Saturday, September 4, 2010

மாவோயிஸ்டுகளின் காவலர் கடத்தல், அரசு நடவடிக்கை-எது மனிதாபிமானம்?

பீகாரில் மாவோயிஸ்டுகள் ஆகஸ்ட் 29ம் நாள் துணை ஆய்வாளர்கள் ரூபேஷ்குமார், ஆபாய்பிரசாத் யாதவ் மற்றும் பீகார் ராணுவ தலைமைக் காவலர் எடேஷாம்கான், உதவி துணை ஆய்வாளர் லூகாஸ்டேடே ஆகியேரை கடத்திச் சென்றார்கள் என்பது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அன்று கஜுரா காவல்நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், 8 காவலர்கள் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்ட பிறகு, அந்தக் கடத்தல் நடந்திருக்கிறது. கடத்தலில் ஈடுபட்ட மாவோயிஸ்டுகள் அரசாங்கத்தின் முன்னால் ஒரு கோரிக்கையைவிடுத்துள்ளனர். அதில் பீகார் சிறையிலிருக்கும் 8 மாவோயிஸ்டு முன்னோடிகளின் விடுதலையை கோரியுள்ளனர். மாவோயிஸ்டுகள் முன்வைத்த பேச்சுவார்த்தைக்கான கெடு முடியும்வரை, அரசாங்கம் எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை. அதன்விளைவாக துணை ஆய்வாளர் அபாய்பிரசாத்தை அவர்கள் கொலைச் செய்ததாக முதலில் அறிவிக்கப்பட்டது. அதுவே பிறகு மறுக்கப்பட்டது. அரசுத் தரப்பிற்கு பீதியை கிளப்பவே அப்படி தவறானச் செய்தியை முதலில் அறிவித்ததாக கூறினார்கள். மீண்டும் காலக்கெடுவை செப்டம்பர் 3ம் நாள் காலை 10 மணிக்கு என்று தள்ளிப்போட்டிருந்தார்கள். அதற்குள் அரசு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், கடத்தப்பட்டவர்களின் உயிர் பறிக்கப்படும் என்று அறிவித்திருந்தனர். அதிகாரி லூகாஸின் உடல் குண்டுக் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. மீதி 3 காவலர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், உடனடியாக தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்றும், மாவோயிஸ்டுகள் அறிவித்தனர். மேலே குறிப்பிட்ட சர்ச்சைகள் காட்சி ஊடகங்களில் விவாதிக்கப்பட்டன. அதையும்கூட மாவோயிஸ்டுகள் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள் என்ற கருத்து நிலவியது. மக்கள் சிவிலுரிமைக் கழகம் சார்பாக பேசியவர்களும், சுவாமிஅக்னிவேஷûம், கடத்தலையும், கொலையையும் கண்டிக்கும் அதேநேரத்தில், மாவோயிஸ்டுகள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அரசை, ஊடகங்கள் மூலம் வலியுறுத்திவந்தனர். அதேசமயம் அரசுத் தரப்பு, கடத்தப்பட்ட காவலர்களின் குடும்பத்தவர்கள் பேட்டிகளை, ஊடகங்களில் வெளியிட்டு மாவோயிஸ்டுகளுக்கு எதிரான பரப்புரையை தொடர்ந்து செய்துவந்தனர். மத்திய அரசு தேவைப்படும் ஒத்துழைப்பை கொடுக்கவில்லை என்பதாக, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்தார். கடத்தப்பட்ட காவலர்கள் பீகார் ராணுவ காவல்படையை சேர்ந்தவர்கள். அந்தப் படை மத்திய அரசின் துணைராணுவப் படை. ஆகவே அதற்கான கட்டளைத் தலைமை, மத்திய அரசின் உள்துறையிலிருந்து தான் வரவேண்டும். பீகார் முதல்வரின் கருத்து மட்டுமே, இந்த விஷயத்தில் செயலுக்கு உதவாது. ஏற்கனவே 2 மாதங்களுக்கு முன்பு மாவோயிஸ்டுகளின் மீது, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கட்டவிழ்த்துவிட்ட பச்சை வேட்டையை எதிர்த்து, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கடுத்து ப.சிதம்பரம் கூட்டிய நக்சல்பாரி பகுதிகளின் முதலமைச்சர்கள் கூட்டத்திற்கும், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் செல்லவில்லை. அத்தகைய அணுகுமுறைகளை எதிர்த்து, மத்திய உள்துறை இந்த கடத்தல் விவகாரத்தில் பீகார் மாநிலத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்பதாக ஒரு விமர்சனம் ஊடகங்களில் அம்பலப்படுத்தப்பட்டது. பீகார் மாநிலத்திலுள்ள லக்கிசராய் என்ற பகுதியில் தான் மேற்கண்ட மோதல் நடந்துவருகிறது. பங்கா, கைமூர், ஜாமுய், லக்கிசராய் ஆகிய அடுத்தடுத்த மாவட்டங்களில் உள்ள, வனப்பகுதிகளில் அரசப்படைகள் இறக்கிவிடப்பட்டு, மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டை என்ற பெயரில் பொதுமக்கள் மத்தியில் சோதனை நடத்தப்படுகிறது. மத்திய அரசு இந்த பிரச்சனையையும், வெறும் சட்டஒழுங்கு பிரச்சனையாக அணுகக்கூடாது என்ற குரல்கள் எழுகின்றன. வாஜ்பாய் அரசாங்கத்தில், ஆப்கானிஸ்தானிலுள்ள கண்டகர் விமான நிலையத்தில், இந்திய விமானத்தை கடத்தி அதன்மூலம் தங்களது படை தளபதிகளை இந்திய சிறைகளிலிருந்து விடுதலை செய்யச் செய்த, பாகிஸ்தானில் இருந்து இயங்கும் முஜாஹுதீன் படையினர் மூலம் கிடைத்த அனுபவத்தை மத்திய அரசு, முன்மாதிரியாக எடுத்து செயல்பட வேண்டும் என்ற ஆலோசணையும் அரசுத் தரப்புக்கு சொல்லப்பட்டது. ஒருபுறம் மனித உரிமை ஆர்வலர்கள், பேச்சுவார்த்தையின் மூலம் மாவோயிஸ்டுகள் பிரச்சனையை தீர்க்கச் சொல்லும் போது, இன்னொரு புறம் அடக்குமுறை மூலம் மாவோயிஸ்டுகள் ஒடுக்கச் சொல்லும் அதிகாரவர்க்க அறிவுஜீவிகளின் கருத்துக்களும் அரசுக்கு கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மாவோயிஸ்டுகள் எதற்காக தங்களது 8 முக்கிய தோழர்களை விடுதலைச் செய்ய கோருகின்றனர் என்பதையும், ஊடகங்கள் ஆய்வு செய்து வெளிப்படுத்தியுள்ளன. அதில் ஏற்கனவே பேச்சுவார்த்தைக்கு தயாராகி, அதில் ஈடுபட்டிருந்த மாவோயிஸ்டுத் தலைவர் ஆசாத்தை, கைது செய்து சுட்டுக்கொன்ற மத்திய அரசின் அணுகுமுறை, தற்போது பீகார் சிறையில் உள்ள 8 முக்கிய தலைவர்கள் விஷயத்திலும் நடக்கவிருப்பதாக அவர்கள் அறிந்ததால்தான், இப்படிப்பட்ட கடத்தலையும், அதையெட்டிய 8 தலைவர்களின் விடுதலைக் கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர் என்பதாக விரிவாக ஊடகங்கள் விளக்கியிருந்தன. அப்படியானால் இங்கே வான் அளவுக்கு பேசப்படும், மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை என்பதும், அதன்மூலம் காணப்பட வேண்டிய அரசியல் தீர்வு என்பதும் உண்மையில் கேள்விக்குறியதாகவும், அதன்மூலம் கேலிக்குறியதாகவும் ஆகிவிட்டதா? இங்கே பரஸ்பரம் ஒரு நம்பிக்கையின்மை நிலவுகிறது. ஆயுதம் தாங்கிய அரசப்படைகள் மூலம் செயல்ப்பட்டு வரும் மத்திய அரசும், ஆயுதம் தாங்கிய செம்படைகள் மூலம் செயல்ப்பட்டு வரும் மாவோயிஸ்டுகளும், தங்களுக்குள் பரஸ்பர நம்பிக்கையின்மையை வைத்துக் கொண்டிருந்தால், அத்தகைய பகுதிகளில் அமைதி திரும்புவது எப்போது? இப்போது பீகார் முதல்வர் கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில், லாலு கட்சியும், பஸ்வான் கட்சியும் கலந்து கொள்ளவில்லை என்கிறார்கள். அந்த மாநிலத்தின் பெரும் தலைவர்களுக்குள் [ மூவரும் முன்னாள் மத்திய அமைச்சர்கள்] பரஸ்பர நம்பிக்கையில்லை என்பதையே இது காட்டுகிறது. இந்த நாட்டின் தேர்தல் கட்சிகள் இது போன்ற மக்களின் உயிர் பிரச்சனையில், வருகிற பொதுத்தேர்தலை மனதில் வைத்து செயல்பட்டால், தேர்தலில் நம்பிக்கை இல்லாத மாவோயிஸ்டுகளுடன் எப்படி பரசபர நம்பிக்கை ஏற்படும்? ஏற்கனவே சம்மந்தப்பட்ட மாநில அரசுகளுக்கும், மத்திய உள்துறைக்கும் மத்தியில், இதே பிரச்சனையை கையாள்வதில் ஒரு பரஸ்பர அவநம்பிக்கை நிலவுகிறது. அதைக்கூட தீர்க்காத ஒரு சூழலில், எப்படி மத்திய அரசு மாவோயிஸ்டுகளுடன் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையை தீர்க்கப் போகிறது என்ற கேள்விக்கு பதில் கூற வேண்டிய இடத்தில் உள்துறை அமைச்சகம் இருக்கிறது.