Saturday, June 12, 2010

தேடப்படாத, தேடப்படும் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள்

இப்போது இந்தியத்துனைக்கண்டம் எங்கும், இரண்டு அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள் பற்றிய விவாதம், சூடு பறந்து வருகிறது. ஒருவர் அமெரிக்க குடிமகன். இன்னொருவர் இலங்கை குடிமகன். இந்த இரண்டு வெளிநாட்டு குற்றவாளிகள் பற்றி இப்போது பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. இவர்கள் இந்தியாவிற்குள் புரிந்த குற்றங்கள் இப்போது சர்ச்சையாகி உள்ளன. அமெரிக்க குடிமகனான வாரன் ஆண்டர்சன், போபால் நீதிமன்றத்தின் பிடிவாரண்டை தாங்கியவராய்,1984 -ம ஆண்டிலிருந்து இருந்து வருகிறார். அவர் செய்த குற்றம், ஒரே நள்ளிரவில் 8000 பேர் சாவதற்கும், இருபத்தைந்து ஆண்டுகளில் ௨௦,000 பேர் சாவதற்கும் காரணமாக இருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டவர். அதாவது அவர் தலைவராக இருந்த யூனியன் கார்பைடு என்ற நிறுவனத்தின் பூச்சி கொல்லி மருந்து தயாரிப்பு ஆலையில், போபாலில் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் நாள் நள்ளிரவில் நடந்த நச்சு வாயு கசிவில் இறந்த அனைவருக்கும், மற்றும் தொடர்ந்து செத்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும், மற்றும் இன்று வரை பாதிக்கப்பட்ட ஐந்து லட்சம் பேருக்கும், இன்னும் பாதிக்கப்பட இருக்கும் வருங்காலத்தலைமுறைக்கும்
ஒருசேர காரணமானவர் என்ற குற்றச்சாட்டை தாங்கிவருபவர். இப்படிப்பட்ட பெரியதொரு கொலைக்குற்றச்சாட்டை உலகில் எந்த தனிமனிதனும்,ஆலை விபத்திற்க்காக
தாங்கியது இல்லை. இப்போது அந்த அமெரிக்க
குற்றவாளி வாரன் ஆண்டர்சன்னை, இந்திய ஆளும் கூட்டத்தார் தப்ப விட்டிருக்கிறார்கள் என்ற செய்தி பெரும் புயலாக கிளம்பி இருக்கிறது. அதிலும் ஆண்டர்சன்னை டிசம்பர்-7 ஆம் நாள், முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்து விட்டு, பிறகு அதே நாளில் கைதும் செய்துவிட்டு, பிறகு அமெரிக்க அரசிடம் இருந்து வந்த நிர்ப்பந்தத்தை ஒட்டி, விடுதலை செய்து அமெரிக்காவிற்கு அனுப்பிவிட்டார்கள் என்பது அதிர்ச்சியாக இப்போது வெளிவருகிறது. அதிலும் யார் இதற்க்கான உணமையான காரணகர்த்தா என்ற கேள்வி இன்று இந்தியாவையே ஆட்டிப்படைக்கிறது. முதலில் சி.பி.ஐ.யின் முன்னாள் தலைவராக இந்த வழக்கு வந்த நேரத்தில் இருந்த லால் என்பவர் ஒரு செய்தி வெளியிட்டார். அதாவது போபால் நச்சு வாயு வழக்கில், போடபபட்டிருந்த பிரிவு எண் 304 ஐ மாற்றி 304 -எ என்று உச்ச நீதி மன்றத்தில் மாற்றச்சொன்னதற்கு காரணம் யார் என்ற கேள்வி எழுந்தது. அப்போது சி.பி.ஐ. தான் அத்தகைய கோரிக்கையை உச்சநீதிமன்றத்தில் வைத்தது என்பது புரியப்பட்டது. முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி, தனது அந்த முயற்சிக்கு காரணமே அப்போது .இருந்த வெளிவிவகார அமைச்சகம்தான் என்று கூறிவிட்டார். அடுத்து அந்த குற்றவாளியை போபாலிலிருந்து விடுதலை செய்து கொண்டுசெல்ல யார் காரணம் என்ற கேள்வி எழுந்தது. முன்னாள் போபால் மாவட்ட ஆட்சி தலைவர் , அதை உத்தரவிட்டதே அப்போது முதல் அமைச்சராக இருந்த அர்ஜுன்சிங்குதான் என்று கூறிவிட்டார். அடுத்து அர்ஜுன்சிங் பதில் சொல்லவேண்டிய நிலை வந்தது. அவரோ அன்று இருந்த டில்லி தலைமையை காட்டி விட்டார். அடுத்து இப்போது பேசிய இன்னொரு காங்கிரசு தலைவரும், இன்னொரு முன்னாள் மத்திய பிரதேச முதல்வரான, திக்விஜய் சிங்கோ, அப்போது இருந்த மத்திய அரசின் மீதான அமெரிக்க அரசின் நிர்ப்பந்தம் தான் காரணம் என்று சொல்லிவிட்டார். உள்ளபடியே இதற்கு அர்த்தம் அப்போது இருந்த தலைமை அமைச்சரான ராஜீவ் காந்திதான் அமெரிக்காவுக்கு துணை போனார் எனச்சொல்வதாக அமைந்துவிட்டது. இப்போது ஒரு உண்மை அப்பட்டமாக அம்பலமாகிவிட்டது. அதாவது அமெரிக்க பன்னாட்டு மூலதனக் கம்பனியான யூனியன் கார்பைட் நிறுவனத்தை, மாபெரும் கொலைகளை செய்த குற்றம் இருக்கும் போதே காப்பாற்றி அவர்களது தலைவரை, தண்டனையிலிருந்து காப்பாற்ற மட்டுமின்றி கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பதில் இருந்து காப்பாற்றவும், அதே போல விசாரிக்கப்படுவதில் இருந்து காப்பாற்றவும் உதவி செய்தவர்கள் அல்லது ஏற்பாடு செய்தவர்கள் நாட்டை தலைமை தாங்கிய அரசியல்வாதிகள்தான் என்பது அப்பட்டமாகப்புரிந்து விட்டது. அந்த குற்றவாளி வரிசையில் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி முதல், வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஊடாக, அன்றைய மத்தியபிரதேச முதல்வரான அர்ஜுன் சிங் வரை, அனைவருமே சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இவ்வாறாக இந்தியாவில் நடந்த ஒரு பெரும் கொலைக்குற்றத்தை மறைத்து, சம்பத்தப்பட்ட கொலைகாரனை காப்பாற்றி தப்ப விட நாட்டை தலைமை தாங்கிய அரசியல்வாதிகள் ஏற்ப்பாடு செய்தது தெரிந்துள்ளது. போபால் நச்சு வாயு வெளியேற்றத்திற்கு தவறான அல்லது சரியில்லாத தீர்ப்பு வெளிவந்ததை ஒட்டியே இந்த விவகாரம் பெரியதாகி உள்ளது. அதனால் மட்டுமே இப்போது அரசியல்வாதிகள் அமபலமாகி உள்ளார்கள். அதேபோல, அடுத்து வெளிவந்திருக்கும் இன்னொரு பழைய குற்றம். டக்ளஸ் மீதானது. அன்றைய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி யில், மக்கள் விடுதலை படையின் தலைவராக இருந்த டக்ளஸ், அந்த இயக்கத்தின் தலைவராக இருந்த பத்மநாபாவுடன் முரண்பட்டு 1986 இல் வெள்யே வந்தார். அதனால் சூளைமேடு பகுதியிலேயே, திருவள்ளுவர் நகரில் தனது கும்பலுடன் தங்கி இருந்தார். அப்போது அவர் தனது கும்பலுடன் சேர்ந்து தானியங்கி துப்பாக்கி மூலம் செய்த துப்பாக்கி சூட்டில் ஒரு உயிர் பலியானதும், மற்ற நான்குபேர் காயம் அடைந்ததும் , அவர் மீதும் அவரது கும்பலில் உள்ள ஒன்பதுபேர் மீதும் வழக்கை பதிவு செய்ய வைத்தது. அதன்பிறகு 1994 இல் டக்ளஸ் தலைமறைவானதும், அவரை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. அதுதவிர, 1989 மார்ச் ௨ இல் டக்ளஸ் ஒரு பையனை கடத்திய வழக்கில், குற்றவாளியானார். தவிர 1990 இல் வையவன் என்ற ஒருவரை தாக்கிய வழக்கில், மீண்டும் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டார். இப்படி மூன்று குற்ற வழக்குகளில் சம்பத்தப்பட்ட இன்றைய இலங்கை அமைச்சர் ஒருவரை, கைது செய்யப்போகிறார்களா இல்லையா என்ற கேள்வி இப்போது இந்தியா முழுவதும் கிளம்பி உள்ளது. இப்படி அறிவிக்கப்பட்ட குற்றவாளி ஒருவருக்கு தங்குமிடம் அல்லது உறவு அல்லது பழக்கம் கொண்டிருந்த எவரையும் சட்டப்படி கைது செய்யலாம். அதுமட்டுமல்ல அவர்களுக்கு அதாவது உதவி செய்தவர்களுக்கு இ.பி.கோ. சட்டப்படி ஏழு ஆண்டுகள் வரை தண்டனை வழங்கலாம். அப்படிப்பட்ட குற்றத்தை இழைத்ததாக தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல் தலைவர்களும், சில பத்திரிகையாளர்களும், குற்றம் சாட்டப்படுகின்றனர். அவர்களுக்கும் விசாரணை வருமா அதை ஒட்டி யாருக்காவது வழக்கு வருமா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் விவாதிக்கப்படுகிறது. அறிவிக்கப்பட்ட ஒரு குற்றவாளியை தமிழ் நாட்டின் பிரபல பத்திரிகையாளரும், அறிவாளியாக அறியப்பட்டவரும், சட்ட மேதையாக போற்றப்படுபவருமான, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான சோ ராமசாமி தனது அலுவலகத்திற்குள் அனுமதித்ததும், தொடர்ந்து பேசிவந்ததும்,இப்போது விவாதமாக ஆகி உள்ளது. ஆகவே யார்,யார் அறிவிக்கப்பட்ட குற்றவாளியுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்ற கேள்வியை கேட்டார்கள் என்றால், ராஜபக்சேவின் இப்போதைய டில்லி வருகையின் போது, அவரது குழுவில் டகளஸ் இருந்தார் என்பது பகிரங்கமாக தெரிந்த ஒன்றாக இருக்கிறது. அதாவது அந்த விருந்தில் பங்கு கொண்ட தலைமை அமைச்சர், காங்கிரசு கட்சி தலைவர் அனைவருக்கும் இது புதிய பிரச்சனையாக எழுந்துள்ளது. ஆனால் இது ஒரு பிரச்சனையே அல்ல என்று சாதாரண மக்கள் கூட கூறுகிறார்கள். ஏன் என்றால் ஒரு அறிவிக்கப்பட்ட குற்றவாளியை, இருபத்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பே இந்த நாட்டின் தலைமை அமைச்சர் உட்பட அனைத்து அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் இணைந்து காரில் ஏற்றி போபாலை விட்டு வெளியே கொண்டுவந்து, அரசு ஏற்பாட்டில் தனியார் விமானத்தில் ஏற்றி, அங்கிருந்து டில்லி கொண்டு சென்று அங்கிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பிய நாடு அய்யா இது என்று கூறுகிறார்கள்.
ஆகவே நீங்கள் குற்றம் செய்தீர்களா, இல்லையா என்பது முக்கியமல்ல, மாறாக நீங்கள் அரசியல்தலைவர்களின் அதரவு பெற்றிருகிறீர்களா இல்லையா என்பது மட்டுமே தீர்மானிக்கும் என்பது சாதாரண மக்களுக்கும், இப்போது இந்த இரண்டு வழக்குகள் மூலம் தெரிந்து விட்டது.