Thursday, August 26, 2010

ஒருவார நாடகம் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டுள்ளது

கடந்த ஒரு வாரமாக இந்திய நாடாளுமன்றம் முக்கியமான எதிர்காலப் பிரச்சனைக்காக, ஒரு மாபெரும் விவாதத்தை அதிக சச்சரவு இல்லாமல் நடத்தி முடித்திருக்கிறது. அணுஉலை விபத்து இழப்பீடு மசோதா2010 மிக முக்கியமான, ஆழமாக விவாதிக்க வேண்டிய, அவசரப்படக்கூடாத, ஒரு பிரச்சனை என்று எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங், நாடாளுமன்றத்தின் தனது உரையில் தெரிவித்தது உண்மை என்றால், அவர் உட்பட, அவரது கட்சி உட்பட இந்த ஒருவார கால விவகாரத்தை எப்படி நடத்தினார்கள் என்ற கேள்வி எழுகிறது. மேலும் காஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகாண முக்கியத்துவம் கொடுக்கும் மத்திய அரசு, மாவோயிஸ்ட் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று அறிவிக்கும் உள்துறை அமைச்சர் ஆகியோர், அவற்றைவிட முக்கியமான அணுஉலை விபத்து இழப்பீடு மசோதாவை நிறைவேற்ற அவசரம் காட்டுவது ஏன் என்ற கேள்வியையும் அப்போது ஜஸ்வந்த் சிங் எழுப்பியுள்ளார். இத்தகைய கேள்வி பொதுமக்கள் மத்தியிலும், ஊடகங்கள் மத்தியிலும் போதுமான அளவுக்கு எழுப்பப்படவில்லை என்றாலும், இனியாவது விவாதிக்கப்பட வேண்டும் என்பதே நமது அவா.
வருகின்ற நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இந்தியா வரயிருக்கிறார். அதற்கு முன்பே மேற்கண்ட மசோதாவை சட்டமாக்க மத்திய ஐ.மு.கூ. அரசு அவசரப்படுகிறது என்பது ஜஸ்வந்த் சிங்கின் குற்றச்சாட்டு. அதேசமயம் அமெரிக்காவில் கையசைவிற்கு ஏற்றார்போல் செயல்படுவதற்கு, இந்த சட்ட முன்வரைவை அவசரமாக அமுல்படுத்தாதீர்கள் என்றும் ஜஸ்வந்த் கூறினார். மேற்கூறிய அவரது கூற்றுக்கள் அனைத்தும் உண்மையா? ஒபாமா வருகைக்கு முன்பே இழப்பீடு சட்டத்தை உருவாக்கி அவரது காலடியில் வைக்க வேண்டும் என்பது காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ.விற்கு மட்டும் இருக்கின்ற விசுவாசமா? பா.ஜ.க.விற்கும் அமெரிக்காவுடன் அப்படிப்பட்ட ஒரு கள்ளஉறவு இல்லையா?
மேலே காணும் கேள்விகளுக்கு பதில் தேட, கடந்த ஒருவார காலமாக நாடாளுமன்றத்தில், சம்மந்தப்பட்ட சட்டமுன்வரைவு மீது நடந்த விவாதங்களும், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களும், ஊடகங்கள் அம்பலப்படுத்திய செய்திகளும், அதையொட்டி பெரிய கட்சிகள் நிலை தடுமாறி எடுத்த நிலைப்பாடுகளும் நமக்கு உதவிகரமாக இருக்கும். அதன் அடிப்படையில் நடந்தது நாடகமா அல்லது உண்மையா என்பதை புரிந்துக் கொள்ள முடியும்.
அதேபோல எதிர்கட்சிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறுவதாக, இந்தியாவின் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் கொடுத்த விளக்கங்களும், ஆழமாக கவனிக்கப்பட வேண்டும். இந்தியாவின் நலன்களை மேற்கண்ட இழப்பீடு மசோதா சமரசம் செய்யாது என்பது மன்மோகனது கூற்று. அணுஉலைகளை இயக்கும் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் கூறினார். அணுசக்தி பாதுகாப்பு ஒழுங்குபடுத்தல் வாரியத்தை பலப்படுத்துவோம் என்றும் கூறினார். அதில் ஆளும் கட்சி எதிர்கட்சியின் கருத்தையே கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். அதனால் எதிர்ப்பேயில்லாமல் அந்த மசோதாவை நிறைவேற்றித் தாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
ஜஸ்வந்த் சிங் தனது கவலைகளை தெரிவிக்கும் போது, சிறிய அமெரிக்க சந்தைக்காக, பெரிய இந்திய சந்தையை அடிபணியச் செய்யக்கூடாது என்றார். அதேசமயம் ‘அண்ட்’ என்ற ஆங்கிலச் சொல்லையும், பிறகு ‘இன்டன்ட்’ என்ற ஆங்கிலச் சொல்லையும், தந்திரமாக வரைவு நகலில் அரசாங்கம் திணித்துள்ளது என்று குற்றம்சாட்டினார். அதாவது வரைவு நகலின் 17வது திருத்தத்தில், அ பிரிவிற்கும், ஆ பிரிவிற்கும் இடையில் உள்ள இணைப்பாக அந்த அன்ட் என்ற ஆங்கிலச் சொல் வருவதன் மூலம், ஆ பிரிவில் வெளிநாட்டு விநியோகத்தர்களை பொறுப்பாக்கும் செயல் கட்டுப்படுத்தப்படும் என்பதே எதிர்கட்சிகளின் விமர்சனம். அதேபோல இ பிரிவில் சேர்க்கப்பட்ட, உள்நோக்கம் என்ற இன்டன்ட் எனும் ஆங்கில வார்த்தை, முழுமையாக வெளிநாட்டு விநியோகத்தர்களை பொறுப்பேற்க நிரூபிக்க முடியாமல் போகக்கூடிய வார்த்தை என்பது தான் எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு. இந்த இரண்டையும் எடுத்து விடுகிறோம் என்று ஆட்சியாளர்கள் கூறிய பிற்பாடு, மசோதாவிற்கு பா.ஜ.க. ஆதரவு அறிவித்தது. அதையொட்டியே மக்களவையில் மசோதா நிறைவேறியது.
மேற்கண்ட சர்ச்சைகளும், விவாதங்களும் உண்மையாகவே நடந்ததா? அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகமா? உதாரணமாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நிலைக்குழு, பல கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கியது. பா.ஜ.க.வால் குற்றம்சாட்டப்பட்ட அன்ட் என்ற ஆங்கிலச் சொல், அந்த நிலைக்குழுவின் கடைசி அமர்வில், அதாவது நாடாளுமன்றம் முன்னால் மசோதாவின் வரைவு நகலை முன்வைப்பதற்கு முன்பு நடந்த கடைசி அமர்வில் வைக்கப்பட்ட ஆவணத்தில் எழுதப்பட்டிருந்தது. அதை அந்த நிலைக்குழுக் கூட்டத்திலேயே, இடதுசாரி உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அந்த எதிர்ப்பை பா.ஜ.க. உறுப்பினர்கள் உட்பட, அனைத்து நிலைக்குழு உறுப்பினர்களும், மறுத்து விட்டு அன்ட் என்ற ஆங்கிலச் சொல்லை, ஆவணத்தில் அனுமதித்திருக்கிறார்கள். அப்படியானால் விவரம் தெரிந்தே, பா.ஜ.க. பிரதிநிதிகள், காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் சேர்ந்து கொண்டு, நிலைக்குழு முன்னால் வைக்கப்பட்ட நகலை நிபந்தனையற்று ஆதரிக்க வேண்டும் என்ற கட்சித் தலைமையின் கட்டளையை ஏற்று, அனுமதித்திருக்கிறார்கள் என்பது அதில் அம்பலமாகிறது. அப்படியானால் அதையும் சுட்டிக்காட்டி, ஜஸ்வந்த் சிங் நாடாளுமன்றத்தில் குறை சொல்வது என்பது ஒரு நாடகமே என்பது புரிகிறது.
மேற்கண்ட நாடகத்தை நடத்துவதற்கு பா.ஜ.க.விற்கு என்ன அவசியம் வந்தது? அது சொராபுதீன் போலி துப்பாக்கிசூட்டு மரணத்தில், நரேந்திர மோடியை நிரபராதி ஆக்குவதற்கு ஆட்சியாளர்களின் உதவியுடன் சி.பி.ஐ. மூலம் கொடுத்த அறிவிப்பு மட்டும் காரணமா? அதையும் தாண்டி ஏதாவது அனைத்து நாட்டு காரணங்கள் இருக்கிறதா?
மக்களவையில் பெரும் எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்ட அணுஉலை விபத்து இழப்பீடு மசோதாவினால், உடனடியாக பயன்பெறப் போவதும், அதேபோல அப்படியொரு சட்டத்தைக் கொண்டு வருவதற்கு நிர்ப்பந்தித்ததும், அமெரிக்கா மற்றும் அணு எரிபொருள் விநியோகிக்கும் நாடுகள் என்ற உண்மையை யாரும் மறுப்பதற்கில்லை. அவ்வாறு அமெரிக்க நலனை பேணுவதற்காக ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஐ.மு.கூ. செயல்படுகிறது என்ற ஜஸ்வந்த் சிங்கின் விமர்சனம் எந்த அளவிற்கு சரியானதோ, அதேபோல தொடக்கத்திலிருந்தே நிபந்தனையற்ற ஆதரவை கொடுப்பதற்காக தயாராகயிருந்த பா.ஜ.க.வும் செயல்படுகிறது என்ற உண்மை இப்போது தெளிவாகத் தெரிகிறது.
நிலைக்குழுவில் பா.ஜ.க.வால் ஏற்கப்பட்ட அன்ட் என்ற ஆங்கிலச் சொல்லைப் பற்றிய விவரங்களை, சென்னையிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு விரிவாக அம்பலப்படுத்தியப் பிற்பாடு, அதையே மேற்கோளாகக் கொண்டு அருண் ஜெட்லியும், சுஷ்மா சுவராஜும் மறுநாள் மற்ற பா.ஜ.க. தலைவர்களுடன் விவாதித்து, அதை எதிர்த்தார்கள் என்ற செய்தி ஊடகங்களில் அம்பலமானது. அது கூடுதலான சான்றாக இருக்கிறது. இதன் மூலம் நடந்தவையெல்லாம் நாடகம் தான் என்பதும் தெரிகிறது.
மேற்கண்ட மசோதாவை ஆகஸ்ட் மாதம் 2ம் வார தொடக்கத்திலேயே கொண்டு வந்து உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசு எண்ணியது. அதுவும் அமெரிக்காவின் விருப்பம் தான் என்பது தெரிகிறது. பொதுமக்கள் மத்தியில் விவாதத்திற்கு செல்லாமலேயே, மசோதாவின் நகலை அவசரமாக நிறைவேற்றுவது என்பது அமெரிக்காவின் திட்டம். ஏற்கனவே அமெரிக்கஇந்திய அணுசக்தி ஒப்பந்தம், இடதுசாரிகளின் முயற்சியாலும், ஊடகங்களின் ஒத்துழைப்பாலும் நாடு தழுவிய விவாதமாக மாறி, அணு அறிவியலாளர்களும் தங்களது எதிர்ப்பை அந்த ஒப்பந்தத்திற்கு தெரிவித்ததையொட்டி ஏற்பட்ட தாமதம் ஒரு படிப்பினையாக அமெரிக்காவால் உணரப்பட்டது. ஆகவே மேற்கண்ட இழப்பீடு மசோதா பற்றிய விமர்சன, விவாதங்களை பெரிய அளவில் அச்சு ஊடகங்களிலும், காட்சி ஊடகங்களிலும் வரவிடாமல் தடுத்த பங்கும் அமெரிக்காவையே சாரும். அதேபோல இந்திய தொழில் முதலாளிகளின் அமைப்புகள் இரண்டும், மசோதா பற்றிய விவாதத்தில் இறங்கி, வெளிநாட்டு விநியோகத்தர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது, ஒரு அனைத்து நாட்டு திட்டமிடல் என்பது தெரிகிறது. ஒருவார கால நாடாளுமன்ற நாடகம் மக்கள் மத்தியில் எந்த ஒரு சலனத்தையும் ஏற்படுத்தாததால், நாடக ஏற்பாட்டாளர்களுக்கு அது வெற்றியைத் தந்துள்ளது.