Saturday, August 14, 2010

போர் நிறுத்தம்: ஜன்னல் வழியா? கதவு வழியா?

ஆங்கில காட்சி ஊடகங்களில் இந்தியாவின் இதயப் பகுதியில் நடந்து வரும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதற்கான சூடான விவாதங்கள் நடத்தப்படுகின்றன. அத்தகைய விவாதங்களில் அமைதி வழியில் தீர்வு காண துடிக்கின்ற சுவாமி அக்னிவேஷ் பங்குக் கொள்கிறார். அதேசமயம் புரட்சிகர கவிஞர் என்று ஆந்திராவில் அறியப்பட்ட வரவராவ் கலந்து கொள்கிறார். அது தவிர பிரபல ஆங்கில ஊடகங்களின் ஆசிரியர்கள் கலந்து கொண்டு கருத்துக் கூறினர். அவர்களது விவாதம் சமீபத்தில் மேற்கு வங்கத்தில் நடந்த மம்தா பானர்ஜி கலந்து கொண்ட மாபெரும் பொதுக் கூட்டம் பற்றி திரும்பியது. அந்த கூட்டத்தில் மாவோயிஸ்ட் தலைவர் ஆசாத் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்ட செயல், இந்திய நாடாளுமன்றத்தையே குலுக்கி வருகிறது என்பதும் காட்சி ஊடகங்களில் விவாதிக்கப்படுகிறது.
ஆசாத் படுகொலைக்கு விசாரணை வேண்டுமென்று, மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி கேட்க, அதை பா.ஜ.க.வும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் மறுக்க அதுவே தீவிர விவாதமாக நாடாளுமன்றத்தில் ஆகியிருக்கிறது. அதுபற்றி மம்தாவிடம் பேசி தீர்க்க மூத்த மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி அனுப்பி வைக்கப்படும் அளவிற்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் ஒரு பிளவுபட்ட கருத்தை அது ஏற்படுத்தி விட்டது. இத்தகை சூழலில் பிரபல ஆங்கில வார ஏடு ஒன்றும், பிரபல ஆங்கில காட்சி ஊடகம் ஒன்றும் மாவோயிஸ்ட் பகுதி என்று இப்போது அழைக்கப்படுகின்ற இந்தியாவின் இதயமான பகுதிக்குள் முதன்முறையாக ஊடகங்கள் வாயிலாக ஒரு ஆய்வு நடத்தியுள்ளார்கள். அந்த ஆய்வில் கிடைத்திருக்கும் பதில்களாக அவர்கள் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் சரியானது தானா என்ற கருத்தை விட, அப்படியொரு ஆய்வு இந்திய நாட்டில் எப்படிப்பட்ட விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தான் முக்கியமான செய்தி.
அவர்கள் எடுத்துள்ள புள்ளி விவரங்களில் நக்சல்பாரிகளாக மாறிய மக்கள் ஏழைகளாகவும், ஒடுக்கப்படுபவர்களாகவும் இருப்பவர்கள் தான் 26% இருக்கிறார்கள் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல நக்சல்பாரி ஊழியர்களில் 12% இளம் ஆதிவாசிகள் என்றும், 13% அண்டை பகுதிகளில் இருந்து வந்த ஆதிவாசிகள் என்றும், 19% ஆதிவாசிகள் அல்லாதவர்கள் என்றும் ஒரு கணக்கும் வெளியிடப்பட்டுள்ளது. நக்சல்பாரி இயக்கம் அந்த வட்டாரத்தில் வளர்வதற்கு காரணங்கள் ஆய்வு செய்யப்பட்டபோது, வட்டார வளர்ச்சியின்மையே காரணம் என 21%ம், சமூக ஏற்றத்தாழ்வு காரணம் என்போர் 7% என்றும், உதவிகள் கிடைக்காமல் தவிக்க விடப்பட்ட மனநிலை தான் காரணம் என்போர் 6% என்றும், மத்திய மாநில அரசுகளின் தோல்விகள் தான் காரணம் என்று சொல்பவர்கள் 5% என்றும் புள்ளி விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வட்டார மக்கள் மத்தியில் நக்சல்பாரி இயக்கத்தின் மீது அனுதாபம் கொண்டவர்கள் 10% என்றும், சிறிய அளவு அனுதாபம் உள்ளவர்கள் 37% என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டில் அகில இந்திய அளவில் நக்சல்பாரி இயக்கத்தின் செல்வாக்கிற்கு உட்பட்ட மாவட்டங்கள் 54 இருந்தன என்றும், தற்போது 2010ம் ஆண்டில் 85 மாவட்டங்கள் அவர்களது செல்வாக்கில் இருக்கின்றன என்றும் அந்த ஆய்வு மதிப்பீடு கூறியுள்ளது. அந்த வட்டார மக்கள் மத்தியில் 44% மக்கள் 5 ஆண்டுகளாக நக்சல்பாரி இயக்கத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்கள் என்றும், 34% மக்கள் 5 ஆண்டுகளுக்குள் கேள்விப்பட்டிருக்கிறார்கள் என்றும், 22% கடந்த ஆண்டு தான் கேள்விப்பட்டார்கள் என்றும் கூறியிருக்கிறார்கள்.
அதேபோல நக்சல்பாரிகள் அதிகாரத்தை நிறுவியிருக்கிறார்கள் என்று 31% மக்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் 17% மக்கள் நக்சல்பாரிகள் அதிகாரத்தை இழந்திருப்பதாகவும், 19% மக்கள் அரசு அதிகாரத்திற்கும், நக்சல்பாரிகளின் அதிகாரத்திற்கும் வேறுபாடு இல்லை என்றும் ஆய்வில் கூறியிருக்கிறார்கள். அரசாங்கம் வட்டாரத்தின் முழுமையான கட்டுப்பாட்டை கையில் வைத்திருப்பதாக 49% மக்கள் கூறியிருக்கிறார்கள். பகுதி அளவில் தான் அரசாங்க கட்டுப்பாடு இருப்பதாகவும், மீதி நக்சல்பாரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், 13% மக்கள் கூறியிருக்கிறார்கள். இரவு நேரங்களில் நக்சல்பாரிகளின் அதிகாரம் தான் கோலோச்சுவதாக 8% மக்கள் தெரிவித்திருக்கிறார்கள். 2% மக்கள் மட்டும் முழுமையான அதிகாரம் நக்சல்பாரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
பாபுராவ் வாடே என்ற கிராம தலைவர் தன்னைப் போன்றவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், எந்த நேரமும் யாரும் தன்னைப் போன்றவர்களை தாக்கி விட்டு சென்று விட முடியும் என்றும் கூறியுள்ளார். அதே நேரத்தில் கோண்டுவாகி கிராமத்தின் சமூக தலைவர், தங்களை 2 அரசாங்கங்கள் ஆள்வதாகவும், 1 காலை நேரத்தில் அதிகார பூர்வமாக ஆள்கிறது என்றும், இன்னொன்று இரவில் ஆள்வதாகவும், தாங்கள் அவை இரண்டிற்கும் மத்தியில் வாழும் கலையை கற்றுக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதேபோல அட்வே காண்டு என்ற ஒரு விவசாயி ஒரு கத்திரியின் 2 கூர்மிகு பகுதிக்கும் மத்தியில் உள்ள தாள் போல தாங்கள் வாழ்வதாக கூறியுள்ளார்.
நக்சல்பாரிகள் ஏழைகளுக்கான நியாயங்களை, துப்பாக்கி முனையில் பெற விரும்புவதாகவும், அரசாங்கத்தை தூக்கியெறிய விரும்புவதாகவும், வன்முறை மூலம் அதிகாரத்தை கைப்பற்ற விரும்புவதாகவும் அங்குள்ள எளிய உழைக்கும் மக்கள் கூறியிருக்கிறார்கள். மத்திய அரசு தோட்டாக்களால் பேசும் போது மட்டுமே கவனிக்கிறது என்பதனால், ஆயுத போராட்டம் நியாயப்படுத்தப்படுகிறது என்றும் கூட கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
நக்சல்பாரிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் காடுகளை வணிகர்களுக்காகவும், கார்ப்பரேட்டுகளுக்காகவும் காலி செய்து கொடுக்க அரசு முயல்வதாக அந்த ஏழை மக்கள் தெரிவித்துள்ளனர். நக்சல்பாரிகள் மக்களது பிரச்சனைகளை கையிலெடுக்கிறார்கள் என்றாலும் அவர்கள் துப்பாக்கிகளை பயன்படுத்தக்கூடாது என்று கணிசமான மக்கள் கூறியுள்ளார்கள். தெலுங்கானாவில் உள்ள ஆதிவாசிகள் பகுதிகளில் மாவோயிஸ்ட்களுக்கு செல்வாக்கு இருக்கிறது. குறிப்பாக வாரங்கள், கரிம்நகர், நிஜாமாபாத், கம்மம், அடிலாபாத் ஆகிய தெலுங்கான பிராந்திய மாவட்டங்களில் அந்த செல்வாக்கு தெரிகிறது என்றும் கட்டுரையாளர் கூறியுள்ளார். தெலுங்கான பகுதியில் நகர்மயமாதல் அதிகரிக்கும் போது கிராமப்புறங்கள் சிவப்பு சிந்தனையின் கீழ் செல்வாக்கு செலுத்தப்படுகின்றன. மஞ்சேரியல் என்ற பகுதியில் மக்கள் நக்சல்பாரிகளை தீவிரவாதிகளாக பார்க்கவில்லை. மாறாக நாட்டுப்பற்றாளர்களாக காண்கிறார்கள்.
காட்சி ஊடக விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய சுவாமி அக்னிவேஷ், ஆசாத் படுகொலை பற்றி கண்டனம் தெரிவித்தார். தன் மூலம் ஆசாத் பேச்சு வார்த்தைக்கான உணர்வு பூர்வமான முயற்சிகளை மேற்கொண்டதையும் கூறினார். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும், மாவோயிஸ்ட் தலைவர் ஆசாத்திற்கும் மத்தியில் பேச்சுவார்த்தைக்காக தான் எடுத்த முயற்சிகளை விவரித்தார். இப்போதும் போர் நிறுத்தம் செய்ய ஜன்னல் திறந்திருக்கிறது என்றார். ஆனால் அது ஜன்னல் அளவு அல்ல என்றும், கதவே திறந்திருக்கிறது என்றும் வாதாடிய ஆங்கில ஏட்டின் ஆசிரியர் கூறினார்.
64வது சுதந்திர தினத்தில் கால் வைக்கின்ற நாம், மாற்று அரசாங்கத்தையும், புரட்சிகர ஆயுத படையையும், கையில் வைத்திருக்கின்ற மாவோயிஸ்ட்களுடன், போர் நிறுத்தம் அறிவிப்பதற்கு இது தான் நன்னாளாக இருக்கும் என்ற உணர்வை எழுப்புவோம்.