Monday, June 21, 2010

தூக்கில் தொங்கினான் தமிழன்

ஓவியனாய் ஆகா விரும்பினான் .
சிற்பங்கள் செய்ய படிக்க
வந்தான். அது ஓவியக்கல்லூரி
கிராமத்தில் பிறந்து நகரம்
வந்தவன். பிறந்த இடத்தில்
சாதி துரத்தியது. ஓடிவந்த
சென்னையில் ஓவியக்கல்லூரி.
ஓவியத்தில், சிற்பத்தில்
சாதி கிடையாது. நம்பிக்கையில்
தம்பி உள்ளே நுழைந்தான்.
ஓவியத்துக்கு உயிர் உண்டு
சிற்பத்திற்கு உயிர் உண்டா?
உண்டு உண்டு என்று சொன்னோம்
அதனால்தான் இங்கும் சாதி வந்ததா?
உயிர் இருந்தால் சாதி வந்திடுமா?
சசிகுமார் இளைஞன் தானே?
சாதி எதில் இருக்கும்?
எதை கண்டான் அவன்.
முதல்வர் வந்தார்.
ஓவியம் அவருக்கு தெரியாது.
சிற்பமோ அவருக்கு புரியாது.
பின் எப்படி முதல்வர்?
சசிக்கு தெரியவில்லை.
முதல்வருக்கு போதை
இருந்தது. சாதியும் போதையில்
கலந்தது சசிக்கு தெரியாது
தமிழ் பற்று சசிக்கு.
யாழ் நூலகம் எரிந்தது கேட்டு
வயிறு எரிந்தான் சசி.
தமிழ் நூல்களை எரியாமல்
பாதுகாக்க என்ன செய்யலாம்?
சசிக்கு தெரிந்தது சிற்பம்தான்.
சுட்ட மண்ணை எரிக்க முடியாதே.
திருக்குறளை எரிக்காமல் காக்க
களிமண்ணில் வடிவமைத்து
சுட்டால் குறள் பிழைக்கும்.
சசி இப்படி சிந்தித்தான்.
களி எடுத்தான்.குறள் வடித்தான்.
ஒன்று,இரண்டு, மூன்று.நான்கு
எண்ணி செய்தான். ஒரு குறளை
விடக்கூடாது.என. களி வாங்க காசு இல்லை.
முதல்வர் மனோகர் வாக்கு தந்தார்.
மனோகரை வாயார புகழ்ந்தான்.
போதையில் மனோகரன் சொன்னதை
மறந்தார். களி வந்து ஊர்தியில் இறங்க
மனோகர் காசு தர மறுத்தார்.
கலங்கி போனான் சசி. மனோகர்
கார் கூட தடையாய் தெரிந்தது.
உடைத்தான் கண்ணாடி நொறுங்கியது.
பழி வாங்கியது மனோகர் கும்பல்.
பாதிக்கப்பட்டோர் தலித் மாணவர்.
விடவில்லை தனது லட்சியத்தை
சசி தொடர்ந்து முயன்றான்.
குறள்களை களியில் செய்து முடித்தான்.
1330 குறள்களும் தயார் ஆகின.
சுடுவதற்கு காசு இல்லை.
சுட்டு முடித்தால் செம்மொழி
ஆகும். சுட்ட தமிழ்தானே
உண்மை செம்மொழி.
சசி கையில் மட்டும் உண்மை
செம்மொழி. மாநாடு அதை
அலட்சியப்படுத்தியது. சசிக்கு
அவர்தம் கலைக்கு, அவர் தரும்
திருக்குறளுக்கு மரியாதை தர
செம்மொழி மாநாட்டுக்கு விருப்பமில்லை.
மாநாட்டு மன்னருக்கு பரிவட்டம் கட்டும்
ஐ.ஏ.எஸ். ஒரு அரசவை கவிஞர்.
அவர்தான் சசி துறைக்கும் பெரியதிகாரி.
அந்த இறையை பகைக்கலாமா?
பகைக்கப்பட்ட முதல்வரோ
சாதி தமிழர். சசி என்ன ஆதிதமிழர்தானே?
செம்மொழி மாநாடு தொடக்கம் நெருங்க
சசி எனும் இளைஞன் நொறுங்கிப்போனான்
அதனால்தானே கல்லூரி சென்று அந்த மரத்தை
தேர்வு செய்தான். தூக்கு கயிறு வலிக்கவில்லை.
அவன் பிணம் சுமக்கும் தமிழ்நாட்டிற்கு இப்போது
வலிக்கவில்லை. தமிழ்நாடு விழா காண்கிறது.
வாறன் அண்டர்சன் நேரடி கொலை செய்யவில்லை.
பல்லாயிரம் சாவுக்கு காரணமானான். அதுவும்
கொலைதானே. உலகம் கூறியது.
இந்த சசியின் மரணம் சொல்வது என்ன?
செம்மொழி மாநாடு பெருவிழாச்சத்தம்
காதை அடைக்குது. சசி சாவு கேட்கவில்லை.