Monday, June 7, 2010

சுற்றுச்சூழல் நாளில், சூழலையும், வாழ்வாதாரத்தையும் அழிக்கும் சேது சமுத்திரத்திட்டத்தின் குரல்.

நேற்று உலக சுற்று சூழல் நாள். உலகம் முழுவதும் சுற்று சூழலின் பாதுகாப்பிற்காக பல்வேறு விதமான கருத்துக்களும், கட்டுரைகளும் வெளிவந்தன. ஒரு குறிப்பிட்ட ஆங்கில நாளேடு தனது நேற்றைய இதழை, மருசுழற்சசியில் தயாரித்திருந்தது. அதற்கு அதிகமான செலவு ஆகிறது என்றாலும் அவ்வாறு தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதுதவிர எத்தனையோ கட்டுரைகள் சுற்றுச்சூழலை அழிக்கும் வளர்ச்சித்திட்டங்கள் பற்றியும், அவை எப்படி மக்களை பாதிக்கிறது என்பதையும், அதை எதிர்த்து மக்கள் எப்படி போராடுகிறார்கள் என்பது பற்றியும் வெளியாகி உள்ளன. சுற்று சூழலை அழிக்கும் முயற்சியைத்தான் இயற்கையில் ஒன்றிப்போன ஆதிவாசி மக்கள் எதிர்க்கிறார்கள் என்ற செய்திதான், ஒரிசாவிலி
ருந்தும், சட்டிச்கரிலிருந்தும், ஜார்கண்டிலிருந்தும், ஆந்திராவிலிருந்தும் வருகின்றன என்று சென்னை வந்த எழுத்தாளர் அருந்ததிராய் கூறினார். இயற்கையை அழிக்கும் முயற்சிதான் பிராணவாயு மண்டலத்தில் ஓட்டையை ஏற்படுத்தி, அதன்மூலம் உலகம் முழுவதும் பூமி வெப்பமடைதலை ஏற்படுத்தி விடுகிறது. இதற்காக உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளும் ஒன்றுகூடி திட்டமிடுகின்றன. அந்த அளவுக்கு பெரிய ஒரு செய்தியாக இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு இருக்கிறது. அதேநேரம் சுற்று சூழல் பற்றி எந்த ஒரு அக்கறையும் இல்லாமல், அது பற்றிய அறிவும் பெறாமல், அதன் பாதிப்பு பற்றி யாராவது பேசினால் அல்லது போராடினால் அதையும் கண்டுகொள்ளாமல் தங்களது அரசியலுக்காகவோ அல்லது தங்களது அடையாளத்துக்காகவோ சிலர் சுற்றுச்சூழல் பாதிப்பைத்தரும் திட்டங்களை ஆதரித்து, உலக சுற்று சூழல் நாளில், ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்றால், இவர்களது சிந்தனையை என்னவென்று சொல்வது?
நேற்றைய சுற்றுச்சூழல் நாளில் மகாபலிபுரத்தில் கூடிய அனைத்து மீனவர் குப்பங்களின் தலைவர்கள், சுற்று சூழல் நாளன்று ஒரு நல்ல காரியத்துக்காக கூடி பேசினார்கள். அதாவது அரசு கொண்டுவரும் கடல் நீரை குடி நீராக ஆக்கும் திட்டத்தை எதிர்த்து அவர்கள் கூடினார்கள். மீனவர்கள் தான் இங்கே உள்ள பழங்குடிகள். அதாவது மலையில் உள்ள பழங்குடிகளை நாம் ஆதிவாசிகள் என்று அழைக்கிறோம். அதேபோல, கடலில் வாழ்கையை நடத்தி, கடலை மட்டுமே நம்பி வாழும் மீனவர்கள், கடல் சார்ந்த பழங்குடிகள் என்பதாக அழைக்கப்படவேண்டும். அப்படிப்பட்ட மீனவர்களுக்குத்தான் கடல் நீரை குடிநீராக மற்றும் திட்டம் எப்படி சுற்று சூழலுக்கு எதிரானது என்பது தெரியும். அவர்களது வாதப்படி, கடலிலே உள்ள உப்பு நீரை எடுக்கும் நிறுவனம், அதை இயந்திரத்தில் இட்டு அதில் உள்ள நல்ல நீரை வெளியே எடுத்த பிறகு, கழிவாக வெளியேறும் உப்பை என்ன செய்யப்போகிறார்கள் என்று கேட்டதற்கு, கடலில் மீண்டும் தள்ளி கொண்டு போய் கொட்டுவோமென கூறுகிறார்கள் என்பதே. இப்படிப்பட்ட திட்டத்தை இயற்கையுடன் இயைந்து வாழும் மீனவர்கள், அதாவது கடல் நீர், கடல் நீரோட்டம் எனும் இயற்கையுடன் இயைந்து வாழும் மீனவர்கள், சரியாக அடையாளம் கண்டு கொண்டார்கள். அதன்மூலம் அவர்கள் , கொட்டப்டும் உப்பு கழிவு என்பதால் அதிக அடர்த்தி கொண்டது என்பதை உணர்ந்து உள்ளார்கள். அதிக அடத்தி கொண்ட உப்பு தங்களுக்கு சொந்தமான கடலில் கொட்டப்படும்போது, அது இருக்கும் மீன்களையும், மற்றும் கடல்வாழ் உயிரினங்களையும், அழித்துவிடும் என்பதை உணர்ந்து விட்டார்கள். அதனால் அதுவே தங்களது வாழ்க்கையை அழித்துவிடும் எனவும் புரிந்து கொண்டுவிட்டார்கள். இதன்காரணமாகவே அவர்கள் ஒன்று கூடி, இந்த திட்டத்தை எதிர்க்கிறார்கள். அவர்களது எதிர்ப்பை அதிகாரிகள் சரியான முறையில் அரசுக்கு சொன்னார்களா என்பது தெரியவில்லை. அல்லது அரசியலும், அதிகாரவர்க்கமும் சேர்ந்துகொண்டு அடம்பிடித்து தங்கள் முடிவை மாற்றிக்கொள்ளவில்லையா எனவும் தெரியவில்லை. அரசு கடல் நீரை குடி நீராக மாற்றும் திட்டத்திற்கு ஆதரவான நிலையிலேயே உள்ளது. அதன்விளைவுதான் மீனவர்கள் இதற்காகவே ஒரு அனைத்து குப்பம் சார்ந்த கூட்டத்தை கூட்டி போராட்ட திட்டத்தை சுற்று சூழல் உலக நாளன்று முடிவெடுக்கிறார்கள்.
இவ்வாறு இந்த நாள் பிரபலமாக கருதப்படும்போது, சேது சமுத்திர திட்டத்தை ஏன் மத்திய அரசு நிறைவேற்ற ஏற்பாடு செய்ய வில்லை என்று கேட்டு, திராவி டக்கழகத்தலைவர் கீ.வீரமணி தலைமையில் நேற்று ஒரு பெரிய போராட்டம் சென்னையில் நடத்தப்பட்டது. அதில் பாபுலர் பிரண்டு ஆப் இந்தியா என்ற வளர்ந்து வரும் முஸ்லிம் அமைப்பும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். எதற்காக பாபுலர் பிரண்டு இதில் கலந்து கொண்டது என்ற கேள்வி எழுந்தது. ஏற்கனவே பாபுலர் பிரண்டு தோன்றுவதற்கு முன்பே இருந்த மனித நீதி பாசறை மீது, காவல்துறையின் கண்காணிப்பும், நெருக்கடியும் அதிகம் இருந்தன. அந்த பழைய பதிவுகளை நீக்க, ஆட்சியாளர்கள் விரும்பக்கூடிய கோரிக்கைகளுக்காக இறங்கி போராடினால் நல்ல பெயரை ஆட்சியாளர்களிடம் பெறலாம் என்ற கருத்து காவல்துரையிளிருந்தே கூறப்பட்டதாக தெரிகிறது. இப்போது எதற்காக சேது திட்டத்தை ஆதரித்து திடீர் போராட்டம் என கேட்கலாம். இப்போது காங்கிரசு கட்சிக்கும், தி.மு.க.கட்சிக்கும் சிறிய அளவில் நெருடல் வந்துகொண்டு இருக்கிறது. சுற்று சூழல் காரணமாகவும், பொருளாதார ரீதியிலும் சேது திட்டம் நட்டமடையும் என்ற செய்தியின் அடிப்படையில், மத்திய காங்கிரசு ஆட்சி அந்த திட்டத்தை அநேகமாக கை விட்டுவிட்டது. இந்த செய்தி தெரிந்திருந்தும்கூட, தி.மு.க.- காங்கிரசு உறவு நன்றாக இருக்கும்போது இதைகிளப்பாமல், உறவு கெட்டுக்கொண்டிருக்கும் பொது அதைகிளப்ப இந்த போராட்டம் என்று கூறுகிறார்கள்.
எப்படி இருந்தாலும் இந்த சேது திட்டம், மீனவர்களின் வாழ்க்கையை கெடுக்கும் திட்டம் என்ற புரிதல் மீனவர்களுக்கு இருக்கிறது. சுற்று சூழலையும் கெடுத்து, பவளப்பாறைகளையும் அழித்து இந்த சேது திட்டம் நிறைவேறினால், அரிதான உயிரினங்கள் அழிந்துவிடும் என்பதை சுற்று சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி
மீனவர்களின் வாழ்க்கை அழிக்கப்படுமென ஆதாரபூர்வமாக கூறுகிறார்கள். ஐந்து லட்சம் மீனவர்களின் வாழ்க்கை இந்த சேது திட்டத்தால் அழிந்து போகுமென, ராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடி மீனவர்கள் அலறுகிறார்கள். இதையே முன்னாள் மானுடவியல்துறைத்தலைவராக இருந்த, சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் மறைந்த சுதர்சனம் எழுதி வைத்தார். இவ்வாறு அறிஞர்கள் அனைவராலும் மறுக்கப்பட்ட சேது திட்டத்தை இப்போது மீண்டும் நினைவு படுத்துவது அரசியல் எனத்தெரிகிறது. சுற்று சூழல் உலக நாளில் இப்படி சுற்று சூழலுக்கு எதிரான குரலை எழுப்புவதில் தமிழ் நாட்டிற்கு நிகர் தமிழ்நாடுதான்.