Monday, May 31, 2010

ஆக்கிரமிக்கப்பட்ட வடக்கும், கிழக்கும்

இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர் பகுதிகளாக அறியப்பட்டவை. தமிழர் தாயகம் என்பதாக அறிவிக்கப்பட்டவை. 1987ம் ஆண்டு இலங்கையை ஆண்டு வந்த அதிபர் ஜெயவர்தனாவும், இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், வடக்கையும், கிழக்கையும் இணைத்த தமிழர் தாயகம் உருவாக்கப்பட வேண்டும் என்பதாக கையெழுத்திடப்பட்டது. இந்திய அமைதிப்படை இலங்கையில் இறங்கிய பிற்பாடு, விடுதலைப்புலிகளுக்கும், இந்திய அமைதிப்படைக்கும் முரண்பாடு ஏற்பட்ட பிறகு, இலங்கை அரசும், இந்திய அரசும் இணைந்து உருவாக்கிய வரதராஜபெருமாள் தலைமையிலான தமிழர் ஆட்சி என்பது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கியே இருந்தது.
தென்னிலங்கையில் சிங்களர்கள் பெரும்பான்மையாக வாழ்வதும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்வதும் என்ற எதார்த்த நிலை அங்கே அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. அதுமட்டுமின்றி இலங்கையின் ரூபாய் நோட்டிலும், பல்வேறு அரசு பதிவுகளிலும், சிங்களத்துடன் தமிழும் இணைந்தே காணப்படும் என்பதும் ஒரு வரலாற்று உண்மை. வடக்கு மாகாணங்களில் தமிழரான டக்ளஸ் தேவானந்தா மூலமும், கிழக்கு மாகாணங்களில் தமிழர்களான கருணா, பிள்ளையான் மூலமும் தனது ஆட்சி முறையை மகிந்த ராஜபக்சே நடத்தி வந்தார் என்பதும் நாடறிந்த செய்தி. ஆனால் தற்போது அத்தகைய குறைந்தபட்ச அங்கீகாரத்திற்கு கூட தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழர் நிலத்திற்கும், தமிழர் குடியேற்றத்திற்கும், தமிழர் பண்பாட்டிற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பது தான் அதிர்ச்சி செய்தியாக இருக்கிறது.
வடக்கு மாகாணங்களிலும், கிழக்கு மாகாணங்களிலும் இலங்கை ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. குவிக்கப்பட்டுள்ள இந்த ராணுவத்தில் முழுமையாக சிங்களர்கள் தான் இருக்கிறார்கள். அதாவது தமிழர் பகுதிகளில் சிங்கள ராணுவம் நிரந்தரமாக நிறுத்தப்படுகின்ற சூழ்நிலை அங்கே உருவாக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்திலுள்ள மாணிக் பண்ணையில் இன்னமும் அவதியுற்றுக் கொண்டிருக்கும் பல பத்தாயிரம் தமிழ் மக்கள், தங்களது சொந்தப் பகுதிகளுக்கு மீள்குடியேற்றம் செய்யப்படாமல் பரிதவித்து நிற்கின்றனர். அவர்களை கண்காணித்து, காவல் நிற்பவர்கள் சிங்கள ராணுவத்தினர். இதுவரை முள்வேலி முகாம்களிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டதாக கூறப்படும் தமிழ் மக்கள், இப்போது குடியேறியிருக்கும் திரிகோணமலை மாவட்டத்திலும், மன்னார் மாவட்டத்திலும் ராணுவத்தாரின் முழுமையான மேற்பார்வையிலும், கண்காணிப்பிலும் மட்டுமே வாழ முடிகிறது. இதுவே ராணுவ ஆக்ரமிப்புக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர் பகுதிகளாகத் தான் இருக்கின்றன.
யாழ்பாண நகரம் முழுமையாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கிறது. அதனால் அதை ஆக்ரமிக்கப்பட்ட தமிழர் பகுதி என்பதாகத் தான் விவரிக்க முடியும். வன்னிப்பகுதிக்கு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதாக, அரசு செய்திகளை கூறுகிறது. ஆனால் கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் முழுமையாக ராணுவ முகாம்கள் தான் இருக்கின்றன. இடிந்து போன தங்கள் வீடுகளுக்கு சென்ற தமிழர்களும், பெரிய அளவுக்கு இடிபடாத தங்கள் வீடுகளில் குடியேறியுள்ள தமிழர்களும், அன்றாடம் ராணுவ வீரர்களின் நேரடி கண்காணிப்பில் இருக்கிறார்கள். அதாவது அப்படி தங்கள் சொந்த பகுதிக்கு மீண்டு சென்றுள்ள தமிழ் மக்களின் வீடுகளுக்கு, தினசரி ராணுவ வீரர்கள் உள்ளே வந்து சோதனையிடுவதும் தொடர்கிறது. தங்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களையும், மற்ற சாமான்களையும் வாங்குவதற்கு தமிழர்கள், ராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு மட்டும் தான் செல்லமுடியும். தமிழர்கள் யாராவது தனியாக ஒரு கடையை திறந்தால், ராணுவத்தினர் வந்து அதை மூடிவிடும் படி கேட்டுக்கொள்கிறார்கள். தமிழர்கள் வைத்திருக்கும் கடைகளில், தமிழர்கள் பொருள் வாங்க வருகை தந்து, தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள் என்றும், அதை தவிர்க்க வேண்டும் என்றும் ராணுவத்தினர் கூறுகின்றனர்.
4வது வன்னிப்போரின் விளைவாக நடந்த உள்நாட்டு இடம்பெயர்ந்த அகதிகள் பிரச்சனையை நாம் கவலையுடன் அணுகும்போது, அதைவிட முக்கிய பிரச்சனையை யாழ்பாண மக்கள் கூறுகிறார்கள். அதாவது 33 ஆண்டுகளுக்கு முன்னால், யாழ்ப்பாணத்திற்குள்ளேயே வாழ்ந்து வந்த தமிழ் மக்களை கட்டாய இடம்பெயர்தல் செய்து ராணுவம், அகதிகள் முகாம்களில் இன்னமும் வைத்திருக்கின்ற பிரச்சனையை கூறினார்கள். காங்கேசன் துறை, தெலிபல்லி ஆகிய யாழ்ப்பாணப் பகுதிகளில் வாழ்ந்து வந்த தமிழர்களைத் தான், 33 ஆண்டுகளுக்கு முன்னால் ராணுவம் கட்டாயமாக இடம்பெயரச் செய்தது. அவர்களது அகதிகள் முகாம் இன்னமும் யாழ்ப்பாணத்தில் ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அதில் 3,000 தமிழர்கள் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் அனைவருமே விவசாயத்தையும், மீன்பிடித் தொழிலையும் சார்ந்து வாழ்ந்து வந்தவர்கள். அவர்கள் வாழ்ந்த பகுதிகளான காங்கேசன் துறையிலும், தெலிபல்லியிலும் ராணுவம் தனக்கான உயர் பாதுகாப்பு வளையமாக, வளைத்துக் கொண்டதால் ஏற்பட்ட விளைவு தான் அவர்கள் உள்நாட்டு அகதிகளாக கைட்ஸ் பகுதியில் முகாமில் இருக்கும் வரலாறு.
அவர்களுக்கு தங்கள் தொழில்களை செய்து வாழ்வாதாரம் பெற முடியாததால், ராணுவ ரேசன்களை சார்ந்தே வாழ்கிறார்கள். சிங்கள ராணுவமும் அந்த பகுதியை, உயர் பாதுகாப்பு வளையத்திலிருந்து நீக்குவதாக தெரியவில்லை. ஏ9 சாலை ஓரங்களில் புத்தர் கோவில்களை ராணுவத்தினர் உருவாக்கியுள்ளார்கள். அரச மரங்களை அங்கங்கே நட்டிருக்கிறார்கள். ராணுவ முகாம்களிலிருந்து சிங்களர்கள் அதிகாலையில், புத்த பெருமானின் சுப்ரபாதத்தை பாட வைக்கிறார்கள். இதுவே அருகிலிருக்கும் தமிழர்களுக்கு தாங்க முடியவில்லை. சைவத் தமிழர்கள் தேவாரம் பாடுவதை எந்நேரமும் பழக்கமாகக் கொண்டவர்கள். அவர்களுக்கு இந்த பண்பாட்டு ஆக்ரமிப்பு விரக்தியை உருவாக்குகிறது.
முல்லைத் தீவு மாவட்டத்தில் சாலை சந்திப்புகளுக்கும், தெருக்களுக்கும் சிங்கள பெயர்களை சூட்டியுள்ளனர். தென்னிலங்கையின் சிங்கள பகுதிகள் போல அவற்றை உருவாக்கி வருகின்றனர். தான்தோன்றி ஈஸ்வரன் கோவில் அருகே ஒட்டிச்சூடான் சந்திப்பில் உள்ள, மாங்குளத்திலிருந்து முல்லைத் தீவு செல்லக்கூடிய சாலை, நெடுங்கேணியிலிருந்து வருகின்ற சாலையில் சந்திக்கிறது. அந்த இடத்திற்கு பிலிமா ஹாண்டியா என்ற சிங்கள பெயரை சூட்டியிருக்கிறார்கள். சிலை சந்திப்பு என்பது அதற்கான அர்த்தமாகும். அங்கே புத்தர் சிலையை நிறுவயிருக்கிறார்கள். ஒட்டிச்சூடானிலுள்ள சிவன் கோவில் குளமும், பள்ளிக்கூடமும் இடிக்கப்படாமல் உள்ளன. வன்னியில் இன்னொரு சந்திப்புக்கு கார்ஹாண்டியா என்ற சிங்கள பெயரை ராணுவம் சூட்டியுள்ளது. அதற்கு கார் சந்திப்பு என்று பொருள். வன்னிப்போரில் பல கார்களை, ராணுவம் இந்த இடத்தில் எரித்தது. இது புதுக்குடியிருப்பிலிருந்து வருகின்ற சாலை. நந்திக்கடலுக்கு அருகேயுள்ள பாலத்திற்கு அலிஹாண்டியா என்று சிங்கள பெயரை ராணுவம் சூட்டியுள்ளது. கிளிநொச்சியில் இருந்த வீரச்சாவடைந்த புலிகளின் கல்லறைகளை, ராணுவம் உடைத்துள்ளது. இது போர் விதிகளை மீறுகின்ற குற்றங்களுக்கு ஒப்பானது. செத்த பிறகும் தமிழர்களை ஓய்வெடுக்க விடாத ஆட்சி என்பதாக இதை மனிதஉரிமை ஆர்வலர்கள் வர்ணிக்கிறார்கள்.
புலிகள் ஆட்சி செய்யும் போது, யாழ்ப்பாணம் அருகேயுள்ள நாகதீபா என்ற பௌத்த கோவிலை, எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாத்தனர். ஆனால் இப்போது யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூர் முருகன் கோவிலின் புனித தன்மையை, சிங்கள ராணுவமும், ஆட்சியாளர்களும் அசிங்கப்படுத்தி வருகிறார்கள். 3 லட்சம் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வரும் சூழலில், 4 லட்சத்திற்கு மேல் சிங்கள பயணிகள் சுற்றுலாவிற்காக ஒவ்வொரு மாதமும் யாழ்ப்பாணம் வந்துப் போகிறார்கள். அவர்கள் சைவ சித்தாந்த பண்பாட்டுப்படி, நடைபெற்று வந்த நல்லூர் முருகன் கோவிலுக்கு தங்களது மேலாடைகளுடன் சென்று வேடிக்கை பார்க்கிறார்கள். பருத்திதுறை வடை என்ற தட்டை வடைகளை, சிங்கள சுற்றுலா பயணிகளுக்கு அதிக விலைக்கு விற்பதில் சிங்கள இடைத்தரகர்கள் பணம் சேர்க்கிறார்கள். அருகேயுள்ள தமிழ் மன்னன் சங்கிலியின் அரண்மனை இடத்தை, நல்லூர் ஓட்டலாக மாற்ற சிங்கள அரசு ஏற்பாடு செய்கிறது.
யாழ்ப்பாண விடுதிகளில் தமிழர்கள், அரை குறை சிங்களம் பேச பழக்கப்பட்டு விட்டனர். யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலர், அரசு பணிகளுக்காக சிங்களம் படிக்கத்தொடங்கி விட்டனர். இப்படியாக ஒரு சிங்கள ஆக்ரமிப்பு, நிலத்திலும், வாழ்விலும், பண்பாட்டிலும் அதிகரித்து வரும் நிலை தமிழர் பகுதிகளில் நிலவுகிறது. இந்த செய்தியை, டெல்லியிலுள்ள ஆட்சியாளர்களிடம் எடுத்துச் சொல்லி, புரிய வைத்து, தமிழர் அடையாளங்கள் அழிக்கப்படுவதை நிறுத்த வேண்டிய பொறுப்பு, தமிழக அரசியல்வாதிகளிடம் இருக்கிறது.