Thursday, June 17, 2010

மௌனித்ததை மரணித்ததாக எண்ணி, ஆவி அரசியல் செய்யும் சூன்யங்கள்

உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர் களுக்கு ஈர்ப்பு மையமாக இன்று வரை இருப்பது ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம். உலகமெங்கிலும் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்து வந்தாலும், இலங்கையிலும், இந்தியாவிலும் வாழுகின்ற தமிழர்கள் தான் அடிப்படையில் தேசிய இனத்திற்கான அடையாளங்களை அறுதியிடுகிறார்கள். என்ற கருத்து ஏற்கனவே இருக்கிறது. அதிலும் இந்தியாவில், தமிழ் நாட்டில் வாழுகின்ற தமிழர்கள் தங்களது உற்பத்தி முறையில், இந்திய துணைக் கண்டத்தில் நிலவுகின்ற பொருளா தாரத்துடன் இணைந்த வாழ்க்கையை நடத்தி வருவதால், ஒரு தேசிய இனத்தின் சிறப்பு அறுதியிடல் பலவீனப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கேற்றார்போல், பயிற்றுமொழிக் கல்வியும், அதற்கான பணிவாய்ப்பும் தாய் மொழி சார்ந்து நிலைநிறுத்துவதில் இன்னமும் வெற்றி பெறாத நிலைமை தொடர்கிறது.
அதே சமயம் இலங்கையில் இருக்கும் ஈழத் தமிழர்களின் நிலைமை வேறுபட்டு நிற்கிறது. தமிழர் தாயகமாக நிலவும் பகுதிகள், சுயமான பொருளாதார, பண்பாட்டு, அரசியல், எல்லைகள் ஆகியவற்றுடன் உறுதியான அடித்தளத்தை அங்கே வைத்துக்கொண்டுள்ளன. அதுவே அறவழி அரசியல் போராட்டமாகவும், அதன் பிறகு ஆயுதப் போராட்ட மாகவும் வளர்ந்தன. 60 ஆண்டுகளாக நடந்து வரும் அரசியல் போராட்டம், 30 ஆண்டுகளாக தொடர்ந்த ஆயுதப் போராட்டம் ஆகியவை கடந்த ஆண்டின் மே18ல் ஒரு கட்டத்தை எட்டின. போராட்டத்தின் வடிவங் களையும், கட்டங்களையும் அவ்வப் போது சூழ்நிலைகளின் தேவையை ஒட்டி, விடுதலைப் போராட்ட தலைமை மாற்றி அமைத்தனர். இலங்கை அரசு சிங்கள ராணுவத்தின் மூலம், ஒரு இனஅழிப்பு போரை திட்டமிட்டு நடத்துவதையும், அதற்கு உலக நாடுகள் சிலவற்றின் ஒத்துழைப்பு கொடுக்கப் படுவதையும் களத்தில் நின்ற விடுதலை புலிகளின் தலைமை, சரியாகவே அவதாணித்தது. பூநகரியை தாண்டி அரசு படை முன்னேறிய கட்டத்தி லேயே, ஆயுதப் போராட்டம் தாக்கும் தன்மையில் தொடர முடியாது என புலிகள் தலைமை கணித்தது. அதையொட்டி தற்காப்பு போராக தங்களது போர்க்களத்தை மாற்றி அமைத்தது.
அரசுப் படைகளுக்கு கிளிநொச்சி மாவட்டம் விழ்ந்த பிறகு, ஒரு கட்டத்தில் புலிகளின் தலைமை, துப்பாக்கிகளை மௌனிக்கிறோம் என்று அறிவித்தது. அதாவது உலக நாடுகளுக்கு புரிகின்ற மொழியில், போர் நிறுத்தத்தை தானாகவே முன் வந்து, தமிழர் தலைமை அறிவித்தது. அது கூட உலகத்தின் மனச்சாட்சியை உருத்தவில்லை என்பது வேறு விஷயம். அந்த நேரத்தில் புலிகளின் இயக்கத்தில், போதுமான அளவிற்கு தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபட தயாரான போராளிகளாக ஆண்களும், பெண்களும் இருந்தார்கள். ஆனாலும் அத்தகைய கரும்புலி படைகளை பயன்படுத்த இயக்கத் தலைமை முடிவு செய்யவில்லை. உலகே வியக்கும் அளவிற்கு புலிகள் இயக்கம் கட்டுப்பாடுகள் கொண்ட ஒன்றாக திகழ்ந்தது.
மே18ல் புலிகளின் மூத்த தலைவர்கள் அனைவரும் மரணமடைந்துவிட்டார்கள் என்று, உலகிற்கு அறிவிக்கின்ற ஒவ்வொரு நாட்டின் உளவுத்துறை தலைமையும், இப்போது கிலி பிடித்து சில செய்திகளை பரப்பி வருகிறார்கள்.
அதில் இந்திய முன்னாள் அதிகாரி பி. ராமன் எழுதும் ஆய்வு, அவர்களுக்கு வசதியாக போய்விட்டது. ஆயுதப் போராட்டம் அல்லது பயங்காரவாதம் செய்வதற்கு பயிற்சி பெற்ற புலிகளின் எண்ணிக்கை எத்தனையோ என்று இப்போது கிளப்புகிறர்கள். மரணித்தவர்கள் தவிர, இலங்கை படையிடம் சரணடைந்தவர்கள் போக, மீதம் எத்தனை பேரோ என்று இப்போது அவர் அங்கலாய்கிறார். மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் எழுவதற்கான வாய்ப்புகள் இல்லையென்றாலும், பயிற்சி பெற்றவர்கள் பிரிந்து சென்று, என்ன செய்வார்களோ என்று சந்தோகத்தை கிளப்பிவிடுகிறார். மீண்டும் அது எழுவதற்கு தமிழ் நாட்டிலும் வாய்ப்பு இருக்கிறது என்பதாக ஒரு புருடாவை எழுப்பி யுள்ளார். அதை புலிகளின் மிச்சசொச்ச போராளிகள் என்பதாக வருணிக்கிறார்.
மீண்டும் ஒரு தமிழர் தலைவரால், இத்தகைய சிதறிக்கிடக்கும் போராளி களைத் திரட்டி ஒரு கலகத்தை செய்ய முடியும் என்பதாக யூகம் செய்கிறார். இதை கேட்டு சூடு போட்டு கொள்ளும் பூனைகளும் இங்கே உண்டு. ஆனாலும் அவைகள் பூனைகள் தான் என்பது அரசுக்கு தெரியும். இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் இன்னமும் தமிழர்கள் மத்தியில் கோபம் இருக்கிறது என்பது அவர்களது மதிப்பீடு. வன்னிப் போர் தனது இறுதிக் கட்டத்தில், உலகம் தழுவிய அரசியல் போராட்டமாக பரிணமிக்கத் தொடங் கிவிட்டது. அதுவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை நிறுவும் நிலைக்கு வளர்ந்து விட்டது. இத்தகைய அரசியல் போராட்டம் தமிழினத்திற்கு எதிரான சக்திகளை எரிச்சலடையச் செய்தி ருக்கிறது.
சமீபத்திய அரசியல் போராட்டங்கள், கொழும்பில் நடந்த அனைத்து நாட்டு திரைப்பட விழாவை எதிர்த்தும், ராஜ பக் சேவின் டெல்லி வருகையை எதிர்த்தும் நடத்தப்பட்டது கூட, அவர்கள் கண்களை உருத்துகிறது. அதனால் தான் செயற்கையாக உருவாக்கப்பட்ட விபத்து நாடகங்களை, முடிவுக்கு கொண்டு வர, சிதறிக்கிடக்கும் பழைய போராளிகள் மீது பழியைச் சுமத்த எண்ணுகிறார்கள். உணர்ச்சிவசப்பட்ட தமிழர்களின் உரைகள் சந்தையில் கிடைக்கின்றன. அதையே காராண மாக்கி, மரணித்ததாக அறிவித்த ஒரு இயக்கத்தின் மீது அவர்களால் தடை நீடிப்பை செய்ய முடிந்தது. அதை நியாயப்படுத்த தொடர்ந்து செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம் தமிழின எதிரிகளுக்குத் தேவைப்படுகிறது.
இலங்கைத் தீவில் நெருக்கடி நிலையை தொடர்வதற்கும், வடக்கிலும், கிழக்கிலும் சிங்கள ராணுவத்தை தொடர்ந்து நிறுத்துவதற்கும் காரணம் காட்ட, சரணடைந்த ஒருவரை காட்டிற்குள் படை நடத்துவதாக காட்ட வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது. அதுபோலவே வெடிகுண்டு வெடிப்புகளையும், மிரட்டல்களையும் நடப்பதாகக் காட்ட வேண்டிய கட்டாயம் இங்கேயுள்ளவர்களுக்கும் இருக்கிறது. உலகம் தழுவிய அளவில் எழுந்துள்ள ஈழத் தமிழரின் அரசியல் போராட்டம் உண்மையில் இவர்களை அச்சுறுத்துகிறது. அதையும் தாண்டி ஈழத் தமிழருடன், உலகத் தமிழர்கள் மொழியால், பண்பாட்டால் ஒன்றுப் பட்டு நிற்பவர்கள், அரசியலால் தமிழ் தேசிய அடையாளத்தால் ஒன்றுப்பட்டு வரும் புதிய சூழல், தமிழர் எதிரிகளை அதிகமாக அச்சுறுத்துகிறது. அதனால் தான் புலிபூச்சான்டியைக் காட்டி, அவர்கள் தங்களது திட்டத்தை நகர்த்துகின்றனர்.
மௌனித்ததை எல்லாம் மரணித்த தாக எண்ணினார்கள். மரணித்ததைக் கண்டு ஆவி அடிக்கும் என அலறு கிறார்கள். அவர்கள் சூன்யத்தில் அரசியல் செய்ய எத்தணிக்கிறார்கள். ஆழமாக வேரூன்றிய அரசியல் போராட்டத்திற்கு முன்னால், சூன்யத்தில் ஆட்டம்போட முடியாது என்பதை வரலாறு மெய்ப்பிக்கும்.

எங்கிருந்தோ வந்த குரல்...

மௌனித்தான் தன் துவக்கை
தலைமை கட்டளையிட்டதால்.
தற்காப்பு போருக்கு செல்வதால்
தலைமை சிந்தித்த தந்திரம் அது.
இழப்பை இனியும் தாங்கமுடியாதென
தலைமை எடுத்த முடிவு அது.
அப்பாவி தமிழர் இழப்பை இனியும்.......

கிழக்கை இழந்தோம், வடக்கில்கூட
பின்வாங்கும்போது மன்னார் கண்ட
இழப்புகளை அப்பாவி தமிழர்
அவதிகளை தலைமை எண்ணி
தளம் அமைத்ததால், ....................
ஓடும் தமிழரை துரத்திய
வெறியர் படைமுன்
வயோதிகரை, குழந்தைகளை
அப்பாவி பெண்களை
பலி கொடுக்க விடுதலைப்படை
வித்திடாது. தலைவர் எடுத்த
தகுதியான முடிவு
தற்காப்பு போர்.

பூநகரியை கடந்தான் எதிரி
தலைவர் சிந்தித்தார்
ஏழு அல்ல இருபது நாட்டு
அரசுகள் இங்கே அணிசேர காண்கிறேன்
தமிழன் வீரமுள்ளவன்,
விவேகமும் இணைந்து கொண்டவன்.
வீரம் புலிப்படையில் என்றும் உண்டு.
விவேகம் இப்போது வெளியே வரவேண்டும்.
தலைவன் எண்ணினான். தற்காப்பு போர் என்று.

தாக்கும் போருக்கும், தற்காப்புக்கும்
வேறுபாடு தெரிந்தவனா சிங்களவன்?
சிங்கள இளம் சிறார் படை அது.
பதினைந்து வயதில் பால்குடி மறவா
பாலகன்கள் தென்னிலங்கை விட்டு
நிர்ப்பந்தமாக யாழ் களம் இறங்கினர்.
கொட்டியா என்றால் ஓடும் வயது.
பொய்கூறி அழைக்கப்பட்ட படைவரிசை.
தலைவர் கண்ட களங்கள் சரித்திரம் சொல்லும்.
கொழும்பு தாக்குதல், வான்வெளியை பிய்த்தது
அனுராதபுரா கரும்புலி தாக்கு, எதிரியை
மரண பயத்தில் தள்ளியது.
எதிரியின் வெறி தமிழ்ப்போராளிகளை
நிர்வாணமாக்கி வக்கிரம் காட்டியது.
எங்கள் போராளிகளின் உடல்கள்கூட
உங்களை தூங்கவிடாது.
ஆனாலும் நாங்கள் தலைவர் கூறினால்,
துவக்கையும் மௌனிப்போம்.

தலைவர் சிந்தித்தார். இனி அரசியல் போர்தான்.
அதுவும் அனைத்துலக அளவில்.
புலம் பெயர்ந்தோருக்கும் ஒரு
வாய்ப்பு அதில். இனி அவர்கள் எடுத்துச்செல்வார்கள்.
ஆயுதம் தூக்கியபோது, அதிவேக வெறியுடன்
ஆள் திரட்டல், ஆயுதம் திரட்டல், உளவு திரட்டல்,
செயற்கைகோள் வேவு என எம் தமிழரை
அடையாளம் காட்டிய அன்னியர் இனி என்ன
செய்வர்?
அரசியல் போரில் அகிலம் பங்கு கொள்ளும்.
தமிழர் அகிலம் பங்குகொள்ளும்.