Saturday, May 29, 2010

ஈழத்தமிழருக்கு அரசியல் தீர்வு தர பிரகாஷ் காரத்தால் முடியுமா?

ஜுன் 8ம் நாள் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, டெல்லி வருகிறார். இந்திய அரசியல் தலைவர்களிடம் பேசப்போகிறார். அப்போது முள்வேலி முகாம்களில் இன்னமும் அவதியுறும் தமிழர்களை, மீள்குடியேற்றம் செய்வது பற்றி பேசுவாரா? அதற்காக ரூ.500 கோடியை இந்திய அரசு, இலங்கை அரசுக்கு கொடுத்த பிறகு செலவு செய்த பட்டியல் பற்றி பேசுவாரா? திரிகோணமலை துறைமுகப் பகுதியிலும், மன்னார் கடலோர வட்டாரத்திலும், இந்திய அரசின் எண்ணெய் எடுக்கும் நிறுவனங்களும், இந்தியாவின் தனியார் நிறுவனங்களும் வணிகம் செய்வதுப் பற்றி பேசுவாரா? சி.ஈ.பி.ஏ. என்று சொல்லப்படும் ஒப்பந்தத்தின் மூலம் இந்திய அரசு, இலங்கை அரசிடம் வணிக ஒப்பந்தங்களை செய்ய முனைவதுப் பற்றி பேசுவாரா? அத்தகைய வணிக ஒப்பந்தங்களில் இருபுறமும் பலன் பெறுவது பற்றி பேசுவாரா? இந்தியாவிற்கு மட்டுமே பலன் கிடைத்து, இலங்கை அரசுக்கு பலன் இல்லாத வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட மாட்டோம் என பேசுவாரா? அதற்காகவே மகிந்தாவால் ஏற்பாடு செய்யப்பட்டு, சென்றவாரம் கொழும்பு நகரில் நடத்தப்பட்ட, இந்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பற்றி பேசுவாரா? இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வெளியே சொல்வது போல, ஈழத்தமிழருக்கான அரசியல் தீர்வு பற்றி பேசுவாரா? இத்தனை கேள்விகளும் இந்திய ஊடகத்தாரிடையே சுற்றி வருகிறது.
இந்த நேரத்தில் இந்திய அரசின் வெளிவிவகாரத்துறைக்கு உதவி செய்வதற்கான உளவுத்துறை ஒருபுறம் தனது ஏற்பாட்டில் தயாரான தீர்வு சிந்தனைகளை, ஏதாவது ஒரு விதத்தில் பொதுமக்கள் அபிப்ராயமாக உருவாக்குவதற்கான முயற்சிகள் செய்யப்படுகின்றன. அதேசமயம் மத்திய உள்துறைக்கு உதவி செய்யும் உளவுத்துறை தன்னுடைய புரிதலுக்குட்பட்ட கருத்துக்களை வலுப்படுத்த இன்னொரு புறம் முயற்சிக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில் தான், அக்கறையுள்ள குடிமக்களும், அறிவுஜீவிகளும், தமிழின உணர்வாளர்களும், இந்தியா வருகை தரும் இலங்கை அதிபரிடம் இந்திய அரசு தமிழருக்கான அரசியல் தீர்வு பற்றி வலியுறுத்த வேண்டும் என்ற செய்திகளை வெளியிடுகிறார்கள். இந்த அணிவரிசையில் இப்போது இடதுசாரிகளும், தங்கள் பக்கத்து குரலை எழுப்பத் தொடங்கியுள்ளனர். அவ்வாறு நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தனது கருத்துக்களை முன்வைத்தார்.
மாக்சிஸ்ட் கட்சியின் சார்பாக இலங்கையில் நடந்து வரும் இனப்பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கான முயற்சியில், இருதரப்பிலும் உள்ள அரசியல் அமைப்புகளுடன் பேசி உதவி செய்யக்கூடிய பொறுப்பை, பல ஆண்டுகளாக பிரகாஷ் காரத்திடம் கட்சியின் மேலிடம் ஒப்படைத்திருந்தது என்ற செய்தி அவரது இந்த வருகையின் போது தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு அவர் எடுத்த முயற்சிகள் பற்றியும், அதில் கிடைக்காத வெற்றியைப் பற்றியும் தனது உரையில் காரத் தெரிவித்தார்.
முதலில் இலங்கையில் நடந்து வரும் இனப்பிரச்சனைக்கு, இந்தியாவில் இருக்கும் பெரிய இடதுசாரி நாடாளுமன்ற கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி எப்படிப்பட்ட அரசியல் தீர்வை முன்வைக்கிறது என்ற கேள்வி எழுகிறது. இலங்கை ஒன்றுபட்ட நாடாக இருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது. அடுத்த நாட்டிற்கு உள்ளே நடக்கும் பிரச்சனை என்பதாகவும் அந்த கட்சி கூறுகிறது. சிறுபான்மை தமிழின மக்களது பிரச்சனை நியாயமானது என்றும் தெரிவிக்கிறது. அடுத்த நாட்டு பிரச்சனையில் முழுமையாக தலையிட முடியாது என்பதையும் அறிவிக்கிறது. இலங்கையை ஆண்டு வரும் சிங்கள ஆட்சியாளர்கள் பேரினவாத கண்ணோட்டத்தில் இருப்பதையும், மார்க்சிஸ்ட் கட்சி கூறுகிறது. ஆனால் அடுத்த நாடான இலங்கையில், ஒன்றுபட்ட நாட்டிற்குள் மட்டும் தான் தீர்வு காணப்பட வேண்டும் என்று சி.பி.எம்.ஆல் எப்படி கூறமுடியும் என்பது நமக்கு விளங்கவில்லை.
4வது வன்னிப்போர் உக்கிரமமாக நடந்து வந்த வேளையில், 2009ம் ஆண்டின் தொடக்கத்திலாவது நாடு தழுவிய அளவில் இந்தியாவில், போரை உடனே நிறுத்த வேண்டும் என்ற குரல் கிளம்பியது. அந்த சூழ்நிலையில் கூட, சி.பி.எம். கட்சி போரை நிறுத்தச் சொல்லி குரல் எழுப்பவில்லை என்ற கருத்தை, இடதுசாரி அணியிலுள்ள இன்னொரு கட்சியிடமிருந்து கேள்விப்படும் போது நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. நடந்து வரும் இனவாத போரில், அப்பாவி மக்கள் கொல்லப்படும் போது, உலகின் எந்த மூலையிலும் இருக்கின்ற சமாதானம் விரும்புவோர், போரை நிறுத்து என்று தான் முழக்கமிடுவார்கள். போர் எதிர்ப்பு என்பது சாதாரண மக்களுடைய சாதாரண உணர்வின் வெளிப்பாடு. அதற்கு அரசியல் தீர்வை அடைய வேண்டும் என்ற புரிதல் கூட தேவையில்லை. அரசியல் விழிப்புணர்வில் முன்னேறிய சக்திகள் மட்டும்தான், அரசியல் தீர்வை எட்டவேண்டும் என்ற குரலை எழுப்புவார்கள். ஆனால் அப்பாவி மக்கள் கூட, போர் வேண்டாம் என்ற உணர்வை வெளிப்படுத்த முடியும். இப்போது இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு ஒன்று கொடுக்கப்பட வேண்டும் என்று தங்களது கொள்கையை வெளிப்படுத்துகின்ற சி.பி.எம். கட்சி, போர் நடக்கும் காலத்தில் ஏன் போரை நிறுத்தக் கோரவில்லை என்ற கேள்வி நியாயமாகபடுகிறது.
இன்றும் கூட இலங்கையில் வவுனியா மாவட்டத்தில் இருக்கின்ற மாணிக் பண்ணை என்ற இடத்தில் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்ட மூன்றரை லட்சம் தமிழ் அகதிகளில், கணிசமானோர் அல்லது பெரும்பான்மையினர் விடுதலை செய்யப்படவில்லை என்ற செய்தியை சி.பி.எம். தலைவர்கள் தங்களது மேடையிலேயே தெரிவித்தார்கள். அப்படிப்பட்ட மனோபாவம் கொண்ட, தமிழின எதிர்ப்பு சிந்தனையாளர்கள் கொழும்பின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதை இங்கே சி.பி.எம். கட்சி கூறியுள்ளது. அப்படியிருக்கையில் அவர்களுக்கான அரசியல் தீர்வை, ஒன்றுபட்ட இலங்கைக்குள் மட்டும் தான் சாத்தியம் என்று இந்த நாட்டில் இருந்துக் கொண்டு எப்படி கூறமுடிகிறது என்ற கேள்வி எழுகிறது. அதற்கும் சி.பி.எம். தலைவர் கூட்டத்தில் பதில் கூறினார். அதாவது ஏகாதிபத்தியம் எல்லா நாடுகளையும் உடைத்து, சிறு நாடுகளாக பிளவுப்படுத்துகிறது என்பதால் அதை எதிர்க்கிறோம் என்று கூறினார்.
அதேசமயத்தில் இந்திய அரசு மற்றும் இந்தியாவிலுள்ள தனியார் பெரு வணிகக் குழுமங்கள், போர் முடிந்த நிலையிலுள்ள இலங்கையுடன் வர்த்தக உறவுகள் கொள்ள துடிக்கிறார்கள் என்றும் சி.பி.எம். தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் விமர்சனம் செய்தார்கள். இந்தியாவின் வர்த்தக நலனுக்கும், சீனாவின் வர்த்தக நலனுக்கும் இலங்கைத் தீவு களமாக ஆகிக் கொண்டிருக்கிறது என்ற உண்மை ஒரு உலகறிந்த செய்தி. அப்படியிருக்கும் போது இந்த இரு நாட்டு அரசுகளின் அணுகுமுறை, ஏகாதிபத்திய தன்மை வாய்ந்தது இல்லையா என்றும், காலனியப் பார்வை கொண்டது தானே என்பதும் இயற்கையாக எழுகின்ற கேள்விகளாக இருக்கின்றன.
ராஜபக்சே அரசை இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லி, இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும் என்று பிரகாஷ் காரத் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக தமிழர்களுக்கான சுயாட்சி, கூட்டமைப்பு முறை ஆகியவைப்பற்றி சி.பி.எம். கட்சி வலியுறுத்துவதாக கூறியுள்ளார். தங்கள் தொடர்பிலுள்ள இடதுசாரி கட்சியான ஜே.வி.பி.யிடம் இதுபற்றி பலமுறை பேசியும், அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் காரத் கூறுகிறார். இதுபோன்ற விவாதங்களை அக்கறையோடு, இடதுசாரி கட்சிகள் இணைந்து டெல்லி போன்ற தலைநகரங்களில் நடத்தினால், வடஇந்தியாவில் இருக்கின்ற பொதுமக்கள் அபிப்ராயத்திலும், ஊடகங்களின் கண்ணோட்டத்திலும், தமிழர்களின் நியாயமான பிரச்சனையும், அதற்கான அரசியல் தீர்வு தேவை என்பதும் இந்திய மனச்சாட்சிக்கு எடுத்துச்சொல்ல உதவாதா என்பதே நமது கேள்வி.