Friday, September 17, 2010

கல்வியை வணிகமாக ஆக்கலாமா?

கல்வி வியாபாரம்தான் களை கட்டி இப்போது பறக்கிறது. தமிழ்நாட்டில் இன்று அது ஒரு பெரிய வில்லங்கமாக உருவாகி உள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட கோவிந்தராஜன் ஆணைய அறிக்கை, நிறுவப்பட்ட நிறுவனங்களாக இயங்கிவரும், மெட்ரிகுலேசன் பள்ளிகளின் முதலாளிகளது பெரும் எதிர்ப்பை கிளப்பியது. அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்றனர். அவர்களது முதல் நடவடிக்கை, பள்ளிகளை இந்த ஆண்டு திறக்காமல், அரசை நிர்ப்பந்தித்து தங்கள் மீது எந்த ஒரு கட்டுப்பாட்டையும், கல்வி கட்டணம் விசயத்தில் அரசு விதிக்கக்கூடாது என்பதான கோரிக்கையாக இருந்தது. ஆனால் அரசு அதற்கு இடம் கொடுக்கவில்லை.
தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட கோவிந்தராஜன் ஆணையம் தனது ஆய்வின் மூலம், 10 934 சுய-நிதி பள்ளிகளுக்கு, கல்வி கட்டண கட்டமைப்பை நிர்ணயித்தது. அந்த ஆய்வு அறிக்கையை சட்டமன்றத்தில் பள்ளி கல்வி அமைச்சர் வைத்தபிறகே இந்த பிரச்சனை சூடு பிடித்தது. அப்போதுதான் இந்த மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கங்கள் இதை எதிர்க்க தலைப்பட்டனர். அரசு அதற்கு இணங்காத நிலையில் அவர்கள் முதலில் போராட நினைத்தனர். பள்ளிகளை இந்த ஆண்டு வழக்கமாக திறக்கும் காலத்தில் திறக்கவில்லை. அரசிடம் இருந்து தங்கள் பள்ளிக்கு எவ்வளவு கட்டணம் வாங்க வேண்டும் என்ற வழிகாட்டல் வரவில்லை என்றும், வந்த பின்தான் திறக்கமுடியும் என்றும் முதலில் கூறினார். பிறகு திறந்தனர். அப்போது ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ, மாணவிகளுக்கு குறைவான அளவில் கட்டணங்களை பெற்று சேர்த்துக்கொண்டனர். அதேசமயம் இந்த கல்வி முதலாளிகள் நீதிமன்ற படிக்கட்டுகளையே முழுவதும் நம்பி இருந்தனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை இந்த குறைந்த கட்டண விகிதத்தில் சேர்த்துவிட்டனர். இப்போது நீதிமன்ற உத்தரவு வந்து விட்டது.
இந்த ஒய்வு பெற்ற நீதியரசர் கோவிந்தராசன் ஆணையம், 2009 ஆம் ஆண்டின் தமிழ்நாடு பள்ளிகள்[ கட்டண திரட்டல் விதிகள் ஒழுங்குபடுத்தல்] என்ற சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது. அது 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் -7 ஆம் நாள் அமுலுக்குவந்தது. அதன்பிறகு 2009 ஆம் ஆண்டு டிசம்பர்--7 ஆம் நாள் அதற்க்கான விதிகள் தயாரிக்கப்பட்டன. அது சட்டமாக ஆக்கப்பட்ட உடனேயே எல்லா 10934 பள்ளிகளுக்கும் ஒரு கேள்வித்தாள் அனுப்பிவைக்கப்பட்டது. அந்த பள்ளிகளில் சுய-நிதி பள்ளிகளான சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத, அனைத்து பள்ளிகளும் அடங்கும். 41 பத்திகளைக்கொண்டதாக அந்த கேள்வித்தாள் அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு 10238 பள்ளிகள்தான் பதில் அனுப்பியிருந்தன. இப்போது இந்த கல்வி வியாபாரிகளின் வழக்கில், அவர்களுக்கு சாதகமான தீர்ப்பை நீதியரசர் வாசுகி வழங்கியுள்ளார். ஆகஸ்ட்--11 ஆம் நாள் அரசு வெளியிட்ட ஊடக செய்தியையும் இந்த நீதியரசர் தடை விதித்து தீர்ப்பு கூறியுள்ளார். அந்த ஊடக வெளியீட்டில், மேற்குறிப்பிடப்பட்ட கோவிந்தராஜன் ஆணைய வழிகாட்டல்படியான கல்வி கட்டண கட்டமைப்பை இந்த ஆண்டு அனைத்து பள்ளிகளும் கடைப்பிடிக்கவேண்டும் என்று இருந்தது. அதுமாத்திரமின்றி அந்த நீதியரசர் தனது தீர்ப்பில், கோவிந்தராஜன் ஆணையம் பற்றியும் கருத்துக்களை கூறியுள்ளார். அதாவது அந்த ஆணையம் ஆறு உறுப்பினர்களை கொண்டது என்றும், அவர்கள் மட்டுமே எந்த சார்டெட் அக்கவுண்டும் இல்லாமல் , இந்த கட்டண கட்டமைப்பை எல்லா விவரங்களையும் பார்த்து ஒருமாத காலத்திற்குள் சிறப்பாக செய்யமுடியாது என்றும் கருத்து கூறியுள்ளார். இவ்வாறு ஆணையத்தின் அதாவது ஒரு ஓய்வு பெற்ற நீதியரசரின் செயல்பாட்டை, அமர்வு நீதியரசர் விமர்சன ரீதியாக கருத்து சொல்வது என்பது பொதுவாக நடப்பது இல்லை. ஆனால் இங்கே அது நடந்துள்ளது.
இதன்மூலம் தமிழ்நாடு அரசை விட, மெட்ரிகுலேசன் பள்ளிகளின் சங்கங்களுக்கு அதிக அதிகாரம் இருப்பது போல தெரிகிறது. இந்திய அரசும், தமிழ் நாடு அரசும் இதுவரை கடைப்பிடித்து வந்த கல்வி கொள்கைகளினால்தான், இத்தகைய சுய-நிதி பள்ளிகள் நாடெங்கும் புற்றீசல் என பெருகி விட்டன. இப்போது அந்த பள்ளிகளே அரசை எதிர்த்து நிற்கும் அளவுக்கும், அரசை எதிர்த்து, நீதிமன்ற தீர்ப்பை பெரும் அளவுக்கும், பெரிய அதிகாரமாக ஆகிவிட்டன. தமிழக அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீட்டிற்கு செல்லப்போகிறது என்பது பெற்றோர்கள் மனங்களுக்கு ஒருபுறம் ஆறுதல் செய்தி. ஆனால் இன்று பெற்றோர்கள் நிலைமை மிகவும் மோசமான கட்டத்தை எட்டியுள்ளது.
உலக அரங்கில் இந்த விவகாரமான கல்வியை தனியார் கைகளில் ஒப்படைக்கலாமா என்ற கேள்வி பல நாட்களாகவே பெரும் சர்ச்சையாக இருக்கிறது. அதைப்பற்றி புத்தகங்களும் வெளிவந்திருக்கின்றன. தனியார்மயப்படுத்தல் என்பது கல்வியைப்பொருத்தவரை ஜனநாயக நடைமுறை போல தோற்றம் அளிக்கலாம். அதாவது திறமையும், போட்டியும் கல்வியை கற்றுத்தரும் தரத்தை உயர்த்தும் என்று கூறப்படுகிறது. ஆனால் தனியார் என்பது லாபம் தேடும் முயற்சி என்பதால் அவர்களின் லாப நோக்கு அங்கே முக்கியமான நிபந்தனையாக நிற்கிறது. அதன் விளைவு இப்போது தமிழ்நாட்டில் பாதிப்பை எதிரொலிக்க தொடங்கிவிட்டது.
சில நாட்களாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளி வாசல்களிலும் அதை பார்க்க முடிகிறது. அங்கே தாய்மார்கள் புலம்பிக்கொண்டிருப்பதை கேட்கவும், பார்க்கவும் முடிகிறது. அதாவது இந்த தாய்மார்கள் கோவிந்தராஜன் ஆணைய அறிவிப்புக்கு பின், நிம்மதியாக பள்ளியில் பிள்ளைகளை சேர்த்தனர். இந்த ஆண்டிற்கான கட்டண விகிதம் அரசு அறிவித்ததுபோலத்தான் வாங்கவேண்டும் என்று அறிவித்தபின் வேறு வழியில்லாமல், மேற்கண்ட பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களிடம் குறைவான அளவில் பள்ளி நிர்வாகம் கட்டணங்களை பெற்றது.
இப்போது நீதிமன்ற ஆணை வந்ததை ஒட்டி இதே பள்ளி நிர்வாகங்கள், பிள்ளைகளின் பெற்றோரை அழைத்து நீங்கள் இன்னொரு பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் கட்டவேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்,. இது நடுத்தர, மற்றும் கீழ் நடுத்தர குடும்பங்களில் உள்ள தாய்மார்களுக்கும், தந்தைமார்களுக்கும் இயலாத காரியமாக இருக்கிறது. தங்கள் வரவுக்கு ஏற்றபடி அவர்கள் முதலில் பள்ளிகள் கூறிய கட்டணங்களை கட்டினார்கள். இப்போது நீதிமன்ற தீர்ப்பு அவர்களை இப்படி புதிய நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாக்குமானால் , பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பது என்ற முடிவை மாற்றிக்கொள்ள வேண்டிவரும். . அதாவது அரசாங்கம் எடுக்கும் கல்வி பற்றிய முடிவு பெற்றோர்களை வம்புக்கு இழுத்து, அலையவிட்டு, தவிக்கவிடுவதாக இருக்கிறதா என்ற கேள்வி அந்த பெற்றோர்கள் மனங்களில் உருவாவது நல்லதல்ல என்பதுமட்டும் நமக்கு புரிகிறது

பெரியார் பிறந்த நாளில் ......

தலை குனிய வேண்டாம்
பணக்காரர் முன்னால்.....
தலை குனிய வேண்டாம்
ஆதிக்க சாதி முன்பு......
தலை குனிய வேண்டாம்
அரசியல்வாதிகளை கண்டு.
தலை குனியவேண்டாம்
காவல்துறையை கண்டதும்
தலைகுனியாதீர்.. அதிகாரம்
கொண்டவர் கண்டு.......
தலைகுனியுங்கள் தவறு
செய்தோம் என்றால்......
தலை குனியுங்கள்....
குனிந்து கீழே உள்ளவரை
தூக்கிவிட........
இன்றுமட்டுமல்ல உறுதி
எடுப்போம் என்றும்...