Wednesday, August 11, 2010

பா.ஜ.க.வுடன் இடதுசாரிகள் சேர்ந்தது எதனால்? யாருக்காக?

கொல்கத்தா அருகே ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அந்த பொதுக்கூட்டம் கட்சி சார்பற்றது என்பதாக அறிவிக்கப்பட்டது. அதை அரசியல் சார்பற்றது என்பதாக ஊடகங்கள் விளக்கின. அரசியல் என்பதை தேர்தலில் போட்டியிடும் வேலையாக மட்டும் கருதிக்கொண்டிருக்கும் ஒரு சிந்தனைப் போக்கின் விளைவே அவ்வாறான சித்தரிப்பு. தேர்தல் அரசியல் தவிர, சமூகப் பிரச்சனைகள், பொருளாதார கோரிக்கைகள், அரசியல் உரிமைகள் போன்ற அனைத்துமே அரசியல் தான் என்ற செய்தி இன்னமும் நமது நாட்டில் பிரபலமாக புரியப்படவில்லை. சாதாரண பொது மக்களுக்கு மட்டுமின்றி, அறிவுஜீவிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், ஏன் ஊடங்களுக்கும் கூட இன்னமும் அரசியல் என்பதற்கான பரந்த பொருளை உட்கொள்வதில் சிரமம் இருக்கிறது. தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்குள் உள்ள அரசியல், கட்சி அரசியல் என்பதாக அழைக்கப்பட வேண்டும். அப்படிப் பார்க்கும் போது கட்சி சார்பற்ற அரசியல் என்று ஒன்று சமூகத்தில் நிலவிவரும் உண்மையை புரிந்துகொள்ள வேண்டிவரும். அப்படிப்பட்ட ஒரு கட்சிச் சார்பற்ற அரசியல் மேடை தான் கொல்கத்தா அருகே அமைக்கப்பட்டது. அந்த மேடையில் முக்கியமாக மத்திய ரயில்வே அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பேனர்ஜி அமர்ந்திருந்தார். இந்திய மக்கள் அனைவருக்கும் கடந்த 30 ஆண்டுகளாக பிரபலமாக அறிமுகமான பெண் சமூக ஆர்வலர், மேதா பட்கர் அமர்ந்திருந்தார். நர்மதா நதிக்கு குறுக்கே அணைக்கட்டும் முயற்சி, 2 லட்சம் ஆதிவாசி மக்களை தங்களது பாரம்பரிய பசுமை நிலத்தை விட்டு இடம்பெயரச்செய்யும் என்பதனால், 25 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் மக்கள் இயக்கத்திற்கு தலைமை தாங்கி வருபவர் மேதா பட்கர். அவர் வழிநடத்தும் தேசிய மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு, பல்வேறு விதமான அரசியல் உரிமைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக போராடி வருகிறது. ஆகவே அவரை அரசியலற்றவர் என்று கூறிவிட முடியாது. ஆனால் அவர் இந்திய நாடாளுமன்றப் பாதையில் போட்டியிடும் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர். ஆகவே அவரை கட்சிச் சார்பற்றவர் என்று அழைக்கலாம். அதே போல அந்த மேடையில் அமர்ந்திருந்த சுவாமி அக்னிவேஷ் ஒரு சமூக ஆர்வலர். அவர் கொத்தடிமைத் தனத்தை எதிர்த்து 30 ஆண்டுகளாக போராடி வருபவர். கொத்தடிமைகளை விடுதலை செய்யும் இயக்கம் ஒன்றை நடத்திவருபவர். அப்படிப்பட்ட அவரது தொடர் சமூகப் பணிகளை கணக்கில் கொண்டு, மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர். கட்சிகள் ஆக்கிரமித்துள்ள மாநிலங்களவையில், இது போன்ற கட்சிச் சார்பற்ற பிரதிநிதிகளும் அவ்வபோது தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். அவரும் கூட கட்சிச் சார்பற்ற ஒரு பிரமுகர். அதேசமயம் அடிப்படை மக்களின் அரசியல் உரிமைக்காக போராடி வருபவர். ஆகவே அவர்களெல்லாம் அரசியல் அற்றவர்கள் அல்ல. அதேசமயம் கட்சிச் சார்பற்றவர்கள். அதனால் அந்த மேடை கட்சி சார்பற்ற மேடையாக அர்த்தப்படுத்தப்பட வேண்டும். அந்த மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு அணிதிரட்டப்பட்ட மக்களும், கட்சி சார்பற்றவர்கள். மம்தா பானர்ஜி தவிர அவரது கட்சியை சேர்ந்த எந்த ஒரு அமைச்சரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ, தலைமை பொறுப்பாளர்களோ அந்த மேடையில் அமரவில்லை. அதனால் மம்தாவின் கட்சியும் தங்கள் கட்சித் தொண்டர்களை, அந்த கூட்டத்திற்கு கொடியுடன் கூட்டிவரவில்லை. லால்கர் என்று அழைக்கப்படும் மேற்கு மிதினாபூர் மாவட்டத்தில், மேற்கு வங்க மாநிலத்தில் அந்த கூட்டம் நடத்தப்பட்டது. ஒரு மாதம் முன்பே மேதா பட்கரும், சுவாமி அக்னிவேஷும் லால்கர் நோக்கி அணிவகுப்போம் என்பதாக அறிவித்து அணிதிரட்டி வந்தனர். மேற்குவங்க மாநிலத்தை ஆளும் மார்சிஸ்ட் கட்சி அத்தகைய அணிதிரட்டலுக்கு அனுமதிக்காத ஒரு சூழ்நிலையில், மம்தா பானர்ஜியும் அந்த நிகழ்ச்சிக்கு இணைக்கப்பட்டார். காவல்துறையின் அராஜகத்திற்கு எதிரான மக்கள் குழு என்ற ஆதிவாசி மக்களை ஆயிரக்கணக்கில் அணிதிரட்டி வரும் மக்கள் அமைப்பு ஒன்று மேற்கு மிதினாபூர் மாவட்டத்தில் இயங்கி வருகிறது. அதன் தலைவர்களாக இருக்கின்ற மகதோக்களை, மேற்கு வங்க அரசு வேட்டையாடி வருகிறது. அவர்களை கைது செய்யவும், சிறைப்பிடிக்கவும் எளிதான முறையாக, மாவோயிஸ்டுகள் என்ற முத்திரையை குத்திவிடுகிறார்கள். அதனால் மக்கள் திரள் அமைப்பின் தலைவர்களாக இருக்கும் மகதோக்கள் இதன் மூலம் வன்முறையாளர்களாக அரசாங்கத்தின் நல்லாசியுடன் சித்தரிக்கப்பட்டார்கள். அப்படி சித்தரிக்கப்பட்ட ஒரு மகதோ, மம்தாவுடன் அந்த மேடையில் தோன்றினார் என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் ஒரு குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டை ஆதரிக்கும் கட்சியாக பா.ஜ.க. இருக்கிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மேற்கண்ட பொதுக்கூட்டம் பற்றிய காரசாரமான விவாதத்தை பா.ஜ.க. கிளப்பியது. அதை மார்க்சிஸ்ட் கட்சி ஆதரித்தது. இவ்வாறாக நாடாளுமன்றத்தின் பாதையில் பயணம் செய்யும் கட்சிகளில், எதிரெதிர் துருவங்களை சேர்ந்த கட்சிகள் மாவோயிஸ்டுகளை எதிர்ப்பது என்ற பெயரில் மம்தாவிற்கு எதிராக குரல் எழுப்பியுள்ளனர். மேற்கண்ட கூட்டத்தில் மாவோயிஸ்டு கட்சியின் முக்கிய தலைவரான ஆசாத் என்ற செருகுரி ராஜ்குமார், கைது செய்யப்பட்ட பிறகு அராஜகமாக கொலைச் செய்யப்பட்டார் என்ற செய்தியும் கண்டத்திற்குள்ளானது. இதுவரை இத்தகைய கண்டனக் குரலை எழுப்பிவந்த சுவாமி அக்னிவேஷ், மேதா பட்கர் ஆகியோருடன் இந்த முறை மம்தா பானர்ஜியும் கலந்து கொண்டார். இது சிலருக்கு செரிக்கமுடியாத செய்தியாக அமைந்துவிட்டது. மாவோயிஸ்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரான கிஷன்ஜி, ஆசாத் படுகொலைப் பற்றி விசாரணை கேட்காத பா.ஜ.க. மற்றும் சி.பி.எம். கட்சிகளை சாடியுள்ளார். மத்திய அரசின் சதித்திட்டத்தால் ஆசாத் படுகொலை செய்யப்பட்ட பிறகும், தங்கள் மாவோயிஸ்டு கட்சியின் தலைமை பேச்சுவார்த்தை பற்றி முறையாக சிந்திப்பதாக கிஷன்ஜி கூறியுள்ளார். மத்திய அரசு பச்சைவேட்டையை நிறுத்தி, வன்முறையை கைவிடுமானால், தாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்ற அணுகுமுறையை புரட்சியாளர்கள் முன்வைக்கிறார்கள். மேதா பட்கரையும், சுவாமி அக்னிவேஷையும் அதற்கான இயக்கத்தை எடுக்குமாறு கிஷன்ஜி கோரியுள்ளார். இப்போது கட்சி சார்பற்ற அரசியல் மக்கள் மத்தியில் எடுபடத் தொடங்குவதால், கட்சி அரசியல்வாதிகளுக்கு கிலி பிடிக்கத் தொடங்கிவிட்டது. கட்சி அரசியல் அனைத்துமே மக்கள் விரோதமாக செல்லும் காரணத்தினால், கட்சி சார்பற்ற அரசியல் மக்களுக்காக வேர்விட தொடங்கியிருக்கிறதா என்ற விவாதம் எழுந்துள்ளது. 63வது சுதந்திரத் தினத்தை இந்த நாடு சந்திக்கயிருக்கும் நேரத்தில், கட்சிகளின் அரசியல் பன்னாட்டு நிறுவனங்களின் மற்றும் கார்பரேட்டுகளின் நலனுக்காக செல்வதும், அதனாலேயே கட்சி சார்பற்ற அரசியல் மக்கள் நலனுக்காக எழுவதும் குறிப்பாக கவனிக்கப்படவேண்டியிருக்கிறது. சுதந்திரம் என்பதை வாயால் பேசுவது கட்சி அரசியலா? சுதந்திரம் என்பதை உண்மையில் நேசிப்பது கட்சி சார்பற்ற அரசியலா? இத்தகைய விவாதம் எழுந்துள்ளது. அதனால் தான் கட்சிகளுக்குள் உள்ள வலது துருவமும், இடது துருவமும் இணைகிறதா என்பதே நமது கேள்வி.