Wednesday, June 23, 2010

இனியவை நாற்பது புறப்பட்டது,

இனியவை நாற்பது புறப்பட்டது,
இன்னா நாற்பது மறைந்திடுமா?
உலகத்தமிழர் எதிர்பார்ப்பான,
ஈழத்தமிழர் விடுதலைப்படை
இன்னல்களை சந்தித்தது.
இடரில் சிக்கியது.
இரத்தம் சிந்தியது.
இரக்கம் இல்லா உலகம்
வேடிக்கை பார்த்தது
இந்த புண்ணை மறைக்க,
இறந்துபட்ட உறவுகளை
மறக்க, தந்திரங்கள்
பலவும் பலிக்காத சூழலில்,
உலகத்தமிழ் செம்மொழி
மாநாடு. புண்ணுக்கு களிம்பு.
அரிப்புக்கு சொரிதல்.
கேதத்தில் கேளிக்கை.
சாவில் சரசம்
அடுத்தவர் ரத்தத்தில்
குடும்ப விழா.
இன அழிப்பில் ஒரு உற்சாகம்.
முதல்நாளே, ஊர்வலம்
இனியவை நாற்பது அதன்பெயர்.
இது எந்த இன்னா நாற்பதை
மறைக்க?
இன்னா நாற்பது என்றால் என்னா?
கண்ணகி கோவிலை,
முள்ளிவாய்க்காலில் மூடசெய்த
முள்கள் இங்கே கண்ணகி சிலையை
ஊர்வலமாக, ஓவியமாக, விளம்பரம்
செய்வது இன்னா நாற்பதில் வருமா?
யாழ் நூல்நிலையம் எரிக்கப்பட்டதை
மறக்க இங்கே திருக்குறள் தந்தவர் சிலையை
இலட்சினையாக, ஊர்வலத்தில், எடுப்பதுதான்
இன்னா நாற்பதில் வருமா?
ஒன்பது கிலோமீட்டர் தூர ஊர்வலம்
புறநானூறு காட்சிகள் அலங்காரமாக,
வன்னி போரின் காட்சிகளை மறைக்கவா?
அதுதான் இன்னா நாற்பதா?
40 அலங்கார வண்டிகள்
ஒவ்வொன்றும் பண்டை
தமிழர் வரலாறு சித்தரிப்பு.
எங்கே போனது ஈழத்தமிழர்
போர் வரலாறு?
தமழர் பண்பாட்டை விளக்கும்
காட்சிகளில், புலிகளின் போரால்
பெண்கள் சமத்துவம் சாதிக்கப்பட்டது,
இடம்பெறாதா? நிகழ்கால வரலாற்றை
மறைத்து, புறநானூறு பேசுவதுதான்
செம்மொழியின் சிறப்பா?,
கோவையில் மாநாடு; சென்னையில்
தமிழ் வழக்கறிஞர்கள் தமிழ் வழக்காடு
மொழியாக்க கருப்புக்கொடி போராட்டம்.
எது தமிழுக்கு பெருமை?
தமிழில் வாதாட, சாதா தமிழன்
புரிந்துகொள்ள ஒரு கையெழுத்து
போடாத குடியரசு தலைவர் கொடியசைத்து
தமிழுக்கு கோவையில் விழா எடுப்பார்.
இதுதான் தமிழுக்கு பெருமையா?
பேரணி அலங்கார வண்டியில்
போர்முழக்கம் செய்யும் தமிழர்
எங்களுக்கு ஈழப்போரை நினைவுபடுத்த,
உங்களுக்கு எந்த போரை எடுத்துசொன்னது?
குறிஞ்சி,முல்லை,பாலை,நெய்தல்,மருதம் காட்சிகள்
எங்களுக்கு ஐவகை திணைகளை மட்டக்களப்பிலும்,
முல்லைத்தீவிலும், கிளிநொச்சியிலும், யாழ்பாணத்திலும்,
மன்னாரிலும், திரிகோணமலையிலும் தேடதோன்றியது
மயிலுக்கு போர்வை வழங்கிய பேகன் வருகிறான்.
எங்களுக்கு ஈழப்போருக்கு எம்.ஜி.ஆர்.
கொடுத்த கொடைதான் நினைவுக்கு வந்தது.
பேரணியை பார்த்து மனம் மகிழும்
பேராளர்கள் என்று கலைஞர் டி.வீ.யில்
வருவதில் பெருமைப்படும் பெயர் ஆளர்கள்.
குடியரசு தின ஊர்வலம் போல,
வாங்கிய காசுக்கு ஆடிவரும்
அற்புத தமிழர்கள். பீளமேட்டை
கடப்பதில் பெருமைப்படும்
தமிழர்களே, கிளிநொச்சியை கடந்ததில்
பெருமைப்பட்ட சிங்களப்படை போல
ஆகினீரோ? கரகாட்டம், ஒயிலாட்டம்
தமிழனுக்கு இன்று தேவையா?
ஆடிய கரங்களும், கால்களும்,
முள்வேலி பின்னாலே நின்று
பார்க்குதடா
பாரதி உருவம் பூண்ட தமிழரை
காட்டும் பேரணியே, பாரதி உங்களை
மன்னிப்பானா? தப்பாட்டம் காட்டும் தமிழா,
நீ ஆடுவது தப்பான ஆட்டம் என
உனக்கு தெரியவில்லையா?
தமிழனுக்கு இழுக்கில்லையா?
தமிழகத்துக்கு இழிவில்லையா?
பாஞ்சாலி சபதம் பேசும் காட்சிகள்
பாஞ்சாலியாய் எம் தமிழ் பெண்கள்
வடக்கிலும், கிழக்கிலும்,இலங்கையில்
அவதிப்படுவதுதான் இன்னா நாற்பதா?
சிலம்பாட்டம், மற்போர் என ஊர்வல
காட்சிகள் காட்டுகிறீரே, அதையும் தாண்டி
கரும்புலி, கடல்புலி, வான்புலி, காட்டிய
தமிழரை மறந்தததுதான் இன்னா நாற்பதோ?
சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம் எல்லாம்
பேரணியில் காட்சிகள் ஆகினவே?
உண்மையில் அந்த காட்சிகளை தந்திட்ட
தலைவன் கேட்டிருக்கவேண்டும் இந்த
கொடுமையை.....துவக்குதான் பேசியிருக்கும்.