Tuesday, August 31, 2010

கச்சத்தீவை திரும்பப்பெற இந்திய அரசு உண்மையில் முயற்சிக்கிறதா?

நேற்று மக்களவையில் தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல உறுப்பினர்கள் ஒரே கோரிக்கையை எழுப்பினர். கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்காக மக்களவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அது இந்திய அரசால் இலங்கை அரசுக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்ட, கச்சத்தீவை மீண்டும் இந்தியாவிற்கு திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கை. வரலாற்றில் இல்லாத அளவிற்கு, தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., இடது சாரிகள் ஆகிய எதிரெதிர் கூட்டணிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக விரிவாக பேசியுள்ளனர். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஒரே கோரிக்கையை பேசுவது என்பதும், அதுவும் தமிழ்நாடு பற்றிய கோரிக்கையை எழுப்புவது என்பதும், குறிப்பாக இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் இலங்கை அரசை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக, தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு முக்கியத் தீவை, தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாமலேயே, டெல்லியிலேயே முடிவு செய்து தாரைவார்த்துக் கொடுக்கப்பட்ட ஒரு தீவை, மீண்டும் இலங்கையிடமிருந்து பெற்றுக் கொள்வது என்ற கோரிக்கை நமது மக்களவையில் இந்த அளவிற்கு எழுவது என்பது ஆச்சரியமான ஒன்றே. கச்சத்தீவை மீண்டும் பெறுவதற்கான கோரிக்கையை தி.மு.க. மக்களவை கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு ஆவேசமாக மக்களவையில் பேசினார். கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்க்க கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை மறுபரீசிலனை செய்து, மறுஒப்பந்தம் போட்டு திரும்பப் பெற வேண்டும் என்று பாலு அப்போது பேசினார். அ.தி.மு.க.வின் மக்களவை உறுப்பினர் தம்பிதுரை, தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் படுகொலைச் செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும், கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததனால்தான் தொடர்கிறது என்று பேசினார். அதையடுத்து பேசிய ம.தி.மு.க. உறுப்பினர் கணேசமூர்த்தி பேசும் போது, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவது, இந்திய இரையாண்மையையே கேள்விக் குறியாக்குகிறது என்றார். தமிழக மீனவர்களை இந்தியக் குடிமக்களாக இந்திய அரசு ஏற்கவில்லையா என்று கேட்டார். இந்தியா என்ற நாடு உருவாவதற்கு முன்பே தமிழகத்துடன் கச்சத்தீவு இணைந்திருந்தது என்றும், தமிழகம் இந்தியாவுடன் சேர்ந்த பிறகுதான் கச்சத்தீவை இழந்தோம் என்றும் கூறினார். தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும், கச்சத்தீவை தாரைவார்த்த பிறகுதான் என்று இடது சாரிகளும் பேசினார்கள். மேற்கண்ட தமிழக எம்.பி.க்கள் பேசிய பேச்சுக்கள், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைக்காகவும், வருகின்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்காகவும் என்று மட்டுமே எண்ணிவிட முடியாது. எனென்றால் இதற்கு பதில் பேசிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மேற்கண்ட கோரிக்கையை, இலங்கை சென்றிருக்கும் வெளிவிவகாரத்துறை செயலாளர் நிரூபமாராவ், இலங்கை அரசிடம் பேசுவார் என்று கூறியிருக்கிறார். அப்படியானால் இலங்கை சென்று எந்தெந்த கோரிக்கைகளை நிரூபமாராவ் இலங்கை அரசிடம் பேச வேண்டுமென்பதை, நேற்றைய நாடாளுமன்ற சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பிறகு மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று பொருளா? அப்படியிருக்க முடியாது. ஏற்கனவே கடந்த 4 வாரங்களாக, மத்திய அரசு தனது சிறப்புத் தூதரை இலங்கைக்கு அனுப்பி வைக்கும் என்ற செய்தியை, ஆட்சியாளர்கள் நமக்கு சொல்லிவருகிறார்கள். இரண்டு நாடுகளுக்கு மத்தியில், அதாவது இரண்டு அரசுகளுக்கு மத்தியில் நடத்தப்படும் பேச்சுவார்த்தைக்கு முன்பே, அதற்கான திட்டமிடலும், பேச வேண்டிய நிகழ்ச்சிநிரலும் தயாரிக்கப்பட்டு, இரண்டு அரசுகளுக்கும் மத்தியில் பரிமாறப்படும். அதையொட்டியே அடுத்த நாட்டிற்குச் செல்லும் ஒரு நாட்டின் பிரதிநிதி, தனது பேச்சுவார்த்தையை நடத்துவார். திடீரென்று புதிதாக ஏதாவது விபத்துகளோ, தாக்குதல்களோ நடத்தப்பட்டு அதைப்பற்றிய விவரங்களும் கூடுதலாக பேசப்படும் என்று கடைசி நேரத்தில் ஒரு அரசு முடிவு செய்யலாம். ஆனால் அப்படிப்பட்ட எந்த ஒரு புதிய விபத்தும் நடக்காத சூழலில், கச்சத்தீவைப் பற்றி மக்களவையில் நேற்று எழுப்பப்பட்ட காரணத்தினால் மட்டுமே, பேச்சுவார்த்தையில் அதையும் சேர்த்து சிறப்பு தூதர் பேசுவாரா? திடீரென சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளிக்கும் போது, வெளிவிவகாரத்துறை அமைச்சர் கச்சத்தீவு பற்றிய விவகாரத்தையும், இலங்கை போய்ச் சேர்ந்திருக்கும் நிரூபமாராவ் பேசுவார் என்று எப்படிக் கூற முடியும்? இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள பெரியதொரு விஷயத்தை, மத்திய அமைச்சரவையின் குறிப்பாக தலைமை அமைச்சரின் முடிவு எடுக்கப்படாமல், மக்களவையில் வெளிவிவகாரத்துறை அமைச்சரால் வாக்குறுதி கொடுக்க முடியுமா? அதாவது எஸ்.எம்.கிருஷ்ணாவின் பதில் என்பது, தமிழக எம்.பி.க்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மூலம், கச்சத்தீவு சர்ச்சையை எழுப்பியதனால் கூறப்பட்டது அல்ல. மாறாக ஏற்கனவே மத்திய அரசால் முடிவுச் செய்யப்பட்டு, இலங்கை அரசிடம் சில நிர்ப்பந்தங்களை ஏற்படுத்துவதற்காக பேச வேண்டிய சில விஷயங்களில், கச்சத்தீவு பிரச்சனையும் ஒன்றாகயிருக்கிறது. அப்படி இலங்கை அரசை, இந்திய அரசு குறைந்தபட்சம் நிர்பந்தம் செய்வதற்கு ஏற்பட்டுள்ள தேவைகள் என்ன? தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலும், தமிழக மீனவர்கள் மத்தியிலும், புலம்பெயர்ந்த உலகத் தமிழர்கள் மத்தியிலும், டெல்லி ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்ததனால் அதைச் சரிக்கட்ட டெல்லி செய்கின்ற தந்திரமா? தமிழகத்தில் சட்டமன்றப் பொதுத் தேர்தல் வரப்போகின்ற காலம் என்பதனால், இங்குள்ள மக்களின் அதிருப்தியை சரிச் செய்வதற்கான முயற்சியா? கூட்டணிக்குள் இருக்கின்ற தி.மு.க.விற்கும், காங்கிரசிற்கும் இடையேயுள்ள இடைவெளியை நிரப்புவதற்கான செயல்பாடா? மேற்கண்ட அனைத்து காரணங்களையும்விட, இலங்கை அரசு இந்திய அரசின் உதவிகளை வாங்கிக்கொண்டு, சீனாவின் செல்வாக்கு இலங்கையில் அதிகரிக்க அனுமதித்துவிட்டது என்பதனால் தான். அத்தகைய நிலையில் தெற்காசியாவில் சீனாவின் செல்வாக்கிற்கு எதிராக இந்திய அரசின் மூலம், அமெரிக்கா தடுப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில்தான் சிறப்பு தூதராக நிரூபமாராவ் அனுப்பப்பட்டுள்ளார். அவர் அப்போது பேசப்போகின்ற விஷயங்களையும், சில நாட்களுக்கு முன்னால் சென்னை வந்தபோது, தமிழக முதல்வரிடம் எடுத்துக்கூறியிருக்கிறார். அதையொட்டியே மத்திய அரசின் ஏற்பாட்டிலேயே, மக்களவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம், கச்சத்தீவுப் பற்றி எழுப்பப்பட்டுள்ளது. அதனால்தான் கிருஷ்ணாவால் உடனடியாக பதில் கூற முடிந்திருக்கிறது. அப்படியானால் இந்த முறை கச்சத்தீவு பற்றி பேசப்போவதும் உண்மையான பேச்சு அல்ல என்று தெரிகிறது. இரண்டு அரசுகளுக்கும் மத்தியில் பேசப்படும் பேரத்திற்கு, கச்சத்தீவு இந்த முறையும் ஒரு பலிகடா ஆகுமா என்பதே கேள்வி.