Friday, June 25, 2010

அப்சல் குருவின் உயிர் அரசியல் பேரத்திற்கு பயன்படுகிறதா?

ப.சிதம்பரத்தின் அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட
தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றத்தில் மரணதண்டனை கொடுக்கப்பட்ட அப்சல்குரு, தொடர்ந்து தனது மரணதண்டனை இழுபறியாக ஆகிக்கொண்டிருப்பதை எண்ணி வருந்தியிருப்பார். இப்போது அதற்கு முடிவு எதோ ஒரு வடிவில் வந்துவிட்டது என்றாலும் பரவாயில்லை. ஆனால் இப்போதைய உள்துறையின் அறிவுப்பும் ஒரு அரசியல் பேரம் பேச என்று தெரியும்போது அதிர்ச்சி அடைவதை தவிர வேறு என்ன செய்யமுடியும்? ஏற்கனவே இந்தியாவில் இன்னமும் முடிவெடுக்கப்படாமல் இருக்கின்ற மரணதண்டனை வழக்குகள் அதிகமாக இருந்தாலும், ஒவ்வொன்றாக உள்துறை எடுத்து ஆய்வு செய்து, தனது கருத்தை அதாவது கருணை மனுவை ஏற்று சம்பத்தப்பட்டவரை மரணதண்டனையிலிருந்து மன்னிக்கலாமா, கூடாதா என்ற ஆலோசனையை குடியரசு தலைவருக்கு கூறவேண்டிய பொறுப்பு உள்துறைக்கு இருக்கிறது. அந்த அடிப்படையில்தான் இப்போது உள்துறை அப்சல்குருவின் வழக்கில் மன்னிப்பு கொடுப்பதை எதிர்த்த கருத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பி உள்ளது. இதுபற்றிய சர்ச்சைகளுக்கு செல்வதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட வழக்கு பற்றிய சில விவரங்களை நாம் கவனமாக பார்க்கவேண்டியுள்ளது. அதேசமயம் இந்த அப்சல்குருவின் வழக்கோடு இணைத்து பார்க்கப்படும் சரப்ஜித்சிங்கின் வழக்கையும் ஆராய்ந்து பார்ப்பது நல்லது. ஏனென்றால் இதில் ஒருவர் இந்திய சிறையிலும், மற்றொருவர் பாகிஸ்தான் சிறையிலும், மரண தண்டனை கைதிகளாக இருக்கின்றனர். இருவருமே அந்தந்த அரசாங்கங்களின் கருணையை எதிர்பார்த்து இருப்பவர்கள். இரண்டுபேருடைய கருணை மனுக்கள் மீதும், இரண்டு நாட்டு அரசாங்கங்களும், அரசியல் கட்சிகளும் அதிக கவனம் செலுத்துவதிலும் அதேசமயம் மாறி, மாறி, வக்காலத்து வாங்குவதாகவும் இருக்கிறார்கள். ஆகவேதான் இந்த வழக்கின் நியாயங்களை ஆழமாக நாம் பார்க்கும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி உள்ளோம்.
இந்திய நாடாளுமன்றம் மீதான 2001 ஆம் ஆண்டு டிசம்பர்-13 ஆம் நாள், நடத்தப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதல்,இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த தாக்குதலில் ஒன்பது பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த தாக்குதல் நடந்ததை நாம் அனைவரும் காட்சி ஊடகங்களில் கண்டு அன்றே அதிர்ந்து போனோம். அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடனடியாக நாடாளுமன்ற வளாகத்தை சுற்றி வந்ததையும் காட்சி ஊடகங்களில் கண்டது இன்று போல கண் முன்னே வரும் காட்சிகள். ஆனால் அதில் அப்போது நமக்கு சொல்லப்பட்டதும், நாம் நேரில் கண்டதும் அல்லது காட்டப்பட்டதும், ஐந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒன்பது பாதுகாப்பு படையினர் மரணமடைந்தார்கள் என்பதுதான். அவர்கள் காஷ்மீர் விடுதலைக்காக போராடும் லஷ்கர்-ஈ-தொய்பா, ஜெய்-ஷெ--முகமது ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்பதாக நமக்கு நமது அரசு கூறியது. அப்போதே நமக்கு சில சந்தேகங்கள் எழுந்தன. அதாவது நாடாளுமன்றம் நடந்துகொண்டிருக்கும்போதே அந்த கட்டிடத்திற்கு வந்து, ஒரு தாக்குதலை எப்படி பயங்கரவாதிகள் நிகழ்த்த முடியும் என்ற சந்தேகம் நமக்கு எழுந்தது. அதற்கு நமது அரசு விளக்கம் கொடுத்தது. அதாவது பயங்கரவாதிகள் தைகளை இந்திய ராணுவத்தினர் போல வேடம் போட்டுக்கொண்டு உள்ளே வந்துவிட்டனர் என்றனர். அது எப்படி சாத்தியம் எனக்கேட்டதற்கு, பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ள துணை ராணுவப்படையினர் வேடத்தில், அவர்களது அடையாள அட்டைகளை போலாக வைத்துக்கொண்டு, வாகனத்தில் உள்ளே நுழைந்துவிட்டனர் என்று அரசு விளக்கம் அளித்தது.அப்படியானால் அவ்வாறு அவர்களை உள்ளே விட்ட காவலர்களுக்கு, அதை கண்காணிக்க தவறிய அதிகாரிகளுக்கு என்ன தண்டனை? அவர்கள் எல்லாம் பயங்கரவாத தாக்குதல் மீதான குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படவில்லையே ஏன்? என்று யாரும் கேட்கவில்லை.
தாக்குதல் நடந்த பிறகு, முதல் குற்றப்பத்திரிகையில், பன்னிரண்டு பேர் சேர்க்கப்பட்டனர். அதில் மூன்று பேர் பாகிஸ்தான்காரர்கள். அவர்கள் மசூதுஅசார்,தாரிக்அகமது, காசிபபா,எனப்படுபவர்கள். அவர்கள்தான் மூளையாக செயல்பட்டவர்கள் என்று அரசு கூறியது.அப்படியானால் அவர்கள் மூவரும் இதுவரை கைதும் செய்யப்படவில்லை; விசாரிக்கப்படவும் இல்லை. அவர்களை பாகிஸ்தான் அரசு எப்போதாவது கைதிகள் பரிமாற்றம் என்ற ஒப்பந்தப்படி இந்தியாவிடம் ஒப்படைத்தால், நிச்சயமாக அவர்களுக்கு மரணதண்டனை கொடுக்ககூடாது என்ற உத்திரவாதத்தின் அடிப்படையில்தான் அது நடக்கும். அதாவது அவர்களுக்கு, பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர்களுக்கு எந்த காலத்திலும் மரண தண்டனை கிடைக்காது. ஆனால் தாக்குதலில் நேரடியாக சம்பத்தப்படாத, மேலும் உச்சநீதி மன்றத்திலாயே நேரடி சாட்சி இல்லை என்று அறிவிக்கப்பட்ட அப்சல்குருவிற்கு இங்கே மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பதே கவனிக்கத்தக்கது. இதுதான் இந்தியாவின், மற்றும் இந்திய நீதிமன்றத்தின் நிலைமையாக இருக்கிறது.கிலானி, அப்சல், சௌகத் ஆகியோர் மூவருக்கும் முதலில் மரண தண்டனை கொடுக்கப்பட்டது. சௌகத்தின் மனைவி அப்சன்குரு குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டு அவருக்கு பத்து ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் பிறகு கிலானி, அப்சன்குரு ஆகியோருக்கு உயர்நீதி மன்றம் விடுதலை கொடுத்துவிட்டது. அதனால் கிலானி, டில்லி பல்கலைகழகத்தில் பேராசிரியராக இப்போது பணியாற்றுகிறார். உச்சநீதி மன்றத்தில் சௌகத்தின் மரணதண்டனை குறைக்கப்பட்டு அவருக்கு பத்தாண்டு தண்டனை வழங்கப்பட்டது. இவர்களது வழக்கில், நந்திதா ஹக்சர் வழக்கறிங்கராக செயல்பட்டார். அவர் முன்னாள் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பத்தாண்டிற்கு மேல் செயலாளராக பணியாற்றிய ஹக்சரின் மகள். அவர் ஒரு மனித உரிமை ஆர்வலர். அதற்காகவே வழக்கறிஞர் படிப்பு படித்தார். அதற்கு முன்பு தொழிற்சங்க பணிகளை செய்து வந்தார். அந்த நந்திதா ஹக்சர் இப்போது அப்சல்குருவின் கருணை மனுக்காக அதிகமாக போராடி வருகிறார். அவர் இந்த சிதம்பரத்தின் பச்சைக்கொடி இந்திய ஜனநாயகத்திர்க்கே ஒரு கருப்பு புள்ளி எனக்குறிப்பிடுகிறார். மூன்று வகைகளில் இந்த தீர்ப்பு தவறானது என்கிறார். முதலில் அப்சல் தாக்குதலில் சம்பந்தப்பட்டதர்க்கு எந்த நேரடி சாட்சியமும் இல்லை என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது என்பதை சுட்டி காட்டுகிறார். இரண்டாவது, முதலில் அவர்கள் மீது போடப்பட்ட பொடா வழக்கு உச்சநீதிமன்றம் சென்றபோது தோற்றுபோய்விட்டது. பொடாவிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். அதாவது எந்த ஒரு பயங்கரவாத அமைப்பையோ, அல்லது குழுவையோ சேர்ந்தவர் அல்ல என்று அவரை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மூன்றாவதாக, அப்சல்குருவிற்கு ஒரு நியாயமான விசாரணை நடத்தப்படவில்லை. இவ்வாறு நந்திதா கூறுகிறார்.இதற்கிடையில் அதிக பாதுகாப்பு உள்ள திஹார் சிறையில் அப்சல் வைக்கப்பட்டுள்ளார்.
வழக்கறிஞர் பன்சோலி இதுபற்றி கூறும்போது, விசாரணை காலத்தில் எந்த ஒரு வழக்கறிஞரின் உதவியும் அப்சல்குருவிற்கு கொடுக்கப்படவில்லை எனக்கூறுகிறார். அவர் கேட்ட வழக்கறிஞர்களை கொடுக்காமல், நீதிமன்றமே கொடுத்த வழக்கறிஞர்களும் சிலர் பின்வாங்கிக்கொண்டனர் என்கிறார். பிராகி கடைசிவரை இருந்த வழக்கறிஞரும் எதுவும் தெரியாதவர் என்றார். சாட்சிகளை அப்சல்குருவே விசாரிக்கட்டும் என நீதிமன்றம் கூறிவிட்டது; இதுவே அனுபவமற்ற அப்சளால் செய்யமுடியாத பணி என்கிறார் அவர். தவிர உச்சநீதிமன்றமும், மற்ற நீதிமன்றங்களும் அப்சலின் கைது பற்றி காவல்துறை கொடுத்த நாளும், நேரமும் தவறானவை என்பதை கூறிவிட்டன என்றார். ஆனாலும் அவருக்கு மரணதண்டனை கொடுத்த காரணமும் வேடிக்கையாகவே உள்ளது. நாடாளுமன்றம் தாக்கப்பட்டது ஒரு பயங்கரமான நாட்டை முழுவதும் உலுக்கக்கூடிய சம்பவம் என்பதாலும், இந்திய மக்களின் கூட்டு மனச்சாட்சி திருப்தி அடைய வேண்டுமானால் அந்த சம்பவத்திற்காக அவருக்கு மரண தண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் நீதிபதி கூறியிருப்பதுதான் இதில் முக்கிய செய்தி. மேலும் வழக்கறிஞர் பன்சோலி, அமெரிக்காவை உதாரணம் காட்டுகிறார். அங்கே நடந்த பெரிய பயங்கரவாத தாக்குதலான 9 /11 வழக்கில், நேரடியாக ஈடுபடாத சகாரியா மௌவிக்கு ஆயுள் தண்டனை தான் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல மகாத்மா காந்தியை கொன்ற வழக்கில், நாதுராம் கோட்சேக்கு மரண தண்டனை வழங்கப்பட்டபோது, அந்த தாக்குதலில் நேரடியாக ஈடுபடாத அவரது சஹோதரருக்கு ஆயுள் தண்டனை தான் வழங்கப்பட்டது என்கிறார். இந்த வழக்கில் மட்டும் ஏன் மரண தண்டனை? என்று கேள்வி எழுப்புகிறார். இந்த வழக்கு பாகிஸ்தான் அரசிடம் மரண தண்டனைக்கான கருணை மனுவுடன் போராடும் சரப்ஜித் சிங் வழக்குடன் இணைத்து பேசப்படுகிறது. இங்கே அப்சலுக்கு தூக்கு என்றால், அங்கே சரப்ஜித்திற்கு தூக்கு என்பதாக பேசப்படுகிறது.
1990 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள லாகூரிலும்,முல்டனிலும் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதில் பதினாலு பேர் மாண்டனர்.அந்த ஆண்டிலேயே ஆகஸ்டு மாதம், பாகிஸ்தான்---இந்திய எல்லையில் கடக்கும்போது சரப்ஜித் கையும், களவுமாக பிடிபட்டார் என்கிறது பாகிஸ்தான் அரசு.அவர் இந்திய வெளிவிவகார துறையின் உளவுப்பிரிவான ரா அமைப்பை சேர்ந்தவர் என்கிறது அவர் அந்த குண்டு வெடிப்பில் தொடர்பு உள்ளவர் என்கிறது பாக் அரசு.பாகிஸ்தான். 1991 ஆம் ஆண்டு சரப்ஜித்திற்கு பாக் நீதிமன்றம் மரணதண்டனை கொடுத்துள்ளதுஅவரோ பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமமான பிகிவிண்டை சேர்ந்தவர் என்று அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள். அவரது மனைவி சுக்ப்ரிட்கவுர், மற்றும் அவரது மகள்களான ஸ்வபன் தீப், பூனம் கவுர் ஆகியோர் அவருக்காக இப்போது அலைந்து திரிகிறார்கள். அவர் 19 ஆண்டுகள் பாகிஸ்தானில் தனிமை சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்காக சரியான வழக்கறிஞர்களை அங்கேயும் கொடுக்க வில்லை. இப்போது சரப்ஜ்த்திர்க்காக ஒரு மனித உரிமை வழக்கறிஞரான ஷேக் இறங்கியுள்ளார். முதலில் சர்ப்ஜித்திர்க்காக கொடுக்கப்பட்ட கருணை மனுவை, அதிபர் முஷாரப் நிராகரித்துவிட்டார். இப்போது வழக்கறிஞர் ஷேக் புதிய கருணை மனுவை, அதிபர் அன்சாரியிடம் கொடுத்துள்ளார். இதற்கிடையில் சரப்ஜித் பாக்கில் உள்ள கோட்லாக்பட் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இப்படி சூழலில்தான் இங்கே உள்ள அப்சலும், அங்கே உள்ள சரப்ஜித்தும் இருவருமே இந்திய குடிமக்கள் என்றும், அகவே இருவரும் விடுவிக்கப்படவேண்டும் எனவும் காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த மகபூப் எம்.பீ. கூறுகிறார். அதேபோல காஷ்மீரின் முன்னாள் முதல்வரான குலாம் நபி அசாத்தும், அப்சல் மரண தண்டனையிலிருந்து குறைக்கப்பட வேண்டும் என்கிறார்.அருந்ததிராய், பிரபுல் பிட்வாய் போன்ற எழுத்தாளர்களும் மரண தண்டனை கூடாது என்கிறார்கள். இதற்கிடையே சிதம்பரம் கூறியுள்ள முடிவு யோசிக்க வைக்கிறது.
நேற்று இந்திய வெளிவிவகார துறையின் செயலாளர் நிருபமா ராவ் பாகிஸ்தான் சென்று தனக்கு ஒப்ப உள்ள அதிகாரிகளை சந்தித்துள்ளார். உள்துறை அமைச்சர் சிதம்பரம் பாகிஸ்தான் செல்ல இருக்கிறார். ஏற்கனவே சரப்ஜித்சிங்கை மரணதண்டனையிலிருந்து காப்பாற்ற 2005 ஆம் ஆண்டே இந்தியா வெளிவிவகாரத்துறை அமைச்சராக இருந்த நட்வர்சிங்கு பாக் சென்று பேசினார். இப்போதும் இதுபோன்ற சில அரசியல் பேரம் பேச இந்த மரண தண்டனைகளை இரு அரசுகளுமே பயன்படுத்துவதாக தெரிகிறது. அப்படியானால் இது மிகவும் வெட்கம் கேட்ட செயல் என்பதை எப்படி சொல்லாமல் இருக்க முடியும்?

நடைப்பயிற்ச்சியில்......

அன்றாடம் நடப்பதுதானே.
இது நடைப்பது தானே
ஒரு நாள் வந்தாள்.
ஆர்வம் என்ன?
தெரியாத நேரம்.
நடந்து முடித்து....?
கேள்வியே நின்றது.
இங்கேதான் நிதானிப்பா?
இடம் எது என கேட்கவா?
அர்த்தம் அன்றைய நிலையில்
விளங்கவில்லை.
இப்போதுமட்டும்?

உயரமானது எல்லாம் அதிகாரமா?

உயரமில்லை என்கிறாயா?
உயரம் குறைந்தால் குறையா?
கூடைப்பந்து விளையாட
உயரமானவர் பயன்படலாம்.
கால்பந்து விளையாட
குள்ளம் அதிக லாபம்.
அது தரையை நெருங்கி
பார்க்க..............
விரைவையும், ஓட்டத்தையும்
வரிசைப்படுத்த ..........
அதன்மூலம் வெற்றியை தேட,
கால்பந்துக்கு குள்ளம் தேவை.
இது கால்பந்து விளையாட்டு காலம்.
அதனால் நீ தான் சிறந்து நிற்கிறாய்.
அவ்வப்போது உதை வாங்கியதாலோ,
என்னவோ
உன்னை கால்பந்து வீராங்கனையாக
வரிந்துகொண்டு பார்த்தேன்.....
அதில் நீ மட்டுமே நின்றாய்.
நானல்ல. நிச்சயமாக நானல்ல.