Tuesday, June 8, 2010

கலைஞர் கடிதத்தால் மன்மோகன் உணர்வு பெறுவாரா?

நேற்று கலைஞர் மன்மோகனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே வருவதை ஒட்டி எழுதப்பட்ட கடிதம் அது. கலைஞர் தனிப்பட்ட முறையில் அதை எழுதவில்லை. தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் கலைஞர், இந்தியாவின் தலைமை அமைச்சராக இருக்கும் மன்மோகனுக்கு எழுதிய கடிதம் அது. ஆகவே இந்தியாவை தலைமை தாங்கும் மன்மோகன் அந்த கடிதத்தை பொறுப்போடு படிக்க வேண்டும். அதை ஒட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நம்பிக்கை தி.மு.க. தலைமைக்கு உண்டா என்பது நமக்கு தெரியாது. ஆனால் கலைஞர் அத்தோடு நிறுத்தவில்லை. தங்கள் கட்சியின் நாடாளுமன்ற கட்சித்தலைவரான டி.ஆர்.பாலுவை கூப்பிட்டு, அவரிடம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துக்கொண்டு போய், இலங்கை அதிபர் ராஜபக்சேவை நேரில் சென்று பார்த்து, அவர் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையே என கேட்கச்சொல்லியிருக்கிறார். அதையும் கழகத்தின் மூலம் ஊடகங்களுக்கு வெளியிட அனுப்பி வைத்துள்ளார். இந்த அளவுக்கு கலைஞர் செய்யவேண்டிய அவசியம் ஏன் எழுந்தது? இதற்கு முன்பு ஏற்கனவே இதுபோல ஈழத்தமிழர் பிரச்னைக்கு பல கடிதங்களை, கலைஞர் பிரதமர் மன்மோகனை நம்பி எழுதியுள்ளார். அவை எல்லாமே கவனமாக எடுத்து படிக்கப்பட்டதென்றோ, கவனிக்கப்பட்டது என்றோ கூறுவதற்கு எந்த ஆதாரமும் இருக்கவில்லை. அதனால் இந்தமுறை கலைஞர் தான் எழுதிய கடிதத்தை ஒட்டி, தனது கட்சி உறுப்பினர்களையே நேரில் சென்று, சம்பந்தப்பட்டவரை பார்த்து பேசச்சொல்லிவிட்டார் என்று தெரிகிறது.
கலைஞர் அப்படி அந்த கடிதத்தில் என்ன எழுதினர்? இலங்கையில் இடம் பெயர்ந்த தமிழர்களை மறு குடியேற்றம் செய்யவும், சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் இலங்கை அதிபரிடம் வலியுறுத்தவும் கேட்டுக்கொண்டு பிரதமருக்கு எழுதியுள்ளார். அதை விளக்கும் போது, கலைஞர் தனது வார்த்தைகளிலேயே,இலங்கையில் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரும், 2009 டிசம்பர் மாதத்திற்குள், மறுவாழ்வு அளித்து அவர்களது இடங்களில் மீள்குடியமர்த்த இலங்கை அரசு வாக்களித்துள்ளது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள் என்று மன்மோஹனுக்கு நினைவுபடுத்தியுள்ளார். மன்மோஹனுக்கு இருக்கின்ற ஆயிரம் பிரச்சனைகளில், இந்த இலங்கை அதிபர் கொடுத்த வாக்குறுதி நினைவு இருக்குமா, இருக்காதா என்பது நமக்கு தெரிந்த செய்திதான். ஏன் என்றால் மன்மோகன் இந்திய மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி உள்ளாரா? அல்லது நிறைவேற்றகூடியவரா? என்றெல்லாம் நமக்கு சிந்தனை வந்துவிடும். அதனால் எந்த விதத்திலும், இலங்கை அதிபர் கொடுத்த வாக்குறுதிகளை அதுவும் தமிழருக்கான மறுவாழ்வு பற்றிய வாக்குறுதிகளை இந்திய பிரதமர் நினைவு வைத்துக்கொண்டிருக்க மாட்டார் என்பது நமக்கு விளங்குகிறது. அதனால்தான் கலைஞர் தனது கடிதத்தில், நீங்கள் நன்கு அறிவீர்கள் என்று அறிவித்து உள்ளார். இப்போது மன்மோகன் தனக்கு அது தெரியாது எனக்கூற முடியாமல் போய்விடும். தவிர கலைஞர் தனது கடிதத்தில் மேலும் ஒரு செய்தியை சொல்லியுள்ளார். அதாவது தற்காலிக முகாம்களில் 80 ஆயிரம் தமிழர்கள் இன்னமும் வாழ்ந்து வருகிறார்கள் என்று தனது கவனத்திற்கு வந்துள்ளது என்று கலைஞர் எழுதுகிறார். அதாவது தான் கூறிய வாக்குறுதியையும், மகிந்த ராஜபக்சே நிறைவேற்றவில்லை என்பது மட்டுமல்ல இன்னமும் 80 ஆயிரம் தமிழர்களை முள்வேலி முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறார் என்பதையும் இதன் மூலம் கலைஞர் விளக்கியுள்ளார்.
இந்த அளவுக்கு ஒரு நாட்டின், அதுவும் காங்கிரசுகாரர்களின் வார்த்தைகளில் ஒரு நட்பு நாட்டின் அதிபரை வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற உண்மையை சொல்லுமளவுக்கு தள்ளியது எது? ஈழத்தமிழர்களை ஒரு இனவாத போரின் மூலம், இன அழிப்பு செய்த ஒரு அதிபரை அதுவும் சிங்கள பேரினவாத உணர்வுடன் தனது தேர்தல் நேரத்திலேயே, ஒற்றை ஆட்சி பற்றி பிரகடனம் செய்த ஒரு அதிபரை எந்த அளவில் இந்திய அரசியல் வாதிகளால் நம்ப முடிந்தது என்ற கேள்வி இங்கே எழுகிறது. ஒவ்வொரு கொடுமை நடக்கும் போதும், இந்திய அரசுக்கு தெரிவித்துக்கொண்டிருந்த கலைஞரை, இந்திய அரசு ஒவ்வொரு முறையும், பிரணாப் முகர்ஜியை அனுப்பியோ, எம்.கே.நாராயணனை அனுப்பியோ விளக்கம் கூறி, மீண்டும், மீண்டும் ராஜபக்சேவையும், அவரது வார்த்தைகளையும் நம்பச்சொன்னார்களே, அதுதான் இப்போது கேள்வி கேட்கப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் ஒரு மாநிலத்தின் முதல்வர், மத்திய அரசு சொல்லக்கூடிய செய்திகளை நம்பாமல் ஆட்சி நடத்த முடியுமா என்ற கேள்வியும் இணைந்தே எழுகிறது. அதனால் விளைந்த விளைவுகள் ஒரு இனத்தின் அழிவிற்கு இழுத்துச்சென்று விட்டது என்பது வரலாறு. இப்போது அதே ராஜபக்சே இந்தியா வருகிறார். அவருக்கு மீண்டும் மத்திய அரசு சிவப்பு கம்பளம் விரிக்கிறது. இந்த நேரத்தில் கலைஞர் இப்படி ஒரு கடிதம் எழுதவேண்டிய நிர்ப்பந்தம் எழுந்துள்ளது. தவிர தனது கடிதத்தில் கலைஞர் வேறொன்றையும் குறிப்பிடுகிறார். சொந்த இடங்களில் குடியமர்த்தப்படும் அந்த மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காண்பதை நோக்கி பாடுபடும் வகையில், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமாதான அடிப்படையிலான நீதி ஆகியவை கிடைக்கவேண்டும் என எழுதுகிறார். இந்த இரண்டு பிரச்சனைகளையும் தனி விவாதப்பொருளாக எடுத்துக்கொண்டு பேசவேண்டும் என மன்மோஹனை கலைஞர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், மன்மோஹனுக்கு இது உறைக்குமா என்ற கேள்வி எழுகிறது. கலைஞருக்கு ராஜபக்சே எழுதிய கடிதத்தை வைத்து முதலில், போருக்கு பிறகு கலைஞர் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தார். அவர்களுக்கு அப்போது இதே டி.ஆர். பாலு தலைமை தாங்கினார். அந்நேரம் அதிபர் ராஜப்ச்கே இந்திய எம்.பி.க்களிடம் 2009 டிசம்பருக்குள் அனைத்து தமிழர்களையும், வவுனியாவில் உள்ள மாணிக் பண்ணையிலிருந்து, அதாவது முள்வேலி முகாம்களிலிருந்து விடுதலை செய்து, அவரவர் சொந்த இடங்களுக்கு மீள் குடியேற்றம் செய்வதாக வாக்குறுதி அளித்தார். அதைத்தான் இப்போது கலைஞர் கேட்கிறார். அதுமட்டுமல்ல நடந்து முடிந்த நாலாவது வன்னிப்போரால், இந்திய அரசும்,தமிழக அரசும், உலகத்தமிழர் மத்தியில் கடுமையான விமர்சனங்களை பெற்று உள்ளன. இந்த நேரத்தில் தமிழக அரசு உலக தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்த இருக்கிறது. அத்தகைய சூழலில், ராஜபக்சே தான் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல், அடுத்த கட்ட பணிகளுக்கு இந்திய உதவியை நாடி வருகிறார் எனும் போது அவரிடம் வலியுறுத்த வேண்டிய செய்திகளை, தமிழக முதல்வர் டில்லி காரர்களுக்கு வலியுறுத்துவது என்பது நிகழவே செய்யும் எனத்தெரிகிறது. ராஜபக்சே வாக்குறுதி கொடுக்கும் போது, இலங்கையில் அதிபர் தேர்தலும், அடுத்து நாடாளுமன்ற தேர்தலும் நடைபெறும் சூழல் இருந்தது. அந்த சூழ்நிலையை சமாளிக்கவும், உலக அரங்கில் தமிழ்நாட்டின் ஆட்சியாளர்களிடம் நல்லுறவு இருப்பதுபோல் காட்டவும் அதை ஒட்டி தன்மீது உலக அரங்கில் வந்த போர்குற்றச்சாட்டுகளும், மனித உரிமை மீறல்களும், எடு படாமல் போக அது உதவும் என்று ராஜபக்சே எதிர்பார்த்து அத்தகைய வாக்குறுதிகளை கொடுத்து இருக்கலாம். ஆனால் எப்படியாவது நல்லது நடந்தால் சரிதான் என்று எண்ணிய இந்திய அல்லது தமிழக அரசியல்வாதிகள் இதனால் ஏமாற்றப்பட்டிருக்கலாம். இப்போது உண்மை வெளிச்சத்திற்கு வந்து விட்டது. தமிழக அரசியல்வாதிகளை ஏமாற்றிய ராஜபக்சே இந்தியா வந்து, இங்கே உள்ள பெருவணிகக்குழுமங்களிடம், ஒப்பந்தம் செய்யப்போகிறார் என்பதும், அதன் மூலம் தமிழர் தாயகத்தை அடையாளம் தெரியாமல் ஆக்கப்போகிறார் என்பதும், நம்மால் புரிந்துகொள்ள முடியுமா அல்லது அதற்கும் காலம் ஆகுமா என்பது தெரியவில்லை.