Monday, July 5, 2010

விடுதலை அரசியலை அழிக்க வருகிறார்கள்

அவர்கள் வருகிறார்கள். விடுதலை அரசியலை அழிக்க அவர்கள் வருகிறார்கள். ஆந்திர மாநிலத்தில் அடிலாபாத் மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அரசு அறிவித்த மாவோயிஸ்ட் தலைவரின் பெயர் விடுதலை. அதாவது அவரது கட்சிப் பெயர் ஆசாத். ஆசாத் என்றால் விடுதலை என்று உருது மொழியில் பொருள் கூறுவார்கள். அதையே இந்தி மொழியிலும் புழங்குவார்கள். கடந்த வெள்ளிக்கிழமை ஆசாத் கொல்லப்பட்டதாக அரசு கூறியது. அவர்தான் மாவோயிஸ்ட் கட்சியின் மூன்றாவது தலைவர் என்பதாகவும் அரசு கூறியது. அவர் இயற்பெயர் சருக்குரி ராஜ்குமார் என்றும் அரசு கூறியுள்ளது. 1980ம் ஆண்டு கடைசியாக அவர் வெளியே தெரிந்தார் என்றும் அரசு கூறியது. ரூ.12 லட்சம் அவர் தலைக்கு விலை வைத்தோம் என்றும், 16 வழக்குகளில் சம்மந்தப்பட்டவர் என்றும் அரசு அறிவித்தது.
ஆசாத் கொல்லப்பட்டது துப்பாக்கிச் சண்டையில் அல்ல என்று மாவோயிஸ்ட்கள் கூறினார்கள். ஆந்திராவின் புரட்சிக் கவிஞரான வரவராவ், இதுபற்றி ஒரு விளக்கமே கூறினார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாகபுரி நகரில் சிதாபார்டி என்ற சந்தைப் பகுதியில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு, ஆதிவாசிகள் தலைவர் சகாதேவுடன் ஆசாத் கைது செய்யப்பட்டார் என்கிறார் வரவராவ். சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்தார் காடுகளில் இருக்கும் தண்டகாரண்யா பகுதியில் தனது கட்சி ஊழியர்களுக்கு வகுப்பு எடுப்பதற்காக ஆசாத் செல்லயிருந்தார். அவரை அழைத்து வருவதற்காக ஆதிவாசிகள் தலைவர் சகாதேவ், சிதாபார்டி சந்தைப் பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது அவரை கைது செய்து, ஆந்திர மாநிலத்தின் அடிலாபாத் மாவட்டத்திற்கு கூட்டி வந்து மறுநாளே சுட்டுக்கொன்றிருக்கிறார்கள் என்பது தான் கவிஞர் வரவராவின் விளக்கம். கொல்லப்பட்ட ஆசாத்தின் படம் ஊடகங்களில் வெளியானது. அதில் அவர் முழுக்கைச் சட்டை அணிந்திருந்தார். தனது சட்டையை தான் அணிந்திருந்த முழுக் கால்ச் சட்டைக்குள் செருகியிருந்தார். ஒரு நடுத்தரவர்க்க அறிவுஜீவியின் தோற்றத்தில் அவரது உடல் காட்டப்பட்டுள்ளது.
பொதுவாக காவல்துறை அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் மாவோயிஸ்ட் தலைவர்கள் என்று சொன்னாலே, அதிகமான பீதி உண்டு. அதாவது ஒரு தலைவர் பிடிபட்டார் என்றால், அவர் அருகே செல்வதற்குக் கூட தனிப்பட்ட முறையில் அதிகாரிகள் அஞ்சுவார்கள். அதனால் அவர்களை சங்கிலியால் பிணைத்து அமரவைத்து, தள்ளி நின்றுக்கொண்டே விசாரிப்பார்கள். அதன் காரணமாக பிடிபட்ட நிலையில், அதே உடுப்புகளுடன் அந்த தலைவர் அடைக்கப்பட்டிருப்பார். இத்தகைய நிலைதான் ஆசாத் என்ற தலைவருக்கும் நடந்திருக்க வேண்டும். அதனால் தான் அவர் பிடிபட்ட நிலையிலேயே, அதே உடுப்புகளுடன் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். காவல்துறை கூறுவது போல, அடிலாபாத் காடுகளில் துப்பாக்கி ஏந்தி போராடும் ஆசாத்தை, எதிர்கொண்டு துப்பாக்கிச் சண்டையில் மரணமடைந்தார் என்றால், இத்தகைய உடுப்புகளுடன் இருப்பதற்கான சாத்தியப்பாடு இல்லை. ஆகவே அவர் கைது செய்யப்படும் போது,போர்க்களத்தில் துப்பாக்கி ஏந்தி நிற்கவில்லை என்பது தெளிவாகிறது. ஆகவே வரவராவின் கூற்று உண்மையெனத் தெரிகிறது.
அரசு தரப்பிலும் ஆசாத் பற்றி செய்தித் தொடர்பாளர் என்றும், அரசியல் தலைமைக்குழுவின் மூன்றாவது மட்டத்திலுள்ள தலைவர் என்றும் விளக்குகிறார்கள். அதாவது அவர் மாவோயிஸ்ட் கட்சியின் பரந்துபட்ட தொடர்புகளையும், வெளிவட்டார பணிகளையும், ஊடக தொடர்பு போன்ற வேலைகளையும் கவனித்து வந்த அறிவுஜீவி என்பது புலனாகிறது. அதாவது அரசியல்ரீதியாக மாவோயிஸ்ட் இயக்கத்தின் ஒரு முக்கியப் பிரதிநிதியாக, ஆசாத் விவரிக்கப்படுகிறார். அப்படிப்பட்ட ஒரு அறிவிஜீவி தளத்தில் பணியாற்றக்கூடிய தலைவரை கைது செய்தால், அவரை சட்டரீதியான விசாரணைக்கு உட்படுத்தல் என்ற வேலையை அரசுத்தரப்பு ஏன் செய்யவில்லை என்ற வினா எழுகிறது. காடுகளில் அல்லது மலைகளில் துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட்கள் கொல்லப்படுவது என்பது வேறு. நகரத்தில் முக்கியத்தலைவர்கள் பிடிபடும் போது, அவர்களை அரசுத்தரப்பு அராஜகமாக, சட்டவிரோதமாக படுகொலை செய்வது என்பது வேறு. 2வது வகையில் நடத்தப்பட்ட இந்த படுகொலைக்கான காரணம் என்ன என்பது ஆராயப்பட வேண்டும்.
ஆசாத்துடன் கொலை செய்யப்பட்ட இன்னொரு நபர் ஹேமசந்திர பாண்டே என்ற பத்திரிகையாளர் என்பது தெரியவந்துள்ளது. அவர் உத்ராஞ்சல் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரும் மாவோயிஸ்ட் அமைப்பில் இணைந்த அறிவுஜீவி என்பதாக அறிவிக்கப்படுகிறது. இந்த 2 அரசியல் முதிர்ச்சிப் பெற்ற அறிவுஜீவி தலைவர்களை, அரசு தெரிந்தே கொலை செய்ய வேண்டிய அவசியம் என்ன என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று. இந்த ஆண்டு மே மாதம் சமூக ஆர்வலரான சுவாமி அக்னிவேஷ், மாவோயிஸ்ட்களுக்கும், அரசுக்கும் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முயற்சிகளில் ஈடுபட்டார். அதற்காக ஆசாத் மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மத்தியில் பல கடித பரிமாற்றங்களை அக்னிவேஷ் செய்து வந்தார். பரந்துபட்ட அளவில் ஒரு போர் நிறுத்தத்தை ஏற்பாடு செய்வதற்காக, மாவோயிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, ஆசாத் மூலம் ஏற்பாடு செய்து வரும் வேளையில் இந்த படுகொலை நடத்தப்பட்டுள்ளது. இதுவே அரசு தரப்பின் சதியாக, சூழ்ச்சியாக கருதப்பட முடியும். 2010ம் ஆண்டு மே 11ம் நாள் தேதியிட்ட ஒரு கடிதத்தில் அமைச்சர் சிதம்பரம், ஜுன்1 என்பது போல, ஒரு குறிப்பிட்ட நாள் முதல் எந்தவொரு வன்முறையிலும் ஈடுபடமாட்டோம் என்று மாவோயிஸ்ட்கள் கூற வேண்டும் என எழுதியிருந்தார். அதையொட்டி மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கான அழைப்பை விடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். 72 மணி நேரம் குறிப்பிட்ட காலத்திலிருந்து மாவோயிஸ்ட்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்களா என்று அரசு கண்காணிக்கும் என்றும், அந்த நேரத்தில் அரசு தரப்பும் வன்முறையில் ஈடுபடாது என்றும் அந்த கடிதத்தில் மத்திய அமைச்சர் எழுதியிருந்தார்.
அதற்கு ஆசாத் கையெழுத்திட்ட மாவோயிஸ்ட்களின் பதில் கடிதம் மே 31ம் நாள் அனுப்பப்பட்டது. போர்நிறுத்தமும், ஒரு பக்கம் மட்டும் வன்முறையை கைவிட வேண்டும் என்று இல்லாமல், இருபுறமும் ஒரே நேரத்தில் பகையை நிறுத்திக் கொள்ளலும் நடக்குமானால், பேச்சுவார்த்தைக்கு விருப்பம் இருப்பதாக அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. அரசியல் கைதிகளை விடுதலை செய்கின்ற அணுகுமுறையில் மாவோயிஸ்ட் தலைவர்களை விடுதலை செய்யவும், போரை விரிவுபடுத்தாமல் இருக்கவும், போர் பகுதியிலிருந்து துணை ராணுவப்படையினரை திரும்பப்பெறவும் செய்யுமாறு அந்த கடிதத்தில் ஆசாத் கோரியிருந்தார். ஜுன் 18ம் நாள் இதைத் தெரிவிக்க அக்னிவேஷ் ஒரு ஊடகவியலாளர் கூட்டத்தை அழைத்திருந்தார். கடைசி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது. அதுகூட, மத்திய அரசின் நிர்ப்பந்தத்தால் நடந்ததாக தெரிகிறது. சமாதான பேச்சுவார்த்தைக்கு முழு முயற்சியில் ஈடுபட்ட ஆசாத்தை, இந்த நேரத்தில் பிடித்து கொலை செய்ய வேண்டிய நோக்கம் என்ன?
மத்திய அரசு உண்மையில் போரைத் தான் விரும்புகிறது; சமாதானத்தை அல்ல என்ற அருந்ததி ராய் போன்றவர்களின் கூற்று இப்போது உண்மையாகிறது. வழமையாக ஆதிக்கவாதிகள் ஆயுதம் தாங்கிய புரட்சியாளர்களை அழிப்பதைவிட, சமாதானம் பேசக்கூடிய புரட்சியாளர்களை அழிப்பதில் அதிக கவனமாக இருக்கிறார்கள். விடுதலை அரசியலை மேற்கூறிய அரசியல் தலைவர்கள் பேசி வருவதால், குறிப்பாக சமாதான முயற்சிகளுக்கும், அவர்கள் வித்திடுவதால், தங்கள் செல்வாக்கில் ஈர்க்கப்படும் பொதுமக்கள் இத்தகைய புரட்சிகர அரசியல் தலைவர்களின் அணுகுமுறையால், முகாம் மாறி சென்று விடுவார்கள் என்று ஆதிக்கவாதிகள் எண்ணுகிறார்கள்.
அத்தகைய எண்ணங்கள் தான் சமாதான அரசியல் தளத்தில் பணியாற்றிய, புரட்சியாளரான விடுதலைப்புலிகளின் அரசியல் அணித்தலைவர் சுப.தமிழ்செல்வனுக்கும், அடுத்த அரசியல் அணித் தலைவராக பொறுப்பெடுத்த நடேசனுக்கும், விடுதலைப்புலிகளின் சமாதான செயலகத்தின் பொறுப்பாளர் புலித்தேவனுக்கும் கிடைத்த தோட்டாக்கள் என்பதை வரலாற்றிலிருந்து நாம் நினைவுக்கொள்ள வேண்டியிருக்கிறது. நடுநிலை கருத்துள்ள பொதுமக்களும், அரசு சார்பு கருத்துள்ள மக்கள் தொகையினரும், சமாதான நடவடிக்கைகளில் இறங்கும் புரட்சிகர தலைவர்களின் சொற்களை செவிமடுத்து விடுவார்கள் என்றும், செல்வாக்கு செலுத்தப்பட்டு விடுவார்கள் என்றும், ஆதிக்கவாதிகளும், பிற்போக்குவாதிகளும் கருதுவது வரலாற்றிற்கு புதிய செய்தியல்ல. இதுதான் ஆசாத் படுகொலையிலும் நடந்திருக்கிறதா என்பதை நமக்கு மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.