Monday, July 12, 2010

கோரக் கொலைக்கு கௌரவப் பெயரா?

கடந்த 2 வாரங்களாக ஊடங்களில், குடுப்பத்தாரே செய்யும் கௌரவக் கொலைகள் என்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்தியா எங்கும் இவ்வாறு கௌரவக் கொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பது தான் செய்தி. பஞ்சாப் மாநிலத்திலும், அரியானா மாநிலத்திலும், மேற்கு உத்திரபிரதேச மாநிலத்திலும் இது போன்ற கொலைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்று தெரியவருகின்றது. அப்படி நடைபெறும் பல கொலைகள் வெளி உலகத்திற்கே தெரியாமல் போய்விடுகின்றது. அதாவது ஊடகங்களிலும் வருவதில்லை. அரசாங்கத்திற்கும் தெரிவாதில்லை. கிராமங்களில் சீக்கிய குடும்பங்களிலும், இந்து, முஸ்லிம் குடும்பங்களிலும் இது போன்ற கொலைகள் நடந்து வருகின்றன. பஞ்சாப், அரியானா, உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் மட்டுமே 900 கௌரவக் கொலைகள் நடந்துள்ளதாகவும், மீதமுள்ள இந்தியா முழுமையும் 200 கொலைகள் வரை நடந்துள்ளதாகவும் ஒரு அறிவிக்கை கூறுகிறது. கௌரவக் கொலைகளை நடத்தாமல், சில குடும்பங்களில் பலாத்காரத் திருமணங்களை செய்து வைக்கிறார்கள். எல்லாமே திருமண உறவுகளை ஒட்டித் தான் இத்தகைய கோரச் சம்பவங்கள் நடக்கின்றன. ஒரு பலாத்காரத் திருமணத்திற்கு சம்மதிக்காத மணப்பெண், அதையொட்டி கொலைச் செய்யப்படுகிறார். அல்லது தனது குடும்பத்தினர் ஒப்புக் கொள்ளாத ஒரு மாப்பிள்ளையை தேர்வு செய்யும் ஒரு மணப்பெண், அந்த குடும்பத்தாராலேயே கொலை செய்யப்படுகிறார். அதன் மூலம் தங்களுடைய பாரம்பரியத்தை அல்லது பாரம்பரியத்தின் கவுரவத்தை காப்பற்றியதாக அந்த குடும்பத்தினர் எண்ணுகிறார்கள். இது தான் சமூகத்தின் அவலமான ஒரு முகம்.
மேற்கண்ட செயல்களால் அல்லது பாரம்பரிய கவுரவங்களால், இளம் பெண்கள் தங்களது மனித உரிமையை இழந்து தவிக்கின்றனர். ஒரு ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையில் நடைபெறும் திருமணத்திற்கு அவர்களுடைய பெற்றோர் தான் பெறுப்பு என்பதாக ஒரு பண்பாடு இங்கே பழக்கமாக ஆகியிருக்கிறது. பழக்கம் தனில் ஒழுக்கம் இல்லையேல், கழுத்துப் போயினும் கைக்கொளல் வேண்டாம் என்ற புரட்சி கவிஞர் பாரதிதாசனுடைய சொற்கள் இங்கே எடுபடுவதில்லை. இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கை பங்காளியை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்வது என்ற நடைமுறை சில நேரங்களில் மட்டும் தான் அனுமதிக்கப்படுகிறது. நிச்சயிக்கப்படும் திருமணங்கள் என்ற நிலையிலிருந்து, பலாத்காரமான முறையில் திருமணங்களை நடத்தி வைப்பது என்ற போக்கு, அத்தகைய கிராமங்களில் நிலவிவருகிறது. திருமணம் செய்து கொள்ளும் ஆண்களிடமும், பெண்களிடமும் அவர்களது ஒப்புதலை பெறுவது என்பது பழங்காலத்தில் சுத்தமாக இல்லாமல் இருந்தது. நிகழ்காலத்தில் அதுவே ஒப்புக்காக செய்யப்படுகின்றது.
இதுவரை நடந்து வந்த இத்தகைய இழிவான கொலைகள் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன் பிறகு திடீரென விழித்துக் கொண்டது போல, மத்திய அரசு போசத்தொடங்கியுள்ளது. எல்லா பிரச்சனைகளையும் ஒப்படைத்தது போல, இந்த பிரச்சனைக்கும் ஒரு அமைச்சக குழுவிடம் ஒப்படைப்பது என்று மத்திய அரசு கூறுகிறது. இதற்காக ஒரு சிறப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் மத்திய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. காவலில் அடைக்கப்படும் குழந்தைகள், திருமணம், தத்து எடுத்தல் போன்ற பிரச்சனைகளின் மீது இரண்டு சட்ட நிபுணர்கள் கொடுத்த அறிக்கைதான், மேலே குறிப்பிட்ட செய்தியான ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 1000 கோரக் கொலைகள், கௌரவத்தின் பெயரால் நடத்தப்படுகின்றன என்ற உண்மையை வெளியே கொண்டுவந்தது.
இந்திய தண்டனைச் சட்டத்தில் மேற்கண்ட கொலைகளை, கௌரவக் கொலைகள் என்று விளக்கி ஒரு சட்டத்திருத்தத்தை கொண்டு வருவதற்காக மத்திய அரசு முயற்சிக்கிறது. இது மிகவும் கொடூரமான குற்றம் என்று வர்ணிக்கப்படுகிறது. இத்தகைய குற்றத்தை செய்வதற்கு தளமாக இருக்கின்ற சாதி மற்றும் மத பஞ்சாயத்துகளையும் கடுமையாக தண்டிக்கவேண்டும் என்பதற்காக மேற்கண்ட சட்டத்திருத்தம் வழிவகை செய்யும். சமீபத்தில் லண்டனில் நடந்த அனைத்து நாட்டு சட்ட நிபுணர்களும் ஒரு மாநாட்டில் இத்தகைய பிரச்சனையும் விவாதிக்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டில் இது போன்ற பலாத்கார திருமணங்களை தடை செய்ய 2007ம் ஆண்டிலேயே ஒரு குடியுரிமை பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக அப்போது தெரியவந்தது.
தமிழ்நாட்டிலும் இது போன்ற போலி கௌரவக் கொலைகள் நடந்துள்ளன என்ற செய்தி ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் வந்துகொண்டிருக்கிறது. அதைப்பற்றி ஊடகங்களும் தலையங்கங்கள் எழுதி வருகின்றன. அவற்றில் காதலை எதிர்க்கின்ற பெற்றோர்கள் பற்றியும், போலி கௌரவத்திற்காக கொலைகள் செய்வது பற்றியும் விலாவாரியாக எழுதுகிறார்கள். அதேசமயம் ஒரு ஊடகத்தில் கௌரவக் கொலை இங்கு வேண்டாம் என்ற தலைப்பிட்டு, அதுவே ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பம் என்று தங்களது பார்வையை எழுதியிருக்கிறார்கள். ஆனால் இத்தகைய சமூக வன்முறைகள், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய துணைக் கண்டத்தில் மாத்திரமல்ல, உலகம் எங்கிலும் இருக்கக் கூடாது என்பது தான் சரியான பார்வையாக இருக்க முடியும்.
மேற்கண்ட போலி கௌரவக் கொலைகள், சமூகத்தின் வன்முறையால் நிகழ்த்தப்படுகின்றன. அதாவது சட்டத்தின் மூலம் மட்டுமே தீர்க்கப்பட முடியாத இத்தகைய சமூகக் கேடுகள், சமூகத்தின் வன்முறைகள் என்பதாக அழைக்கப்படவேண்டும். சாதி பகைமையும், சாதி இழிவுபடுத்தலும், பெண்களை இரண்டாம்தர குடிமக்களாக காண்பதும், சமூகத்தின் வன்முறைகள் என்பதாக காணப்படவேண்டும். அப்படிப்பட்ட ஒரு சமூக வன்முறைதான், குடும்பம் என்ற கட்டமைப்பின் மூலம், பலாத்கார திருமணங்களையும், போலி கௌரவக் கொலைகளையும் செய்து வைக்கிறது. ஆகவே இத்தகைய இழி செயல்களை நிறுத்துவதற்கு, சமூகத்தின் பார்வை மாற்றப்படவேண்டும்.
எப்படியும் இது போன்ற போலி கௌரவக் கொலைகள் அல்லது பலாக்காரமாக நடத்தப்படும் திருமணங்கள் அதிகமாக அல்லது முழுமையாக பெண்களை தான் பலியாடுகளாக ஆக்குகின்றன. அதனால் இவை எல்லாமே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்பது தான் அடிப்படையான உண்மை. ஆகவே சமூக வன்முறை மனப்பான்மையை, போக்குவதற்கு குறிப்பிட்ட குற்றங்களை செய்யாமல் இருக்கும் மனேபாவத்தை சமூகத்திற்கு ஏற்படுத்தவேண்டும் என்பது இது பற்றிய உடனடி புரிதலாக இருக்கலாம். ஆனால் நிலவும் சமூகங்களில், பெண்களை பற்றிய பார்வை என்பதுதான், இதற்கான அடிப்படை மனோபாவம் என்பதை நாடு உணரவேண்டும். பெண்களை பெற்றோர்களது அல்லது குடும்பத்தினரது ஒரு உடைமையாக பார்ப்பது என்பது தான் அந்த மனோபாவம். அதுவே குறிப்பிட்ட சாதியினுடைய, அல்லது மதத்தினுடைய அல்லது கிராமத்தினுடைய உடைமையாக பெண்களை காண்பது என்ற மனோபாவத்திற்கும் வழிவகை செய்கிறது. அதுதான் இத்தகைய போலி கௌரவக் கொலைகளை அங்கீகரித்து, அனுமதிக்கும் போக்கை சாதிக்கும், மதத்திற்கும், கிராமத்திற்கும் கொடுக்கிறது.
அதனால் இனி நாம் கௌரவக் கொலைகளை, கோரக் கொலைகள் என்று அழைக்கலாம். மானுடத்தின் சரிபாதியான பெண்கள் மனித உயிர்கள் என்பதையும், அவர்கள் எவருடைய உடைமையும் அல்ல என்பதையும் நாம் இந்த சமூகத்திற்கு உரைக்கும் அளவிற்கு உரத்தக்கூவுவோம்.