்ள விரும்பும் பா.ஜ.க. போன்ற கட்சிகள் வேண்டுமானால் ஓமர் அப்துல்லாவை, பிரிவினைவாத கருத்துகளுக்கு துணை போகிறவர் என்று கூறலாம்.

ஆனால் இந்தியாவின் பிரபல காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் அவ்வாறு ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை சொல்ல துணிவார்களா? அப்படி செய்து விட்டார்கள் என்றால் அவர்கள் கூறிவரும், இந்தியாவின் நாடாளுமன்ற பாதை உலகிலேயே பெரிய ஜனநாயக தன்மை வாய்ந்தது என்பது பொய்யாகி போகுமே என்பதனால் அவ்வாறு சொல்லமாட்டார்கள். அதுமட்டுமின்றி இந்த ஊடகங்களுக்கு உண்மை எது என்பதைவிட, காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என்ற பேராசைதான் அதிகம்.

உதாரணமாக அறிவுஜீவிகள் படிக்கும் ஏடு என்று பெயர் பெற்ற அந்த சென்னையிலிருந்து வெளிவரும் தமிழ் ஏடு, தனது தலையங்கத்தில் நேற்று, " தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்" என்று தலைப்பிட்டு சில கருத்துக்களை, அல்லது நச்சு விதைகளை தூவியுள்ளார். " இந்தியாவும் பயங்கரவாதிகளை உருவாக்கி, பாகிஸ்தானுக்கு எதிராக அனுப்பி விடுவது என்பது இயலாத காரியமல்ல" என்று அதன் ஆசிரியர் கூறுகிறார். இந்த நேரத்தில் இப்படி ஒரு முன்னுதாரணத்தை , லாகூரில் இலங்கை விளையாட்டு வீரர்கள் மீதான தாக்குதலையும், பலூசிஸ்தான் பகுதியில் நடக்கும் கலவரத்தையும், காட்டி எவரும் பேசுவார்களே என்ற கவலை அவருக்கு இல்லைபோலும். அடுத்து அவர் சொல்லவருவது பெரும் வேடிக்கையாக ஒரு வரலாற்று திரிபாக ஆகிவிட்டது. " உலக சரித்திரத்தின் பக்கங்களை புரட்டிப்பார்த்தால், இதுவரை எந்த ஒரு அந்நிய நாட்டின்மீதும் படையெடுத்து தனது எல்லைகளை விரிவுபடுத்தி கொள்ளாத நாடாக இந்தியா மட்டுமே காட்சி அளிக்கிறது" என்பதாக ஏழாவது பாராவில் எழுதியுள்ளார். தமிழ் ஏட்டின் ஆசிரியர் அவர்களே, நீங்கள் சொல்லும் இந்த செய்தி உணமைதானா? அப்படியானால் சிக்கிம் என்று ஒரு சிறிய நாடு நமது நாட்டுக்கு அருகே இருந்ததே? அந்த நாட்டிற்கு என்று ஒரு தனி தேசிய கொடியும், தேசிய கீதமும் இருந்ததே? அந்த நாட்டை இந்திய ஆரசு அதன் படைகளுடன் சென்று, 1996 ஆம் ஆண்டுவாக்கில், இந்தியாவுடன் சேர்த்து கொண்டார்களே? அது எந்த சரித்திரத்தில் வரும்?


சிக்கிம் நாட்டை இந்தியாவுடன் சேர்த்து கொண்டது பற்றி அப்போது தலைமை அமைச்சராக புதிதாக பொறுப்பேற்ற மொரார்ஜி தேசாய், தனது லண்டன் பயணத்தின் போது, ஊடவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொன்னார் என்பது நினைவு இருக்கிறதா? தனிப்பட்ட முறையில் சிக்கிம் இணைப்புக்கு தான் ஆதரவாளன் அல்ல என்றும், ஆனால் தன்னால் எதுவும் செய்யமுடியாது எனவும் கூறினார். அந்த அளவுக்கு இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கே, ஒன்றும் செய்ய முடியாத படி, இந்திய அரசு இயந்திரம் என்பது விரிவாக்க கொள்கைகளை தனது தன்மையாக, பண்பாக, வரலாறாக, வைத்திருக்கிறது என்றுதானே பொருள்? இப்படி ஒரு முழு பூசணிக்காயை சோற்றில் போட்டு மறைக்க, அந்த தமிழ் ஏட்டின் ஆசிரியருக்கு முடிகிறது என்றால் அவர்தானே பெரிய அரசியல்வாதி? அது இந்துத்துவா அரசியலாக இருந்தால் என்ன, வேறொரு அரசியலாக இருந்தால் என்ன; ஊடகங்களின் பொறுப்பாளர்கள் தங்களது அரசியலை உண்மையற்ற முறையிலும் எழுதி அதற்கேற்ற படி, கருத்துக்களை உருவாக்குவார்கள் என்பது இதிலிருந்து புரிகிறது அல்லவா?

அத்தோடு விடாமல் அந்த ஆசிரியர் மீண்டும் எழுதுகிறார். 1947 இல் படை பலத்தால் காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்பதை நிலை நிறுத்தாத தவறுக்குதான், இப்போது விலை கொடுத்து கொண்டு இருக்கிறோம் என்கிறார். அந்த அளவுக்கு வன்முறை கலந்த வார்த்தைகள் அவருக்கு கை கொடுக்கிறது. மேலும் கூறும் அவர், பாகிஸ்தானிலிருந்து விரட்டப்பட்ட பஞ்சாபிகளையும், சிந்திகளையும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் குடியேற்றி இருக்கமுடியும் என்று வேறு கூறுகிறார். இதே கருத்தை அவர் ஏற்கனவே இலங்கையில் ராஜபக்சே எப்படி சிங்களர்களை கொண்டுவந்து, வடக்கு-கிழக்கு தமிழர் பகுதிகளில் குடி ஏற்றினாரோ அதேபோல காஷ்மீருக்குள், இந்தியாவில் உள்ள அனைவரையும் குடியேற்ற வேண்டும் என்று சில வாரங்களுக்கு முன்பு எழுதியவர். இவ்வாறு அவரது தேசிய இன எதிர்ப்பு உணர்வுகள் வெவ்வேறு விதங்களில் வெளிப்பட்டு வருகிறது.

இவ்வாறு அடிப்படையில் வட்டார மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு விரோதமாக ஊடவியலாளர்களின் சிந்தனைகள் இருக்கின்றன என்பதற்கு இவரே ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல.
இப்போது ஹுரியத் மாநாடு தலைவரில் ஒருவரான கிலானி, சட்டவிரோத ராணுவ நிறுத்தல்தான் முதல்வர் ஓமரை இப்படி உண்மை பேச வைத்துள்ளது என்கிறார். காஷ்மீர் துரோகங்களையும், வாக்குறுதி மீறல்களையும் சந்தித்துள்ளது என்று ஓமர் கூறியிருப்பது, உண்மை என்றால், அந்த வாக்குறுதி மீறல்களை எதிர்த்துதான் தாங்கள் போராடி வருகிறோம் என்றார். காஷ்மீர் சட்டமன்றத்தில் . தொடங்கி, ஐ.நா. வரை காஷ்மீர் பிரச்சனைக்கான வரலாற்று உண்மைகள் வலுவாக இருக்கின்றன என்று முதல்வரின் சட்டபேரவை உரையை கிலானி வர்ணித்துள்ளார். காஷ்மீர் ஒரு பிரதமராலோ அல்லது முதல்வராலோ, ஆளப்பட்டாலும், ராணுவம் இருந்தால் அந்த பதவியும் ஒரு பொம்மை பதவிதான் என்றார். அந்த அளவுக்கு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லாவின் சட்டமன்ற உரை எதிரொலிகளை ஏற்படுத்தி உள்ளது.

அப்படி சட்டமன்ற உரையில் அவர் என்ன சொல்லிவிட்டார்? இந்தியாவின் பிற மாநிலங்களை போல காஷ்மீரை மத்திய அரசு நடத்தக்கூடாது என்றார். அடிப்படையில் காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்து இருக்கிறதே ஒழிய இணையவில்லை என்றார். ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் அந்த இணைப்பு உருவானது என்றார். அந்த ஒப்பந்தத்தை மற்றவர்கள் உடைத்தால், காஷ்மீர் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; அவர்கள் கோபம் கொள்வார்கள் என்றும் கூறினார். பாலம் கட்டுவதும் , ரேஷன் கடைகளில் உரிய பொருள்களை வழங்குவதோ, வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதோ, அந்த பிரச்சனயை தீர்க்காது என்றார். பாகிஸ்தானை பேச்சுவார்த்தையில் சேர்க்காமல் பிரச்னையை தீர்க்க முடியாது என்றார். அதனால்தான் வாஜ்பாயி பிரதமராக இருக்கும் போது, லாகூர் சென்று காஷ்மீர் பிரச்சனயை பேசினார் என்று சுட்டி காட்டினார்.

ஆக்ராவிலும், டில்லியிலும், ஏன் இரு நாட்டு அரசுகளும் காஷ்மீர் பற்றி பேசினார்கள் என்று வினவினார். இவ்வாறு வலுவாக ஒரு முதல்வர் பேசியதால்தான் அது பெரிய பிரச்சனையாக பற்றி எரிகிறது.
" இந்தியாவே வெளியேறு " என்று காஷ்மீர் மக்கள் முழக்கம் எழுப்புகிறார்கள் என்று அந்த முதல்வரே கூறியுள்ளார். அதேபோல வட-கிழக்கு மாநிலங்களிலும் மக்கள் நம்மை பார்த்து, " நீங்கள் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறீர்கள்" என்று கூறுவது வழமையாக இருக்கிறது. அப்படிஎன்றால் இந்தியா என்று நமக்கு காட்டப்படும் வரைபடத்தில், காஷ்மீர், அஸ்ஸாம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சல் பிரதேசம் போன்ற பகுதிகளில் வாழும் மக்களை அறுபத்தி மூன்று ஆண்டுகளாக இந்திய மத்திய அரசு, தனது ராணுவத்தின் மூலம்தான் தக்க வைத்து கொண்டு இருக்கிறதா? நமக்கு தலை சுற்றுகிறது?