Friday, September 24, 2010

கச்சதீவு மட்டுமல்ல; கடலும் மீனவருக்கே சொந்தம்.

இப்போது கச்சதீவை இந்த்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு, இலங்கை தீவை ஆண்டுவரும் சிங்கள அரசுக்கு தாரை வார்த்து கொடுத்ததற்காக, கடும் விமர்சனங்களை மத்திய அரசு எதிர்கொண்டுவரும் வேளை. இந்த கைமாற்றி கொடுக்கப்பட்ட தீவு பிரச்சனை ஒரு அரசியல் முடிவாக எதிர்க்கப்படுவதைவிட, ஒரு சமூகத்தின் வாழ்நிலை பிரச்சனையாக இப்போது பார்க்கப்படுகிறது. அதாவது சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கச்சதீவு இந்தியாவால் திரும்பப்பெறபடவேண்டும் என்று ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதை கொண்டுவந்தவர் தி.மு.க. நாடாளுமன்ற கட்சியின் தலைவரான டி.ஆர்.பாலு. தி.மு.க. கொடுத்த தீர்மானத்தில், அ.இ.அ.தி.மு.க., இடது சாரிகள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவருமே 1974 ஆம் ஆண்டு இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் நடந்த ஒப்பந்தந்த்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி பேசினர். அதன்மூலம் கச்சதீவை திரும்ப பெறவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு அவர்கள் எடுத்துக்கொண்ட விவாதப்பொருள், தொடர்ந்து இந்தியாவின் தமிழக மீனவர்கள் கச்சதீவை தாரைவார்த்ததனால், அதன் அருகே செல்லும்போதெல்லாம் இலங்கை கடற்ப்படையால் தாக்கப்படுகிறார்கள் என்பதே.
அதை பேசும்போது டி.ஆர்.பாலு, கச்சதீவை தாரை வார்த்தபிரகுதான், தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்கள கடல்படையால் தாக்கப்பட்டு வருகிறார்கள் என்றார். அதேபோல அ.தி.மு.க.வின் தம்பிதுரையும் பேசினார். ம.தி.மு.க.வின் கணேச முர்த்தி ஒரு கட்டம் மேலே போய், தமிழக மீனவர்கள் இந்திய குடிமக்கள்தானே? என்றும், அவர்களை இந்திய அரசு ஏன் அங்கீகரிக்க மறுக்கிறது? என்றும், தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது? என்றும் கேட்டார். அதையும் தமிழிலேயே கேட்டார். இடது சாரி கட்சி உறுப்பினர்களும் மீனவர் கொலைகளுக்கு கச்சதீவு ஒப்பந்தப்படி தமிழக மீனவர்களை மீன் பிடிக்க விடுவதில்லை என்றும், அதனால் அந்த ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்றும் கூறினார். இந்த அளவுக்கு அவர்கள் கேட்கும்போது, இந்திய வெளிவிவகாரத்துறை செயலாளர் நிரூபமா ராவ், இலங்கை பயணத்தில் இருந்தார். கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற தமிழ்நாட்டு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல எத்தனித்த எஸ்.எம்.கிருஷ்ணா, நிரூபமா ராவ் எல்லாவற்றையும் இலங்கை அரசிடம் பேசுவார் என்று கூரிமுடித்துவிட்டார்.
மேற்கண்ட நாடாளுமன்ற குரல்களுக்கு பிறகும், இந்திய அரசு பக்கத்திலிருந்து எந்த ஒரு ஆக்கபூர்வமான முன்முயற்சியும் தெரியவில்லை. ஏற்கனவே கச்சதீவை இந்திய அரசு திரும்ப பெறவேண்டும் என்று ஒரு வழக்கு ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர்கள் பெயரில் உச்சநீதிமன்றத்தில் போடப்பட்டு இன்னமும் நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கில் இந்தியா இலங்கைக்கு கொடுத்த கட்சதீவு ஒப்பந்தம் சட்ட ரீதியாக செல்லத்தக்கதல்ல என்பதே முக்கிய அடிப்படையாக இருக்கிறது. அதாவது இதற்க்கு முன்னால் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு, ஒரு இந்திய பகுதியை பாகிஸ்தானிற்கு கொடுப்பதற்கு அரசு முடிவெடுத்த போது, அத்தகைய ஒப்பந்தம் நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு ஒப்புதலையும், மூன்றில் ஒரு பங்கு உள்ள இந்திய சட்டமன்றங்களின் ஒப்புதலையும் பெறாததனால் செல்லாது என்ற பழைய வழக்கு ஒன்றின் தீர்ப்பை எடுத்துக்காட்டி, அதேபோல கட்சதீவு ஒப்பந்தமும் இந்திய நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவையும், மூன்றில் ஒரு பங்கு சட்ட மன்றங்களின் ஒப்புதலையும் பெறவில்லை என்று அந்த வழக்கில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது. அந்த வழக்கு இன்னமும் நிலுவையில்தான் உள்ளது.
இந்த நிலையில் வருகிற அக்டோபர் மாதம் 11 ஆம் நாள், ராமேஸ்வரம் மீனவர் சங்கங்கள் ஆயிரக்கணக்கில் தாங்களே கச்சதீவை நோக்கி போகப்போகிறோம் என்றும் உலகுக்கு அறிவித்துள்ளனர்.
கச்சதீவை ஒருகாலத்தில் ராமநாதபுரம் ராஜாவாக இருந்த சேதுபதி மன்னர் வைத்திருந்தார். அவர் அதை குத்தகைக்கு கொடுத்த ஆவணங்கள் இன்னமும் இருக்கிறது,. அப்படிப்பட்ட கச்சதீவை இந்திய அரசு இலங்கை அரசுக்கு கொடுத்த பிறகு அதன் அருகே செல்வதற்க்கே தமிழ்நாட்டு மீனவர்கள் அஞ்சினர். அதேபோல சம்பவங்களும் நடந்துவரூகின்றன. முப்பத்தாறு ஆண்டுகளுக்கு பிறகு நாம் கொடுத்த கட்ச தீவை நாமே திரும்ப கேட்கும் நிலை வந்துள்ளதா என்று பார்க்க வேண்டும்.
இரண்டு நாட்களுக்கு முன்னால், செப்டம்பர் 22 ஆம் நாள், இரவில் வழமை போல, ஒரு இலங்கை கடற்படை கப்பல் ராமேஸ்வரம் தீவு அருகே வந்துவிட்டது. இதுபோல பலமுறை இலங்கை கடற்படையின் சிங்கள வீரர்கள் நமது கரை ஓரத்தில் அத்துமீறி நுழைந்திருக்கிறார்கள். அப்படி நுழைபவர்கள் இங்குள்ள இந்திய மீனவர்களை அடிப்பதும், சுடுவதும் போன்ற வன்முறைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் இந்திய அரசின் கடற்படையும், தமிழக கடலோர காவல்படையும் அந்த இலங்கை கடற்படைக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டிருக்கிறார்கள். எத்தனை முறை கேட்டும்கூட, அத்துமீறி நுழையும் இலங்கை கடற்படை மீதோ, வன்முறையை கட்டவிழ்த்து விடும் சிங்கள படை வீரர்கள் மீதோ எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுத்தது இல்லை. அதுமட்டுமின்றி குறைந்த பட்சம், சட்டத்தை மீறும் இலங்கை கடற்படையினர் மீது ஒரு முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை என்பதை தொடர்ந்து மீனவ இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும், தமிழின உணர்வாளர்களும் எடுத்து சொல்லியும் தமிழக காவல்துறையின் செவிகளில் விழுந்ததாக தெரிய வில்லை.
சமீபத்தில் வேதாரண்யம் அருகே செல்லப்பன் என்ற மீனவர் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட போது, ஓடிவந்து உதவிய தமிழக அரசு கூட, சம்பந்தப்பட்ட இலங்கை கடற்படையினர் மீது ஒரு முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யவில்லை என்ற விமர்சனம் பெரிதாக கிளம்பியது. இப்போது முதல்முறையாக இந்த இருபத்தேழு ஆண்டுகளாக நடக்கும் துப்பாக்கி சூடுக்கு பிறகு, கடந்த செப்டம்பர் 22 இரவில் நடந்த இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு, ராமேஸ்வரம் காவல்துறை ஒரு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். இதற்க்கு மீனவர் சங்கங்கள் நன்றி சுவரொட்டியும் ஒட்டியுள்ளனர்.
இந்த அளவுக்கு கட்சதீவு பிரச்சனை ஒரு சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு கச்சதீவு பிரச்சனையில், இந்திய அரசோ, இலங்கை அரசோ செய்கின்ற செயல் தவறு என்ற புரிதல் இருக்கிறது. கச்சதீவில் இந்திய மீனவர்கள் வலைகளை காயப்போடவும், மீன்களை உலர்த்த போடவும், ஒப்பந்த்தப்படி உரிமை இருக்கிறது என்றாலும் அதை சிங்கள கடற்படை வீரர்கள் ஏற்றுக்கொள்ளாமல், அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை பார்ப்பதுபோல பார்த்து, அத்துமீறுகிரார்கள் என்பதும் தமிழக மக்களால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அதேசமயம் இந்திய மீனவர்கள் கடலில் எல்லை மீறி செல்கிறார்கள் என்றும் அதனால்தான் இலங்கை கடற்படை இவர்களை சித்தரவதை செய்வதும், சுட்டு கொள்வதும் நடக்கிறது என்றும் தொடர்ந்து இலங்கை அரசுடன் சேர்ந்து கொண்டு, இந்திய அரசும் சொல்லி வருவதால், அதை மக்கள் நம்புகிறார்கள். இதுபோன்ற சால்ஜாபுகளால் அரசு இதுவரை தப்பித்து வருகிறது. உண்மை அவ்வாறு இல்லை.
கடலில் இரு நாடுகளுக்கு இடையில் உள்ள எல்கையில் எப்படி சுவர் எழுப்ப முடியாதோ, அதேபோல மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும்போது அவர்கள் இத்தகைய எல்கைகளை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது.
இரு நாடுகளுக்கு நடுவே உள்ள எல்கைகளை கடலில் வரைவது என்பது இரு நாட்டு அரசுகளுக்கும் சாத்தியமான ஒன்றே. இரு நாட்டு கடல் படைகளும், தங்கள் திசைகாட்டும் கருவிகளுடன் தான் கடலில் நகர்வார்கள். அவர்களுக்கு அவ்வாறு அடுத்த நாட்டு எல்கைகள் என்பது கவனிக்கப்பட முடியும். ஆனால் அதுவே மீனவர்களுக்கு சாத்தியமில்லை. அதுமட்டுமல்லாது மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லும்போது, அதிகமான மீன் கிடைக்கும் இடம் நோக்கிதான் நகர முடியும். அப்போது அவர்கள் மீன்களுக்கு பின்னே செல்லும் வழிகளைத்தான் வழிகாட்டிகளாக கொள்ளமுடியும். அப்படி மீன்களுக்கு பின்னால் பயணமாகும் மீனவர்கள் தங்களது படகுகளை, எல்கை பார்த்துக்கொண்டு ஓட்டமுடியாது. ஆகவே மீனவர்களுக்கு கடலில் எல்கை கிடையாது என்பதையும், மீனவர்களுக்கு கடலில் எல்கை இருக்க முடியாது என்பதையும் மீனவர்கள் அல்லாதவர்கள் புரிந்துகொள்வது இயலாததாக இருக்கிறது. இதுவே நடைமுறையாகவும் இருக்கிறது.
அதாவது 1983 ஆம் ஆண்டிற்கு முன்பு, அதாவது இலங்கை தீவில், ஈழத்தமிழருக்கும், சிங்களவர்களுக்கும் ஒரு ஆயுதம் தாங்கிய போர் நடப்பதற்கு முன்பு இந்தியா பக்கம் இருக்கும் தமிழ் மீனவர்களும், இலங்கை தீவில் இருக்கும் தமிழ் மீனவர்களும் இருபுறமும் கரைகளுக்கு வருவதும், மீன் பிடித்தலை இரு புறமும் செய்வதும், பரஸ்பரம் பழகிக்கொள்வதும், சர்வ சாதாரணமாக நடந்து வந்தது.
அவ்வாறு பரஸ்பரம் இரு நாட்டு கரைகளுக்கும், எதிர் கரைகளில் உள்ள மீனவர்கள் செல்வதும், அந்த கரையோரத்தில் மீன் பிடிப்பதும், அங்கேயே சில நேரங்களில் தங்கி இருந்து ஒய்வு எடுப்பதும், பின் திரும்பி வருவதும் சாதாரணமாக இரு நாடுகளுக்கு இடையில் நடக்கின்ற விஷயம். அதற்குமேலும் சொல்லப்போனால், யாழ்ப்பாண மீனவர்களில் சிலர், தாங்கள் ராமேஸ்வரம் கரைக்கு வந்து தங்கும்போது, இங்கேயே குடும்பமாக வாழ்வதற்கு சில ஏற்பாடுகளை செய்துகொண்டவர்களும் உண்டு. அதேபோல தமிழக மீனவர்களில் சிலரும், ஈழப்பகுதியில் தங்கி வாழ்ந்ததும் உண்டு. ஆகவே இரு நாட்டு மீனவர்கள் மத்தியில் உள்ள உறவு என்பது ஒரு வரலாற்று தொடர்பு என்பதை உலகம் உணர்ந்துகொள்ளவேண்டும். இதில் தமிழ்நாடு வரை வந்து மீன் பிடிப்பதில், சிங்கள மீனவர்களும் உள்ளடக்கம் என்பதையும் உணர்ந்து கொள்ளவேண்டும்.
அதனால்தான் சமீபத்தில் இந்தியா வந்த இலங்கை நாட்டு மீனவர்கள் அதாவது தமிழ் மற்றும் சிங்கள மீனவர்கள் தங்களுக்குள் பேசும்போது இரு புறமும் பரஸ்பரம் மீன் பிடிக்க அனுமதிவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவ்வாறு மீனவர்கள் பற்றியும், மீன் பிடிக்கும் தொழில் பற்றியும் சரியாக புரிந்து கொள்ளவேண்டியது மீனவர் அல்லாத மக்களுக்கு முக்கிய தேவையாக இருக்கிறது.
ஏன் என்றால் உலகம் முழுக்கவே நிலத்தில் வாழும் மக்களுக்கு, நீரில் வாழும் மீனவர்கள் பற்றி எதுவும் தெரிவதில்லை. தெரியாத விசயத்தின் மீது அவர்கள் கருத்து வைத்திருக்கிறார்கள் எனபதுதான் மிகவும் கொடுமையானது. நிலம் சார்ந்த உலகம் என்பது வேறு. நீர் சார்ந்த உலகம் என்பது வேறு. நிலம் சார்ந்த உலகில் ஒவ்வொரு நாட்டிலும் வாழும் மக்கள் .ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிடுகிறார்கள். அவர்கள்தான் அரசியலிலும், அதிகார வர்க்கத்திலும், ஊடகங்களிலும் கோலோச்சுகிறார்கள். அவர்கள் தங்களது அனுபவங்களில் இருந்து மட்டுமே உலகை காண முடியும். அவர்களுக்கு நீரில் வாழும் ஒரு உலகம் பற்றி எதுவுமே தெரியாது. அப்படி இருக்கும்போது அவர்கள் எப்படி நீரில் வாழும் மக்கள் பற்றிய சட்டங்களையோ, சாதகங்கலையோ, இடைவெளிகளையோ, தேவைகளையோ, பொருளாதார உறவுகளையோ, உற்பத்தி முறைகளையோ புரிந்துகொள்ள முடியும்? முடியாத ஒன்றை எப்படி தீர்மானிக்க முடியும்?
கடல் சார்ந்த உலகில் அரசர்களாக வாழும் மீனவர்கள் ஆதிவாசிகளாக இருக்கிறார்கள். அவர்களை கடல் சார்ந்த பழங்குடியினர் என்று அழைக்கவேண்டும். கடல் சார்ந்த பழங்குடியினருக்கு கடல் சொந்தம். கரையும் சொந்தம். அதை அவர்கள் உரிமையாக பெறுவதற்கு அவர்களை கடல் சார்ந்த ஆதிவாசிகளாக அறிவித்து, அவர்களுக்கு உரிய கல்வி ஒதுக்கீடு, வேலை ஒதுக்கீடு, அரசியல் தொகுதி ஒதுக்கீடு ஆகியவை கொடுக்கப்ப்படும்போதுதான், அவர்களது பிரதிநிதிகள் தக்க இடங்களில் அமர்ந்து தனகளுக்கான திட்டங்களை தீட்டும்போது, தாங்களே பங்கு கொண்டு, அவற்றை தீர்மானிக்கமுடியும். அப்படிப்பட்ட ஒரு சூழல் மட்டுமே அவர்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை கொடுக்க முடியும். அகவே மீனவர்களின் முழக்கமான கடல், கடலாளிக்கே, கடற்கரை மீனவனுக்கே என்பதை உண்மையாக்க போராடுவோம்.