Monday, August 16, 2010

சுதந்திரப்போரில் முஸ்லிம்கள் பங்கும், காஷ்மீர் சுயாட்சியும்

64வது சுதந்திர தினம் நிறைவுற்றது. அது மகிழ்ச்சியை அள்ளித்தந்ததா? மனவேதனையை கணக்குப்பார்க்க சொன்னதா? இதுபோன்ற கேள்விகளை எழுப்புவதற்கு முன்னால், டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின கொடியேற்றி வைத்த தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் ஆற்றிய உரை சில செய்திகளை சொல்லிச் சென்றது. மாவோயிஸ்ட்களையும், காஷ்மீர் பிரிவினைவாதிகளையும், பாகிஸ்தானையும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அத்தகைய பிரச்சனைகளை பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்பதாகவும் மன்மோகன் தனது உரையில் கூறியுள்ளார். மேற்கண்ட பிரச்சனைகளை அணுகுவதில் புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளார் என்பதாக நாம் நம்புகிறோம். அப்படியானால் இதுவரை எடுத்த நிலைப்பாடு என்ன?
மாவோயிஸ்ட்களை கையாளுவதற்கு பச்சை வேட்டையை மத்திய அரசு நேற்றுவரை தனது நிலைப்பாடாக எடுத்திருந்தது. அதை முழுமையாக மாற்றி விட்டார்கள் என்று சொல்வதற்கான ஆதாரம் எதுவுமில்லை. பாகிஸ்தான் விவகாரத்திலும், காஷ்மீர் பிரச்சனையிலும் மோதல் நிலைப்பாட்டைத் தான் இதுவரை மத்திய அரசு செயல்படுத்தி வந்தது. அதன் விளைவாக இந்திய துணைக் கண்டத்திற்குள் இருக்கின்ற மக்களிடையே மதரீதியான பகையுணர்வை மற்றும் பிளவை ஏற்படுத்த அது வழி வகுத்தது. அப்படிப்பட்ட நோக்கத்துடன் தான் மத்திய அரசு மேற்கண்ட நிலைப்பாடுகளை எடுத்ததா என்ற சந்தேகம் எழுகிறது. இந்த நேரத்தில் 64வது சுதந்திர தினத்தையொட்டியாவது நாம் இந்திய மக்களுக்குள் இருக்கின்ற ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும். அதற்கான வரலாற்று சான்றுகளை வெளியே கொண்டுவர வேண்டும்.
இந்தியாவில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம் மக்களின் பங்கு கணிசமாக இருந்தது என்ற உண்மையை, அனைத்து சமூக மக்கள் மத்தியிலும் கொண்டு செல்லும் போது தான் சமூக நல்லிணக்கம் என்ற எண்ணம் மேலோங்க முடியும். முஸ்லிம் மக்கள் மத்தியிலிருந்து வளர்ந்து வந்த புரட்சியாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பலரும் ஆங்கிலேயனின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து இந்திய விடுதலைக்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. டிடு மீர் நடத்திய கலகம், மௌலானா அபுல்கலாம் ஆசாத், ஹக்கிம் அஜ்மல் கான், ரபி அகமது கிட்வாய், முகமது அஷ்பாக், உல்லாகான் ஆகியோர் ஆங்கிலேயர்கள் எதிர்த்த சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்ட முக்கிய பிரமுகர்கள். எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட கான் அப்துல் கபார்கான் தனது 95 ஆண்டு வாழ்க்கையில், 45 ஆண்டுகளை ஆங்கிலேயனை எதிர்த்த சுதந்திரப் போராட்ட வேள்விக்காக சிறையில் கழித்தவர். போபாலை சேர்ந்த பரகத்துல்லா, கத்தார் கட்சி என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தோற்றத்தை ஏற்படுத்திய நிறுவனர்களின் ஒருவர். இந்த கத்தார் கட்சி இந்தியாவில் வெள்ளைக்காரனுக்கு எதிராக புரட்சியை நடத்துவதற்காக, கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றை தோற்றுவிப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து தொடர்ந்து புரட்சியாளர்களை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது. அப்படி அனுப்பப்பட்டவர்கள் மார்க்சிய பயங்கரவாதிகள் என்பதாகக் கூட ஆங்கிலேய அரசாங்கத்தால் முத்திரைக் குத்தப்பட்டனர். அவ்வாறு இந்தியாவிலுள்ள பல பெரு நகரங்களில் வந்திறங்கிய புரட்சியாளர்கள் பலரும் ஆங்கிலேய அரசாங்கத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.
பிரான்ஸ் நாட்டில் தலைமறைவு புரட்சிகர வாழ்க்கையிலிருந்து கத்தார் கட்சியை நடத்தியதில் ஒருவரான சையத் ரகுமத்ஷா என்ற இந்தியர் 1915ம் ஆண்டு புரட்சிகர எழுச்சியில் தூக்கிலிடப்பட்டார். மலேசியாவிலும், பர்மாவிலும் சையத் முஸ்தபா உசையினுடன் இணைந்து இந்திய ஆயுத கிளர்ச்சிக்காக பணிகள் செய்து வந்த உத்திரபிரதேசத்தின் ஃபசியாபாத்தை சேர்ந்த அலி அகமது சித்திக் 1917ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் 1942ம் ஆண்டு ஈடுபட்ட வைக்கம் அப்துல் காதர் என்ற கேரளத்தைச் சேர்ந்த சுதந்திரப்போராட்ட வீரர் தூக்கிலிடப்பட்டார். காந்தியின் தொடர் பயணங்களுக்கு நிதி கொடுத்து உதவிய தொழிலதிபர் உமர் சுபானி என்பவரும் முஸ்லிம் சமூகத்திலிருந்து வந்த பிரமுகர் தான்.
ஹஸ்ரத் மஹால், அஸ்காரி பேகம், பீ அம்மா போன்ற முஸ்லிம் பெண்கள் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியமான பங்கு வகித்தவர்கள். தமிழ்நாட்டின் வேலூர் கோட்டையில் முதல் சுதந்திர போர் முழக்கம் செய்தவர் திப்பு சுல்தான் தான் என்ற செய்தியை இப்போது வரலாறு ஒப்புக்கொள்கிறது. ஆங்கிலேயனுடைய ஆதிக்கத்திற்கு எதிராக முஸ்லிம் சமூகத்தின் மேட்டுக்குடி குடும்பங்களைச் சேர்ந்த பல அறிவுஜீவிகள் முழுமையாக சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பதற்காக, வெள்ளையனால் குறி வைத்துத் தாக்கப்பட்டார்கள். உருது கவிஞர் மிர்ஸா காலிப் 1797ம் ஆண்டு முதல் 1869ம் ஆண்டு வரை, இந்திய சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தவர். பிற்காலத்தில் பாகிஸ்தான் என்ற நாட்டை பிரிப்பதற்காக குரல் கொடுத்தார் என்று இன்று சிலரால் குற்றம் சாட்டப்படும் ஜின்னா கூட 1930ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியில் இருந்து சுதந்திரத்திற்கான போராட்டங்களில் ஈடுபட்டவர் தான். அதேபோல டாக்டர் சர்அல்லமா முகமது இக்பால் என்ற பிரபல கவிஞர் இந்து, முஸ்லிம் ஒற்றுமைக்காக போராடியவர். இப்படியாக முஸ்லிம்களின் பங்களிப்பு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தங்களது உடலையும், உயிரையும் தியாகம் செய்யும் அளவிற்கு இருந்திருக்கிறது என்ற செய்தி முறையாக எடுத்துச் செல்லப்பட வேண்டும். இதை முஸ்லிம் அமைப்புகள் மட்டுமே வெளியே கொண்டு வருவது என்ற நிலை மாறி, மற்ற சமூகத்தினரும் சுதந்திரப் போராட்ட வீரர்களை கௌரவிக்கும் நோக்கோடு இந்த உண்மைகளை பரப்ப வேண்டும்.
தீவிரவாதத்தையும், இஸ்லாத்தையும் இணைத்து பரப்பக்கூடிய சக்திகள் இந்திய மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் நோக்கத்தோடு செயல்படுகின்றன. ஆகவே மேற்கண்ட விவரங்கள் பதிவு செய்யப்படுவது தேவையாக இருக்கிறது. அடுத்து காஷ்மீர் பிரச்சனையை முன்வைத்து இங்கே மதரீதியான விவாதங்கள் செய்யப்படுகின்றன. இது எந்த வகையிலும் எதார்த்தங்களுக்கு பொருத்தமானது அல்ல. ஏனென்றால் காஷ்மீர் பிரச்சனை என்பதே மதங்களை கடந்த ஒரு தேசிய இனத்தின் பிரச்சனையாகும்.
சமீபத்தில் சென்னையில் ஒரு கல்லூரியில் நடந்த கருத்தரங்கில், துப்பாக்கிகளுடன் மோதும் கற்கள் என்ற தலைப்பில் காஷ்மீர் பற்றிய உண்மைகள் பரிமாறப்பட்டன. காஷ்மீர் பகுதியின் சமூக, பண்பாட்டு, மத ரீதியான உண்மை நிலவரங்கள் படிக்கப்பட வேண்டும். காஷ்மீரை இந்து மன்னன் ஆண்டு வந்தான் என்றும், அவன் இந்திய அரசிடம் நிபந்தனைகளின் அடிப்படையில் காஷ்மீரத்தை இணைத்தான் என்பதையும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதனால் காஷ்மீர் பகுதிக்கு இந்திய அரசியல் சட்டத்தில் பிரிவு370ன் கீழ் அதிகமான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அது சரியா, தவறா என்று இந்தியாவில் விவாதிக்கப்படுவதும் நாம் கேள்விப்படும் செய்தி. உண்மையில் இந்திய நாடாளுமன்றத்தின் சட்டங்கள் காஷ்மீரத்திற்குள் செல்லுபடியாகாது என்ற நிலைமை தொடக்கத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது. 1958ல் காஷ்மீரத்தில் தேர்ந்தெடுக்கப்படும் தலைமைக்கு பிரதமர் என்ற பெயரை அளித்திருந்தார்கள். காலப்போக்கில் இந்தியாவின் அரசப்படைகள் காஷ்மீரத்தில் பல பத்தாண்டுகளாக ஆக்கிரமிப்பாளர் போல செயல்படத் தொடரும் போது, தானாகவே அதுவும் ஒரு இந்தியாவிற்கு உட்பட்ட மாநிலம் போலவும், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் முதலமைச்சர் என்பதாகவும் வழங்கப்படத் தொடங்கியது. ஒப்பந்தத்தின் வாயிலாக அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளும் கூட, கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல ஆகிவிட்டதை நாம் காணமுடிகிறது. காஷ்மீரத்தில் இருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் ஏழை விவசாயிகள் என்பதையும், பண்டிட்டுகள் என்ற இந்து மதத்தினர் அங்கேயிருக்கும் பண்ணையார்கள் என்பதையும், இங்குள்ள மக்களுக்கு இதுவரை யாரும் புரியவைக்கவில்லை. அங்கே ஆண்டு வந்த இந்து மன்னரை எதிர்த்து, மக்கள் கலகம் செய்து வந்தனர் என்ற செய்தியையும் கூறியவரில்லை. நிபந்தனைகளுடன் இந்தியாவுடன் இணைக்கப்படும் போது, கையெழுத்திடப்பட்ட ஆவணத்தில் காஷ்மீர் சுயநிர்ணய உரிமைப்பற்றி எழுதப்பட்டிருந்தது என்பதையும் நமக்கு வெளிப்படுத்துவாரில்லை. ஐ.நா.சபை காஷ்மீரின் சுய நிர்ணய உரிமைப்பற்றி 18 முறை தீர்மானங்கள் போட்டிருக்கிறது. 1965ம் ஆண்டில் தாஷ்கண்டிலும், பிறகு சிம்லா ஒப்பந்தத்திலும் காஷ்மீர் சுயநிர்ணயம் பற்றிய ஒப்பந்தங்கள், இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் மத்தியில் போடப்பட்டன. அதனால் காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனையும் அல்ல. இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையிலான பரஸ்பர பிரச்சனையும் அல்ல. அது அøøத்து நாட்டு மத்தியில் சென்று விட்ட பிரச்சனையாக இருக்கிறது. இத்தகைய உண்மைகளை சென்னை வந்திருந்த காஷ்மீரி மாணவர் காலித் வசிம் கூறிய பிறகு தான் தெளிவாக விளங்க முடிகிறது. இங்கே காஷ்மீர் பிரச்சனையை ஒரு முஸ்லிம் பிரச்சனையாக பார்க்கின்ற மோசமான ஒரு மதச்சார்பு பரப்புரை பலரையும் பாதித்திருக்கிறது.
ஈழத்தில் இன அழிப்பை தங்கள் வாழ்நாள் காலத்திலேயே அறிந்து துடித்துக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய இனத்தைச் சேர்ந்த ஒவ்வொரு தமிழனும், காஷ்மீர் பிரச்சனையை அதன் வரலாறு, பூகோள அமைப்பு, சமூக வாழ்நிலை ஆகியவற்றுடன் கவனித்து ஒரு தேசியஇனத்தின் நெருக்கடி என்பதாக உணர்வது தான் உண்மைக்கு கொடுக்கப்படும் மரியாதை.