Sunday, September 26, 2010

திலீபன் தியாகம் இன்றுவரை சில செய்திகளை அறைந்து சொல்கிறது

திலீபன் தியாகம் இன்றுவரை சில செய்திகளை அறைந்து சொல்கிறது.
திலீபன் பெயர் தெரியாத தமிழின உணர்வாளர்கள் இந்த பூவுலகில் இருக்க முடியாது. நேற்று அதாவது செப்டம்பர்-26 , திலீபன் நினைவை திரும்பி பார்க்கும் நான். அது நடந்தது 1987 இல். திலீபனின் இயற்பெயர் ராசையா பார்த்திபன், அவர் ராசையா என்ற பள்ளி ஆசிரியரின் மகன். யாழ்ப்பணத்தில் பிறந்தவர். குழந்தை பருவத்திலேயே தாயை இழந்தவர் திலீபன். யாழ்ப்பாணத்தின் பிரபலமான இந்து கல்லூரியில் பயின்றவர். தாய் தமிழீழத்தை அடைவதற்காக, தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில், 1983 ஆம் ஆண்டு, அதன் கருப்பு ஜூலை நிகழ்ச்சியின் போது இணைந்தவர்.. அந்த கருப்பு ஜூலை படுகொலை நிகழ்வு, தமிழர்களுக்கு எதிரான படுகொலை நிகழ்வு மாத்திரமல்ல, தமிழினத்திற்கு எதிரான இன அழிப்பின் அடையாள நிகழ்வு என்பதை அன்றே புரிந்திருந்ததால்தான் திலீபன், புலிகள் இயக்கத்தில் சங்கமமானார். தமிழீழம் விடுதலை அடைவதே தங்கள் இலட்சியமாக கொண்ட விடுதலை புலிகள் இயக்கத்தில் அதனால்தான் இணைந்தார். யாழ் குடாநாட்டின் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக திலீபன் உயர்வு பெற்றார்.
1987 ஆம் ஆண்டு இந்திய அரசு, இலங்கை அரசுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது. அதாவது இந்தியாவில் ஆறரை கோடி தமிழ் மக்கள் வாழும் போது, அந்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இல்லாமல், அந்த தமிழ் மக்களின் கலந்தாலோசித்தல் அல்லது பங்களிப்பு என்று எதுவும் இல்லாமல், அதேசமயம் இலங்கை தீவில் வாழும் ஈழத்தமிழர்களின் கலந்தாலோசனையோ, பங்களிப்போ, இல்லாமல், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழி தமிழர்களான தோட்டத் தொழிலாளர்களான, மலையக தமிழர்களின் கலந்தாலோசனையோ, அல்லது பங்களிப்போ இல்லாமல், கிழக்கு மாகாணங்களில் இலங்கையில் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்களின் கலந்தாலோசனையோ, பங்களிப்போ இல்லாமல், ஒரு ஒப்பந்தம் தயாரானது. அந்த ஒப்பந்தத்தை தயாரித்தவர்கள், இந்தியாவின் அரசியல் தலைமையில் வீற்றிருந்த தமிழர் அல்லாதவர்களாகவும், இலங்கையில் ஆட்சியில் இருந்த தமிழர் அல்லாதவர்களாகவும் இருந்தார்கள்.
இப்படி ஒரு ஒப்பந்தம் உலக அரங்கில் ஒரு குறிப்பிட்ட தேசிய இன பிரச்சனையைதீர்ப்பதற்கானஆவணமாகஎங்காவது ஏற்றுக்கொள்ளப்படமுடியுமா? அது இங்கே முடியும்,. அதுதான் இந்தியா. அதுதான் இலங்கை. ஒவ்வொரு நாட்டிலும் தேசிய இன பிரச்சனை என்பது பலமுறை, பல காலங்களில் வந்திருக்கிறது. காலம், காலமாக தேசிய இன பிரச்சனை என்பது பூமிப்பந்தின் ஒவ்வொரு மூலை, முடிக்கிலும், எழுந்து கொண்டே இருக்கும் ஒரு உரிமை பிரச்சனைதான். அப்போதெல்லாம் அத்தகைய தேசிய இன பிரச்னையை, கையாளும் ஆளும் கூட்டங்கள் தங்கள் இழுப்புக்கு வரக்கூடிய ஒரு சக்தியை தேசிய இன போராட்ட இயக்கத்திருந்து தேர்ந்தெடுத்து அதை வைத்து, மேசைப்பேச்சு என்று ஒன்றை நடத்தி, அதன்மூலம் ஒரு தீர்வை முன்வைத்து, அதில் அதிகாரம் செலுத்தும் சக்தியின் கையெழுத்தையும், அடிமைப்பட்டிருக்கும் சக்தியின் சார்பாக ஒரு பிரதிநிதியின் கையெழுத்தையும் பெற்று, உலகின் முன்னால் ஒரு தீர்வை அந்த குறிப்பிட்ட தேசிய இன பிரச்சனையில் எட்டிவிட்டோம் என்பதாக அறிவிப்பார்கள். நாமும் அதை அப்படியே நம்பி அதையே வரலாறாகவும், அதையே தீர்வாகவும் எண்ணி, அதை எட்டுவதற்கு பாடுபட்டவர்கள் என்று கருதப்படும் மென்மை முகம் கொண்ட ஆதிக்க சக்திகளின் கையாள்களை பாராட்டி, வரலாற்றில் ஏற்றி , பாடப்புத்தகத்தில் சேர்த்துவிடுவோம்.

இதுவே பாலஸ்தீன பிரச்சனைக்கும் நடந்தது. அங்கே பி.எப்.எல்.பி . என்ற ஜார்ஜ் ஹப்பாஸ் தலைமையிலான அமைப்பு போன்ற கருத்தியல் தெளிவான அமைப்புகள் ஆயுதப்போரில் இருந்தன. ஆனால் அமெரிக்கா இஸ்ரேலுடன் பேச, யாசர் அரபாத் தலைமையிலான பி.எல்.ஒ. என்ற ஒருங்கிணைப்பு என்று சொல்லி, அல்-படாஹ் அமைப்பை மட்டுமே மேசை பேச்சுக்கு உற்சாகப்படுத்தியது. அதன் விளைவு ஒரு நகராட்சி அளவுக்கு உள்ள இடத்தை விடுதலை பகுதி என்று பாலஸ்தீன மக்களுக்கு கொடுத்து விட்டு, அதிலும் வெள்யே வர, உள்ளே போக ஒரு பாதையை போட்டு அதை கண்காணிக்கும் பொறுப்பை இஸ்ரேல் நாட்டு ராணுவத்தின் கையில் கொடுத்ததே நடந்திருக்கிறது.
இவ்வாறு உலக ஆதிக்க சக்திகள் திட்டமிட்டு, தேசிய இன பிரச்சனைகளை தங்கள் கையை விட்டு சென்றுவிடாமல் பார்த்துக்கொண்டு பிறகு அதற்கு ஒரு தீர்வு என்ற பெயரில் சரணாகதி ஒப்பந்தங்களை செய்வது வழக்கம்,. இதுதான் காஷ்மீர் பிரச்சனையில், இந்திய அரசாலும், பாகிஸ்தான் அரசாலும் தொடர்ந்து செயல்பாட்டில் செய்யப்படும் தந்திரமாகும். அதாவது மதச்சார்பற்ற அமைப்பாக விடுதலை உணர்வோடு போராடிய ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவரை மக்பூல் பட்டை தூக்கிலிட்டு விட்டு, அங்கே மத அடிப்படையிலான பிரச்சனையாக மாற்ற முயற்ச்சித்து, தங்களுக்கு ஒத்துவரும் சில தலைவர்களுடன் பேச இந்திய அரசு முயற்ச்சிப்பதும் இதே வரிசையில்தான்.. இந்த வகையில்தான் இந்திய அரசு இலங்கை தமிழர்களாக அடையாளம் காட்டப்படும் ஈழத்தமிழர் பிரச்சனையிலும் கையாண்டுள்ளது.

அதாவது 1987 இல் செய்யப்ப்பட்ட இந்திய--இலங்கை ஒப்பந்தம், ராஜீவ்--ஜெவர்தனே ஒப்பந்தம் என்றுதான் அழைக்கப்பட்டது. அதிலேயே நாம் சம்பத்தப்பட்ட சக்திகளை அடையாளம் கண்டுகொள்ளலாம். அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாத புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை கூட்டிவந்து வற்ப்புறுத்தி அவர்கள் அந்த ஒப்பந்தப்படி, பெயர் அளவுக்கு ஆயுதங்களை ஒப்படைப்பது போல நடந்து கொள்ளசொன்னதும், அப்படியே பிரபாகரன் நடந்துகொண்டதும், அதை ஒட்டி இந்திய அமைதி படை என்ற பெயரில் ஒரு தமிழர் விரோத மனப்பான்மையை மனதிலும், கொள்கையிலும் கொண்ட தமிழர் அல்லாத படையை இந்திய அரசு அனுப்பியதும் அம்பலமான பழைய செய்திகள். ஆனாலும் தமிழர் விடுதலைக்காக தியாகம் செய்ய போர்க்களம் இறங்கிய பிரபாகரனோ, புலிப்படையோ, ஆக்கிரமிப்பு பாணியில் ஈழமண்ணில் இறங்கிய இந்திய அரசப்படைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அத்தகைய ஒரு வரலாற்று திருப்புமுனையை, சாதித்த நிகழ்வுதான் திலீபனின் தியாகம். அதை போர்க்களம் கண்டுவந்த பிரபாகரன், பிரபல காந்தீய வழியான பட்டினி போராட்டத்தின்மூலம் சரியாகவே கையாண்டார். போராட்டம் எப்போதுமே பல முனைகளிலும் நடத்தப்படவேண்டும். விடுதலை போர் என்பது அதையே நிரூபித்து காட்டுகிறது. தேசிய இன விடுதலை போராட்டங்கள் மட்டுமே, நேரடியாக இன்று உலகை ஆளும் ஏகாதிபத்தியவாதிகளை உடைப்பதற்கான வழிமுறையாகும். ஏகாதிபத்தியங்கள் எப்போதுமே தங்களுக்கான சந்தைகளை தேடுபவர்கள். அவற்றை தக்கவைத்து கொள்பவர்கள். அவர்களுக்கு அப்படிப்பட்ட சந்தைகளாக இருக்கும் நிலங்களை, தேசிய இன போராட்டங்கள் மட்டுமே உடைக்கின்றன . அதனால் அவர்கள் தேசிய இன விடுதலை போராட்டங்களுக்கு எதிராகவே தங்களது காய்களை நகர்த்துவார்கள். இதை தேசிய இனங்கள் அடிப்படையில் புரிந்துகொள்ளவேண்டும்.

இதே சிக்கல்தான் இந்திய அரசின் அணுகுமுறையிலும் நடந்தது. டில்லியை ஆளும் சக்திகள் நாகா, மிசோ, மணிப்பூர், அஸ்ஸாம், காஷ்மீர், போன்ற பல சிக்கலான தேசிய இன பிரச்சனைகளை சந்தித்து வருபவர்கள். அவற்றில் பலவற்றை அடக்கியதிலும் தேர்ச்சி பெற்றவர்கள். அவர்களிடம் அந்த அனுபவம் அதிகமாக இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் ஈழப்பிரச்சனையில் தலையிட்ட காலங்களில், தமிழ்நாட்டில் இரு பெரும் கருத்துக்கள் இருந்து வந்தது. ஒன்று இந்திய அரசை சார்ந்து தங்கள் போராட்டத்தை ஈழ போராளிகள் பெற்றுவிடலாம் என்ற கருத்து. அதற்காக இந்திய அரசப்படையை இலங்கைக்கு அனுப்பி விடுதலைக்கு உதவ செய்வது என்று அந்த கருத்து உள்ளவர்கள் அபிப்பிராயப்பட்டாகள். அதில் தமிழ்நாட்டு ஆளும்வர்க்க கட்சிகள் தொடங்கி, தமிழ் இன உணர்வாளர்கள் வரை பலரும் வரிசைப்பட்டார்கள். தமிழ் நாட்டு அப்பாவி மக்களின், உணர்வுகளும், ஏன் ஈழ தேசத்து தமிழ் மக்களின் உணர்வுகளும் கூட, அப்படியே இந்திய அரசை நம்பும் போக்கையே வெளிப்படுத்தியது. .இன்னொரு கருத்து இந்திய உதவி பற்றி எச்சரித்து வந்தது. அது புரட்சியாளர்களின் கருத்து.
இந்தியாவில் உள்ள தேசிய இனங்கள் இந்திய அரசை நம்புகிறார்களோ இல்லையோ, தமிழீழ மக்கள் இந்திய அரசின் மீது, அப்படி ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கையை வைத்து இருந்தார்கள். அந்த நம்பிக்கையை உடைத்த முதல் நிகழ்வு என்பதால்தான் திலீபனின் நினைவு இன்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சென்ற இந்திய அமைதிப்படை அங்கே சிறிது, சிறிதாக போராளிகளின் போக்குகளையும், நடமாட்டங்களையும், நடவடிக்கைகளையும் கண்காணிக்கும், மற்றும் கட்டுப்படுத்தும் செய்களில் ஈடுபட தொடங்கினார்கள். அப்போது இந்திய அமைதிப்படையை எதிர்த்த பிளாட் அமைப்பின் தலைவர் உமா மகேஸ்வரனும், பாபி தலைமையில் இருந்த டெலோவும் ,டெலா அமைப்பின் சிறு பிரிவும் களத்தில் போர் புரிந்தார்கள். நிர்ப்பந்தத்தின் காரணமாக சுடுமலையில் ஒரு கூட்டம் ,அதில் பெயரளவுக்கு ஆயுதம் ஒன்றை ஒப்படைத்த பிரபாகரன் அடுத்தட கட்ட அதிகார கைப்பற்றலுக்கு தயாராகி கொண்டிருந்தார்.

அதற்க்கான பேச்சுவார்த்தையில், எழுப்பப்பட்ட கோரிக்கைகளை திலீபனின் பட்டினிப்போர் மூலம், புலிகள் இயக்கம் முன்வைத்தது. அதில்தான் 1 ] பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்ப்பட்ட எல்லா தமிழ் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முதல் கோரிக்கையாக வைத்தது. 2 ] மறுவாழ்வு என்ற பெயரில் தமிழர் பகுதிகளில், சிங்களர்களை கொண்டுவந்து குடியேற்றும் காலனிமயப்படுத்தல் என்ற இன அடையாள அழிப்பு எதிர்ப்பு என்பதை இரண்டாவது கோரிக்கையாக முன்வைத்தது. 3 ] ஒரு இடைக்கால அரசாங்கத்தை நிறுவும்வரை அத்தகைய காலனிமயப்படுத்தும் நடவடிக்கைகளை தடை செய்ய வலியுறுத்தி மூன்றாவது கோரிக்கையாக வைக்கப்பட்டது . 4 ] வட-கிழக்கு மாகாணங்களில் புதிய காவல் நிலையங்களை திறப்பதிலிருந்து சிங்கள அரசை தடுக்க வேண்டும் என்பது நான்காவது கோரிக்கை. 5 ] தமிழர் கிராமங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் ஆக்கிரமித்துக்கொண்டுள்ள , இலங்கை ராணுவத்தையும், இலங்கை காவல்துறையையும், திரும்ப அழைக்கவேண்டும். இந்திய ராணுவத்தின் மேற்பார்வையில், இலங்கை அரசால், ஊர்காவல் படைக்கு கொடுக்கப்பட்டுள்ள ஆயுதங்களை திரும்ப பெறவேண்டும். இவ்வாறு ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் தனது பட்டினப்போரை தொடங்கினார். அதாவது புலிகளின் அரசியல்பிரிவின், யாழ் குடாநாட்டு தலைவர் மேற்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து தனது பட்டினிபோரை நடத்தினார் என்பது புலிகளின் அரசியல் போராட்டமாக காணப்படவேண்டும்.
மேற்கண்ட ஜனநாயக ரீதியான கோரிக்கைகளை ஏற்காமல் இந்திய அரசு திலீபனின் மரணத்தை அனுமதித்தது என்றால், அதன் போரும் என்ன என்பதை இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இப்போதாவது உலக தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை போட்டவர்கள், அன்றைய நிலையில் தமிழர்களின் அடிப்படை கோரிக்கைகளான திலீபனின் கோரிக்கைகளை ஏற்க்கவில்லை என்பதை அரசியல்ரீதியாக புரிந்து கொள்ளவேண்டும். அன்றைய சூழலில் ஈழத்தமிழர்கள் இந்திய அரசின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையை வைத்திருந்தார்கள். அப்படிப்பட்ட நம்பிக்கைகளில் ஒரு பகுதியையாவது, புலிகளும் வைத்திருந்ததால்தான், கடைசி கோரிக்கையில் இந்திய ராணுவத்தின் மேற்ப்பார்வையில் என்பதாக திலீபனின் கோரிக்கையும் அமைந்தது. இத்தகைய கோரிக்கைகளை ஏற்காத இந்திய அரசு, திலீபனின் காந்தீய முறை போராட்டத்தை கூட ஏற்காத நிலையில், அவரது தியாகம் அங்கே எழுதப்பட்டது. அதுவரை டில்லியை நம்பிய தமிழ் உள்ளங்கள் கூட அப்போதுதான் முதல்முறையாக டில்லி எதிர்ப்பு மனோபாவம் கொண்டனர். அதன்விளைவே புலிகளின் படைகளுக்கும், இந்திய ராணுவத்திற்கும் மோதல்கள் வெடித்தன. அதேசமயம் ஈ.பி.ஆர்.எல்.எப்.பும், செல்வம் தலைமையில் டெலோவும், ஈ.என்.டி.எல்.எப்.பும் த்ரீ ஸ்டார் என்ற பெயரில் இந்திய அரசு செயல்களுடன் சேர்ந்துகொண்டார்கள். தற்க்காலிக அரசை இந்திய அடிவருடி அரசாக அமைத்தார்கள்.
இதுவே திலீபனின் மரணம், அதாவது தியாகம் நமக்கு கொடுக்கின்ற பாடம். உலகத்தமிழர்கள் இந்த பாடத்தையும் இன்றாவது புரட்டிப்பார்ப்பார்களா?