Thursday, July 29, 2010

மனித கௌரவமும், மனித சோகங்களும்.

மனித கழிவுகளை மனிதர்களே அள்ளுவது தவறு என்றும், அதே போல கழிவு ஒடைகளில் உழைக்கும் மக்களை இறக்கிவிட்டு ஆபத்துகளை எதிர்கொள்ளவிடுவது பிழையானது என்றும், இந்திய நாட்டின் தேசிய மனித உரிமை ஆணையமும், பல்வேறு நீதி மன்றங்களும் கூறியுள்ளன. ஆனாலும் கூட இந்த நாட்டில் நிலவுகின்ற சாதி பாகுபாடும், தீண்டாமை இழிவுபடுத்தல்களும், மனிதர்களை அது போன்ற பணிகளில் நிர்பந்தித்துவருகிறது. அவ்வாறு செய்வது மனித கௌரவத்தை கேள்வி கேட்கின்ற ஒரு போக்கு என்று மனித உரிமை ஆர்வலர்கள் கொதித்துப் போகின்றனர்.
ஏற்கனவே மனித கழிவுகளை மனிதனே அள்ளக்கூடிய வேலைகளை தடை செய்யக் கோரி, தேசிய மனித உரிமை ஆணையம் 10 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருந்தது. இந்திய அரசாங்கத்தின் அனைத்து துறைகளிலும் அது போன்ற செயல்பாடுகள் நிறுத்தப்படவேண்டும் என்று ஆணையிட்டது. அதை அமுல்படுத்தாத ரயில்வே துறையை கடுமையாக ஆணையம் கண்டித்தது. அதே போல கழிவு நீர் சாக்கடைகளில் பூமிக்குள் இறங்கி பணியாற்றச் செல்லும் தொழிலாளர்கள், கழிவுகளிலிருந்து வெளிவரும் நச்சு வாயுக்களால் தாக்கப்பட்டு, மரணமடைகின்ற நிகழ்ச்சிகளும் நாடெங்கிலும் நிகழ்ந்து வருகிறது. இத்தகைய கொடூரமான செயலை செயல்படுத்திவரும் அரசாங்கத் துறைகள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. கழிவு நீர் சாக்கடைகளில் கொல்லப்படுகின்ற தொழிலாளர்கள் பற்றிய சோகச் செய்திகளும் ஊடகங்கள் மூலம் அம்பலப்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகளில் இது போன்ற நிலைமை தொடர்கிறது. கழிவு நீர் சாக்கடைகளில் இதுவரை தமிழ்நாட்டில் மரணமடைந்த தொழிலாளர்களது எண்ணிக்கை 1000த்தை தாண்டும். மரணம் மட்டுமின்றி அத்தகைய தொழிலாளர்கள், கழிவு நீர்களுடனேயே கலந்து வாழ்வதால், பல விதமான தோல் நோய்களுக்கு உள்ளாகிறார்கள். அதன் மூலம் விரைந்து மரணத்தை பலர் சந்திக்கிறார்கள். பலர் நேரடியாக அரசாங்கம் மூலமாகவும், சிலர் தனியார் ஒப்பந்தகாரர்கள் மூலமாகவும் இத்தகைய வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இது இந்தியாவில் உள்ள தொழிலாளர் சட்டத்திற்கு எதிரானது.
சுகாதாரத் தொழிலாளர்கள் என்ற பெயரில், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த இந்த தொழிலாளர்களை, இப்படிப்பட்ட பணிகளில் நகராட்சிகள் ஈடுபடுத்துகின்றன. உதாரணமாக திருச்சி மாநகராட்சி இத்தகைய பணிகளுக்கு ஒப்பந்தகாரர்களிடம், கழிவு நீர் குழாய்களை பராமரிக்கும் வேலையை கொடுத்துள்ளது. அதில் தற்காலிகத் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். திருச்சியில் உள்ள செந்தண்ணீர்புரம் என்ற இடத்தில் ஒரு கழிவு நீர் கிடங்கு உள்ளது. அதில் ஜுன் மாதம் 21ம் நாள் 2 தொழிலாளர்கள் வேலைச் செய்யும் போது, நச்சு வாயு தாக்கி மரணமடைந்துவிட்டனர். வேலையில் ஈடுப்பட்ட போது கீழ் உள்ளாடை மட்டுமே அணிந்திருந்தனர். அவர்கள் உடல் முழுவதும் சேறு படிந்திருந்தது. அவர்கள் வாயிலிருந்து ரத்தமும், திரவமும் வழிந்தது. மேற்கண்ட பரிதாபமான நிலைமை படங்களுடன் ஊடகங்களில் வெளிவருகிறது. இது போல எத்தனையோ விபத்துகள் சென்னையிலும் மற்ற மாநகராட்சிகளிலும் தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து கொண்டிருக்கிறது. எத்தனைதான் ஊடகங்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கத்தினாலும், மாநகராட்சி தரப்பினர் அசைவதாகவே இல்லை.
ஒவ்வொரு விபத்து நடக்கும் போதும், அரசுதரப்பு அதிகாரிகள் இனிமேல் கருவிகளைத் தான் கழிவு நீர் அகற்றலுக்கு பயன்படுத்துவோம் என்று ஊடக நேர்காணல்களில் கூறுகிறார்கள். ஆனால் நடைமுறையில் அவ்வாறு நடப்பதில்லை. 1993ம் ஆண்டு மனித கழிவுகளை மனிதர்கள் அள்ளுவதை தடுக்கும் சட்டம் இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதை மீறித்தான் அரசுத் துறைகள் செயல்படுகின்றனவா என்ற கேள்வி எழுகிறது. 2008ம் ஆண்டு நவம்பர் 20ம் நாள் சென்னை உயர்நீதிமன்றம் இத்தகைய வேலைகளுக்கு எதிராக ஒரு ஆணையை பிறப்பித்துள்ளது. அதை மதிக்காமல் திருச்சி மாநகராட்சி தொழிலாளர்களுக்கு முழுகால்சராய், பாதுகாப்பு கவசங்கள், முகமூடிகள், பிராணவாயு குழாய்கள் ஆகியவற்றை அளிக்காமல் வேலைக்கு அனுப்பியுள்ளது.
மேற்கண்ட ஆணையை ஒட்டி 2009ம் ஆண்டு ஜுன் 16ம் நாளும், ஜூலை 10ம் நாளும், ஜூலை 24ம் நாளும், ஆகஸ்ட் 8ம் நாளும் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம், தொடராணைகளை சட்டப் பிரிவு226,215 ஆகியவற்றின் கீழ் கொடுத்துள்ளது. அத்தகைய ஆணைகளை தமிழ்நாடு அரசின் நகராட்சி நிறுவாகம் மற்றும் குடிநீர் வினியோகத் துறை செயலாளர் கவனமாக எடுத்திருந்தால், மேற்படி விபத்துகளை தடுத்திருக்கலாம். அதேபோல சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனரும் மேற்கண்ட உயர்நீதிமன்ற ஆணைகளை கவனத்துடன் அமுலாக்கியிருந்தால், விபத்துகள் தவிர்க்கப்படும்.
மேலே கூறப்பட்ட அரசுத் துறைகள், நீதிமன்ற ஆணையை மீறியதாக 2009ம் ஆண்டு ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. அதன்பிறகே மேலே கூறிப்பிடப்பட்ட 5 ஆணைகள் அதே ஆண்டில் நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டது. அதன் மீது நீதிமன்றம் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட சென்னை பெருநகர குடிநீர் வினியோகம் மற்றும் கழிவு நீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குனரை தலைவராகப் போட்டு, ஒரு சிறப்பு குழுவை உயர்நீதிமன்றம் நியமித்தது. அந்த சிறப்பு குழு கழிவு நீர் குழாய் பராமரிப்பில் மேம்பாட்டை கொண்டுவந்து, மனிதர்கள் அந்த பணியில் பாதுகாப்பின்றி ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என்பது நீதிமன்றத்தின் வழிகாட்டலாக இருந்தது. அந்த சிறப்பு குழுவில் இத்தகைய வழக்கை தொடுத்தவரும் உறுப்பினராக சேர்க்கப்பட்டார்.
சுகதார தொழிலாளர்களை இத்தகைய கழிவு நீர் சாக்கடைகளுக்குள் நுழையவிடுவதை தடைச் செய்து கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்பதாக நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால் குறிப்பிடப்பட்ட சிறப்பு குழு 4 கூட்டங்கள் வரை கூட்டப்பட்டும், வழிகட்டல்கள் அமுலாக்கப்படவில்லை என்ற விமர்சனத்துடன் மீண்டும் வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றது. அதற்கு ஆகஸ்டு முதல் வாரத்திற்குள் தெளிவான அறிக்கையை முன் வைக்குமாறு நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேற்கண்ட நீதிமன்ற விசாரணைகளும், வழிகாட்டல்களும் நமக்கு ஒன்றை உறுதியாக தெளிவுப்படுத்துகிறது. அதாவது எத்தனைச் சட்டங்கள் போட்டாலும், அவற்றை செயல்படுத்தும் இடத்தில் உள்ள மனிதர்கள் அதாவது அதிகாரிகள் அந்த சட்டங்களை கிரகித்துக் கொண்டால் தான், சிரமேற்றால் தான் அமுல்படுவார்கள் என்ற உண்மை தெளிவாகிறது. சமூகத்தில் சாதி வேறுபாடுகளும், சாதி இழிவுபடுத்தல்களும் இருப்பதனால், வேலைகளிலும் சிலவற்றை இழிவானவை என்று கருதும் போக்கு உள்ளது. உயிருக்கு ஆபத்தான, பாதுகாப்பு இல்லாத வேலைகளை சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு ஒதுக்கும் போக்கும் நிலவுகிறது. அதனால் அத்தகைய தொழிலாளர்கள் மீது, ஆதிக்க மனோபாவம் கொண்ட அதிகாரிகளுக்கு அக்கறை இருப்பதில்லை. இத்தகைய பொறுப்பற்ற அதிகாரிகளின் போக்கை, சாதி மனோபாவமாக பார்த்து அதன் மீது அல்லது அவர்கள் மீது தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்தகைய அதிகாரிகள் செய்கின்ற தவறுகள் அப்பாவி தொழிலாளர் உயிரை மட்டும் பறிக்கவில்லை; நீதிமன்ற அவமதிப்பு மட்டும் செய்யவில்லை; சமூக ரீதியான வன்முறையாகவும் காணப்பட வேண்டும். ஆகவே அவை தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கையை கோரி நிற்கிறது.