Thursday, June 10, 2010

ராஜபக்சே வருகை: வர்த்தக நோக்கமா?

இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு மூன்று நாட்கள் பயணமாக, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தம்பதி சமையதராய் வருகை புரிந்துள்ளார். அவருக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு டெல்லியில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசின் முக்கியமான ராணுவத் தளபதிகள் தலைமையிலான அரசப்படை, ராஜபக்சேக்கு உயர்ந்தபட்ச வணக்கத்துடன் கூடிய மரியாதையை செலுத்தினார்கள். அண்டை நாடாக இருந்தாலும், நட்பு நாடாக இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டாலும், கடந்த ஆண்டில் ஒரு பெரிய இனஅழிப்புப் போரை நடத்தினார் என்ற பிரபலமான பெயருடன், கையில்பட்ட ரத்தக்கறைகள் உலர்வதற்குள் அவர் இந்தியா வருகை புரிகிறார் என்பது தான் முக்கியமானச் செய்தி.
உலக அரங்கில் இங்கிலாந்தில் உள்ள பி.பி.சி என்ற பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் காப்பரேஷன், அமெரிக்க ஏடான தி டைம்ஸ், அனைத்து நாட்டு நெருக்கடிக் குழு, மனித உரிமைகள் கண்காணிப்பு, அனைத்து நாட்டு பொது மன்னிப்புச் சபை, எக்னாமிக்ஸ் ஏடு ஆகியவை ராஜபக்சேவை ஒரு போர்க்குற்றவாளியாக சித்தரித்துள்ளது. அதேபோல அனைத்து நாட்டு குற்றயியல் நீதிமன்றத்தில் ராஜபக்சே சகோதரர்கள், போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் செய்துள்ளனர் என்று வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தமிழ்நாடு புதுச்சேரி கிளையான மக்கள் சிவில் உரிமைக்கழகம், தனது விரிவான குற்றச்சாட்டுகளையும், இணைத்துள்ளது. ஜுன் 8ம் நாள் தமிழ்நாடெங்கும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும், தொண்டர்களும், ராஜபக்சேயின் இந்திய வருகையை கண்டித்து, தெருவில் இறங்கி ஒவ்வொரு மாவட்டத்திலும், நூற்றுக்கணக்கில் போராட்டம் நடத்தியதற்காக கைதானார்கள். அதேசமயம் இதுபோன்ற ராஜபச்சே வருகையை கண்டித்து போராட்டம் நடத்திய அரசியல்வாதிகள், டெல்லி சென்று ராஜபக்சேயை சந்தித்து மனுக் கொடுக்கவும் செய்திருக்கின்றனர். இப்படி சில கேலிக் கூத்துக்கள் நடந்தாலும் கூட, தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பு என்பது, ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு அமைப்புகளின் மூலம் பதிவு செய்யப்பட்டது என்பது தான் வரலாறு.
உலக அரங்கில் போர்க்குற்றவாளியாக விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும், ஒரு அரசத்தலைவரை உலகின் பெரிய ஜனநாயக நாடு என்று பெயர் பெற்ற இந்திய நாடு சிவப்புக்கம்பளம் கொடுத்து வரவேற்கிறது என்ற செய்தி ஆரோக்கியமாகத் தெரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆளும் கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மகிந்தாவைச் சந்தித்து ஈழத்தமிழர்களின் மீள் குடியேற்றத்திற்காக கோரிக்கைகளை முன்வைத்தார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன்சிங்கிற்கு அனுப்பிய கடிதத்தில், இதே மீள்குடியேற்றம் பற்றி குறிப்பிட்டிருந்தாலும் அதுபற்றி ராஜபக்சே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற அழுத்தமான செய்தியிருந்தது. 2009ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், முள்வேலி முகாம்களில் இருக்கின்ற ஈழத்தமிழர்களை முழுமையாக மீள்குடியேற்றம் செய்வோம் என்று தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைச் சென்ற போது, அவர்களிடம் ராஜபக்சே வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற ஆழமான குற்றச்சாட்டுடன் கூடிய கோரிக்கை தமிழக முதல்வரின் கடிதத்தில் பிரதிபலித்தது. ஆனால் இப்போது டெல்லியில் ராஜபக்சேயை சந்தித்த தமிழக எம்.பி.க்கள் இப்படிப்பட்ட அழுத்தமான விவரத்தை எடுத்துச்சொன்னதாக அல்லது கேள்வி கேட்டதாக எதுவுமே தெரியவில்லை.
ஏற்கனவே உலக அரங்கில் மனிதஉரிமை மீறல்களுக்காக, ராஜபக்சே அரசாங்கம் குற்றம் சாட்டப்பட்ட போது, ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சிலில் இந்திய அரசு, ராஜபக்சே அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு பாதுகாத்தது என்ற அவப்பெயர் பதிவாகியுள்ளது. இப்போது டெல்லியில் சிவப்புக்கம்பள வரவேற்பு கொடுத்ததன் மூலம், மேலும் அத்தகைய அவப்பெயர் வலுப்பபெறத்தான் செய்யும். இதற்கிடையில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதியரசராக இருந்த ராஜேந்திர சஜ்ஜார் கலந்து கொண்ட, அயர்லாந்து நாட்டில் நடந்த டப்ளின் நிரந்தர மனிதஉரிமை தீர்ப்பாயத்தில், ராஜபக்சே சகோதரர்கள் போர்க்குற்றங்கள் இழைத்ததாக தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதுவே டெல்லியிலுள்ள மற்றும் வடஇந்தியாவிலுள்ள பொதுமக்கள் மத்தியில், புதியதொரு கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஈழவிடுதலைப் போர் ஆயுதப்போராட்டமாக நடந்து வந்த காலத்திலும், 4வது வன்னிப்போர் உக்கிரமமாக நடந்து வந்த நேரத்திலும், பிரபலமாக குற்றம்சாட்டப்படாத ராஜபக்சே அரசு, போர் முடிந்த நேரத்தில் கடுமையான போர்க் குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இத்தகைய புதிய உணர்தல்கள் இந்தியா எங்கும் உருவாகியிருக்கும் நேரத்தில், டெல்லி ராஜபக்சே தம்பதியினருக்கு வரவேற்பு கொடுக்க வேண்டிய தேவை என்ன?
இந்திய அரசு இலங்கை அரசுக்கு தமிழர்களின் மறுவாழ்வுக்காக கொடுத்தனுப்பிய ரூ.500 கோடியை எப்படி செலவழித்தார் என்பதை அல்லது செலவழித்தாரா என்பதை அல்லது ஏன் செலவழிக்கவில்லை என்பதை விளக்கம் சொல்வதற்காக, ராஜபக்சே டெல்லி வந்தாரா? அப்படியானால் அதற்கு சிவப்புக்கம்பள வரவேற்பு கொடுப்பார்களா? தமிழ்நாட்டு எம்.பி.க்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றவில்லையே என்பதற்காக, குற்ற உணர்வுடன் இந்த முறை காப்பாற்றுகிறேன் என்று சொல்வதற்காக அதன் மூலம் நட்புறவை பேணுவதற்காக டெல்லி வந்தாரா? அப்படியானால் அதற்காக இப்படியொரு பிரம்மாண்டமான வரவேற்பு தேவையில்லையே? டெல்லி சென்ற தமிழகத்து எம்.பி.க்கள் வீரமுடனோ, கோபமுடனோ, கோரிக்கையை வலியுறுத்தும் தன்மையுடனோ ராஜபக்சேயை சந்தித்ததாக தெரியவில்லை. மாறாக மரத்தடியில் நிற்கும் தமிழக எம்.பி.க்களை, காட்டுகின்ற காட்சி ஊடகம் அவர்களது எதிர்பார்ப்பை படம் பிடித்து காட்டியுள்ளது.
மேற்கண்ட எந்தக் காரணத்திற்கும் டெல்லியில் நுழையாத ராஜபக்சே, சி.ஈ.பி.ஏ. என்று அழைக்கப்படும் தொகுப்பான பொருளாதார பங்களிப்பு ஒப்பந்தங்களை கையெழுத்திடுவதற்குத் தான், டெல்லி வந்தார் என்பது வெளியாகியுள்ளது. அதை வெளியிடுகின்ற அரசு செய்திகள் 5 விதமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன என்று கூறியுள்ளன. 1. கூட்டாக பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கான ஒப்பந்தம். 2. தண்டிக்கப்பட் கைதிகளை பரிமாற்றம் செய்வதற்கான ஒப்பந்தம். 3. குற்ற நடவடிக்கைகளில் பரஸ்பரம் சட்ட உதவிகளை செய்து கொள்வதற்கான ஒப்பந்தம். 4.பரஸ்பர பண்பாட்டு ஒத்துழைப்பு சம்மந்தப்பட்ட ஒப்பந்தம். 5. சிறிய மற்றும் நடுத்தர வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்தியாவின் உதவியை பெறுகின்ற ஒப்பந்தம்.
மேற்கண்ட 5 ஒப்பந்தங்களில் சில உண்மைகள் வெளிப்படுகின்றன. கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில், ராஜபக்சே அரசின் அமைச்சரான டக்ளஸ் தேவனந்தா மீது உள்ள சென்னை மாநகர காவல்துறையின் 2 குற்றவழக்குகள் விசாரணைக்காக, அவர் அனுப்பப்படுவாரா என்ற கேள்வியை தமிழக எம்.பி.க்கள் யாரும் கேட்டிருக்க நியாயமில்லை. 1998ம் ஆண்டு இந்தியாவும், இலங்கையும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. அப்போது தொடங்கி இன்றுவரை பல்வேறு முனைகளில் இருநாடுகளுக்கும் வர்த்தகம் விரிவடைந்து வருகிறது. அதனடிப்படையில் தான் 2003ம் ஆண்டிலிருந்து சி.ஈ.பி.ஏ. என்ற ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைத் தொடங்கியது. கடந்த சார்க் மாநாட்டு நேரம் மன்மோகன் கொழும்பு சென்றபோது கையெழுத்திடுவதாக இருந்த அந்த ஒப்பந்தம் தள்ளிப்போடப்பட்டது. இப்போது மீண்டும் ராஜபக்சே வருகையையொட்டி அதே ஒப்பந்தம் பேசப்படுகிறது. ஆனால் இலங்கையிலுள்ள சிங்கள அறிவுஜிவிகளை தூண்டிவிட்டு, ராஜபக்சே இந்தியாவுடனான அத்தகைய ஒப்பந்தத்திற்கு கையெழுத்திடுவதை எதிர்த்த குரலை எழுப்பி விட்டுத் தான், இங்கே வருகை புரிந்திருக்கிறார். ஆகவே இந்த முறையும் இந்திய அரசுக்கும், இந்திய முதலாளிகளுக்கும் வர்த்தக மட்டத்திலும் வெற்றி கிட்டவில்லை என்று தெரிகிறது.
ஜனநாயக அரங்கிலும் இலங்கைக்கு எந்தவொரு நெருக்கடியையும் இந்திய அரசால் கொடுக்க முடியவில்லை. மனிதாபிமான மட்டத்திலும் தமிழர்களுக்கு மறுவாழ்வோ, அரசியல் தீர்வோ பெற்றுத் தர இந்திய அரசால் இயலவில்லை. வணிக அரங்கிலும் இந்திய அரசும், இந்திய பெருமுதலாளிகளும் விரும்புகின்ற கொள்ளையை விரும்பும் அளவிற்கு அடிக்க முடியவில்லை. பின் எதற்காக இந்த போர்க்குற்றவாளியின் வருகைக்கு இப்படி சிவப்புக்கம்பள வரவேற்பு என்பதை உலகச்சமூகம் கேட்கத்தொடங்கியுள்ளது.