Wednesday, September 15, 2010

பூவுலகின் நடைமேடைகளை, வானுலகின் நாயகர்கள் ஆக்கிரமிக்கலாமா?

சமீபமாக வெளியாகியுள்ள உச்சநீதிமன்ற சுட்டிக்காட்டல், ஒரு ஆரோக்கியமான விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த உலகில் பூவுலகு என்றும், வானுலகு என்றும் வெவ்வேறு உலகம் இருப்பதாக மத நம்பிக்கை உள்ளவர்கள் கூறி வருகிறார்கள். மத நம்பிக்கை இல்லாதவர்கள் பூவுலகை மாத்திரம் நம்பி பேசுவார்கள். ஆனால் இரு சாராரும், பூமி, வானம், காற்று, மேகம், வெளி, இவ்வாறு ஒவ்வொரு பொருளையும் ஒப்புக்கொள்வார்கள். ஒப்புக்கொள்ளும் பொருள்களில் நடக்கும் அறிவியல் சோதனைகளை இவர்கள் இருவருமே ஏற்றுக்கொள்வார்கள். அதன்விளைவாக பூமி என்பதில் உள்ள நிலம் எல்லோராலும் பயன்படுத்தப்படுகிறது. நிலமும், நீரும், காற்றும் பொதுவாய் கிடக்கு என்ற பழைய பாடல்கூட இப்போது பழுதாய் போய்விட்டது.
தனியார்துறை எல்லா இடங்களையும் நீக்கமற நிரப்பிக்கொண்டு வருகிறது. தனியார் என்றாலே லாப நோக்கம் என்று பொருள். அரசுத்துறை என்றால் மக்களுக்காக என்று பொருள். தனியார்மயம் என்பதை துரிதப்படுத்துவது, உலகம் முழுவதும் உலகமயமாக்கல் மூலம் விதியாக ஆக்கப்பட்டுவிட்டது. நிலத்தை பன்னாட்டு மூலதனக்கூட்டத்திற்கு எடுத்து தாரை வார்ப்பது அரசாங்கத்தின் கொள்கை என்று ஆக்கப்பட்டுவிட்டது. நிலத்தடி நீரையும், கடல் நீரையும் அதேபோல துளை போட்டு எடுக்கவும், குழாய் போட்டு எடுக்கவும் அரசாங்கம் தனியாருக்கு வளர்ச்சி என்ற பெயரில் செய்து கொடுத்துவருகிறது.
அதேபோல நிலத்தின் மீது ஓடும் நீரையும் இப்போது தனியாருக்கு கொடுக்க தொடங்கிவிட்டார்கள் .எப்படி கொடுக்கமுடியும் என்று கேட்பவர்களுக்கு, நதி நீரை, தாமிரபரணி போன்ற நதிகளில் இருந்து குழாய் மூலம், கோகோ கோலா போன்ற நிறுவனங்களுக்கு, கங்கைகொண்டான் போன்ற நெல்லை மாவட்ட வட்டங்களில் கொடுப்பதை மட்டும் எடுத்து சொன்னால் போதாது. ஏன் என்றால் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு நதியையே தனியாருக்கு விற்றுவிட்டார்கள். அதை வாங்கிய தனியாரும் நதியில் உள்ள நீர் மட்டுமல்ல, நதி ஓடும் இடங்களில் இருக்கும் அல்லது ஓடும் நிலத்தடி நீரும் எனக்கே சொந்தம் என்று சொந்தம் கொண்டாடி அதன்மூலம் அந்த வட்டாரத்தில் வாழும் அனைத்து மக்களையும், குறிப்பாக விவசாயிகளை தனது நீரை பயன்படுத்துவதற்க்காக விலை கொடுக்க சொல்கிறாராம். இதுவே தனியார் வசம் அரசு எந்த அளவுக்கு விலை போய்விட்டது என்பதைக்காட்ட போதுமான உதாரணமாக இருக்கும்.
இது இப்படி என்றால் இன்று வானமும் விலை பேசப்படுகிறது. அதாவது வானில் இருக்கும் வெளி இடத்தைத்தான் நமது இணைய தளத்தில், பகுதி, பகுதியாக விற்கிறார்கள். இணையதளம் ஒன்று தொடங்க இருப்பவர், அதற்க்கான தொகையை சம்பந்தப்பட்ட சக்திகளிடம் கட்டுகிறார். அதுதான் வானவெளி இடத்தை விற்ப்பது என்று பொருள். அதேபோல ஸ்பெக்ட்ரம் என்று சொல்லப்படும் கைபேசி இணைப்பு எதிலிருந்து கொடுக்கப்படுகிறது? அதுவும் கூட வான்வெளியில் உள்ள காற்றிலிருந்துதான் கொடுக்கப்படுகிறது. அதாவது விற்கப்படுகிறது.இவ்வாறு அறிவியல் அறிவு இன்று தனியார்மயம் ஆகிவரும் சூழலில், இதையெல்லாம் உலகிற்கு கொடுத்தது என்பதாக இயற்கையை சிலரும், கடவுளை சிலரும் சொல்வார்கள்
அந்த கடவுள் நம்பிக்கை என்பதும்கூட, மக்களால் பொதுவாக ஏற்றுகொள்ள கூடிய ஒன்றாக இருக்கிறது. அத்தகைய கடவுள் நம்பிக்கையை அவர், அவர்கள் தாங்கள் சார்ந்து இருக்கும் மதம் சார்ந்து பின்பற்றுகிறார்கள். அவர்கள் பூவுலகு என்பதையும், வானுலகு என்பதையும் பிரித்து பார்க்கிறார்கள். அதேபோல அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.
அதேசமயம் தங்களது கடவுள் நம்பிக்கையையும், மத நம்பிக்கையையும் ஒழுங்குபடுத்தி செயல்படுத்துவதில் ஒத்துழைக்கிறார்கள். அதாவது அரசாங்கம் எல்லா மதங்களின் வழிபாட்டு தலங்களையும் முறைப்படுத்தி வைக்கிறது. அதை அந்த, அந்த மதம் சார்ந்த மக்களும் ஏற்றுக்கொள்கிறார்கள் ஏன் என்றால் ஒவ்வொரு மதமும் தனது வழிப்பாடு வழியில் பிரிதொரு மதத்தின் நம்பிக்கைகளோ, நம்பிக்கை கொண்ட மக்களோ பாதித்துவிடகூடாது என்பதில் சரியாக இருக்கிறார்கள். நாட்டில் நிலவும் சட்டங்களும், அரசாங்கங்களும் எப்படி சரியாக இருக்கிறார்களோ, அதே போல இந்த மத நம்பிக்கை கொண்ட மக்களும் சரியாகவே இருக்கிறார்கள்.
அதனால்தான் இந்து அறநிலைய துறை என்றும், வக்பு வாரியம் என்றும், கிறித்துவ நிறுவனங்கள் எனவும் ஒவ்வொரு மத நம்பிக்கைகளுக்கும் அரசின் நேரடி அல்லது மறைமுக பார்வையில் உள்ள அமைப்புகள் ஏற்ப்படுத்தப்பட்டு, அவையே அது போன்ற வழிபாட்டுதலங்களை கட்டுவது, நடத்துவது, பராமரிப்பது போன்ற காரியங்களை செய்து வருகின்றன. அதேசமயம் அந்த வழிபாட்டுதலங்களை யாராவது புதிதாக தொடங்கினாலும், அதை அரசு ஒழுங்கு செய்து மற்றவர்களுக்கு அதனால் பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்கிறது இது மத நம்பிக்கை கொண்டவர்களுக்குள் வரும் பிரச்சனைகளை அரசு ஒழுங்குபடுத்துவது என்பதே. ஆனால் அதையும் தாண்டி இன்னொரு முக்கிய விஷயம் இருக்கிறது. அதாவது மக்களது அன்றாட வாழ்க்கை நடைமுறைக்கு இந்த வழிபாட்டுதலங்கள் தடையாக இருக்ககூடாது. அதுதான் இப்போது பிரச்சனை.
மக்கள் தங்களது எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக நடத்தத்தான் கடவுளையும், மதங்களையும் பின்பற்றுகின்றனர். அப்படி இருக்கையில் மக்களது நிகழ்கால வாழ்க்கைக்கே இந்த வழிபாட்டு தலங்கள் தடைகளாக வரலாமா? இந்த கேள்வி உச்சநீதிமன்றத்தால் எழுப்பப்பட்டுள்ளது. ஒரு வழக்கு உச்சநீதிமன்ற படிக்கட்டுகளை எட்டிஉள்ளது. அது பொது இடங்களில் வழிபாட்டுதலங்களை வைத்து அதன்மூலம் மக்களது அன்றாட வாழ்க்கைக்கு தடை செய்யும் விதத்தில் இருக்கக்கூடாது என்பதே அந்த வழக்கின் நோக்கம்.
2010 ஆம் ஆண்டு ஜூலை-27 ஆம் நாள் இந்த வழக்கின் விசாரணையின் கடைசி நாள் வந்தது. அப்போது உச்சநீதிமன்றம் இத்தகைய வழிபாட்டுத்தலங்கள் சட்டவிரோதமாக ஏற்ப்படுத்தபட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டது. பொது இடங்களில் இருப்பதால் அவை சட்ட-ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்ப்படுத்துகின்றன என்றும் ஒப்புக்கொண்டது. எந்த புதிய தேவாலயமோ, கோவிலோ,மசூதியோ, குருத்துவாராவோ இதுபோல அனுமதியின்றி வரக்கூடாது என்பதை அரசு உறுதி செய்யவேண்டும் என்றும் அப்போது உச்சநீதிமன்றம் கூறியது. அதற்கு வட்டார அதிகாரிகள்தான் பொறுப்பு என்றும் அறிவித்தது.நான்கு வாரங்களுக்குள் இதுபோன்ற வாக்குறுதியை அரசுகள் தரவேண்டும் என்றும் அறிவித்தது. அதற்கு அரசாங்க வழக்கறிஞர் அரசு இது பற்றி உடனடியாக அனைத்து மாநிலங்களின் ஒத்த கருத்தை உருவாக்கும் என்று கூறினார். உச்சநீதிமன்ற அமர்வு இந்த வழக்கை செப்டம்பர் மாதம் எடுத்துக்கொள்ள முடிவு செய்தது.

இப்போது இந்த வழக்கு மீண்டும் எடுக்கப்பட்டு, சட்ட விரோத வழிபாட்டுத்தலங்கள் மீது நடவடிக்கை எடுக்க இரண்டு வாரம் கெடு கொடுத்துள்ளது. சட்டவிரோத கட்டிடங்களை மத்தியபிரதேசம், கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான், தமிழ்நாடு, ஒரிஸ்ஸா, திரிபுரா, ஹிமாச்சல் பிரதேஷ், கோவா, டில்லி, மற்றும் சிறிய மாநிலங்கள் என்பதாக இந்த வழக்கு வரிசைப்படுத்துகிறது. அதில் தமிழ்நாடு 77453 என்ற எண்ணிக்கையில் சட்டவிரோத கட்டிடங்களை கொண்டுள்ளது எனவும், அதுதான் இந்தியாவிலேயே அதிகமான எண்ணிக்கையை கொண்டது எனவும் கூறப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அடுத்ததாக 58253 என்ற எண்ணிக்கையிலும், அடுத்ததாக மத்தியபிரதேசம் 51624 என்ற எண்ணிக்கையில் பொது இடங்களில் சட்டவிரோத கட்டிடங்களை, வழிபாட்டுத்தலங்கள் என்ற பெயரில் கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது. அதேபோல மகாராஷ்டிரா 17385 என்றும், குஜராத் 15000 என்றும், கர்நாடகா 2814 என்றும், டில்லி 52 என்றும் சட்டவிரோத வழிபாட்டுத்தலங்கள் கணக்கு வெளியாகி உள்ளது. சிக்கிம், மிசாரம், நாகலாந்து ஆகிய மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் அப்படி சட்டவிரோத கட்டிடங்களே இல்லை என அறிவித்துள்ளன. நமது கேள்வி இதை மாநில அரசுகள் எப்படி அமுல்படுத்த போகின்றன? என்பதே.
ஏன் என்றால் ஒவ்வொரு நடமேடையிலும் இதுபோன்ற தலங்கள் கட்டப்பட்டு பல பூசைகளும் தினசரி நடந்து வருகின்றன. அதனால் மக்கள் நடந்து செல்வதற்க்கே கூட வழி இல்லாமல் போய் விடுகிறது. இதுவே நடந்து செல்லும் நடைபாதைவாசிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது. அவர்கள் சாலையில் இறங்கி நடந்து செல்லவேண்டிய கட்டாயம் வருகிறது. அதனால் சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. நடைமேடைகள் ஒவ்வொரு சாலையிலும் அடிப்படியான தேவை. ஆகவே அனைத்து பொது சிந்தனை உள்ளோரும் இதை ஒரு மதவிரோத அல்லது கடவுள் விரோத நடவடிக்கை என்று பார்க்காமல், இது மக்கள் வாழ்க்கைக்கு அன்றாடம் கட்டாயமான தேவை என்பதை உணர்வார்களா? அரசுகளும் இதை கட்சி பார்வையிலோ, மத சார்பு பார்வையிலோ பார்க்காமல் நடவடிக்கையை துரிதப்படுத்தி, நடைமேடை வாசிகளுக்கு உதவுவார்களா?