Monday, June 28, 2010

நாம் வாழும் காலத்திலேயே தாய் மொழிக் கல்விக்கு வேலை உத்தரவாதம்

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் நிறைவு நாளில், தமிழக முதல்வர் ஒரு அறிவிப்பை அளித்துள்ளார். தாய்மொழித் தமிழில் கல்வி கற்றவர்களுக்கு, தமிழக அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க சட்டம் ஒன்று புதிதாக இயற்றப்படும் என்று அறிவித்துள்ளார். செம்மொழி மாநாடு பற்றி ஆயிரம் பாராட்டுகளும், ஆயிரம் விமர்சனங்களும், கடுமையான இடித் துரைகளும் இருக்கலாம். அத்தனையையும் தாண்டி இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடப்படும் போது, யாருமே உள்ளம் குளிராமல் இருக்க முடியாது. தமிழ்நாட்டில் தமிழ் பயிற்று மொழியை நாடிச் செல்வதற்கான சூழல், நாளுக்கு நாள் குறைந்து வந்துகொண்டிருந்தது. அத்தகைய நிலையில் இந்த அறிவிப்பு, அதன் அமுலாக்கல் தலைகீழான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை.
உலகம் முழுவதும் தாய்மொழிக் கல்வி மட்டுமே எந்த ஒரு இனத்தையும் மேம்பட வைத்துள்ளது. அதற்கு உதாரணமாக ஜப்பான், ஜெர்மன், சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து என்று நாடுகளின் பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த நாடுகளில் கல்விக்கான பயிற்று மொழியே, தாய் மொழியில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதாவது பள்ளிக் கூடங்களிலும், கல்லூரிகளிலும் இன்று அனைத்து பாடங்களையும் ஆங்கிலத்தில் கற்றுக் கொடுக்கிறார்களே, அதற்கு பதில் தாய் மொழியிலேயே அனைத்து பாடங்களும் கற்றுக் கொடுக்கப்படும். அதாவது சோசியல் சயின்ஸ் என்ற பாடத்தை முறையாக, சமூக அறிவியல் என்ற தமிழ் பேசும் மக்களுக்கு புரிகின்ற முறையில் கற்றுக் கொள்ளலாம். அது போல பிஸிக்ஸ் என்ற பாடத்தை, பௌதிகம் என்பதாகவும், கெமிஸ்டிரியை வேதியல் பாடமாகவும், மேதமெடிக்ஸ்சை கணிதமாகவும், சுவாலஜீயை விலங்கியலாகவும், பாட்டனியை தாவரயியலாகவும் கற்றுக் கொள்ளலாம். இவ்வாறு தாய்மொழியிலேயே பாடத்திட்டங்களை கற்றுக் கொள்வதால், படிக்கின்ற மாணவ, மாணவிகளுக்கு தாங்கள் வீட்டில் பேசுகின்ற மொழியிலேயே பாடங்கள் இருப்பதால் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
பழக்கத்திலும், புழக்கத்திலும் எந்த மொழியில் ஒரு மனிதன் அனுபவம் பெற்றிருக்கிறானோ, அந்த மொழியில் தான் படிக்கும் பாடம் இருக்குமானால், அது எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கும் மேலாக படித்த பாடம் தானாகவே நினைவிலும் நிற்கிறது. தாய்மொழியில் தான் அல்லது அதிகமாக புழங்கும் மொழியில் தான், ஒருவர் சிந்திக்க முடிகிறது. தனது தாய் மொழியில் பாடத்தை படிப்பவர்கள், அதே மொழியில் சிந்திக்கும் போது புதிய கருத்துக்களை உருவாக்க எளிதாகிறது. அதாவது தான் படித்த பாடத்தின் மீது, புதிய படைப்பாற்றலுடன் கூடிய கருத்துகளை ஒருவர் உருவாக்கி கொள்ள முடிகிறது. அதில் தான் எந்த ஒரு மனிதரும், அறிவுஜீவியாக மேம்பட முடிகிறது.
மேற்கண்ட அறிவியல் சிந்தனை கல்விக்கு அடிப்படையான தளமாக இருக்க வேண்டும். ஆனால் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அடிமைகளாக இருந்து விட்ட நாம், அவர்கள் நடத்தி வந்த காலனிய பண்பாட்டு சூழலில் சிக்கிக் கொண்டதால், ஆங்கில மொழியின் மீது ஒரு விதமான அடிமை புத்தியை கொண்டிருந்தோம். அதாவது அந்நியமொழியான ஆங்கிலம், நமது தாய் மொழியான தமிழை விட உயர்ந்தது என்ற மாயையில் கட்டுண்டிருந்தோம். அதனால்தான் ஆங்கிலேயன் அறிமுகப்படுத்திய உடுப்புகளையும், அலங்காரங்களையும் ஏற்றுக் கொண்டது போல, அவர்களது மொழியையும் நிபந்தனையில்லாமல் ஏற்றுக்கொண்டோம்.
1938ம் ஆண்டு தமிழ்நாட்டிற்குள் இந்தி மொழி திணிக்கப்பட்ட போது, தந்தை பெரியார் தலைமையில் அதற்கு எதிரான போராட்டம் தொடங்கியது. அதுவே 1965ம் ஆண்டு லால்பகதூர் சாஸ்திரி தலைமையிலான மத்திய அரசால் இந்தித் திணிக்கப்படும் போது, எதிர்ப்பு போராக தொடர்ந்தது. அதுவே தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கும் அடிப்படையானது. ஆனாலும் கூட இந்தி வருவது தடுக்கப்பட்ட அதே நேரம், அந்த இடத்தில் தமிழ் அரியணை ஏறவில்லை. மாறாக ஆங்கிலமே கோலோச்சியது. இந்தி என்ற வாள் தமிழின் மீது பாயமல் தடுப்பதற்கு, ஆங்கிலம் என்ற கேடயம் தேவைதானே என்ற கருத்து செல்வாக்கு செலுத்தியது. அதன் விளைவு குழந்தைகள் பள்ளிகள் முதல் உயர் கல்வி வரை, ஆங்கிலமே பயிற்று மொழியாக ஆகிவிட்டது.
நர்சரிபள்ளிகளில் நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுவது பெருமையாக பார்க்கப்பட்டது. தொழிலாளர் குடும்பங்களிலும், விவசாய குடும்பங்களிலும் உள்ள பெற்றோர்கள், தங்கள் தாய்மொழி தமிழை மறுத்துவிட்டு, தங்கள் பிள்ளைகள் ஆங்கிலத்தில் கற்க வேண்டும் என்று விரும்பினார்கள். இத்தகைய பண்பாட்டு ஆக்கிரமிப்பு தமிழ்நாடெங்கும் பரவியது. ஆங்கிலத்தில் படித்தால் மட்டுமே, பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும் என்றும் கூட, பெற்றோர்கள் சிந்திக்க தொடங்கினர்.
இந்தி படித்தால் தமிழ்நாட்டிற்கு வெளியே இந்தியா எங்கும் வேலைக்கு போகலாம் என்ற கருத்தும் தமிழ் நாட்டில் பரவத் தொடங்கியது. அதனால் இந்தி எதிர்ப்பு போராட்டம், தங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடைப்பதை கெடுத்துவிட்டது என்று தமிழ் பெற்றோர்கள் எண்ணத் தொடங்கினர். வேலையை மட்டுமே, அதன் மூலம் கிடைக்கும் சம்பளத்தை மட்டுமே தனித்து சிந்திப்பதன் மூலம், தாய் மொழியின் முக்கியத்துவத்தை அறிவியல் ரீதியில் உணராமல், உடனடி தேவைகளில் நின்று, தமிழர்கள் தங்களது சிந்தனையை கீழே இறக்கிக் கொண்டனர். இதற்கெல்லாம் காரணமாக புறநிலையில் வேலையில்லாத் திண்டாட்டம் என்ற ஒரு பூதம் தமிழ்மக்களை ஆட்டிப் படைத்தது.
இந்தியநாட்டின் பொருளாதார கொள்கைகளினால், வேலையில்லாத் திண்டாட்டம் பெருகுகிறது என்ற உண்மை நம் மக்களுக்கு உரைக்கவில்லை. அதுவே தாய் மொழியின் தேவையையும், அதையொட்டிய நீடித்த தன்மை கொண்ட வளர்ச்சியையும் நம் மக்களுக்கு தெரியவிடாமல் செய்துவிட்டது. அதனால் தமிழ்மொழி சார்ந்த தேசிய இனத்தின் முன்னேற்றம் உளவியல் ரீதியாக தடுக்கப்பட்டது.
ஆங்கிலத்தை பயிற்று மொழி ஊர்தியாக கொண்ட தனியார் கல்வி நிறுவனங்கள் லாப நோக்கங்களுக்காக செயல்படத் தொடங்கின. அதுவே கல்வியை வணிகமயமாக்கிவிட்டது. தனியார் கல்வி நிறுவனங்களை எதிர்த்த கருத்து இப்போது தான் அரசாங்கத்திற்கு முளைவிடத் தோன்றியுள்ளது. அதேபோல தாய்மொழி தமிழ் வழிக் கல்வியும் இப்போது தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தொழில் படிப்புகளில் பொறியியல் கல்லூரிகளில் தமிழ்வழி பயிற்று மொழி இப்போது தொடங்கப்படுவது போல, மருத்துவ படிப்பிலும் தொடங்கப்பட வேண்டிய தேவையுள்ளது.
தமிழ்வழி பயிற்று மொழியில் படித்தவர்களுக்கு வேலை உத்திரவாதம் இல்லை என்ற கூக்குரலை நிறுத்துவதற்கு, அரசுப் பணிகளில் தமிழ் பயிற்று மொழி படித்தவருக்கே முன்னுரிமை தரவேண்டும் என்ற கோரிக்கை நிண்ட காலமாக, தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதற்கு செவிமடுத்து இப்போது தமிழ்வழி படித்தோருக்கே, அரசுப் பணிகளில் முன்னுரிமை என்பது இப்போது அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பாராட்டத்தக்க செயலாகும். வேலைக்காக கல்வியை தேடும் இன்றைய சமூகத்தில், வேலை உத்திரவாதம் கிடைக்கும் போது மட்டுமே, தாய்மொழிக் கல்விக்கு மக்கள் திரும்பமுடியும் என்ற உண்மை இங்கே வெற்றிபெறுகிறது.
தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான விடுதலை போராட்டம் ஆயுதம் தாங்கிய கட்டத்தை எட்டியபோது தமிழர்கள் உவகை கொண்டனர். அது தோல்வியில் முட்டியபோது தமிழர்கள் துவண்டனர். அதுவே உலகம் தழுவிய அரசியல் போராட்டமாக இப்போது எழுந்து நிற்கும் போது, மாற்றார் அது கண்டு அதிர்ச்சியுறுகின்றனர். ஆறரை கோடி தமிழ்மக்கள் வாழும் தமிழ்நாட்டில், தமிழ் வழிக் கல்விக்கு அரசுப் பணியில் உத்தரவாதம் கிடைக்கும் போது, அதுவே தமிழர்களின் தனித்த அறுதியிடலை உறுதி செய்யும். இத்தகைய மகத்தான பாய்ச்சல் தமிழர் உலகிற்கு ஒரு இனிப்பு செய்தியாக பரிமாறப்படும்.