Wednesday, June 9, 2010

பெரும் ஆலை விபத்தும், வெறும் குறைவான தீர்ப்பும்

‘கார்பரேட் கொலைக்காரர்கள்’, ‘தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி’ ‘உண்மை குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்து’, ‘முக்கிய குற்றவாளி தலைமறைவானார்’, ‘குற்றம் செய்த முதலாளி பிணையில் விடுதலை’, ‘26 ஆண்டுகளுக்குப் பிறகு கொடுக்கப்பட்ட தீர்ப்பு’, 20 ஆயிரம் பேர் உயிர் பலியானதற்கு, 7 பேருக்கு 2 ஆண்டு வரை தண்டனை’, 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதற்கு இழப்புத் தொகை இல்லை’, ‘வருங்கால தலைமுறை பாதிக்கப்படுவதற்கு தடுப்பு இல்லை’, மேற்கண்ட தலைப்புகள் நேற்றைய ஊடகங்களை ஆக்கிரமித்தன.
இவையெல்லாமே 1984ம் ஆண்டு டிசம்பர் 2ம் நாள் நள்ளிரவில், இந்தியாவில் இருக்கும் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள போபால் நகரில் நடந்த நச்சுவாயு கசிவால் ஏற்பட்ட படுகொலைகளின் தொடர்ச்சியில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு. யூனியன் கார்பைடு என்ற அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனம், நமது ஊரில் எவரெடி பேட்டரி தயாரிப்பில் பிரபலமாக இருக்கும் நிறுவனம். அந்த நிறுவனம் பூச்சிக்கொல்லி மருந்தை உற்பத்திச் செய்யும் தொழிற்சாலைகளையும் அமைத்தது. அப்படி அமைக்கப்பட்ட ஒரு தொழிற்சாலை தான், போபால் நகரில் இயங்கி வந்தது. சம்பவத்தன்று அந்த ஆலையிலிருந்து நள்ளிரவில் வெளியான நச்சுவாயு, போபால் நகரில் அதே இரவில் 8,000 உயிர்களை பலிவாங்கியது. அப்போது வெளியேறிய நச்சுவாயு பல மனிதர்களின் உடல்களில் புகுந்துக் கொண்டது. சூழ்நிலையை நச்சாக்கியது. காற்றில் நஞ்சை கலக்கியது. ஆலை வளாகத்திற்குள் நச்சுக்கழிவுகளை திடமான வடிவத்தில் உருவாக்கியது. மறுநாள் காலையிலேயே யூனியன் கார்பைடு நிறுவனத்தின் மீது, காவல்துறையால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304ன் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த பிரிவு கல்பபிள் ஹோமிசைடு என்ற கொலைக்கு ஒப்பாகாத, மரண ஆபத்து இருப்பதை அறிந்தும் இழைக்கப்பட்ட குற்றத்தால் நிகழ்ந்த மரணம் என்பதாக விளக்குகிறது.
அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனமான யூனியன் கார்பைடு அமைப்பின் தலைவரான வாரன் ஆன்டர்சன், விபத்து நடந்தவுடன் போபால் வந்தார். அவர் மீதும் டிசம்பர் 7ம் நாள் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் அமெரிக்க அரசாங்கத்தின் நிர்ப்பந்தம், இந்திய அரசின் மீது தொடுக்கப்பட்டது. அதையொட்டி இந்திய அரசு தரப்பில் இருந்து செய்யப்பட்ட ஏற்பாட்டில், முதல் குற்றவாளியான வாரன் ஆன்டர்சன் 6 மணி நேரத்தில் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டார். மாநில அரசாங்கத்தின் விமானத்தில், அரசு ஏற்பாட்டில் வாரன் ஆன்டர்சன் புதுடெல்லிக்கு பறந்து சென்றார். அங்கிருந்து அமெரிக்காவிற்கு தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்ட வாரன் ஆன்டர்சன், அதன்பிறகு இந்தியா திரும்பவில்லை.
குறிப்பிட்ட யூனியன் கார்பைடு ஆலையில் அன்றைய நாளில் வெளியான நச்சுவாயு மித்தில் ஐசோ சையநேட் என்று அழைக்கப்படுகிறது. இந்த மைக் என்ற நச்சு வேதியல் பொருள், அதிகமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஒன்று. இத்தகைய நச்சுவேதியலை பயன்படுத்துகின்ற ஆலைகளில், அதற்கே உரித்தான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். விலையுயர்ந்த நவீன கருவிகளை பயன்படுத்தி, அப்படிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமெரிக்காவில் உள்ள மேற்கு வெர்ஜினியாவில் இருக்கும் கார்பைடின் பூச்சிக்கொல்லை மருந்து ஆலையில் செய்யப்பட்டது. அதேசமயம் வளராத 3ம் உலக நாடாக இருக்கின்ற இந்தியாவில் உள்ள போபாலில், அத்தகைய விலையுயர்ந்த கருவிகள் தேவையில்லை என்றும், காலாவதியான விலை குறைந்த கருவிகளே போதும் என்றும், அமெரிக்காவில் கூடிய யூனியன் கார்பைடு நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் முடிவெடுத்து அதில் அதன் தலைவர் வாரன் ஆன்டர்சன் கையெழுத்திட்டிருக்கிறார். அது 1973ம் ஆண்டின் யூனியன் கார்பைடு கார்ப்பரேஷனின் உள்சுற்றுக்கான அறிக்கையில் இருக்கிறது. அதில் ‘சோதிக்கப்படாத கருவிகளை போபாலுக்கு அனுப்பலாம். அவற்றால் ஏற்படும் ஆபத்தை விட, கிடைக்கின்ற நிதி லாபம் அதிகமாக இருக்கிறது’ என்று எழுதப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை நடந்த 20,000 பேர் படுகொலைகளுக்கும், இனி நடக்கும் விபத்துகளுக்கும் காரணமானவராக வாரன் ஆன்டர்சன் இருப்பது பட்டவர்த்தனமாக அம்பலமாகியுள்ளது. இந்த மனிதர் தான் அமெரிக்காவில் இருந்துக் கொண்டு, இந்திய அரசுக்கு அல்லது மத்திய புலனாய்வுத் துறைக்கு கிடைக்காமல் இருப்பவராக, போபால் நீதிமன்றத்தில் சித்தரிக்கப்படுபவர்.
மேற்கண்ட பெரும் குற்றவாளி வாரன் ஆன்டர்சனை, போபால் நீதிமன்றமும் தலைமறைவாக சென்று விட்டார் என்று அறிவித்துள்ளது. அதையொட்டி தீர்ப்பு வழங்கப்படும் போது, விசாரிக்கப்படாத ஆண்டர்சன் மீது தண்டனை அறிவிக்கப்படவில்லை. அதை தற்போது விளக்குகின்ற மத்திய சட்ட அமைச்சர் வீரப்பமொய்லி, தலைமறைவாக ஓடிவிட்ட காரணத்தால் தண்டனை அறிவிக்கப்படவில்லையே தவிர, அவரை பிடித்து வந்து விசாரித்து தண்டனை வழங்கப்படும் என்று இப்போது விளக்குகிறார். அறிவிக்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பின் மீது பல்வேறு வகையான கருத்துக்கள் காற்றிலே பறக்கத் தொடங்கிவிட்டன. பொதுமக்களும், ஊடகங்களும் கடுமையான எதிர்ப்பை மற்றும் கண்டனத்தை தெரிவித்ததையொட்டி, சட்ட அமைச்சரும் தன் பங்குக்கு உண்மை புதைக்கப்பட்டு விட்டது என்று கூறியுள்ளார். இத்தகைய கூற்று மத்திய அரசின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த போதுமானதாக இருக்கிறதா?
அமெரிக்க அரசின் நிர்ப்பந்தத்தில் வாரன் ஆன்டர்சனை தப்பிக்க வைத்த இந்திய அரசு, தொடர்ந்து பல குற்றங்களை இந்த வழக்கில் செய்துள்ளது. வழக்கை விசாரித்த சி.பி.ஐ. மூலம், இ.பி.கோ. 304 பிரிவிலிருந்து, 304ஏ பிரிவிற்கு குற்றப்பத்திரிகையை நீர்த்துப்போக செய்வதற்கான முன்வைப்பை, உச்சநீதிமன்றத்தில் வைத்தது. அதையொட்டி 1996ம் ஆண்டு உச்சநீதிமன்றமும் வழக்குப் பிரிவை மாற்றி அறிவித்தது. அதாவது இ.பி.கோ. பிரிவு 304ன் படி, அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கலாம். அதேசமயம் பிரிவு 304ஏ யின் படி, அதிகபட்சம் 2 ஆண்டுகள் தான் தண்டனை வழங்கலாம். அதாவது கவனக்குறைவின் காரணமாக இந்த விபத்து நடந்ததாக அந்த பிரிவு, கொலைக் குற்றத்தின் தன்மையை குறைத்து விடுகிறது. அதையொட்டியே இப்போது நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால் தான் வெறும் ரூ.25,000 தொகை கட்டிவிட்டு, குற்றம் செய்த முதலாளிகள் நீதிமன்றத்தை விட்டு பிணையில் வெளியே வர முடிந்திருக்கிறது. இது சாதாரண சாலை விபத்தில் நடந்த உயிர்பலிப் போல ஆக்கப்பட்டு விட்டது.
உலகிலேயே மிகப்பெரிய ஆலை விபத்தாக அறிவிக்கப்பட்ட போபால் நச்சுவாயு விபத்தால், நடந்த உயிர்ப்பலிகளும், நடந்துக் கொண்டிருக்கும் நடைப்பிணப் பலிகளும், இப்போது வெளிவந்த தீர்ப்பால் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் நீதித்துறை பற்றிய மரியாதை, உலக அரங்கில் அசிங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீதி கேலிக்குரியதாக ஆக்கப்பட்டுள்ளது. 1996ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தண்டனைப் பிரிவை குறைத்து தீர்ப்புக் கொடுத்த நீதியரசர் அகமதி, 1998ல் போபாலில் யூனியன் கார்பைடு ஏற்பாடு செய்த, போபால் நினைவு மருத்துவமனை அறக்கட்டளை தலைவராக பதவியேற்றார். ஏற்கனவே போபால் நீதிமன்றத்தால் முடக்கப்பட்ட யூனியன் கார்பைடு சொத்துக்களை, விற்க இதே நீதியரசர் அகமதி, உச்சநீதிமன்ற தலைமை நீதியரசராக இருக்கும் போதே அனுமதிக் கொடுத்தார். இவ்வாறு ஓய்வு பெறும் நீதியரசர்களைக் கூட, முன்கூட்டியே விலைக்கு வாங்கும் கார்ப்பரேட்டுகளின் தில்லுமுல்லுகள், இந்த நிகழ்ச்சியிலும் அம்பலமாகியுள்ளது.
போபால் நிறுவனத்தை யூனியன் கார்பைடு, இன்னொரு அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனமான டௌ கெமிக்கல்சுக்கு விற்று விட்டது. அந்த டௌ நிறுவனமும் தான் எந்தவொரு இழப்பீடும் கொடுக்கமாட்டோம் என நிராகரித்து விட்டது. அதுமட்டுமின்றி விபத்து நடந்த ஆலைக்குள் இன்னமும் இருக்கின்ற 10,000 டன் திடக்கழிவுகளான நச்சுக்கழிவை, சுத்தம் செய்ய முடியாது என அறிவித்திருக்கிறது. இதுபற்றி நீதிமன்றமோ, அரசோ கவலைப்படவில்லை. மாறாக டௌ கெமிக்கல்சுக்கு நாடு முழுவதும், அரசாங்கம் சிவப்புக்கம்பளம் விரித்துள்ளது. சென்ற அமெரிக்க அதிபர் இந்தியா வந்த போது, பிரதமர் மன்மோகன் கொடுத்த விருந்தில் டௌ கெமிக்கல்ஸ் கௌரவிக்கப்பட்டது. சென்னையில் கூட, டௌ கெமிக்கல்ஸ் தனது விரிவாக்கத்தை செய்து வருகிறது. இப்படிப்பட்ட கொலைக்கார கார்ப்பரேட்டுகளை, கறுப்புப் பட்டியலில் சேர்க்க நாட்டு மக்கள் நிர்ப்பந்திக்க வேண்டும்.
போபால் படுகொலைகளை முன்னுதாரணமாகக் கொண்டு, ஒவ்வொரு ஆபத்தான தொழிற்சாலைகளிலும், போபால் நிகழாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு பொதுமக்கள் கையில் இருக்கிறது. அரசு தரப்பு தனது அமெரிக்க சார்பு, கார்ப்பரேட் நலன் ஆகியவற்றைத் தாண்டி, மக்கள் நலனையும், நாட்டு நலனையும் முதன்மைப்படுத்தும் என்ற நம்பிக்கை தகர்ந்துள்ளது.