Tuesday, September 28, 2010

விவசாயம் பற்றிய அறிவு இன்றியே நெல்லுக்கு பெயர் வைப்பதா?

இந்திய நாட்டின் அடிப்படை பொருளாதாரம் விவசாய பொருளாதாரம். அதை பற்றிய அறிவு ஆள்வோருக்கு இருக்கவேண்டும் என்பது ஒரு எதிர்பார்ப்பு. சரி. விவசாயத்தை பற்றிய நேரடி அறிவு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அதை பற்றி தெரிந்தவர்களிடம் கேட்டுதானே ஆழ வந்தோர் திட்டமிடுவார்கள்? அப்படி ஒரு நிகழ்வு தமிழ்நாட்டில் நடக்க மாட்டேன் என்கிறதே? இங்கே பாசன நிலங்களின் அளவு, நாளுக்கு நாள் குறைந்து வருகிறதே? பாசனத்திற்கு தஞ்சை டெல்டா மாவட்டங்களில் உள்ள நிலத்திற்கு தேவையான நீரை தருகின்ற காவேரி ஆற்றை தமிழ்நாட்டிற்கு கொண்டுவருவது பற்றி போதுமான அக்கறை இல்லையே? முல்லை பெரியார் அணை தண்ணீர் வந்தால்தான் தேனீ, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்று ஆள்வோருக்கு அக்கறை இல்லையே? ஆந்திராவில் கட்டப்படும் தடுப்பணைகள் நிறுத்தப்பட்டால்தான், பாலாறு தமிழ்நாட்டிற்குள் சரியாக பாயும் என்பதும், அதனால் மட்டும்தான் காஞ்சி, வேலூர், கடலூர், மாவட்டங்களில் உள்ள விவசாயத்திற்கு பயன் கிடைக்கும் என்பதும் ஆளும் கூட்டத்திற்கு புரிவதில்லையே? இதற்கெல்லாம் காரணம் நாட்டை மாநிலத்தில் ஆளவந்தோர் விவசாயம் பற்றி அறியாதவர்கள். அக்கறையில்லாதவர்கள் என்று கூறினால் கோபம் கொள்கிறார்கள். ஆனால் இப்போது உண்மை பையிலிருந்து வெள்யே வந்த பூனை போல வெள்யே தெரிந்துவிட்டது
தமிழக முதல்வர் கலைஞர் தனது வாழ்நாள் சாதனையாக ராஜ ராஜ சோழனின் தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு என்ற மாபெரும் விழாவை நடத்தி சாதனை புரிந்துள்ளார். அதில் மிகவும் நீடித்த தன்மை உள்ள சாதனை என்று அவர் நினைப்பது, தமிழக விவசாயத்தில் தனது தலையீடு என்று அவர் நினைக்கலாம். ராஜராஜன் 1000 என்ற பலமான ஒரு பெயரை, தான் செம்மை நெல்லுக்கு வழங்குவதாக அப்போது அறிவித்துள்ளார். அதற்கு விளக்கமும் கூறியுள்ளார். வீரபாண்டி ஆறுமுகம் என்ற விவசாயத்துறை அமைச்சர் தன்னிடம் அந்த நெல் அதிகமான விளைச்சலை தருவதாக கூறினார் என்கிறார் முதல்வர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இதற்க்கு செம்மை நெல் என்று பெயரிட்டதாகவும் கூறியுள்ளார். அப்படி ஒரு விசேசமான நெல் எது என்று நாம் ஆராய்ந்தோம். சி.பி.ஐ. கட்சியின் விவசாய சங்கத்தின் தலைவர் துரைமாணிக்கம் ஒரு அறிக்கையை இன்றைய ஜனசக்தி ஏட்டில் கூறியுள்ளார். அதில் அப்படி ஒரு நெல்லே கிடையாதே ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதனால் இந்த விவகாரம் மேலும் சிக்கலாக மாறுகிறது.
உண்மை என்ன என்று பார்ப்போம். Systamatic Rice Intensification என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் "நெல் உற்பத்தியை தீவிரமாக துரிதப்படுத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட முறை" என்பது நெல் உற்பத்தியில் புதிதாக பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில் பழைய முறையிலிருந்து பல மாறுதல்கள் உள்ளன. அதாவது ஒரு ஏக்கர் நிலத்தில் கொத்து,கொத்தாக விதைகளை போடவேண்டியது இல்லை. மாறாக ஒன்றேகால் அல்லது ஒன்றரை கிலோ விதையை ஒரு ஏக்கருக்கு விதைத்தால் போதும். வழமையாக நாற்று பயிரை முப்பது அல்லது நாற்பத்தைந்து நாட்களுக்கு வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக இந்த முறைப்படி ஏழு நாட்களிலிருந்து பதினைந்து நாட்களிலேயே நாற்றுகளை பிடுங்கி நட்டு விடலாம். அப்படி நடும்போது அது அதிகமாக வேர் பிடிக்கும். அதை அடி மண்ணுடன் சேர்த்து பிடுங்கி நடவேண்டும். வழக்கமாக நாற்றுகளை இரண்டிற்கு மேல் நடும் பழக்கம் போல இல்லாமல், இந்த முறையில் ஒரு அடிக்கு, ஒரு நாற்று என்று நடவேண்டும். அதை ஒற்றை நாற்று முறை என்று அழைக்கிறார்கள். இந்த ஒற்றை நாற்று முறையைத்தான் செம்மை நெல் முறை என்கிறார்கள். இந்த முறையிலான நாற்று நடுதலில் தண்ணீரை மூன்றடிக்கு நிற்கவைக்க வேண்டியது இல்லை. காய்ச்சலும், பாய்ச்சலுமாக காய்கறிகளுக்கு ஊற்றுவதுபோல தண்ணீரை பாய்ச்சினால் போதும். அதேபோல அறுவடையை 120 நாட்கள் காத்திருக்க வேண்டியது இல்லை. 110 நாட்களிலேயே அறுவடை செய்து விடலாம்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், விவசாய அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், இந்த ஒற்றை நாற்று முறை எந்த அளவுக்கு அதிக விளைச்சலை கொடுக்கிறது என்று முதல்வரிடம் கூறினார் போல தெரிகிறது. விவசாயம் பற்றி கிஞ்சித்தும் தெரியாத முதல்வரோ, அப்படியானால் அதற்கு செம்மை நெல் என்று பெயர் வைத்து விடலாமே என்று கூறினார் போலும். இதை கேட்டு சிரிக்கவும் முடியாமல், அழவும் முடியாமல் விவசாயத்துறை அதிகாரிகள் அதையே " செம்மை நெல் சாக்படி முறை" என்று கூறத்தொடங்கியுள்ளனர். தான் ஒரு நெல்லுக்கு என்று பெயர் வைத்ததை இந்த விவசாய அமைச்சர்கள் சாகுபடி முறை என்பதாக கூறுகிறார்களே என்று முதல்வருக்கு மறுபரிசீலனை வந்திருக்க வேண்டும். வீரபாண்டியருக்காவது புரிந்திருக்க வேண்டும். தாங்கள் செய்வது எல்லாமே சரியானது என்று எதிர்க்கட்சிகாரர்களிடம் வாதாடுவதுபோல, இதிலும் இவர்கள் நடந்து கொண்டுள்ளார்கள். அதன் விளைவே இப்போது இந்த சாகுபடிமுரையை ஒரு நெல் என்று நினைத்துக்கொண்டு, தமிழக முதல்வர் அடஹ்ர்க்கு புதிய பெயராக ராஜராஜன் 1000 என்று பெயரிட்டுவிட்டார். அவருக்கு விவசாயம் பற்றி இருக்கும் அறிவை மட்டுமல்ல, அக்கறையையும் இது அம்பலப்படுத்தி விட்டது.