Sunday, July 4, 2010

“ஐ.நா. பெண்கள்” உருவானது உலகம் புரிந்துகொள்ளுமா?

ஐ.நா. சபையின் பொது செயலாளர் பான்கிமூன், ஐ.நா.வின் 64வது பொதுச்சபை எடுத்த முடிவை பாராட்டியிருக்கிறார். ஐ.நா. சபையின் கீழ் செயல்பட்டு வந்த 4 பாலினத்திற்கான அமைப்புகளை இணைத்து, “ஐ.நா. பெண்கள்” என்று உருவாக்கியிருக்கிறார்கள். இது பாலின சமத்துவத்தின் ஐ.நா. அடையாளமாக இனி இருக்கும். இது பெண்களுக்கான அதிகார மேம்பாடுத்தலுக்காக செயல்படும். உலக பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் ஆதரவான ஒரு பெரிய முடிவை எடுத்ததற்காக, ஐ.நா. பொதுச்சபையின் உறுப்பினர் நாடுகளை, பான்கிமூன் பாராட்டியுள்ளார். எஸ்டோனியாவை சேர்ந்த டினா இன்டல்மன், டுனிசியாவைச் சேர்ந்த காசி ஜோமாவையும் குறிப்பாக பாராட்டியுள்ளார். இனி ஐ.நா. பெண்கள் பாலின சமத்துவத்தையும், வாய்ப்பு விரிவுப்படுத்தலையும், உலகம் தழுவிய பாலின பாரபட்சங்களை கையாள்வதையும் வலுப்படுத்த முயற்சிகளை செய்யும். ஐ.நா. பெண்கள் என்பது ஒரு எளிமையான உண்மையை அங்கீகரிப்பது. பெண்களுக்கான சமத்துவம் என்பது அடிப்படை மனித உரிமை மட்டுமல்ல; அது ஒரு சமூக, பொருளதார அங்கீகாரம். எங்கெல்லாம் பெண்கள் கல்வி கிடைக்கப்பெற்று, அதிகார மேம்படுதலுக்கு உட்படுகிறார்களோ, அங்கெல்லாம் பொருளாதாரம் வலுவாகவும், அதிக உற்பத்தியுடன் கூடியதாகவும் மாறும். பெண்கள் எங்கெல்லாம் முழுமையாக பிரதிநிதித்துவப்படுகிறார்களோ அங்கெல்லாம் சமூகங்கள் அதிக அமைதியுடனும், நிலையாகவும் இருக்கும். மேற்கண்டவாறு தனது பாராட்டுரையில் கூறியுள்ள பான்கிமூன், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு முடிவுகட்ட தான் முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றுவதாகவும், மூத்த பதவிகளுக்கு அதிகமான பெண்களை தான் நியமிப்பதாகவும் கூறினார்.
நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் கடந்த ஒரு வாரமாக 50 அரசாங்க பிரதிநிதிகள் அமர்ந்து தயாரித்த முயற்சி தான் இது. 2010ஆம் ஆண்டின் எகோசோக் என்ற பொருளதார மற்றும் சமூக கவுன்சிலிகளின் உயர்மட்ட பிரிவு, தனது அமைச்சக பரிசீலணையை செய்தது. அனைத்து நாட்டளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாலின சமத்துவத்திற்கான, பெண்களை அதிகார மேம்படுத்துவதற்கான இலக்குகளையும், கொள்கைகளையும் அமுல்படுத்துவது அதன் நோக்கமாக இருந்தது. இந்த ஐ.நா. பொதுச்சபை தீர்மானம் 63/311 என்பதாக பதிவானது. அதில் 90 செயல்பாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான ஒரு நிர்வாக வாரியத்தின் தலைவராக ஐ.நா. பொதுச் செயலாளர் இருப்பார். நிர்வாக வாரியத்தின் 41 உறுப்பினர்கள் இருப்பார்கள். ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து 10 பேரும், ஆசிய நாடுகளிலிருந்து 10 பேரும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து 4 பேரும், லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகளிலிருந்து 6 பேரும், மேற்கு ஐரோப்பா மற்றும் நாடுகளிலிருந்து 5 பேரும், நிதி உதவி செய்யும் நாடுகளிலிருந்து 6 பேரும் உறுப்பினர்களாக இருப்பார்கள். பெரியளவில் நிதி உதவி செய்யும் 4 நாடுகளும், 2 வளரும் நாடுகளும் கடைசி 6ல் அங்கம்பெறும். பெண்களுக்கான ஐ.நா. வின் வளர்ச்சி நிதி கலைக்கப்படும். பெண்கள் முன்னேற்றத்திற்கான அனைத்து நாட்டு ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான நிறுவனம் என்ற பொருளாதார, சமூக கவுன்சிலின் அமைப்பும் கலைக்கப்படும். அவற்றிற்கு பதில் ஒட்டுமொத்த பாலின சமத்துவத்திற்கான மற்றும் பெண்களின் அதிகார மேம்படுத்தலுக்கான பொது அடையாளம் இடம் பெறும். மேற்கண்ட தீர்மானத்தை ஐ.நா. வின் 66வது மற்றும் 67வது அமர்வுகளில், நிறுவன ஏற்பாட்டளவில் வலுப்படுத்தப்படும். 68வது அமர்வில் அதன் செயல்பாடு பரிசீலிக்கப்படும். இவை எல்லாமே பெய்ஜீங் பிரகடனம் மற்றும் 12 சிக்கலான பகுதிகளை உள்ளடக்கிய நடவடிக்கைக்கான திட்டம். ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட புதிய அடையாளத்தினை ஏற்படுத்த கடுமையாக உழைத்த, எய்ட்ஸ் இல்லாத உலகம் என்ற பெண்கள் அமைப்பு போன்றவை இதில் சில குறைகளை காண்கிறார்கள். தலைமை பிரதிநிதிகளை நியமிக்கக்கூடிய அணுகுமுறையில் வெளிப்படைத் தன்மையும், சரியான நோக்கும் இல்லை என்கிறார்கள். முக்கியமான நிதி பிரச்சனையில் உறுப்பினர் நாடுகள் மேலோட்டமாக இருந்ததாக கூறுகிறார்கள். இந்தியாவின் வெளிவிவகாரத் துறை அமைச்சகத்தின் மாநிலங்களவை அமைச்சர் பிரிநித் கவுர் இந்த முயற்சியை பாராட்டியுள்ளார்.
சாதாரண குக்கிராமத்தில் தொடங்கி, ஐ.நா. சபையின் உயர் தளம் வரை, பாலின சமத்துவம் என்பது அங்கீகரிக்கப்படாத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. அப்படிப்பட்ட சூழலில் இப்படியொரு தீர்மானத்தை, ஐ.நா. பொதுச்சபையே நிறைவேற்றி, அமுல்படுத்த முயற்சியெடுப்பது வரவேற்கத்தக்க ஒன்று.
அதே சமயம் உலகம் முழுவதும் நடந்து வரும் ஆதிக்கச்சக்திகளின் அடக்குமுறைகளை எதிர்த்து, போர்களத்தை சந்திக்கின்ற பகுதிகளில் அடக்கப்படும் சக்திகள் உரிய அங்கீகராம் பெறுகின்றன. இது பாலினச் சமத்துவம் வேண்டி நிற்கும் பெண்களுக்கும் உரித்தான ஒன்றுதான். இந்த நேரத்தில் இதே நாளையொட்டி நடந்த இன்னொரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகின்றது. தங்களுடைய இன விடுதலைக்காக போராடிவரும் ஈழத் தமிழர்களில், தங்களையே மாய்த்துக் கொண்டு எதிரிகளை சமரில் தோற்கடித்த கரும்புலிகளின் நினைவும் வருகிறது. அதில் குறிப்பாக பெண்கரும் புலிகள் நடத்திய தாக்குதல்கள் நினைவு கூறத்தக்கவை. முதல் கடல் கரும்புலிப் பெண் கேப்டனான அங்கையற்கண்ணியின் தியாகம் பெரும்பதிவை ஏற்படுத்தியுள்ளது. காங்கேசன்துறை துறைமுகத்தில் 45 அடி அழம் கொண்ட நீர் பரப்பில் இருந்த வட பகுதி சிங்கள கப்பற்படை தலைமையகத்தை தகர்த்தெறிந்த பெண்புலியின் வரலாறுதான் அது. கடல் புலிகளுக்குள் பெண், ஆண் போராளிகளிடையே நடத்தப்பட்ட போட்டியில் அங்கயற்கண்ணி முதலாவதாக வெற்றி பெற்றார். இவ்வாறு போர்களத்தில் தங்களது திறமையை காட்டிய தமிழ்ப் பெண்களின் அறுதியிடல் நமக்கெல்லாம் வழிக்காட்டியாக நிற்கிறது.
ஐ.நா. வின் தீர்மானம் மகத்தான ஒன்றாக இருந்தாலும், களத்தில் இறங்கி பாடுபடும் அல்லது போராடும் பெண்களும், பெண்கள் அமைப்புகளும் மட்டுமே அதற்கு உயிர் கொடுக்க முடியும். மேற்கண்ட உண்மைகளை இந்த உலகம் உணர்ந்துகொள்ளுமா அல்லது ஆணாதிக்க மிச்சச்சொச்சங்களுடன் இனிமேலும் அடம்பிடிக்குமா என்பதுதான் நமக்கு முன் எழுகின்ற கேள்வி.